மோடி ’வித்தையும்’ மோடியின்
‘சுதந்திரதின’ உரையும்!

 

 

77வது “சுதந்திர தின” விழாவில் பாசிச RSS, BJP கும்பலின் தலைமையில் அமைக்கப்பட்டிருக்கும் ஒன்றிய அரசின் தலைமை அமைச்சாரான மோடி ஆற்றிய அளப்பரையில் நடைமுறைக்கு உதாவாத கற்பனைகளுக்கும், அதன் பாசிசக் கொள்கைக்கு ஒத்து வராத பொய்யான வாக்குறுதிகளும் மோடி ‘வித்தைக்கு’ ஒப்பானதே.

“வளர்ச்சியின் பொற்காலமாக அடுத்த 5 ஆண்டுகளில் அமையும், முன்னேற்றமானது 1000 ஆண்டுகளுக்கு பயணிக்கும்” என்று பொருளாதார வல்லுநர்கள் கூட இதுவரை இப்படி புளுகியது இல்லை. தேசிய, சர்வதேசிய அரசியல் பொருளாதார, ஏற்றம் இறக்கம் குறித்த இயக்கப் போக்கை அறியாத முண்டங்களால் தான் இப்படி கூறமுடியும்.

அடுத்த 5 ஆண்டுகளில் உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாகக் கூட மாறலாம். ஆனால் இந்த பொருளாதார மாற்றம் யாருக்கு பயனளிக்கப் போகிறது என்பதுதான் கேள்வி. நிச்சயம் ஏழை எளிய மக்களுக்கானதாக இருக்காது. மாறாக, அம்பானி, அதானி, டாடா-பிர்லா போன்ற இந்திய ஒன்றிய தரகு முதலாளிகள், அந்நிய நிதி மூலதன கும்பல்கள், கார்ப்பரேட்களின் பொருளாதார முன்னேற்றமாக இருக்கும் என்பதில் எவ்வித அய்யமும் தேவையில்லை.

இதற்கான சான்றுகளை அளிக்கவும், மோடியின் அளவுகடந்த பொய்களை அம்பலப்படுத்தவும் முடியும். குறிப்பாக கொரோனா காலத்தில் வேலையின்மையால் வருமானங்களை இழந்ததும் போதிய மருத்துவ சேவை கிடைக்காமல் அவதிப்பட்டதும், ஆயிரக்கணக்கில் மடிந்ததும் ஏழை எளிய மக்களே. ஆனால் கார்ப்பரேட்களோ ஒரு நாளைக்கு 1000 கோடி ரூபாய் வரை கொள்ளையடித்து தங்களது வருமானத்தை இலட்சக்கணக்கான கோடியில் பெருக்கிக் கொண்டன. ஏழை எளிய மக்களோ இருப்பதையும் இழந்து பரதேசிகளாக்கப்பட்டனர்.

மேலும், பாசிச மோடி அரசால் இன்றுவரை அன்றாடம் ஏறிவரும் விலைவாசி உயர்வாலும், பெட்ரோல் – டீசல் விலையேற்றத்தாலும், GST வரிக்கொடுமையாலும் போதாக்குறைக்கு மின்சார கட்டண உயர்வாலும் வாடி வதங்கி வாழ்வுரிமையை இழந்து வருவது ஏழை எளிய மக்களே! கார்ப்பரேட் முதலாளிகள் அல்ல.

இளைஞர்களின் பொருளாதார திறன், ஜனநாயகம், பன்முகத் தன்மை ஆகிய இவையனைத்தும் இந்திய ஒன்றியத்தின் கனவை நனவாக்கப் போவதாக கசாப்புக் கடைக்காரனைப் போல கதையளக்கிறது பாசிச மோடி அரசு. இதற்கு மாறாக இளைஞர்களின் திறனை முழுமையாக தனியார் கார்ப்பரேட் முதலாளிகளின் இலாப வெறிக்கு குறைந்தக் கூலிக்கு பலியாக்கி வருகிறது. பஜ்ரங்தள், வி.எச்.பி, சனாதன் சன்ஸ்தா மற்றும் இது போன்ற பல்வேறு கொலைவெறி அமைப்புகளில் ஈடுபடுத்தி இளைஞர்களின் திறனை சீரழித்து வருகிறது.

ஜனநாயகத்தைப் பற்றி வாய்கிழியப் பேசும் இவர்கள், ஜனநாயகத்தூண்களான ஊடகங்களை மிரட்டி பணிய வைத்தும், கருத்து சுதந்திரத்தைப் பறித்தும் வருகின்றனர். பெரும்பான்மை என்ற பெயரில் நாடாளுமன்ற விவாதத்தைப் பறித்தும், குரல் வாக்கெடுப்பு மூலம் மக்கள் விரோதச் சட்டங்களை இயற்றியும் அரங்கேற்றியும் வருகின்றனர். அரசு நிர்வாகத்தில் RSS சித்தாந்த வாதிகளைப் புகுத்தி பாசிசமயமாக்கி வருகின்றனர்.

பன்முகத்தன்மையைப் பீற்றும் இவர்கள், 1000 வருடம் இந்தியா பின்தங்கியதற்கு முஸ்லீம்கள் தான் காரணம். எனவே அவர்களை தாக்கும்படி வழிகாட்டுதல் தருவதோடு அரங்கேற்றியும் வருகின்றனர். முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு தருவதால் தலித் மக்களுக்கு (தலித் மக்களை பசுவதை என்ற பெயரில் கொன்றொழித்துக் கொண்டே) இட ஒதுக்கீட்டை தர இயலவில்லை என்று கட்டுக் கதையை அவிழ்த்துவிட்டு, முஸ்லீம் மக்களுக்கு எதிரியாக தலித் மக்களை கொம்பு சீவி விடுகின்றனர். மாநிலங்களின் பன்முகத் தன்மையை ஒழித்து ஒற்றைத் தன்மையை, இந்து-இந்தி-இந்தியா என்கிற இந்துராஷ்டிரத்தை நாடுமுழுவதும் நிறுவ துடிக்கின்றனர். மேற்கண்ட அடாவடித்தனங்களை அன்றாடம் நடைமுறைப் படுத்திவரும் RSS, BJP பாசிச கும்பலின் தலைமையிலான மோடி அரசானது இளைஞர்களின் பொருளாதார திறனை, ஜனநாயகத்தை – பன்முகத்தன்மையை வளர்த்து இந்தியாவின் கனவை நனவாக்கப் போவதாக கூறுவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்.

இந்திய கனவை நனவாக்குவதற்கு தடையாக, எதிரியாக உள்ள ஊழல், குடும்ப அரசியல், வாக்கு வங்கி அரசியல் ஆகியவைகளை அகற்றப் போவதாக ஆர்ப்பாட்டம் செய்கிறது மோடி அரசு. ஊழலின் ஊற்றுக் கண்ணான தனியார், கார்ப்பரேட் முதலாளிகளின் அடியாளாக இருந்து அட்சி செய்துவரும் பாசிச மோடி அரசுக்கு ஊழலைப் பற்றி பேசுவதற்கு ஏதாவது யோக்கியதையோ, தகுதியோ இருக்கிறதா? அரியானா, துவாரகா எக்ஸ்பிரஸ் ஹைவே ரோடு போட ஒரு கி.மீ.க்கு 250 கோடி செலவழித்துள்ளதை சி.ஏ.ஜி அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. இந்தப் பணத்திற்கு தங்கத்திலேயே சாலை போட்டிருக்கலாம். பிஎம் கேர்ஸ் பண்ட் மூலம் அரசுதுறை, பொதுத்துறை ஊழியர்களிடம், கார்ப்பரேட்களிடம் வசூலிக்கும் கோடிக் கணக்கான ருபாய் பணத்திற்கு கணக்குக்காட்ட தேவையில்லையாம். அப்படி என்றால் அமலாக்கத்துறை பாய வேண்டிய இடம் மோடியின் PM கேர்ஸ் பண்ட் நிறுவனம் என்பது தானே நியாயம்.

வாரிசு அரசியலை, குடும்ப அரசியலை, விட பாசிச அரசியல் அபாயமானது என்பது ஒரு புறமிருக்க, உடன்கட்டை ஏறுவது எங்களின் பிறப்புரிமை என்று முழங்கிய விஜய ராஜே சிந்தியா, இவர் மகள் வசுந்தரா ராஜே சிந்தியா, மகன் வழி பேரன் துஸ்வந்த் சிங் ஆகியவர்கள் மாநில – மத்திய அமைச்சர்களாகவும், MP யாகவும் வலம் வருகின்றனர். மேலும் 30க்கும் மேற்பட்ட MP-கள் வாரிசு அரசியல்வாதிகளாக வலம் வருகின்றனர். இவையெல்லாம், வாரிசு, குடும்ப அரசியல் இல்லாமல் வேறென்ன? ஏமாந்தவர்களின், அறியதவர்களின் காதிலே பூ சுத்தும் கூட்டம் தானே இவர்கள்.

வாக்கு வங்கி அரசியலைப் பற்றி பாசிச RSS, BJP மோடி கும்பல் பேசுவதே மாபெரும் பித்தலாட்டம். RSS, BJP உட்பட அனைத்து கட்சிகளும் சட்டமன்ற, நாடாளுமன்ற பதவிக்கு, அரசியல் அதிகாரத்திற்குக் தானே ஓட்டுக் கேட்கிறது. அப்படியிருக்கும் போது வாக்கு வங்கி அரசியல் நோக்கம் எங்களுக்கு இல்லை எதிரணிக்குத்தான் என்று கூறுவது பித்தலாட்டம் இல்லையா? அப்படி என்றால் எதிர்கட்சிகளை சதி செய்து உடைப்பதும், அதில் ஒரு பிரிவை ஊழல் பெருசாளிகளாக இருந்தாலும், தனக்கு சாதகமாக இருந்தால் அவர்களை வளைத்து போடுவதும், குதிரை பேரம் நடத்தி MLA, MP களை விலைக்கு வாங்குவதும் எதற்கு? நாக்கு வழிக்கவா? ஊருக்குத்தான் உபதேசம்; இவர்களுக்கு இல்லை.

இவ்வளவு அயோக்கியத்தனங்களையும் அரங்கேற்றும் பாசிச RSS, BJP மோடி கும்பல், ஊழல் வாரிசு அரசியல், வாக்கு வங்கி அரசியலைப் பற்றி பேசுவதற்கும், எதிர்ப்பதற்கும் எந்த தகுதியும், அருகதையும் இல்லை. பாசிச மோடி அரசானது, தனது ஆட்சிக்குமுன் பட்டினி குறியீட்டில் 52வது இடத்திலிருந்த இந்தியாவை 107வது இடத்திற்கு கொண்டு வந்தது, வேலையின்மையை தீவிரமாக்கியது, ஏற்றுமதியில் அபரிமிதமான சரிவை ஏற்படுத்தியது போன்ற மாபெரும் ’சாதனைகளை’ நிகழ்த்திகாட்டியுள்ளமைக்கு வேண்டுமானால் ’பாராட்டலாம்’.

இவ்வளவு கொடுமைகளை அரங்கேற்றி வரும் ஒன்றிய தலைமை அமைச்சர் மோடி 77வது ’சுதந்திர’ தின விழாவில் ”எனது குடும்ப உறுப்பினர்களே” என்று பேசுவதும், ”எனது மண், எனது தேசம்” என்று மோடி உட்பட சங்பரிவாரங்கள் பேசுவதும் தேன் தடவிய வார்த்தைகளால் தழுவிக் கொல்லும் தந்திரம்.   

ஊழலால் பாதிக்கப்படுவது ஏழைகள் என்று பச்சோந்திகளாக ஒப்பாரி வைத்துக்கொண்டே ஊழலுக்கு ஊற்றுக் கண்ணான தனியார் – கார்ப்பரேட் – முதலாளிகளின் அடியாளாக இருந்து ஆட்சி செய்து வரும் பார்ப்பன பயங்கரவாதிகளான காவிகள் பொய்களை அள்ளி வீசுவது, பொய்யையே திரும்பத் திரும்ப சொல்லி அதையே உண்மையாக்குவது, பாதி பொய்யை – பாதி உண்மையை சொல்லி முழு உண்மையை மறைப்பது போன்றவைகளை நடைமுறைப் படுத்திவரும் “கோயபல்ஸ்”களான பாசிஸ்டுகளை களத்தில் இறங்கி முறியடிக்காமல், ஜனநாயகமும் மலராது! மக்களின் வாழ்வும் விடியாது!    

  • மோகன்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன