சாமானிய மக்களும் – சந்திராயன் -3ம்!

 

சந்திராயன் – 3, நிலவில் கால் பதித்த சாதனைகளில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற உலக நாடுகளின் வரிசையில் இந்தியாவும் அணிவகுத்திருந்தாலும், இதிலும் குறிப்பாக நிலாவின் தென்துருவ பகுதியில் கால் பதித்ததில் முதன்மை என்கிற பெருமைக்குரிய செயலை வரவேற்போம்; பாராட்டுவோம்.

இதற்கு மூளையாக செயல்பட்ட விஞ்ஞானிகளின் அயராத உழைப்பும், 1000 க்கும் மேலான தொழிற்நுட்ப வல்லுநர்களின் ஓய்வற்ற உழைப்பும், மக்கள் வரிப்பணம் என்கிற கூட்டு உழைப்பின் வெற்றியே சந்திராயன் – 3 செயற்கைக் கோளில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவப் பகுதியில் தரை இறங்கியதற்கான அடிப்படை என்பதை எவராலும் மறைக்க முடியாது. இவை இந்தியாவின் அறிவியல் தொழிற்நுட்ப வளர்ச்சியிலும், ஒருங்கிணைந்த செயற்பாட்டிலும் ஒரு முன்னேற்றம் என்ற வகையில் பெருமிதம் கொள்வது தேவையான ஒன்றே, இதையும் நாம் மறுப்பதற்கில்லை.

இதற்காக அபிசேகங்கள், யாகங்கள் உள்ளிட்ட மத சடங்குகள் மற்றும் வழிபாடுகளை நடத்தி கடவுளிடம் பிரத்தனை என்கிற பெயரில் சந்திராயன் – 3 வெற்றி பெற நம்பிக்கை என்ற பெயரில் கோரிக்கை வைப்பது அப்பட்டமான மூடத்தனம், அறிவிலித்தனம். இச்செயல் விண்வெளி ஆராய்ச்சியாளர்களின், விஞ்ஞானிகளின் மற்றும் தொழிற்நுட்ப வல்லுநர்களின் அயராத உழைப்பை, நடைமுறை அனுபவத்தில் கிடைத்த வெற்றியை இழிவுப் படுத்துவதாகும்.

சந்திராயன் – 3 வெற்றியின் தொடர்ச்சியில் சந்திராயன் – 1 மற்றும் 2 இன் அனுபவத்தின் வளர்ச்சியில் பெற்ற படிப்பினைகளை உள்ளடக்கியுள்ளது. இந்திய தத்துவ இயல் சாங்கியம் கூறுவது போல “அனுபவங்களின் தொகுப்பு அறிவு  என்பதும், பல முயற்சிகளின் தோல்விகள்தான் வெற்றியின் படிகள் என்பதும்” நடைமுறையில் பெறும் அனுபவங்களின் வளர்ச்சியின் தொகுப்பு. இந்த தொகுப்பில் பெறும் சரி – தவறுகளை விஞ்ஞானிகள் – தொழிற்நுட்ப வல்லுநர்கள் மதிநுட்பத்துடன் தொடர்ச்சியாக – இடைவிடாமல் பரிசீலித்து அவற்றில் வெளிப்படும் தவறுகளை களைந்து சரியானவற்றை நடைமுறைப் படுத்தியதின் விளைவே இவ்வெற்றிக்கு அடிப்படை. மத நம்பிக்கையோ, மூட நம்பிக்கையோ, பிரத்தனையோ அல்ல.

விஞ்ஞானிகளும், தொழிற்நுட்ப வல்லுநர்களும் தங்களின் மூளையின் செயற்பாட்டில் விளைந்த சிந்தனையை தொடர்ச்சியாக இடைவிடாமல் வளர்த்தெடுத்துக் கொண்டு சென்றதன் விளைவே சந்திராயன் – 3 வெற்றியை சாதித்துள்ளது. அறிவியல் தொழிற்நுட்ப வளர்ச்சியில் மூட நம்பிக்கைகளையும், மத நம்பிக்கையையும் புகுத்துவதை –  அதன் அடிப்படையில் சிந்திப்பதை அடியோடு வெறுத்து ஒதுக்குவோம்.

இஸ்ரோ விஞ்ஞானிகள், தொழிற்நுட்ப வல்லுநர்கள் கண்டுப்பிடிப்பை நிகழ்த்தினாலும், அவை யாருக்கு பயன்பட வேண்டும் என்பது குறித்து அவர்களின் நேர்காணல்கள், உரைகள் போன்றவைகளிலிருந்து உணர முடியவில்லை. அதில் அக்கறையும், பொறுப்பும் இருப்பதாகவும் தெரியவில்லை.

இஸ்ரோவின் – இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முதல் தலைவரான “விக்ரம் சாராபாய்” யின் பெயரைச் சுருக்கி சந்திராயன் – 3 விண்கலத்தின் லேண்டருக்கு “விக்ரம்” என்று பெயரிட்டார்களே தவிர “அறிவியல் தொழிற்நுட்ப வளர்ச்சி என்பது மற்ற நாடுகளுடனான போட்டியாக மட்டுமே இருக்கக் கூடாது என்றும், அது மனித குலத்துக்கும் (பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கும்) பயன்பட வேண்டும்”. என்கிற அவரின் கனவு நனவாக்கும் விதமாக எவரும் நினைவு கூறவில்லை. நேர்காணலிலும் கூட வெளிப் படுத்தவில்லை.

இருப்பினும் பெரும்பான்மை சாமனிய உழைக்கும் மக்களின் வாழ்வுக்கு எந்தளவிற்கு பயன்படும் என்பது குறித்து இஸ்ரோவின் முதல் தலைவரான விக்ரம் சாராபாய் யை போல சமூக அக்கறை – மாற்றங்கள் மீது அக்கறையுள்ளவர்கள் சிந்திப்பது மிக மிக அவசியம். நிலவின் நிலத்தில் தண்ணீர் பனிப்பாறைகள் இருப்பதையும் இதன் மூலம் குடிநீரையும், எரிபொருள் ஹைட்ரஜனையும், சுவாசிப்பதற்கான ஆக்ஸிஜனையும் உருவாக்க முடியும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது கல்வி, மருத்துவம், மின்சாரம் மற்றும் பொதுத்துறை – அரசுத்துறை அதன் சொத்துக்கள் அனைத்தும் உள்நாட்டு – வெளிநாட்டு, தனியார் – கார்ப்பரேட்களுக்கு கொள்ளை இலாபத்திற்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சியும், வெற்றிப் பெறுமானால் இவற்றிற்கும் இதே கதிதான் என்று சொல்லாமலே விளங்கும். இஸ்ரோவின் முதல் தலைவரான “விக்ரம் சாராபாய்யின் கனவுக்கும் கல்லறை எழுப்பப்படும் என்பது நிச்சயம்.

விண்வெளி ஆராய்ச்சியில் சாதனைப் படைக்கும் இந்திய அறிவியல் தொழிற்நுட்பத் துறை உழைக்கும் மக்களின் தூக்கத்தைத் துவட்டியெடுக்கும் கொசுக்களை ஒழிக்கவோ, இதற்கு காரணமான கழிவுநீர் சாக்கடை அடைப்பை நீக்கவோ, சுகாதாரத்தை மேம்படுத்தவோ, மக்களின் அடிப்படை தேவைகளுக்கான ஆராய்ச்சியினை மேற்கொள்ளவோ, அதற்கான உந்துதலை ஆட்சியாளர்கள் மேற்கொள்வதில் அக்கறையோ செலுத்துவதில்லை. காரணம் “மக்கள் நல அரசாக இருக்காதே, சந்தை நல அரசாக இரு” என்பதே சந்தை அரசியலின் விதி.

தினமணி கட்டுரையில் பேராசிரியர் பழனித்துரை கூறுவது போல “சந்தை, அரசியல் கட்சிகளுக்கு எப்பொழுது நிதி கொடுக்க ஆரம்பித்ததோ, அன்றிலிருந்து அரசியல் கட்சிகளுக்கும் கட்டளைகளைப் பிறப்பிக்க ஆரம்பித்தது. அரசியல் கட்சியும் எந்த சிரமமின்றி நிதியை உருவாக்கிக் கொள்ள வழிவகை வந்தவுடன் மக்களுக்கும் ஒரு விலை நிர்ணயத்து மக்களை வாங்கும் பொருளாக மாறிவிட்டன.”

“சந்தையிலிருந்து கிடைக்கும் நிதி கட்சியின் செயல்பாடுகளுக்கு மட்டுமல்லாமல் வாக்குகளை வாங்குவதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்று வாக்குகளைத் தாண்டி [நாடாளுமன்ற – சட்டப் பேரவை] உறுப்பினர்களையும் விலைக்கு வாங்கி ஆட்சி அமைக்கலாம் என்ற சூழலும் வந்துவிட்டது. இதனால் மக்களாட்சி சிதைவுறுகிறது.”

அதாவது, இதுவரை இருந்து வந்த “போலி ஜனநாயகம், போலி சுதந்திரம் எல்லோருக்குமான அரசு என்கிற கதைப்புகள் எல்லாம் சிதைவுற்று, அப்பட்டமாக, அம்மணமாக தனியார் – கார்ப்பரேட்களின் அடியாளாக அரசும் – அரசாங்கமும் மாறி வருவதையும் நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது. மேலும் “ஆட்சியாளர்கள் கார்ப்பரேட்களாக உயர்வதும், கார்ப்பரேட்கள் ஆட்சியாளர்களாக வளர்வதும் உள்ளது. அதாவது தேர்தல் அரசியல் கார்ப்பரேட் அரசியலாக மாறி வருகிறது.”

இவை வாக்களிக்கும் மக்களை வெறும் மனுதாரர்களாக்கி ஆட்சியாளர்களிடம் கேள்வி கேட்கும் சுதந்திரத்தையும், போராடும் அடிப்படை உரிமையையும் பறித்துவிட்டது. இனியும் தாமதம் ஏன்?
தேர்தல் அரசியலை ஓரம் கட்டுவோம்! களத்தில் இறங்கி போராடும் மக்கள் திரள் அரசியலை முன்னெடுப்போம்!

  • மோகன்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன