மகளிர் இடஒதுக்கீடு: பாசிஸ்டுகளிடம் நீதி கிடைக்குமா?

வரும் நாடாளுமன்ற தேர்தலை மையமாக வைத்து பெண்களின் ஓட்டுகளை கைப்பற்றுவதற்காக, கேஸ்சிலிண்டர் விலையை இருநூறு ரூபாய் குறைத்த ஏமாற்றுவேலையைப் போல, தனது அடுத்த தேர்தல் குறியாக மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அறிமுகப்படுத்துகிறது என்பதை இம்மசோதாவை ஒன்றிய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த இலட்சணத்தில் இருந்தே புரிந்து கொள்ள முடியும்.

நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இடங்களை ஒதுக்கீடு  செய்யும் அரசமைப்பு சட்டத் திருத்த மசோதா நீண்ட நெடிய காலத்திற்கு பிறகு கடந்த 19-09-23 அன்று ஒன்றிய பாஜக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் அறிமுகமாகும் முதல் மசோதாவாக இதை சட்டமாக்க பாஜக முன்வந்திருப்பதன் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் பாஜகவிற்கு அக்கறை இருப்பது போல ஒரு தோற்றத்தை அதன் துதிபாடிகள் உருவாக்கி வருகிறார்கள். மோடியோ இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று பெண்களுக்கு அதிகாரமளிக்கும் பணிக்காகவும், இது போன்ற உன்னத செயல்பாடுகளுக்காகவும் கடவுள் தன்னை தேர்வு செய்துள்ளார் என்று இம்மசோதா குறித்து பேசும் போது நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார்.

இன்றைக்கு இந்தச் சட்டத்தின் மூலம் தன்னை பெண் இனத்தின் பாதுகாவலனாக முன்னிறுத்திக் கொள்ளும் இதே காவிக் கும்பல்தான் இத்தனை ஆண்டுகளாக இச்சட்டம் நிறைவேற்றப்படாமல் இருக்க எல்லா முட்டுக்கட்டைகளையும் போட்டு வந்தது.

2014ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகும் கூட மகளிர் இடஒதுக்கீடு பற்றிய பேச்சுக்கள் எழுந்தபோதெல்லாம், அனைத்து கட்சிகளையும் இணைத்து  ஒருமித்த கருத்தின் அடிப்படையில்  மகளிர் இடஒதுக்கீட்டை சட்டமாக்கலாம் என நயவஞ்சமாக இச்சட்டத்தை கிடப்பில் போட்டது பாஜக.

 

 

ஆனால் தற்போது, அனைத்து அரசியல் ஓட்டுக்கட்சிகளையும் கலந்து ஆலோசிக்கமாலேயே சிறப்பு கூட்டத்தொடர் என்ற பெயரில் இரகசியமாக இம்மசோதாவை அறிமுகப்படுத்துகிறது தற்போது ஒருமித்த கருத்து எங்கிருந்து வந்தது? அனைத்து அரசியல் ஓட்டுக் கட்சிகளுக்கும் இம்மசோதாவின் மீதான ஒருமித்த கருத்துக்கான அடிப்படை உண்டா? கிடையாது என்பதையே கனிமொழி, மொய்த்ரா, ராகுல் போன்றோர் இம்மசோதாவின் மீதான விவாதங்களில் வெளிப்படுத்தினர்.

இம்மசோதா குறித்து பேசிய திரிணாமூல் காங்கிரசு அமைச்சர் மஹூவா மொய்த்ரா பாஜக கொண்டுவந்த இம்மசோதா போலித்தனமானது என்றதுடன் இம்மசோதா மூலம் மகளிர் இடஒதுக்கீட்டை ஒன்றிய அரசு சட்டப்படியே தள்ளிப்போட்டுள்ளது என்றார். இம்மசோதாவை “மகளிர் இடஒதுக்கீடு மசோதா என அழைப்பதை விட மகளிர் இடஒதுக்கீட்டை தள்ளிப்போடும் மசோதா என அழைக்க வேண்டும்” என்று கூறி கேலி செய்துள்ளார்.

தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள இந்த மசோதா எப்போது நடைமுறைக்கு வரும்? 2024ஆம் ஆண்டிலா, 2029ஆம் ஆண்டிலா, 2034ஆம் ஆண்டிலா அல்லது அதற்கும் பின்னரா? விடை தெரியாத இக்கேள்விக்கு தொகுதி சீரமைப்பு, மக்கள் தொகை கணக்கெடுப்பு என பல காரணங்களைக் கூறி நாடகமாடுவதைப் பார்க்கையில், இதனை நடைமுறைப்படுத்தும் எண்ணம் பாஜகவிற்கு இல்லை என்பது தெளிவாகிறது.

வரும் நாடாளுமன்ற தேர்தலை மையமாக வைத்து பெண்களின் ஓட்டுகளை கைப்பற்றுவதற்காக, கேஸ்சிலிண்டர் விலையை இருநூறு ரூபாய் குறைத்த ஏமாற்றுவேலையைப் போல, தனது அடுத்த தேர்தல் குறியாக மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அறிமுகப்படுத்துகிறது என்பதை இம்மசோதாவை ஒன்றிய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த இலட்சணத்தில் இருந்தே புரிந்து கொள்ள முடியும்.

பெண்களின் மீதான அக்கறையிலிருந்தும், நலனிலிருந்தும் இம்மசோதாவை பாஜக தாக்கல் செய்யவில்லை என்பதை இதுகாறும் பெண்கள் மீது பாஜக தலைவர்கள் என்ன கண்ணோட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் எனப் பார்த்தாலே தெரிந்துவிடும். 

மோடி, குஜராத் முதல்வராக இருந்த போது, அமெரிக்க பத்திரிக்கையான வால்ஸ்டீரிட்க்கு அளித்த பேட்டியின் போது, குஜராத் மாநிலத்தில் நிலவிய ஊட்டச்சத்து குறைபாடு குறித்து கேள்விக்கு “குஜராத்தின் நடுத்தர பெண்கள், தங்களது உடல்நலத்தில் அக்கறை காட்டுவதை விட அழகுணர்ச்சியில் தான் அதிக அக்கறை காட்டுகின்றனர்.” எனக் கூறி தன் மாநிலத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நிலவிய ஊட்டச்சத்து குறைப்பாடு பிரச்சினையை திசைதிருப்பி பெண்களை கொச்சையாக இழிவுபடுத்தினார். அதே மோடி, தற்போது பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கு கடவுள் தன்னை தேர்வு செய்துள்ளதாக நாடகமாடுகிறார்.

உ.பி. முதல்வர் யோகி ஆதித்ய நாத் உட்பட பல பாஜக தலைவர்களும், மோகன் பாகவத் போன்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர்களும், ஆணாதிக்கத்துடன் பெண்களுக்கு எதிரான கருத்துக்களைப் பலமுறை பொது வெளியில் பேசியிருக்கின்றனர். 

 

 

சமீபத்தில் மல்யுத்த வீராங்கனைகள், பாஜக எம்.பி. பிரிஜ்பூஷன்சிங்கின் பாலியல் குற்றத்திற்கெதிராக வீதியில் இறங்கி போராடிய போதும் கூட காவிக் கூட்டம் பாஜக எம்பியை பாதுகாத்ததே தவிற பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக ஒருவரும் வாய்திறக்கவில்லை. 33% இடஒதுக்கீடு கொடுக்கிறோம் என காகிதத்தில் எழுதிவிட்டால் இதையெல்லாம் பெண்கள் மறந்து விடுவார்கள் தங்களுக்கு வாக்களிப்பார்கள் என காவிக்கும்பல் கணக்கு போடுகிறது.

பாஜக மட்டுமில்லாமல் ஏறக்குறைய அனைத்துக் கட்சிகளும் மக்கள் தொகையில் சரிபாதி உள்ள பெண்களை அரசியலில் அதிகாரம் செலுத்தவிடாமல் இத்தனை ஆண்டுகாலம் புறக்கணித்தே வந்திருக்கின்றனர். இடது சாரி கட்சிகளைத் தவிர, பிற கட்சிகளின் ஆண் உறுப்பினர்கள் ஆணாதிக்கத்தின் காரணமாகவும், தங்களது தொகுதி ஒருவேளை பெண்களுக்கு ஒதுக்கப்பட்டால், தங்களின் அரசியல் வாழ்வே முடிந்து போகும் என்ற சுயநலம் காரணமாகவும் பெண்களுக்கான இடஒதுக்கீடு சட்டமாவதை இத்தனை ஆண்டுகாலம் எதிர்த்தே வந்திருக்கின்றனர்.

பெண் சுதந்திரம் என பீற்றிக் கொள்ளும் இன்றைய காலத்திலும் பெண் சுதந்திரமானவளாக இல்லை. உலகமயம் தோற்றுவித்த வறுமையின் காரணமாக குடும்பத்தின் பொருளாதார தேவைகளுக்காக  தவிர்க்க இயலாத காரணத்தின் காரணமாக பெண்கள் வேலைக்கு செல்வது மட்டும் அதிகரித்து உள்ளது. பணியிடங்களில் பெரும்பாலும் பெண்களுக்கு சுதந்திரமில்லை.

வேலை செய்யும் இடங்களில் பெண்களால் தனித்து செயல்படமுடிவதில்லை. சுயமாக முடிவெடுக்க முடியவில்லை பணியிடங்களில் மட்டுமில்லாமல் அனைத்து இடங்களிலும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. இது தான் நம்நாட்டின் பெண் சுதந்திரத்தின் இலட்சணம்.

பெண்களை அடிமைகளாகவும், ஒரு போகப் பொருளாகவும் கருதும் இந்திய ஆணாதிக்க சமூகத்தில், அரசியலில் மட்டும் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை மட்டும் சரியாக நிறைவேற்ற முடியுமா என்ன?

பெண்களின் ஓட்டை தமக்கு சாதமாக பயன்படுத்தி கொள்ளும் தந்திரத்தோடு திட்டமிட்டு இச்சட்டத்தை தற்போது கொண்டு வருகிறார்கள். இதற்கு முன்னர் உள்ளாட்சித் தேர்தல்களில் பெண்களுக்கு 33% தொகுதிகள் ஏற்கெனவே ஒதுக்க்கப்பட்டுள்ளது. அப்போதும் கூட ஆண்கள் பொறுமினார்கள். அவர்களது உரிமைகளை பறித்துவிட்டதாக கோஷ்டிகட்டிக் கொண்டு, நிர்மாணப் பணிகளை சீர்குலைத்து, தனது கட்சிக்காரரே ஆனாலும் பெண் உறுப்பினர்களுக்கு கெட்ட பெயர் உருவாக்க முனைந்தனர்.

தனது செல்வாக்கை நிலைநாட்டிக் கொள்ள, தனது மனைவி, மகளை உள்ளாட்சி தேர்தலில் நிற்கவைத்து கட்சியில் உள்ள மற்ற பெண்கள் அரசியல் அதிகாரம் செலுத்த முடியாமல் தடுத்து வருகின்றனர்.

கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி “வழக்கமாக பெண்களுக்காக ஒதுக்கிய உள்ளாட்சிப் பகுதிகளை திமுக தலைவர்கள், தங்கள் மனைவி, மகள்களுக்கு ஒதுக்க கூடாது. இந்த முறை, கட்சிக்காகப் போராட்டங்களைச் சந்தித்த மகளிர் அணி நிர்வாகிகளுக்கு அந்தப் பதவிகளை ஒதுக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார். தேர்தல் முடிந்த பிறகு, வெற்றிபெற்ற திமுக உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள், தலைவர்களுக்கு கடிதம் எழுதிய கனிமொழி வெற்றி பெற்ற பெண்கள் தங்களது கடமையை நிறைவேற்ற தனது கணவர் அல்லது தந்தை என மற்ற ஆண்களைத் தங்களுக்குப் பதில் செயல்பட அனுமதிக்க கூடாது என கேட்டிருந்தார். உள்ளாட்சி அமைப்புகளில் எந்த அளவிறகு ஆண்கள், ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பதற்கு இதுவே சான்று. 

 

 

140 கோடி மக்கள் தொகை கொண்ட நம்நாட்டில் இந்திராகாந்தி, ஜெயலலிதா, மம்தா பேனர்ஜி என அரசியலில் ஆணாதிக்கத்தை தகர்த்து முக்கிய தலைவர்களான பெண்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இவர்களை விடவும், தனது கணவர் ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்குச் சென்றதால் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டு அவர் திரும்பிவந்தவுடன் அடுப்படிக்குச் சென்றுவிட்ட லாலு பிரசாத்தின் மனைவி ராப்ரி தேவி போன்ற பெண்கள்தான் இன்றைய அரசியலில் அதிகமாக இருக்கிறார்கள்.

ஆணாதிக்க, பிற்போக்குச் சமூகத்தின் குடும்பம் எனும் நிறுவனத்தின் கீழ் அடிமைப்பட்டுக் கிடக்கும் நிலையிலிருந்து பெண்கள் விடுபடாத வரை, தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள இம்மசோதா எதிர்காலத்தில் நடைமுறைக்கு வந்தாலும் கூட அது ராப்ரிதேவி போன்றவர்களை உருவாக்கப் பயன்படுமே அன்றி அரசியலில் பெண்களின் உண்மையான பங்கேற்பை உறுதிசெய்ய உதவாது.

  • தாமிரபரணி 

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன