கொரோனாவைப் பயன்படுத்திக் கொள்ளையடித்த வேதாந்தாவின் அனில் அகர்வால்!
வேதாந்தாவுடன் பாஜக கள்ளக்கூட்டு!

நாட்டின் தலைவிதியை அரசியல் கட்சிகளும், அரசியல் கட்சி தலைவர்களும் தீர்மானிக்கிறார்கள் என்று நாடாளுமன்ற ஜனநாயகத்தை பற்றி முதலாளித்துவ சித்தாந்தவாதிகள் பீற்றிக் கொள்கிறார்கள். ஆனால் அது கார்ப்பரேட் முதலாளிகளால் தான் தீர்மானிக்கப்படுகிறது என்பதற்கு அனில் அகர்வால் போன்றவர்கள் இலக்கணமாக திகழ்கிறார்கள்

 

 

திமுகவின் அமைச்சர் செந்தில் பாலாஜி ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். மூன்று அமைச்சர்கள் பொன்முடி, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் மீதான ஊழல் வழக்குகளை மீண்டும் விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது ஆகியவற்றை முன்னிறுத்தி திமுக ஊழல் கட்சி அதற்கு வாக்களிக்காதீர்கள் எங்களுக்கு வாக்களியுங்கள் என்ற பிரச்சாரத்தை பாஜக தலைவர் அண்ணாமலை தான் போகும் இடங்களில் எல்லாம் பேசி வருகிறார். அதுமட்டுமன்றி தமிழக அமைச்சர்களில் 11 பேரின் ஊழல் பட்டியலை விரைவில் வெளியிடப்போவதாகவும் கூறிவருகிறார்.

திமுகவின் ஊழல் பட்டியல் குறித்து பேசுவது ஒருபுறம் இருக்கட்டும், ஊழல் குறித்துப் பேசுவதற்கே கூட பாஜகவிற்கு அருகதை இருக்கிறதா என்று கேட்கும் வகையில் அதன் ஊழல்கள் அடுத்தடுத்து அம்பலமாகிவருகிறது.

மோடியை சர்வதேசத் தலைவர், உலகில் உள்ள அனைத்து ஜனநாயக நாடுகளில் வலிமையான, அச்சமற்ற தலைவர் என சமூக ஊடகங்களில் வெளிப்படையாக மோடியை பற்றிப் புகழ்ந்து பேசும் கார்ப்பரேட் முதலாளிகள், திரைமறைவில் பாஜகவிற்கு நன்கொடை என்ற பெயரிலும், தேர்தல் பத்திரங்கள் என்ற பெயரிலும் பல நூறு கோடிகளை லஞ்சமாக கொடுத்து அரசின் விதிகளைத் தமக்கு சாதகமாக வளைத்து இயற்கை வளங்களைக் கொள்ளையடித்ததுடன், பல ஆயிரம்கோடிருபாய்களைச் சம்பாதித்துள்ளனர் என்பது வெளியாகியுள்ளது.

பெகாசஸ் உளவு மென்பொருள் குறித்த அறிக்கை மற்றும் பனாமா பேப்பர்ஸ் போன்றவற்றின் மூலம் பெரும் பணக்காரர்களும், பெரும் தொழில் நிறுவனங்களும் ஊழல், சட்டவிரோத  பணபரிமாற்றம், கறுப்பு பண பதுக்கல், சட்டவிரோத பரிவர்த்தனை மற்றும் பங்குச்சந்தை முறைகேடு ஆகியவற்றில் ஈடுபடுவதை துப்பறிந்து, ஆதாரங்களுடன் ஆய்வு கட்டுரைகளை வெளியிடும் அமெரிக்காவை சேர்ந்த ஓசிசிஆர்பி ஒசிசிஆர்பி அமைப்பு (திட்டமிட்ட குற்றம் மற்றும் ஊழலை வெளிப்படுத்தும் அமைப்பு) இந்தியாவில் நிகழ்ந்த இரண்டு முறைகேடுகள் குறித்து சமீபத்தில் அம்பலப்படுத்தியுள்ளது.   

அதில் ஒரு அறிக்கை தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் நாசகர ஸ்டெர்லைட் ஆலையின் மூலம் மிகப்பெரிய சுற்றுச்சூழல் சீர்கேட்டை உருவாக்கி அப்பகுதி மக்களின் வாழ்க்கையைச் சிதைத்தது மட்டுமன்றி, ஆலைக்கெதிராக போராடிய மக்கள் மீது போலீசைக் கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தி, திட்டமிட்ட படுகொலையை அரங்கேற்றிய வேதாந்தா நிறுவனத்தின் முறைகேடுகள் குறித்து அம்பலப்படுத்துகிறது.

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில், அறிவிக்கப்படாத அவசரநிலையை பாசிச மோடி அரசு அமுல்படுத்திவந்த காலத்தில், அந்தச் சூழ்நிலையைத் தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்த வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில அகர்வால், “சுரங்க நிறுவனங்கள் புதிய சுற்றுச்சூழல் அனுமதி களைப் பெறாமல் உற்பத்தியை 50 சதவிகிதம் வரை அதிகரிக்க அனுமதிப்பதன் மூலம் இந்தியாவின் விரைவான பொருளாதார மீட்சிக்கு உத்வேகம் ஏற்படும்…, உடனடியாக உற்பத்தி தொடங்குவதன் மூலம் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்…., இந்த செயல்முறையின் மூலம் அரசாங்கத்திற்கு பெரும் வருவாய், வேலைவாய்ப்புகள் உருவாகும்…. தற்போது உள்ள சிக்கலான முறைக்கு பதிலாக ஒரு சாதாரண நிர்வாக அறிவிப்பின் மூலம் இந்த மாற்றத்தை மேற்கொள்ளலாம்” என அப்போதைய ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதாவது தன்னுடைய சுரங்க நிறுவனங்கள் உற்பத்தியை 50% வரை அதிகரித்து அதிவேகமாக இயற்கை வளங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொள்ளைலாபம் அடிக்க இந்தக் கொரோனா காலத்தைப் பயன்படுத்தி அனுமதி வழங்க வேண்டும், அதற்குத் தடையாக உள்ள சுற்றுச்சூழல் விதிகளை தளர்த்த வேண்டும் என அணில் அகர்வால் கூறுகிறார்.

இதே போன்றதொரு கடிதத்தை வேதாந்தாவின் தலைமை நிர்வாகி சுனில் துக்கல், நேரடியாக மோடிக்கே எழுதியுள்ளார். இந்த விவகாரம் குறித்து விவாதிக்க பணியில் இருந்த சுற்றுச்சூழல் செயலாளருக்கு பிரதமர் அலுவலகம் கடிதம் அனுப்பியதாகவும், ஆனால் அப்போதைய காலகட்டத்தில் வேதாந்தா நிறுவனத்தின் யோசனை பிரதமர் அலுவலகத்திற்குள் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டது எனவும் ஓசிசிஆர்பி அறிக்கை கூறுகிறது.

எனினும், கடிதம் கிடைத்த 2 வாரத்திற்குள், கடிதம் தொடர்பாக பொதுமக்களின் கருத்தை கேட்க நடவடிக்கை எடுக்காமல், அகர்வாலின் உத்தரவுக்கு அடிபணிந்தது போல அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் செயலாளரையும், வனத்துறையின் இயக்குநரையும் அழைத்து கொள்கைப் பிரச்சனையைப் பற்றி விவாதிக்க உத்தரவிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து 2022ஆம் ஆண்டின் முற்பகுதியில், சுரங்க நிறுவனங்கள் மக்களின் கருத்தைக் கேட்காமல், உற்பத்தியை 50 சதவீதம் வரை அதிகரிக்க அனுமதிக்கும் விதமாக, விதிமுறைகளை தளர்த்தி ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம்  உத்தரவிட்டது.

சுற்றுச்சூழல் விதிகளைத் தளர்த்துவதற்கு அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள னர். விதிகளை தளர்த்தினால் இயற்கை வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் கட்டுப்பாடின்றி கொள்ளையடித்துவிடும் என துறைசார்ந்த அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஆனால் அதிகாரிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி மோடி அரசு வேதாந்தா நிறுவனத்திற்கு ஆதரவாக சுற்றுச்சூழல் விதிகளை தளர்த்தியுள்ளதாக ஓசிசிஆர்பி அறிக்கை கூறுகிறது.

இதே போன்று வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான கெய்ர்ன் ஆயில் & கேஸ் நிறுவனம் தனது எண்ணெய் துரப்பணவுத் திட்டங்களுக்கு கொரோனா பெருந்தொற்றைக் காரணம் காட்டி மக்களின் கருத்துக்களைக் கேட்காமல், சுற்றுச் சூழல் ஆய்வு அறிக்கைகள் இல்லாமல் புதிய துரப்பணவுகளைத் தொடங்கியுள்ளது. ராஜஸ்தானின் வடக்குப் பாலைவனங்களில் கெய்ர்ன் நிறுவனத்தின் ஆறு எண்ணெய் திட்டங்களுக்கு அப்பகுதி மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, கருத்துக்கேட்பு நடத்தப்படாமலேயே, அனுமதி வழங்கப்பட்டு வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு தனக்குச் சாதகமாக சட்டங்களை வளைக்க வேதாந்த நிறுவனத்தின் தலைவர் அணில அகர்வால் வெறுமனே கடிதங்களை மட்டும் எழுதிக் கொண்டிருக்கவில்லை. அவர் பாஜகவிற்கு நேரடியாக கோடிக்கணக்கில்  நன்கொடைகளை வாரிக் கொடுத்ததன் மூலமே இதையெல்லாம் சாதித்திருக்கிறார்.

ஓசிசிஆர்பி-யின் அறிக்கையின்படி வேதாந்தா அறக்கட்டளை 2016-2020 இடைப்பட்ட 4 வருடத்தில் மட்டும் 50 கோடி ருபாய் அளவிற்கு பாஜகவிற்கு நேரடியாக நன்கொடை அளித்துள்ளது. அதுமட்டும்ன்றி தேர்தல் பத்திரங்களின் மூலம் கணக்கில் வராத பல நூறு கோடி ருபாய்களையும் பாஜகவிற்கு அது அளித்துள்ளது.

வேதாந்தா அறக்கட்டளைகளில் ஒன்றான பத்ரம் ஜன்ஹித் ஷாலிகா, 2 முறை, அதாவது 2016-2017 மற்றும்  2021-22 நிதியாண்டுகளில் பாஜகவிற்கு நன்கொடை அளித்துள்ளது. பாஜகவுக்கு நன்கொடை அளிப்பவர்களின் முதல் பத்து இடங்களுக்குள் பத்ரம் ஜன்ஹித் ஷாலிகா இடம்பிடித்துள்ளது. என இந்திய வழக்கறிஞர் குழுவான ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் தரவுகள் தெரிவித்ததை ஓசிசிஆர்பி சுட்டிக்காட்டியுள்ளது.

இப்படி சில நூறு கோடிகளை பாஜாகவிற்கு வீசிவிட்டு, கடந்த ஆண்டு மட்டும் வேதாந்தா நிறுவனம் ஒரு லட்சத்து 48 ஆயிரம் கோடி ருபாய் வருவாய் ஈட்டியுள்ளது.

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் சாமனிய மக்கள் மீது கடும் அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டு வேலைக்குப் போக அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தி அவர்களது பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்த மோடி அரசு மற்றொருபுறம் பணம் வாங்கிக்கொண்டு அணில் அகர்வால் போன்ற கொலைகார முதலாளிகள் நாட்டின் இயற்கைவளத்தை எந்தத் தடையும் இல்லாமல் சுரண்டிக்கொள்ள அனுமதி அளித்துள்ளது. இவர்களெல்லாம் நாட்டுப்பற்றாளர்களாம், ஊழல் ஒழிப்புப் போராளிகளாம்.

அனில் அகர்வால் போன்ற தரகு முதலாளிகள் சட்டைப்பையில்  அதிகார வர்க்கம் இருக்கும் வரையில் தூத்துக்குடியில் ஸ்டைர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்களை சுட்டுவீழ்த்தவும் முடியும்  நாட்டின் இயற்கை வளங்களை இக்கார்ப்பரேட் முதலாளி கொள்ளையடிக்க திறந்துவிடவும் முடியும். நாட்டின் தலைவிதியை அரசியல் கட்சிகளும், அரசியல் கட்சி தலைவர்களும் தீர்மானிக்கிறார்கள் என்று நாடாளுமன்ற ஜனநாயகத்தை பற்றி முதலாளித்துவ சித்தாந்தவாதிகள் பீற்றிக் கொள்கிறார்கள். ஆனால் அது கார்ப்பரேட் முதலாளிகளால் தான் தீர்மானிக்கப்படுகிறது  என்பதற்கு அனில் அகர்வால் போன்றவர்கள் இலக்கணமாக திகழ்கிறார்கள்

  • அறிவு

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன