காவி பாசிஸ்டுகளின் மதவெறி
அரசு பயங்கரவாதத்தை முறியடிக்க
ஹரியானா விவசாயிகளிடம் பாடம் கற்போம்!

2020-21 ஆம் ஆண்டுகளின் போது வர்க்கப் போராட்டத்தில் சிவந்திருந்த எங்களது நூஹ் நகரத்தை சுற்றியுள்ள பகுதி, இப்போது காவி வண்ணத்தை பூசிக் கொண்டு அருவருப்பாய் காட்சி அளிக்க நாங்கள் விடமாட்டோம்; காவி பாசிஸ்டுகளே, நீங்கள் நினைக்கும் மதப்பிளவுகளை எங்கள் மண்ணில் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என வர்க்க உணர்வோடு எழுந்து நிற்கிறார்கள் ஹரியானா விவசாயிகள்.

ஹரியானா- நூஹ் நகரத்தில் ஜூலை 31ம் தேதியன்று ஆர்.எஸ்.எஸ்சின் கிளை அமைப்பான பஜ்ரங்தளச் சார்ந்த காவி கும்பல் ஊர்வலத்தை நடத்திய போது மதக்கலவரத்தை தூண்டும் வகையில், ஆயுதங்களுடன் வந்து 6 முஸ்லீம்களை கொன்று குவித்தது. இதைத் தொடர்ந்து நூஹ் நகரத்தை சுற்றியுள்ள பகுதியில் காவி கும்பல் இந்து மத பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டு வருகிறது.

ஹரியானாவை ஆளும் பாஜக மாநில அரசோ, இக்கலவரம் நடந்த மறுநாளே அரசு பயங்கரவாதத்தை முஸ்லீம் மக்கள் மீது ஏவ ஆரம்பித்தது. நூஹ் பகுதியிலிருந்து ஆறு கீமி தொலைவில் இருக்கும் முராத்பாஸ் எனும் கிராமத்தில் ஆகஸ்ட் 1ம் தேதி அதிகாலையில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் ஒரு பெரிய போலீசு குழுவே ஈடுபடுத்தப்பட்டனர். ஒவ்வொரு வீட்டுக் கதவையும் இடித்து தள்ளிக் கொண்டு நுழைந்த போலீசார் 25க்கும் மேற்பட்ட ஏழை முஸ்லீம் இளைஞர்களை கைது செய்தனர். தூங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பியும், கழிவறையில் இருந்தவர்களையும், குளிப்பதற்கு துண்டோடு நின்றவர்களையும் கூட போலீசு நிலையத்திற்கு இழுத்துச் சென்றனர்.

இதேபோல நூஹ் நகருக்கு தெற்கே ஏழு கிமீ தொலைவில் இருக்கும் மீயோலி எனும் கிராமத்தில் ஆகஸ்ட் 1ம் தேதி இருபது வாகனங்களில் வந்த எழுபது  போலீசார், ஒன்பது மூஸ்லீம் இளைஞர்களை இழுத்து கொண்டு சென்றனர்.

 

 

இக்கிராமத்தில் மட்டுமின்றி நூஹ் நகரத்தைச் சுற்றியுள்ள மற்ற கிராமங்களிலும் போலீசு தன் தேடுதல் வேட்டையை தொடர்ந்துள்ளனர். ஆகஸ்ட் 12ம் தேதி வரை சில சிறுவர்கள் உள்ளிட்டு 220 முஸ்லீம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 56 முதல் தகவலறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. போலீசார் கையில் சிக்கும் முஸ்லீம் இளைஞர்கள் அனைவரையும் விசாரணை என்ற பெயரில் போலீசு நிலையத்திற்கு இழுத்துசெல்கின்றனர். இப்படி விசாரணைக்கு அழைத்துச் செல்லும் போது எந்த சட்டவரையறையும் போலீசார் பின்பற்றுவதில்லை.

கேரவன் பத்திரிக்கையின் படி சில சிறுவர்களையும் போலீசார் விசாரணைக்கு இழுத்துச் சென்றுள்ளனர். விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட மூஸ்லீம் இளைஞர்கள், நூஹ் கலவரத்திற்கும் தமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற போதிலும் கலவரத்தின் போது அவர்களின்  கிராமத்தில் இருந்ததற்கான ஆதாரங்களையும் கொடுத்த போதிலும் போலீசு அவர்களை இழுத்துச் சென்றிருக்கிறது.

மூஸ்லீம் இளைஞர்கள் அனைவரும் குற்றவாளிகள் போலவும், இவர்களின் கையில் இரத்தக்கறை படிந்திருப்பது போலவும் ஹரியானா பாஜக அரசின் போலீசார் நடந்து கொள்கின்றனர். அதேசமயத்தில் இக்கலவரத்திற்கு காரணமான இந்து மதவெறியர்களில் ஒரே ஒரு பஜ்ரங் தள் குண்டன் தான் ஆகஸ்ட் 8ம் தேதிவரை கைது செய்யப்பட்டுள்ளான்.

தனது தேடுதல் வேட்டையின் மூலம் இன்னும் பல முஸ்லீம் இளைஞர்களை, விசாரணை என்ற பெயரில் ஹரியானா போலீசு பந்தாடப் போவதும், பல கொடிய சட்டங்கள் இவர்கள் மீது பாயப் போவதும் உறுதி. இக்கலவரத்தை தானே முன்நின்று நடத்திவிட்டு அதன் பலியை முஸ்லீம்கள் மீது போட்டும், அவர்களை அச்சத்தில் ஆழ்த்தியும் தன் ஏவல் படையான போலீசை கொண்டு- அரசு பயங்கரவாதத்தை ஏவி வருகிறார்கள் காவி பாசிஸ்டுகள்.

இதுமட்டுமில்லாமல் கலவரம் நடந்த இரண்டே நாட்களில் நூற்றுக்கணக்கான போலீசார், பல புல்டோசர்களோடு வந்து  நூஹ் நகரத்திலும், அதை சுற்றியுள்ள கிராமங்களிலும் உள்ள முஸ்லீம் குடியிருப்புகள், காய்கறி, மருந்து கடைகள், உணவகங்களை சட்டவிரோத ஆக்ரமிப்பு எனும் பெயரில் இடித்து தரைமட்டமாக்கினர். கலவரத்திற்கு முந்தைய நாளில் கூட இக்கடைவீதிகளும், சந்தைகளும் நூஹ் நகரத்தில் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது.

கலவரம் நடந்து ஒரு வாரத்தில் மட்டுமே, வீடுகள், கடைகள், மருந்தகங்கள், உணவகங்கள் உள்ளிட்ட 750 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடித்து தரைமாக்கப்பட்டது.

அன்றாடம் பன்னிரெண்டு மணி நேரம் உழைத்து, சிறுகச்சிறுக சேமித்து கட்டிய வீடுகள், கடைகள், அதில் இருக்கும் பல இலட்சம் மதிப்புள்ள பொருட்கள் முஸ்லீம்களின் கண் முன்னே இடிந்து தரைமட்டமாயின. கடந்த பல ஆண்டுகளாக அவர்கள் செலுத்தி வரும் மின்கட்டண ரசீது, ரேசன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டைகள் அவரது தரப்பு நியாயத்தை நிரூபிக்கின்றன. ஆனால் அதையெல்லாம் போலீசும், அரசு அதிகாரிகளும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. கட்டிடங்களை இடிப்பதற்கு முன்னறிவிப்பு கூட கொடுக்கப்படவில்லை, முக்கிய பொருட்களை கட்டிங்களில் இருந்து எடுப்பதற்கு வெறும் பத்து நிமிடங்களே கொடுக்கப்பட்டன.

 

 

ஹரியானா நீதிமன்றம் இப்புல்டோசர் பயங்கரவாதத்தை நிறுத்த கூறிய பிறகே, தற்போது காவி பாசிஸ்டுகள் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளனர். அம்மாநில முதல்வர் கட்டாரின் சிறப்பு அதிகாரி நீதிமன்ற உத்தரவிற்கும் பிறகும் கூட சந்தேகப்படும் நபர்களின் அனைத்து வீடுகளும், சொத்துக்களும் இடிக்கப்படும் வரை இந்த நடவடிக்கை தொடரும் என்று முஸ்லீம்கள் மீதான வெறுப்பை உமிழ்கிறார்.

காவி பாசிஸ்டுகள், தன் அரசு இயந்திரங்களை கொண்டு தொடுக்கப்படும் இந்த புல்டோசர் பயங்கரவாதம், முஸ்லீம்களின் வீடுகள், கடைகள் இடிப்பது என்பது ஏதோ ஓர் ஆக்ரமிப்பை அகற்றும் நடவடிக்கை அல்ல. இது முஸ்லீம் மக்கள் தம் சொந்த கையை ஊன்றி உருவாக்கி கொண்ட வாழ்க்கை மீதும் அவர்களின் வாழ்வுரிமை மீதும் காவி பாசிஸ்டுகள் நடத்தும் அரசு பயங்கரவாதம். முஸ்லீம்கள் தொழில் நடத்தும் உரிமையையும், வாழ்விட உரிமையும் உள்ளடக்கிய உயிர்வாழும் உரிமையை நசுக்கும் இந்துமதவெறி தாக்குதல்.

பல ஆண்டுகளாக இந்து-முஸ்லீம்கள் ஒற்றுமையாக சகோதர்களாக இப்பகுதியில் பழகி வருகின்றனர்  ஹரியானாவில் பாஜக அரசு ஆட்சியை பிடித்த பின்பு மாட்டுக்கறிக்கு தடை, பசுக்குண்டர்கள் அட்டூழியம், ஆரிய சமாஜ்யம் இன்னும் பிற வழிகளில் இந்துமதவெறியை  கட்டவிழ்த்துவிட காவி பாசிஸ்டுகள் எத்தனித்து வருகிறார்கள்

அதன் ஒரு செயல்திட்டமாக நடத்தப்பட்ட இந்த ஊர்வலத்தின் மூலம் கலவரத்தை தூண்டிவிட்டு அதன் மூலம் தன் பாசிசத் திட்டத்தை  நிறைவேற்ற துடித்த காவி பாசிஸ்டுகளுக்கு செருப்படி கொடுத்திருக்கின்றனர் ஹரியானாவின் விவசாயிகள்.

மூன்று வேளாண் விவசாய சட்டங்களுக்கு எதிராக 13 மாத காலமாக நடந்த போராட்டங்கள், இந்து, முஸ்லீம், சீக்கியர் என்ற மத உணர்வைத் தாண்டி நாம் அனைவரும் விவசாயிகள் என்ற வர்க்க உணர்வை மேவாட்டில் (நூஹ் நகரம் இருக்கும் மாவட்டம்) தோற்றுவித்திருக்கிறது. அப்போது புதுதில்லி, மாவட்ட எல்லைகள், உள்ளூர் பகுதிகளில் நடைப்பெற்ற போராட்டத்தில் அனைத்து தரப்பு விவசாயிகளும் வர்க்க உணர்வோடு கலந்து கொண்டனர்.

 

 

ஜிந்த் மாவட்டத்தில் உள்ள கட்கர் கலான் சுங்கச்சாவடியில், வேளாண் சட்டத்திற்கு எதிரானப் போராட்டத்தின் போது, அனைத்து மதத்தினரின் பண்டிகைகளையும் எல்லா தரப்பு விவசாயிகளும் கொண்டாடினர். கட்கர் கலான் போராட்ட தளத்தில் அனைத்து விவசாயிகளும் சேர்ந்து 2021 ஆம் ஆண்டில் ரம்ஜானுக்காக தொழுகை செய்தனர். மேவாட்டின் விவசாயிகள் புதுதில்லியில் எல்லையில் அமைக்கப்பட்ட அனைத்து தர்ணாக்களிலும் பங்கெடுத்தனர்

பஜ்ரங்தள் தூண்டி விட்ட நூஹ் கலவரத்திற்கு பின், இந்து, முஸ்லீம், சீக்கிய சமூகங்களை சார்ந்த சுமார் 2000 விவசாயிகள் ஹிசார் நகரத்தில் இருக்கும் பாசு எனும் கிராமத்தில் கூடி பஞ்சாயத்து முடிவுகளை அறிவித்து இருக்கிறார்கள். ஹிசார் நகரத்தில் இருக்கும் பாசி கிராம விவசாயிகள், மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர்கள்.

புது தில்லியில் நடைப்பெற்ற போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய விவசாய சங்கத்தலைவர் சுரேஷ் கோத், “முஸ்லீம்கள் இங்கே இருக்கிறார்கள், அவர்களை யாரும் தொடமுடியாது. அனைத்தும் பஞ்சாயத்துக்களும் அவர்களின் பாதுகாப்புக்கு பொறுப்பு” என்று கூறியிருக்கிறார். மேலும் ஒரு சில கிராமங்களில் முஸ்லீம்களை அனுமதிப்பதற்கு காப் பஞ்சாயத்து மூலம் தடை செய்யப்பட்டிருக்கிறது என்பதை மறுத்துள்ளார்.

ஜிந்த் பகுதியை சார்ந்த விவசாய சங்கத்தலைவர், ஆசாத் பல்வா, மக்களை கலவரத்திற்கு தூண்டிவிடும், ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தளம் மற்றும் விஷ்வ இந்து பரிஷத் ஆகிய அமைப்புகளை தடை விதிக்கக் கோரி நாங்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். மக்களை பிளவுபடுத்தும் ஆட்சி வெற்றி பெற அனுமதிக்க முடியாது என்கிறார்.

இதுமட்டுமில்லாமல், நூஹ்வில் அமைதியையும் நிலைநாட்டும் முயற்சிகளை தவிர வேறெந்த வகுப்பு வாத வன்முறை செயல்களிலும் இறங்கமாட்டோம் என விவசாயிகள், பஞ்சாயத்தில் உறுதிமொழி எடுத்துள்ளனர். சமூகவலைத்தளங்களில் காணொளியை பதிவேற்றி, மக்களை தூண்டிவிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பஞ்சாயத்துக்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. ஆகஸ்ட் 9ம் தேதியன்று நடைபெறவிருந்த முக்கிய விவசாய மாநாட்டை ஒத்திவைத்து, நூஹ் கலவரத்திற்கு தீர்வு காண முன்னுரிமை அளிக்கப் போவதாக கூறுகிறார்கள் விவசாயிகள். ஹரியானாவில் மதநல்லிணக்கத்தை பேனுவதற்காக தொடர் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். இந்து-முஸ்லீம்-சீக்கிய-ஐசாய் எனும் முழக்கங்களை எழுப்பும் செயல்வடிவத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

மூன்று வேளாண் விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டம் இந்து–முஸ்லீம் மதப்பிரிவைச் சார்ந்தவர்கள் என்பதை தாண்டி நாம் அனைவரும் விவசாயிகள் என்ற வர்க்க உணர்வை விதைத்திருக்கிறது. “2020-21 ஆம் ஆண்டுகளின் போது வர்க்கப் போராட்டத்தில் சிவந்திருந்தத எங்களது நூஹ் நகரத்தை சுற்றியுள்ள பகுதி. இப்போது காவி வண்ணத்தை பூசிக் கொண்டு அருவருப்பாய் காட்சி அளிக்க நாங்கள் விடமாட்டோம்; காவி பாசிஸ்டுகளே, நீங்கள் நினைக்கும் மதப்பிளவுகளை எங்கள் மண்ணில் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.” என வர்க்க உணர்வோடு எழுந்து நிற்கிறார்கள் ஹரியானா விவசாயிகள்.

மறுகாலனியாதிக்கத்திற்கு எதிராக நடத்திய போராட்டத்தின் ஊடாக பெற்ற வர்க்க உணர்வு மூலம் ஹரியானா விவசாயிகள், இன்று காவி பாசிஸ்டுகளை மக்களிடமிருந்து தனிமைப்படுத்தி வருகின்றனர். ஹரியானா விவசாயிகளிடம் பாடம் கற்போம்! வர்க்க ஒற்றுமையை கட்டியெழுப்புவோம்! காவி பாசிஸ்டுகளை நேருக்கு நேராக முறியடிப்போம்!

  • தாமிரபரணி

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன