மின் கட்டண உயர்வுக்கு எதிராக சிறு குறு உற்பத்தியாளர்கள் போராட்டம்

ஒன்றிய அரசின் முடிவை மீறி மாநில அரசால் கட்டண உயர்வைத் திரும்ப பெறவோ, நிறுத்தி வைக்கவோ முடியாது என்பது சிறு தொழில் முதலாளிகளுக்கு நன்றாகத் தெரியும். இருந்தும் மாநில அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைப்பதன் மூலமும், முதலமைச்சரையும், மின்சாரத் துறை அமைச்சரையும், தங்களது தொகுதி எம்.எல்.ஏ.க்களையும் தொடர்ந்து சந்தித்து மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதன் மூலமும் குறைந்தபட்ச நிவாரணத்தை மட்டுமாவது வாங்கிவிட வேண்டும் என நினைக்கிறார்கள்.

 

 

மின்சாரக் கட்டண உயர்வைக் கண்டித்து, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் 3,000க்கும் மேற்பட்ட உரிமையாளர்கள் செப்டம்பர் 7ஆம் தேதி திருப்பூரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்ட பின்னர் அடுத்த 6 மாதங்களில் மீண்டும் 2023 ஜூலையில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது சிறு குறு மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்களைக் கடுமையாக பாதித்துள்ளது.

எம்.எஸ்.எம்.இ (MSME) என அழைக்கப்படும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் சுமார் 49.48 லட்சம் உள்ளன. சுமார் ஒருகோடி பேருக்கு வேலைவாய்ப்பளிக்கும் முக்கிய துறையாக விளங்குகிறது.

ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூரில் ஜவுளி நிறுவனங்கள், கோயம்புத்தூரில் பம்புகள் மற்றும் ஃபவுண்டரிகள் எனப்படும் வார்ப்பு ஆலைகள், சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகள் மற்றும் அச்சகங்கள், தூத்துக்குடி மாவட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகள், மதுரையில் ரப்பர் மற்றும் இரசாயன பொருட்கள் உற்பத்தி நிறுவனங்கள், இராணிப்பேட்டை தோல் பதனிடும் தொழிற்சாலைகள், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ஓசூர் உள்ளிட்டு மாநிலம் முழுவதும் பரவியுள்ள ஆட்டோமொபைல் துணை அலகுகள், போன்ற பல்வேறு தொழில்களை உள்ளடக்கிய இந்தியாவின் முக்கியமான சிறுதொழில் உற்பத்தி மையமாக தமிழ்நாடு செயல்படுகிறது.

ஆண்டுக்காண்டு உயர்ந்து வரும் மின்கட்டணம் தமிழ்நாட்டின் சிறுதொழில் உற்பத்தியாளர்களைக் கடுமையாக பாதித்துள்ளது. பயன்பாட்டு கட்டணம் ஒவ்வொரு யூனிட்டுக்கும் ரூ. 4.50 முதல் ரூ. 6.50 வரை இருந்தது தற்போது யூனிட்டுக்கு ரூ. 7.65 வரை அதிகரிக்கப்பட்டுள்ளன. அதே போல பிக்ஸ்டு சார்ஜஸ் எனப்படும் நிலைக் கட்டணம் ஒரு கிலோவாட்டுக்கு ரூ. 35ல் இருந்து ரூ. 154 ஆக, அதாவது சுமார் 450 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இவையெல்லாம் போதாதென்று காலை, மாலை என தலா 4 மணி நேரங்களுக்கு பீக் அவர்ஸ் கட்டணம் என்ற பெயரில் 25 சதவீதம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால் தொழிற்சாலைகளை மூடிவிடும் சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளதாக சிறு தொழில் உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து தமிழ்நாடு குடிசை மற்றும் சிறு நிறுவனங்களின் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் ஜேம்ஸ் பேசும் பொழுது, “கட்டண உயர்வு காரணமாக, நாங்கள் 40% கூடுதல் மின் கட்டணம் செலுத்துகிறோம். மேலும், பீக் ஹவர் கட்டணங்கள் நிதி அழுத்தத்தை அதிகரிக்கின்றன,” என்றார்.

“விலை உயர்வுக்கு முன், 112 கிலோவாட் வரையிலான மின்சார பயன்பாட்டுக்கு ஒரு கிலோவாட்டுக்கு ரூ.35 வசூலிக்கப்பட்டது. திருத்தத்தின் பின்னர், 50 கிலோவாட்டிற்கும் குறைவான மின் பாவனைக்கு ஒரு கிலோவாட் ஒன்றுக்கு 75 ரூபாயும், 50 கிலோவாட் முதல் 112 கிலோவாட் வரையிலும் கிலோவாட் ஒன்றுக்கு 150 ரூபாய் ஏற்றப்பட்டுள்ளது” எனவும் கூறியுள்ளார். மேலும் “இது ஒரு மோசமான நிலை. பல எம்எஸ்எம்இக்கள் யூனிட்களை இயக்க முடியாததால் இழுத்து மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.” என அவர் தெரிவித்துள்ளார்

செப்டம்பர் 7 உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து, செப்டம்பர் 11 முதல் 24 வரை, சிறுதொழில் உரிமையாளர்கள், மின்சாரக் கட்டண உயர்வைத் திரும்ப்ப பெறக் கோரி தனித்தனியாக தமிழக முதலமைச்சருக்குக் கடிதம் அனுப்ப உள்ளதாக அறிவித்துள்ளனர்.

அதேபோல தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா “தொழில் நசிவு காரணத்தினால், சிறுதொழில் உற்பத்தியாளர்கள், தொழிலிலிருந்து வெளியேறும் நிலை உருவாகிக் கொண்டிருக்கிற காரணத்தினால், உச்சநேர பயன்பாட்டு மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், நிரந்தர நிலைக்கட்டணத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.” என தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.

சிறுதொழில் முதலாளிகளின் இந்தக் கோரிக்கைக்கு செவிசாய்த்து மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் முடிவிலிருந்து அரசு பின்வாங்கப்போவதில்லை. மின்சாரக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என ஒன்றிய அரசு தொடர்ந்து வலியுறுத்தியதாகவும், இது தொடர்பாக 28 முறை கடிதம் எழுதியதுடன், கட்டணத்தை உயர்த்தாத பட்சத்தில் மாநிலத்திற்கு கொடுக்கும் மானியத்தை தர முடியாது என மிரட்டியதாகவும், அப்போதைய தமிழ்நாட்டு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

ஒன்றிய அரசின் நிர்பந்த த்திற்குப் பணிந்துதான் 2027ம் ஆண்டுவரை ஒவ்வொரு ஆண்டும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்திக் கொள்ளலாம் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இனி அடுத்து வரும் நான்கு ஆண்டுகளுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தொடர்ந்து மின் கட்டணத்தை உயர்த்தும் என்பதில் சந்தேகமே இல்லை.

ஒன்றிய அரசின் முடிவை மீறி மாநில அரசால் கட்டண உயர்வைத் திரும்ப பெறவோ, நிறுத்தி வைக்கவோ முடியாது என்பது சிறு தொழில் முதலாளிகளுக்கு நன்றாகத் தெரியும். இருந்தும் மாநில அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைப்பதன் மூலமும், முதலமைச்சரையும், மின்சாரத் துறை அமைச்சரையும், தங்களது தொகுதி எம்.எல்.ஏ.க்களையும் தொடர்ந்து சந்தித்து மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதன் மூலமும் குறைந்தபட்ச நிவாரணத்தை மட்டுமாவது வாங்கிவிட வேண்டும் என நினைக்கிறார்கள்.

மின்சாரத் துறையைத் தனியாருக்குத் தாரைவார்ப்பது என்பது, பன்னாட்டுப் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் நம் நாட்டில் தொழில் தொடங்க, மூலதனத்தைக் கொண்டுவந்து குவிக்க ஏற்றவகையில் களத்தைத் தயார் செய்யும் முன்நிபந்தனைகளில் முக்கியமானது.

இதனை நோக்கமாக கொண்டுதான், நாடு முழுவதும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள மின்சார வாரியங்கள் ஒவ்வொன்றையும் உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகம் என மூன்றாக உடைத்து அவற்றில் தனியார் முதலாளிகளை நுழைக்கும் வேலையை ஒன்றிய அரசு செய்துவருகிறது. இதற்கென மின்சாரச் சட்டத்தில் மாற்றங்களை ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அறிவித்து வருகிறது.

மின்சாரக் கட்டண உயர்வு என்பதைத் தனித்த நிகழ்வாக மட்டும் பார்க்க முடியாது. ஒழுங்கு முறை ஆணையங்களை உருவாக்குவது, அவற்றின் மூலம் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்து மின்சார வாரியங்களைப் பிரிப்பது, மின்சார வாரியங்களை உடைப்பது, படிப்படியாக மின்துறையைத் தனியார்மயமாக்குவது என்ற திட்டத்தின் ஒருபகுதிதான் இந்த கட்டண உயர்வு. இது நம் நாட்டின் தொழில்களையும், வளங்களையும், ஏகாதிபத்திய கார்ப்பரேட் நிறுவனங்கள், மற்றும் அவர்களின் கூட்டாளிகளான இந்திய தரகு அதிகாரவர்க்க பெரும் முதலாளிகளின் கொள்ளைக்குத் திறந்துவிடும் மறுகாலனியாக்க நடவடிக்கையாகும்.

இதனை இந்தக் கண்ணோட்டத்திலிருந்து, பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு எதிராக, விவசாயிகள், தொழிலாளர்கள், உள்நாட்டு முதலாளிகளின் நலன்களுக்கு எதிராக, ஏகாதிபத்திய நிறுவனங்கள் மற்றும் இந்திய தரகு முதலாளிகளின் நலன்களைக் காக்கும் மறுகாலனியாக்க நடவடிக்கை, என்ற கண்ணோட்டத்திலிருந்து எதிர்க்காமல், தங்களது குறுகிய கால நலன்களுகாக, மாநில அரசிடம் மன்றாடி ஒன்றிரண்டு சலுகைகளைப் பெற்றுவிடலாம் என நினைப்பது எவ்வித பலனையும் தராது.

  • அறிவு.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன