தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா :
காவி பாசிஸ்டுகளின் கைப்பாவையாக மாற்றப்படும் தேர்தல் ஆணையம்!

இம்மசோதா முலம் காவி பாசிஸ்டுகள் கூற வருவது இது தான் : எங்கள் பாசிசத் திட்டத்திற்கு உறுதுணையாக இருக்கும் எந்த அதிகாரியை வேண்டுமானாலும் தேர்தல் ஆணையர்களாக நாங்கள் நியமிப்போம். தேர்தல் ஆணையர்கள் நாங்கள் ஆட்டுவிக்கும் பொம்மை; இதை யாரும் தடுக்க முடியாது என்பது தான்.

இந்திய அரசுக் கட்டமைப்பில் பல்வேறு விதமான துறைகளும், அவற்றை நிர்வகிக்க அதிகாரிகள் பட்டாளமும் குவிந்து கிடக்கின்றன. இந்த பல்வேறு அரசுத்துறைகளுள் ஒன்றான தேர்தல் ஆணையத்தை மற்ற அரசுத்துறைகளோடு ஒப்பிடுவதை என்றைக்கும் ஓட்டுக் கட்சிகள் விரும்புவதில்லை. அதனை சுயேட்சையான அமைப்பாக, தேர்தல் ஜனநாயகத்தின் பாதுகாவலனாக முன்னிறுத்தியே வந்துள்ளனர். 

தேர்தல் ஆணையம் சுயேட்சையானது, அது விருப்பு வெறுப்பு இன்றி அனைவருக்கும் பொதுவானதாக நின்று தேர்தலை நடத்தும் என்பதை நம்பவைக்க அதற்கென சில அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடக்கும் காலத்தில், மாவட்ட ஆட்சியாளர்கள், மாவட்ட போலீசு கண்காணிப்பாளர்கள், அரசின் தலைமை செயலாளர் உள்ளிட்ட அனைத்து உயர் அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடுவார்கள். மாநில அரசோ, ஒன்றிய அரசோ ஒரு உயர் அதிகாரியை இடம் மாற்றுவது என்றாலும், ஒரு திட்டத்தை அறிவிப்பது என்றாலும் அதற்குத் தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலைப் பெறவேண்டும்.

டி.என்.சேஷன் காலம் தொடங்கி இன்றுவரை தேர்தல் அதிகாரிகளுக்கு வானளாவிய அதிகாரம் இருப்பதாக பரப்புரை செய்து வருகின்றனர். ஆனால் காவி பாசிஸ்டுகள் ஆட்சியதிகாரத்திற்கு வந்த பிறகு தேர்தல் ஆணையத்தின் புனித பிம்பத்தைத் தூக்கியெறிந்து அது மற்ற அரசுத் துறைகள் போன்றே தங்களது கட்டளைக்கு ஆடும் பொம்மைதான் எனக் காட்டி வருகின்றனர்.

ஒரு தலைமை தேர்தல் ஆணையர் மற்றும்  இரண்டு தேர்தல் ஆணையர்கள் என மூன்று பேர் கொண்ட அமைப்பாக  இந்திய தேர்தல் ஆணையம் இருக்கிறது. இவர்களை நியமிப்பதற்கான சட்டம்,  இதுவரை நாடாளுமன்றத்தில் இயற்றப்படவில்லை.  சட்ட அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில், நாட்டின் பிரதமராக இருப்பவர், தலைமை தேர்தல் ஆணையரையும், பிற இரண்டு ஆணையர்களையும் ஜனாதிபதிக்கு பரிந்துரைப்பார். ஜனாதிபதி இவர்களை நியமிப்பார். இதுவே இந்தியாவில் இதுவரையில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறை.

 

 

இந்நடைமுறையில்  சீர்திருத்தம் கோரி, ஆணையர்கள் சுயேச்சையாகவும், சுதந்திரமாகவும் இயங்குவதற்கு அவர்களை நியமிக்க கூடிய  ஒரு அமைப்பை உருவாக்க கோரும் மனு மீதான விசாரணையில், உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு, கடந்த மார்ச் மாதம் ஒரு தீர்ப்பை வழங்கியிருந்தது.  அதில், ”தேர்தல் ஆணையர்களை நியமிக்க இதுவரை  சட்டம் எதையும் நாடாளுமன்றம் இயற்றவில்லை; ஆணையர்கள் நியமனத்துக்கான பரிந்துரைக் குழுவில் உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதி, பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் அடங்கிய குழுவின் மூலம் பரிந்துரைக்கப்படும் தேர்தல் ஆணையர்கள், ஜனாதிபதியால் நியமிக்கப்படுவர் என்றும்; மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவி காலியாக இருக்கும் பட்சத்தில் எதிர்க்கட்சியில் அதிக இடங்களை கொண்ட  கட்சியின் தலைவர் குழுவில் இடம் பெறுவார்” என்றும் தீர்ப்பளித்தது.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை மயிரளவுக்கு கூட மதிக்காமல், மோடியின் ஒன்றிய  அரசு, தன் பாசிச திட்டத்தை நிறைவேற்றும் நோக்கத்தில், ’தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதாவை’ மாநிலங்களவையில் அறிமுகம் செய்திருக்கிறது.  காவி பாசிஸ்டுகளின் கைக்கூலிகளை, அராஜகமாக தேர்தல் ஆணையத்தில் அமர்த்தி ஒட்டுமொத்தமாக தேர்தல் களத்தை தன் வசப்படுத்தும்  பாசிச நோக்கத்திற்காக இம்மசோதாவை கொண்டு வந்திருக்கின்றனர்.

பாசிஸ்டுகளுக்கே உரிய பாணியில் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் போது பரிந்துரைக் குழுவில் இடம் பெற்றிருந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பதிலாக, ஒன்றிய அமைச்சரை இடம் பெறச் செய்ய  இம்மசோதாவில் வழிவகை செய்திருக்கிறார்கள். குழுவில் எதிர்க்கட்சித்தலைவர் இடம்பெறுவார் என கூறப்பட்டிருந்தாலும், மோடியும் அவரது ஒன்றிய அமைச்சரும் தேர்வுக்குழுவில் இருக்கும் போது எதிர்க்கட்சித்தலைவர் சிறுபான்மை என்கிற அடிப்படையில் அவரால் ஆணையர்கள் பரிந்துரை தொடர்பாக எதையும் செய்ய முடியாது என்பதை சொல்லத்தேவையில்லை.

இம்மசோதாவில் இடம்பெற்றுள்ள பிரிவு 6ன் படி ஆணையர்களை பரிந்துரை செய்வதற்காக ஒன்றிய அமைச்சரவை செயலர் தலைமையில் 3 பேர் கொண்ட தேடல் குழு அமைக்கப்படும் என கூறப்பட்டிருக்கிறது. இக்குழுவே 5 பெயர்களை பிரதமர் தலைமையிலான தேர்வு குழுக்கு பரிந்துரை செய்யும். ஆனால் மோடி அரசோ இம்மசோதாவின் பிரிவு 8(2) லேயே இத்தேடல் குழுவையும் செல்லாக்காசாக மாற்றிவிடுகின்றனர்.

இப்பிரிவு  8(2)  படி, தேடல் குழு பரிந்துரையையும் மீறி தான் விரும்பும் நபரை தலைமைத் தேர்தல் ஆணையராகவோ அல்லது தேர்தல் ஆணையராகவோ நியமிக்கும் அதிகாரத்தை பிரதமர் தலைமையிலான தேர்வுக்குழுவுக்கு இம்மசோதா அதிகாரம் வழங்குகிறது.

 

 

இப்படி அராஜகமுறையில், பிரதமரால் நியமிக்கப்படும் தேர்தல் ஆணையர்கள் நடுநிலையோடும், நாணயமாகவும் நடந்து கொள்வார்கள் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் கிடையாது.

 இம்மசோதா முலம் காவி பாசிஸ்டுகள் கூற வருவது இது தான் : எங்கள் பாசிசத் திட்டத்திற்கு உறுதுணையாக இருக்கும் எந்த அதிகாரியை வேண்டுமானாலும் தேர்தல் ஆணையர்களாக நாங்கள் நியமிப்போம்.  தேர்தல் ஆணையர்கள் நாங்கள் ஆட்டுவிக்கும் பொம்மை; இதை யாரும் தடுக்க முடியாது என்பது தான்.                                                

2014ல் பாஜக ஒன்றிய அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து  தேர்தல் நடத்தை விதிமுறைகளை சிறிதளவு கூட மதிக்காத பாசிச கும்பலை தண்டிப்பதற்கு தேர்தல் ஆணையமோ – தேர்தல் ஆணையர்களோ தங்களின் வானாளாவிய அதிகாரத்தைப் பயன்படுத்தியே இல்லை.

கடந்த  2019 மக்களவை தேர்தலின் போது தேர்தல் ஆணையம், பாஜகவின் அங்கமாகவே மாறிப்போனது என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன

தேர்தல் காலத்தில் ஒரு வேட்பாளர் பத்து விநாடிக்கு வானொலியில் விளம்பரம் கொடுத்தால் கூட தேர்தல் ஆணையத்திற்கு கணக்கு காட்டவேண்டும். ஆனால் நமோ டி.வி என்ற பெயரில் ஒரு தொலைக்காட்சி திடீரென ஒளிபரப்பைத் தொடங்கியது. மோடியின் உருவத்தையே லோகோவாகக் கொண்டு, 24 மணி நேரமும் மோடி புகழ் பாடி, பா.ஜ.க. சாதனைகளைப் பஜனை செய்து கொண்டிருந்தது. நமோ டி.விக்கு ஒன்றிய அரசின் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகமோ, தேசியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமோ அனுமதியோ, உரிமமோ வழங்கவில்லை. ஆனாலும், ஒளிபரப்பாகியது. தேர்தல் ஆணையம்  எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அப்போது இத்தொலைக்காட்சி ஒளிப்பரப்பை வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தது.

மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்குக்கு அபாயம் இருப்பதாகக் கூறி அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 324 -ஐப் பிரயோகித்து மற்ற கட்சிகளின் பிரச்சாரத்தை நிறுத்தி வைக்க உத்தரவிட்டதோடு பிரதமரின் பேரணிகளை மட்டும் அனுமதிக்கும் வகையில் நேரத்தை வெட்டிச் சுருக்கி உத்தரவிட்டது தேர்தல் ஆணையம்.

கடந்த மக்களவையின் தேர்தலில் போது மோடியின் பிரச்சாரமே தேர்தல் பரப்புரை சட்டத்தை மீறுவதாகத்தான் இருந்தது.  மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றம்சாட்டப்பட்ட பிரக்யா சிங் தாக்கூரை பயங்கரவாதக் குற்றங்களுக்காக விசாரித்ததன் மூலம் இந்துக்களின் நம்பிக்கைகள் இழிவுபடுத்தப்பட்டதாகவும், வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல்காந்தியை, சிறுபான்மையினர் பெரும்பான்மையாக இருக்கும் பகுதியிலிருந்து போட்டியிடுகிறார் என்று ஏளனம் செய்தும், புல்வாமா தாக்குதலை தொடர்ந்து தேசபக்தியை  ஒரு விற்பனை சரக்காக்கியும் பரப்புரை செய்தார்.

 

 

இந்திய தேர்தல் பரப்புரை சட்டங்களை பகிரங்கமாக மீறும் பல செயல்கள் கடந்த மக்களவை தேர்தலின் போது நடத்தப்பட்டன.  தேர்தல் ஆணையமோ இந்நடவடிக்கைகளை கண்டிக்கவும், தடுக்கவுமில்லை. தனக்கும் இப்பரப்புரையை தடுப்பதற்கான நடவடிக்கைக்கும் சம்பந்தமில்லை என வேடிக்கைப் பார்த்தது.

குஜராத் சட்டமன்றத் தேர்தல் தேதியையே அறிவிக்காமல் இழுத்தடித்து, அம்மாநிலத்திற்கு மோடி சென்று பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்த பிறகு அம்மாநிலத்திற்கு மட்டும் தேர்தல் தேதியைத் தனியாக அறிவித்தது.

கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கியதில் கடைப்பிடித்த பாரபட்சம்; அரசின் அத்தனை துறைகளும் ஆளும்கட்சிக்கு சார்பாகவும் எதிர்கட்சிகளை ஒடுக்கவும் பயன்படுத்தப்படுவதைக் கண்டுகொள்ளாமல் இருப்பது; தமிழ்நாட்டில் மூன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்களை நடத்தாமல் இழுத்தடித்தது என  தேர்தல் ஆணையம்  தன் நடவடிக்கைகளில் மோடி அரசுக்கு பல்வேறு வழிகளில் துணை போயின.

இப்படி தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா நிறைவேறுவதற்கு முன்பே தேர்தல் ஆணையம் , பாஜகவின் பொம்மையாக செயல்பட்டதற்கு பல சம்பவங்களை கூற முடியும். இம்மசோதா நிறைவேறிய பின்பு காவி பாசிஸ்டுகள் அமர்த்தும் அடிமைகளாகவே தேர்தல் ஆணையம் செயல்படபோகிறது என்பது திண்ணம்.

கடந்த எட்டு ஆண்டுகால ஆட்சியில் புலனாய்வு அமைப்புகளான அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ உள்ளிட்ட அனைத்து அரசுத்துறைகளையும் தனது கைப்பாவைகளாக மாற்றிவிட்டது மோடியின் தலைமையிலான காவி கும்பல். தனக்கு ஏற்ற தேர்தல் ஆணையர்களை அமர்த்தி, ஒட்டுமொத்த தேர்தல் களத்தை தன் வசப்படுத்தி மீண்டும் ஆட்சியைப் பிடித்து அதன் மூலம் தனது பாசிச செயல்களை விரைவுபடுத்தவே இந்த தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதாவை கொண்டுவந்திருக்கிறது.  

தேர்தல் ஆணையத்தையும் தேர்தல் ஆணையர்களையும் ஓட்டுச்சீட்டு அரசியல் சீரழிவை அழிக்க வந்த தூதர்களாக மக்கள் இனியும் பார்ப்பதற்கு எந்தவித அடிப்படையும் இல்லை.  இம்மசோதா மூலம் காவி பாசிச கும்பலின் கீழ் ஓட்டுச்சீட்டு அரசியல் சீரழிவை துரிதமாக முன்நின்று நடத்திட தேர்தல் ஆணையர்கள், அக்கும்பலுக்கு  துணைப் போகப் போகிறார்கள் என்பது உறுதி!

  • தாமிரபரணி        

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன