மணிப்பூர் கலவரம்:
குக்கி இளம் தலைமுறையினரின் கல்விக்கு
தீ வைத்துள்ள காவிக் கும்பல்!

மணிப்பூரில் நடந்து வரும் கலவரங்களால் எனது எதிர்காலம் நிச்சயமற்றதாக மாறிப் போயுள்ளது. நான் இனி தொடர்ந்து பள்ளிக்கு செல்வேனா, எனது 12 ம் வகுப்பு தேர்வை எழுதுவேனா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் எனது மக்களை நான் தான் பாதுகாக்க வேண்டும். எங்களது வீடுகளை எரித்துவிட்டு, அவர்கள் எங்களது நிலங்களை பறிக்க முற்படும் போது நான் வெறுமனே உட்கார்ந்து வேடிக்கை பார்க்க முடியாது என்கிறான், 12 ம் வகுப்பு படிக்கும் குக்கி சமுகத்தைச் சேர்ந்த மாணவன்.

மணிப்பூரில் காவி கும்பல் திட்டமிட்டு உருவாக்கிய இனக் கலவரத்தில் 150க்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டதோடு, 70,000க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் வீடிழந்து நிவாரண முகாம்களில் தற்போது வசித்து வருகின்றனர்

தங்களது பிள்ளைகளாவது படித்து நல்ல வேலைக்குப் போகட்டும் என எண்ணியிருந்த பழங்குடி பெற்றோர்களின் கனவும், மாணவர்களின் எதிர்காலமும், இக்கலவரத்தால் இன்று இருளில் மூழ்கிப் போயிருக்கிறது.

காவிகும்பல் உருவாக்கிய கலவரம் மூன்று மாதங்களாக தொடர்வதால் குக்கி மக்கள் வசிக்கும் மலைப்பகுதியில் உள்ள  நூற்றுக்கணக்கான பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன. அங்கு நிலவும் பதட்டமான சூழ்நிலையால் பல பள்ளிகள் இன்னும்  இயங்க முடியாத நிலையே தொடர்கிறது. கூடவே, பள்ளிகள், பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைக்கும் நிவாரண முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன. நிலைமை சீரான பிறகே பள்ளிகள் திறக்க வாய்ப்பிருப்பதால் குக்கி மாணவர்களின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

கலவரத்தால் அதிகமாக பாதிக்கப்பட்ட  மாவட்டங்களான, மேற்கு இம்பால், கிழக்கு இம்பால், பிஷ்னுபூர், சுராசந்த்பூர் மற்றும் காங்கோபோயி  போன்றவற்றில்  மட்டுமே 14.575 மாணவர்கள் நிவாரண முகாம்களில் தங்கியிருக்கின்றனர். இதில் 3000 மாணவர்கள் ஐந்து வயதுக்கும் குறைவானவர்கள்.

 

 

இம்பால் பள்ளதாக்கில்,  ஜூலை 5 ம்தேதி முதல் சில பள்ளிகளை  மணிப்பூர் அரசு இயக்க ஆரம்பித்தது. ஆனால்  குக்கி மக்கள் வசிக்கும்  மலைப்பகுதி மாவட்டங்களான சுராசந்த்பூர், காங்போக்பியில், கடந்த மூன்று மாதங்களாக  பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்த இரண்டு மாவட்டத்தில் மட்டும் சுமார் 8000 மாணவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மணிப்பூர் கலவரம் தொடர்பான நீதிமன்ற விசாரணையில்,’மணிப்பூர் பழங்குடி மன்றத்தின்’ வழக்கறிஞர் கொலின் கோன்சால்வ்ஸ்,  சுமார் 200 பழங்குடியினர் பள்ளிகள்  மட்டும் மூடப்பட்டிருப்பதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். கலவரத்தை தடுக்க வக்கற்ற மணிப்பூர் மாநில அரசு, மலை மாவட்டங்களில் கலவரம் தொடர்ந்து நடைபெறுவதால், பள்ளிகளை திறக்கமுடியவில்லை என்று  ஆகஸ்ட் 1ம் தேதி உச்சநீதிமன்றத்தில் பதில் அளித்ததுள்ளது.

குக்கிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ‘பழங்குடி தலைவர்கள் மன்றத்தின்’ தலைவரான பேகன் ஹாக்கிப், பள்ளிகளை திறப்பது எங்களது நோக்கம். ஆனால் கலவரத்தால் கொல்லப்பட்ட எங்களது உறவினர்களின்  உடல்களை  இன்னும் அடக்கம் செய்யாமல் இருக்கிறோம். ஒவ்வொரு நாளும் எங்களது மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு வரும் போது பள்ளிகளை எப்படி திறக்க முடியும் என்கிறார்.

 

கலவரகும்பலால்  புத்தகங்கள், மேஜைகள் தீயிட்டு கொளுத்தப்பட்ட ஒரு பள்ளி

 

கலவரக்கும்பல்,  தங்களது தாக்குதல் இலக்காக, மலைப்பகுதியில் இருந்த பல பள்ளிகளை தீக்கிரையாக்கியது. பழங்குடி மாணவர்கள் படிக்கும் பள்ளி என்பதால் புத்தகங்கள், மாணவர்கள் அமரும் பெஞ்சுகள் என அனைத்தையும் கொளுத்தியது. செங்கலை தவிர வேறு எதையும் கலவரக்கும்பல் விட்டு வைப்பதில்லை. ஜூலை மாதம் ஆகியும் இத்தாக்குதல் தொடர்கிறது என்கிறார் ஒரு பழங்குடி பள்ளியின் நிறுவனரான லியான்கோதாங் வைபேய் என்பவர்.

இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள குர்குல் லீரிஜாவோ மேல்நிலைப் பள்ளி தற்போது நிவாரணமுகாமாக மாற்றப்பட்டுள்ளது, கலவரத்தின் போது  வீடிழந்த 300-க்கும் அதிகமான மக்கள் இப்பள்ளியில் வசித்து வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியையான சந்திரிகா சனம் என்பவர், பகலில் நாங்கள்  இங்கு வசித்து வரும் 50-60 மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்து வருகிறோம். இரவில் எங்களது பள்ளி, மக்கள் தங்கும்  நிவாரண முகாம்களாக செயல்படுகிறது என்கிறார். இப்பள்ளியின் சிறுவயது குழந்தைகள், தங்களது கண்களால் வன்முறையை பார்த்துள்ளனர். அவர்கள் பிஞ்சு மனதில் கோபம் மற்றும் இயலாமை நிறைந்திருக்கிறது என்கிறார் சனம்.

இப்பள்ளியில் படித்து வரும் மாணவர்களிடம் ஸ்க்ரோல் நிருபர் பேட்டி எடுத்த போது, அம்மாணவர்கள், தங்களை காயப்படுத்தியவர்களை கொல்ல விரும்புவதாகவும், தாங்கள் மீண்டும் தாக்கப்படுவோம் எனும் அச்சத்தில் இருப்பதாகவும் கூறுகின்றனர். இதுமட்டுமில்லாமல் கலவரக்காரர்கள் போலீசு போல உடையணிந்து வந்து, தங்களது மீது குண்டுகளை வீசுவதாக அக்குழந்தைகள் கூறுகிறார்கள்.

சுராசந்த்பூரை சார்ந்த கல்வியாளர் ஹாக்கிப் என்பவர், பெரிய பள்ளி கட்டிடங்கள் அனைத்தும் நிவாரண முகாம்களாக மாறிவிட்டன. கலவரக்கும்பல் எங்களை தாக்குவதை நிறுத்தாவிட்டால், நாங்கள் கல்வியைப் பற்றி ஒருபோதும் சிந்திக்கமுடியாது என்கிறார்.  

இதற்கிடையில் பதின்மவயது இளைஞர்கள், தங்களது தேர்வுகளுக்கு தயாராக வேண்டும், ஆனால் அவ்விளைஞர்கள், தங்களது மக்களை பாதுகாப்பதற்காக  தற்போது ஆயுதங்களை ஏந்துவதற்கு இக்கலவரம் நிர்ப்பந்தித்துள்ளதாக ஹாக்கிப்  தெரிவிக்கிறார்.

லால்ராம்வுல் எனும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்,  மணிப்பூர் கலவரத்திற்கு முன்பு கிடார் எனும் இசைக்கருவியில் புலமைப் பெற்ற ஒரு மாணவன்.  தற்போது கலவரக்கும்பல்களிடம் இருந்து குக்கி மக்களை பாதுகாப்பதற்காக, ஒற்றைக் குழல் துப்பாக்கியை இயக்குவதில் பயிற்சி பெற்றுவருவதாக கூறுகிறார். மேலும் வாரத்திற்கு ஒரு முறை  பிஷ்னுபூர் மற்றும் சுராசந்த்பூர் மாவட்டங்களின் எல்லைப்பகுதியில் மெய்தி கும்பல்களின் தாக்குதல்களை முறியடிக்க சென்று வருவதாகவும் மற்ற நாட்களில், கிராமத்தில் தனது பள்ளி ஆசிரியர் எடுக்கும் “தனியார் டியூஷன்” வகுப்புகளில் கலந்து கொள்வதாகவும் கூறுகிறார்.

எனது எதிர்காலம் மணிப்பூரில் நடந்து வரும் கலவரங்களால் நிச்சயமற்றதாக மாறிப் போயுள்ளது. நான் இனி தொடர்ந்து பள்ளிக்கு செல்வேனா, எனது 12 ம் வகுப்பு தேர்வை எழுதுவேனா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் எனது மக்களை நான் தான் பாதுகாக்க வேண்டும்.  எங்களது வீடுகளை எரித்துவிட்டு, அவர்கள் எங்களது நிலங்களை பறிக்க முற்படும் போது நான் வெறுமனே உட்கார்ந்து வேடிக்கை பார்க்க  முடியாது என்கிறார் இந்த 12 ம் வகுப்பு மாணவன்.

இம்மாணவனின் பதிலை கேட்டு அம்மாவட்டத்தின் கல்வியாளர் ஹாக்கிப், மணிப்பூர் கலவரம், நீண்ட காலத்திற்கு இளம் தலைமுறைகளிடம் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்த போவதாகவும், எழுத்தறிவு, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துவது உறுதி என தன் கவலை தோய்ந்த பதிலை வெளிப்படுத்துகிறார்.

காவிகும்பல் உருவாக்கிய மணிப்பூர் கலவரம்; குக்கி பழங்குடி மாணவர்களுக்கு கல்வியை நிச்சயமற்றதாக்கி உள்ளது. கல்வி கற்கும் வாய்ப்பைப் பறித்ததன் மூலம் இம்மாணவர்கள் எதிர்காலத்தில் தினக்கூலிகளாக  போவதைத் தவிற வேறு வழியில்லை என்ற நிலைமையை ஏற்படுத்தியுள்ளனர். மும்பை, தில்லி, சென்னை போன்ற நகரங்களில் புலம்பெயர் தொழிலாளர்களாக அத்துக் கூலிக்கு தனது உழைப்பை விற்கும் அவல நிலைக்கு அவர்களைத் தள்ளியிருக்கின்றனர்.

  • சந்திரன்

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன