காவிரி நீர் பங்கீடும்! இந்தியா கூட்டணியும்!

 

 

காவிரி நீர் பங்கிட்டில் அடிமை இந்தியா முதல் சுதந்திர இந்தியா வரை இழுபறிப் போராட்டமாகவே நீடிக்கிறது. தீர்ந்தபாடில்லை ஆனால், கழுதை தேய்ந்து கட்டெரும்பான கதையாக தமிழ்நாட்டிற்கு 215 டிஎம்சி நீரை பெற்று வந்தது போய் இன்று 37.50 டிஎம்சிகே உன்னைப்பிடி என்னைப்பிடி என்ற கதையாகி விட்டது.

இவற்றைக்கூட மாபெரும் போராட்டத்திற்கு பின்பே காவிரி நீர்-மேலாண்மை ஆணையத்தின் கருணையால் படிப்படியாக வினாடிக்கு 5000 கன அடி நீரை 15 நாட்களுக்கு பெறுவதற்கான உத்தரவை தமிழ்நாடு பெற முடிந்தது. இதை ஏன் கருணை என்கிறோம், கடைமடைப்பகுதி என்ற வகையில் அதற்குரிய நியாயமான பங்கீடு கிடைக்கவில்லை என்பதால்தான். இவைகூட கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை. இதனால், ஆணையத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்தும் படி தமிழ்நாடும், இவற்றை எதிர்த்து தமிழ்நாட்டிற்கு வழங்கப் போகும் நீரின் அளவை 3000 கன அடி நீராக குறைக்கும் படி கர்நாடகமும் உச்ச நீதிமன்றத்தை நாடின.

இவற்றை விவாதத்திற்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் அமர்வுக்குழு இரு மாநிலங்களின் விவாதங்களையும், இது குறித்து ஒன்றிய அரசின் கூடுதல் சொலிச்சட்டரின் கருத்துகளையும் கேட்டறிந்தது. இவற்றின் அடிப்படையில் ‘காவிரி நீர் மேலாண்மை மற்றும் ஒழுங்காற்று குழுக்களில் வேளாண் – நீர் மேலாண்மை நிபுணர்கள் உள்ளதால் அவர்கள் வறட்சி, மழையின் அளவு, அணையின் நீர் அளவு ஆகியவற்றை கணக்கிட்டுதான் உத்தரவு வழங்கியுள்ளனர். எனவே, அவர்களின் உத்தரவில் தலையிட விரும்பவில்லை என்று ஊத்தி மூடிவிட்டது.

மேலும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் வினாடிக்கு 5000 கன அடி நீர் 15 நாட்களுக்கு திறந்த விட வேண்டும் என்ற உத்தரவை இரு மாநிலங்களின் நிலைமைகளை கணக்கில் கொண்டுதான் எடுத்துள்ளது. எனவே இவற்றை புறக்கணிக்க முடியாது என்கிறது அமர்வுக்குழு. அப்படியென்றால், உச்சபட்ச அமைப்பான, மக்களின் கடைசி புகலிடமான உச்சநீதிமன்றம் ஆணையத்தின் உத்தரவை அங்கீகரித்து தீர்ப்பு வழங்கியிருக்க வேண்டும். ஏனைய உத்தரவை நடைமுறைப்படுத்தும் படியும், இல்லையேல் நீதிமன்ற அவமதிப்பாக எடுத்துக் கொள்ளப்படும் என்று எச்சரித்திருக்க வேண்டும்.

அதைவிடுத்து ஆணையம் பிறப்பித்த உத்திரவில் தலையிட விருப்பமில்லை என்று கூறுவது, கழுவுற மீனில் நழுவுற மீனாக மெத்தப்படித்த அமர்வுக் குழுவினர் நழுவிக்கொண்டனர். படிப்பறிவே இல்லாத, ஓரளவு எழுதப் படிக்க தெரிந்தவர்கள் அடங்கிய கிராமத்து பஞ்சாயத்துகளில் கூட இப்படி நடக்காது. இதுதான் அமர்வுக்குழுவின் இலட்சணம்.

கடைசி புகலிடம் கைவிட்ட பிறகு மீண்டும் கசாப்புக் கடைக்காரனாகிய ஒன்றிய அரசிடமே இந்தியா கூட்டணியின் இரு மாநில ஆளும் கட்சிகளும் மண்டியிட்டுள்ளன. ‘சாட்சியின் காலில் விழுவதை விட, சண்டைக்காரன் காலில் விழுவதே மேல்’ என்கிற சாதாரண மக்களிடம் நிலவும் நடைமுறை அறிவுக் கூட இரு மாநில ஆளும் கட்சிகளுக்கு இல்லை. அதனால் தான் ஊதிய சங்கையே திரும்பத் திரும்ப ஊதுகின்றனர்.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரசிடம் ஆட்சியை இழந்து தற்போது எதிர்க்கட்சியாக உள்ள பாஜக, தமிழகத்திற்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கூட தரக்கூடாது என வெளிப்படையாக இனவெறிக் கூச்சலிடுகிறது. மேக்கேதாட்டு அணை விவகாரத்திலேயே, இனவாத அரசியலை கையிலெடுத்த காங்கிரசும், தண்ணீர் திறந்து விடுவதாக கூறி ஏமாற்றும் வேலையைச் செய்கிறது.

இந்தியா கூட்டணியிலுள்ள இரு மாநில ஆளும் கட்சிகளும், இனவாத அரசியலைக் கைவிட்டு, காவிரி பிரச்சனையில் தங்கள் தரப்பின், உண்மை நிலவரங்களை நேர்மையாக எடுத்து வைத்து, மக்களின் நலனிலிருந்து (அவரவர் கட்சிகளில் லாபத்திற்காக, நலனுக்காக, கட்சிக்காக இல்லாமல்) பருண்மையாகப் பரிசீலித்து முடிவெடுத்ததை உளப்பூர்வமாக ஏற்று நடைமுறைப்படுத்துவது. இவற்றை மக்களிடம் பிரச்சாரமாக எடுத்துச் சென்று இதிலுள்ள நியாயங்களை விளக்கி புரியவைத்து நடைமுறைப் படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வது, இதன் மூலம் மக்களிடம் நிலவும் நியாயமற்ற முரண்களை அதையொட்டிய போராட்டங்களை களைய முயல்வது, ஆகியவையே சிறந்த நடைமுறையாகும்.

இதை விடுத்து, மீண்டும், மீண்டும் ஆணையம், உச்ச நீதிமன்றம் என சுற்றி வருவது, இறுதியாக கசாப்புக் கடைக்காரனாகிய ஒன்றிய அரசிடமே மண்டியிடுவது, வாக்களித்த மக்களை உரிமையை மதிக்காத செயல். கோழைகளின் செயல். இந்தியா கூட்டணிக்கு பாசிச மோடி தலைமையிலான கும்பலை வீழ்த்துவது என்ற நோக்கம் உண்மையாக, நேர்மையாக இருப்பினும் அவற்றில் அங்கம் வகிக்கும் அனைத்து மாநில கட்சிகளிடமும் இப்பிரச்சனையை முன்வைத்து விவாதிக்க வேண்டும். மேலும் குறிப்பாக, கடைமடை பகுதியான பாதிப்புக்குள்ளாகும் பகுதியான தமிழ்நாட்டின் அடிப்படையான உரிமைகளையும் சேர்த்தே ஒருங்கிணைந்த வகையில், கூட்டணியில் வைத்து சனநாயக மத்தியத்துவத்தின் அடிப்படையில் தீர்வு காண்பதே அறிவுபூர்வமான நடைமுறையாக அமையும்.

இல்லையேல் சனாதான எதிர்ப்பு அரசியலை தனக்கே உரித்தான வகையில் சாதகமாக்கிக் கொண்டது போல காவிரி நீர் பங்கீட்டு பிரச்சனையிலும் கூட்டணியிலுள்ள முரண்களை நரித்தனத்தோடு பாசிச, ஆர்எஸ்எஸ், பிஜேபி மோடி கும்பல் பயன்படுத்தி இந்தியா கூட்டணியை சிதைத்து விடும். ஏனெனில் அதன் நடைமுறையேஒன்று அனைத்துக் கொல்லும், மறுத்தால் அடித்து கொல்லும்.

இவற்றையெல்லாம் கணக்கில் கொள்வதோடு மட்டுமல்லாமல் இந்தியா கூட்டணியிலுள்ள ஓட்டைகளை, சனநாயக பூர்வமற்றப் போக்குகளை, எவற்றையும் அறிவுபூர்வமான முறையில் பரிசீலிக்காதப் பண்புகளை களைவதற்கான, ஆக்கபூர்வமான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும். இவையில்லாமல் இந்தியா கூட்டணியை எவராலும் கலைக்க முடியாது, வெல்லவும் முடியாது என வெற்று கூச்சலிடுவது, சவுண்ட் விடுவது, கூடிக்கூடி கலைவது போன்றவற்றால் எந்த பலனும் இல்லை. இறுதியாக ஏட்டுச் சுரக்காய் சமைக்க உதவாது என்கிற கதையாகத்தான் போய் முடியும். பாசிசம் மேலும் உக்கிரமாக பாய வழிவகுக்கும்.

  • மோகன்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன