எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானமும், பாஜகவின் பாசிசத் திமிரும்!

நாடாளுமன்றத்தில் பொய்களை பேசுகிறோமே என்று காவி பாசிஸ்டுகள் சிறிது கூட கூச்சமோ, வெட்கமோ படுவதில்லை. இவர்களின் அரை குறை உண்மைகளும், பொய்களும் நியாயம் நிறைந்தவைகளாக நாடாளுமன்றத்தில் அறிக்கையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, விவாதத்தின் மூலம் வழிநடத்தப்படுகின்றன. இதன் மூலம் கலவரத்தால் உருக்குலைந்து கிடக்கும் மணிப்பூர் மக்களை நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் மீண்டும் ஒரு முறை குற்றவாளியாக்குகின்றனர்.

மணிப்பூரில் நடந்த கலவரங்களை கண்டித்து, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம்; இத்தீர்மானத்தை  மோடி, அமித்ஷா உள்ளிட்ட பாஜக தரப்பு கையாண்ட விதம்; பல மக்கள் விரோத மசோதாக்கள் இரு அவைகளிலும்  நிறைவேறிய விதம் இவையனைத்தும், காவி பாசிஸ்டுகள் தொடுத்து வரும் தாக்குதல்களுக்கு நாடாளுமன்ற ஜனநாயகம் தடையாக இல்லை என்பதோடு, அதுவே பாசிச கும்பலுக்கு ஆயுதமாக பயன்படுகிறது என்பதையும் தெளிவாக்கிவிட்டன.

மணிப்பூர் கலவரத்தின் போது, இரண்டு குக்கி இனப் பெண்களை, சித்திரவதை செய்து  நிர்வாணமாக, ஊர்வலமாக அழைத்து வந்த காணொளி வெளி வந்ததையொட்டி, இதையொத்த நூற்றுக்கணக்கான சம்பவங்கள் மணிப்பூரில் நடக்கிறது; குக்கிகள் காடுகளை ஆக்கரமிக்கிறார்கள், அவர்கள் மியான்மரிலிருந்து வந்த வந்தேறிகள் எனவும் தன் பாசிசத் திமிரை நாடாளுமன்றத்திற்கு வெளியே கக்கினார்  மணிப்பூர் மாநில முதல்வர் பைரன் சிங்.

 

அமித்ஷாவோ இதே பாசிசத் திமிரை நாடாளுமன்றத்திற்குள்ளேயே வெளிப்படையாக வெளிப்படுத்துகிறார்.

அவர் தன் கவிதை மணம் நிரம்பிய உரையில் பேசும் போது, “மணிப்பூரில் கடந்த மூன்று மாதமாக  கொல்லப்பட்ட  152 பேரில் 107 பேர் மட்டும் மே மாதம் 3 முதல் 5ம் தேதி வரை கொல்லப்பட்டிருக்கின்றனர். தற்போது கொலைகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. மணிப்பூரில் நடந்து வரும் கலவரத்தின் போது, அம்மாநில முதல்வர் பைரன் சிங் ஒன்றிய அரசுடன் ஒத்துழைத்ததால் அவரை மாற்ற வேண்டிய அவசியமில்லை” என்று நியாயவானைப் போல பதில் கூறியிருக்கிறார்.

இந்தப் பதிலுக்கு பின்னால் ஒளிந்து இருக்கும் பாசிசத் திமிர் இதுதான்: 152 பேரை கொன்று விட்டோம்; நூற்றுக்கணக்கான சர்ச்சுகளை இடித்து தரைமட்டமாக்கி விட்டோம்; ஆயிரக்கணக்கான குக்கி இனமக்களை அகதிகளாக துரத்தியடித்துவிட்டோம்; அவர்களின் சொத்துக்களை கொளுத்திவிட்டோம். பைரன் சிங்கை மாற்றினால் நிலைமை இன்னும் மோசமாகும். இதுவே போதும், அதனால் அவரை மாற்றவில்லை.

இது மட்டுமில்லாமல், மியான்மரில் “குக்கி ஜனநாயக முன்னனி” என்ற அமைப்பு,  அந்நாட்டின் இரானுவ ஆட்சியை எதிர்த்து போராடுவதன் காரணமாக  மியான்மரிலிருந்து குக்கிகள், மணிப்பூருக்குள் ஊடுருவியதாகவும், அது மெய்தி மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியாகவும், இதுவே மணிப்பூரில் கலவரத்தை ஏற்படுத்த வழிவகுத்தது என பாசிஸ்டுகளுக்கே உரிய பொய்கள் மூலம், குக்கிகள் மீதான தன் வெறுப்பை நாடாளுமன்றத்திற்குள்ளேயே கட்டவிழ்த்து விட்டார்.

அமித்ஷாவின் இந்த பொய்யான கருத்தை எதிர்த்து மணிப்பூரின் குக்கி எம்.எல்.ஏக்கள், குக்கி அமைப்புகள் என தொடர்ந்து அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றனர்.

அமித்ஷாவின் இக்கருத்து, தங்களை நம்பிக்கையிழக்கச் செய்வதாக ’மணிப்பூர் டெல்லி பழங்குடி மன்றம்’ கூறியிருக்கிறது. அதே போல ’பழங்குடி தலைவர்கள் மன்றம்’ எனும் அமைப்பு, பின் தங்கிய, நலிவுற்ற அகதிகளை பார்த்து குறை கூறுவதற்கே இப்பொய் கருத்து கூறப்பட்டிருக்கிறது எனத் தெரிவித்திருக்கின்றது.

இதற்கெல்லாம் மேலாக மியான்மரை சேர்ந்த ’குக்கி தேசிய அமைப்பு’ (பர்மா) எனும் அமைப்பு, அமித்ஷா தனது உரையில் கூறியது போல், குக்கி ஜனநாயக முன்னனி எனும் அமைப்பே மியான்மரில் இல்லை, இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எழுதிய கடிதத்தில், தெளிவுபடுத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொய்களை பேசுகிறோமே என்று காவி பாசிஸ்டுகள் சிறிது கூட  கூச்சமோ, வெட்கமோ படுவதில்லை. இவர்களின் அரை குறை உண்மைகளும், பொய்களும் நியாயம் நிறைந்தவைகளாக நாடாளுமன்றத்தில் அறிக்கையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, விவாதத்தின் மூலம் வழிநடத்தப்படுகின்றன. இதன் மூலம் கலவரத்தால் உருக்குலைந்து கிடக்கும் மணிப்பூர் மக்களை நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் மீண்டும் ஒரு முறை குற்றவாளியாக்குகின்றனர். நாடாளுமன்றத்தில் பாசிஸ்டுகள் கூறும் பொய்யான தகவல்கள், குற்றச்சாட்டுகள் மூலம் நாட்டு மக்கள் அனைவரும் ஏமாற்றப்படுகின்றனர்

மோடி, மணிப்பூர் விவகாரத்தில் இன்னும் கூடுதலாக பேசியிருக்க வேண்டும் என  ஊடகங்கள் முனுமுனுக்கின்றன. ஆனால் நாட்டில் கொடுரமாக நடந்து வரும் இனக்கலவரம் குறித்த தனது இரண்டு மணிநேர பதிலில் வெறும் பத்து நிமிடத்தை மட்டும் ஏன் ஒதுக்கினார் என மோடியின் துதிபாடிகளான ஊடகங்களுக்கு கேட்க துணிவில்லை.

மணிப்பூரின் கலவரத்தை தடுக்க ஒன்றிய அரசு என்ன செய்தது என்பதை மோடி, தன் உரையில் நாட்டு மக்களுக்கு தெரிவிக்க முற்படாமல், பாசிஸ்டுகளுக்கே உரிய உடல் மொழி, சொல்லாடல் மூலம் எதிர்க்கட்சிகளை நக்கலடிப்பதற்கே, தன் இரண்டு மணி நேர உரையை பயன்படுத்தி கொண்டார்.

 

 

மணிப்பூர் கலவரம் குறித்து மோடி பதில் கூறாததால், எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த பின்பே, அதைப் பற்றி பேச ஆரம்பித்த மோடி, நாடும் நாடாளுமன்றமும் மணிப்பூரோடு இருக்கிறது என்ற வாய்ச்சவடால்களையும் மணிப்பூரில் ஏதோ குடும்பச் சண்டை நடந்து வருவது போல அங்கு விரைவில் அமைதி சூரியன் உதிக்கும் போன்ற அருள்வாக்குகளையும் அம்மாநிலக் கலவரத்திற்கு தீர்வாக கூறினார்.

இது போன்ற மோடியின் வெற்று வாய்ச்சவாடல்கள், ஒருபோதும் அம்மாநிலத்தின் கலவரத்திற்கான தீர்வாக இருக்கப் போவதில்லை. நாடும் நாடாளுமன்றமும் மணிப்பூரோடு இருப்பது இருக்கட்டும்; ஆனால் மணிப்பூரின் குக்கி சிறுபான்மை இன மக்கள், பாஜக அரசு தங்களுக்காக இல்லை என கூறுகிறார்கள்; மணிப்பூர் எனும் சிறு மாநிலம் இரண்டாக பிரிந்து இரண்டு இனங்களும் ஒன்றுகொன்று எதிரெதிராக நிற்கிறார்கள்; அமைதி சூரியன் உதிக்கும் என்ற மோடியின் வெற்று ஜம்பம், மணிப்பூரின் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த தீர்வையும் தரப்போவதில்லை.

மணிப்பூரில் விரைவில் அமைதியும், வளர்ச்சியும் திரும்பும் என மோடி பேசிக் கொண்டிருக்கும் போதே, ஹரியானாவின் பாஜக மாநில அரசு ஆட்சியில், அம்மாநில முஸ்லீம்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள்;  முஸ்லீம்களின் மீது அரசு பயங்கரவாதம் ஏவப்பட்டு வருகின்றன. அவர்களின் கடைகள், வீடுகள் புல்டோசர்கள் மூலம் இடிக்கப்பட்டு வருகின்றன; பல ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து செய்வதறியாது தவித்து வருகிறார்கள்.

மணிப்பூர் கலவரத்தையொட்டி மோடி பேசாமலிருந்ததைப் போல இந்த முறையும் ஹரியானாவின் கலவரத்தை பற்றி  எதுவும் பேசவில்லை. ஏன் நாடாளுமன்றத்தில் அதற்காக ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. ஹரியானா கலவரம் குறித்தும் மோடியை பேச வைப்பதற்கு, எதிர்க்கட்சிகள் மீண்டும் ஒரு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவேண்டும் போலும்.

மணிப்பூரில் இறந்தவர்களின் உடல் மூன்று மாதங்கள் ஆகியும் அடக்கம் செய்யப்படாமல் காத்திருக்கின்றன. ஹரியானாவில் முஸ்லீம் மக்கள் வீடுகளை இழந்து அகதிகளாக மாறி வருகின்றனர். ஆனால் இவர்களின் ஓலக் குரல்களுக்கு செவிசாய்க்காமல், பாசிஸ்டுகளின்  கேலிகள், சிரிப்புகள் நாடாளுமன்ற கட்டிடங்களில் எதிரொலிக்கின்றன

எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு பாஜக அரசு பதிலளித்த விதம் மணிப்பூர் மக்களை மட்டுமில்லை ஒட்டுமொத்த நாட்டு மக்களை அவமதித்துள்ளது. மணிப்பூரின் அவலநிலை குறித்து எந்த வித அனுதாபத்தையும், வருத்தத்தையும் மோடி, அமித்ஷா நாடாளுமன்றத்தில் தெரிவிக்கவில்லை. இதை காவி பாசிஸ்டுகளிடம், நாம் எதிர்ப்பார்க்கவும் முடியாது. மோடி, அமித்ஷாவின் பாசிச திமிர்ப்பேச்சுகளுக்கு பாஜக எம்.எல்.ஏக்களும்,  பாஜக ஆதரவாளர்கள் கைதட்டி குதுகலிக்கிறார்கள்.

எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் தங்களின் பாசிச செயல்திட்டங்களை அடக்கிவிடமுடியாது என இந்திய நாடாளுமன்றத்தை இன்னொரு ரீச்ஸ்டாக்காக (இட்லரின் தலைமையிலான நாடாளுமன்றம்) மாற்ற முயலுகிறார்கள் காவி பாசிஸ்டுகள்

காவி பாசிச கும்பலை, நாம் தோற்கடிக்க வேண்டிய இடம், நாடாளுமன்ற கட்டிடம் இல்லை;  மக்களாகிய நாம், நாட்டின் வீதிகளில் அவர்களை மோதி வீழ்த்துவதன் மூலமே தோற்கடிக்க முடியும் என்பதை எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நிருபித்து விட்டது.

  • தாமிரபரணி

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன