நாள்தோறும் நரபலி கேட்கும் நீட் தேர்வு
நீதி வேண்டுமா? வீதிக்கு வா!


நாள்தோறும் நரபலி கேட்கும் நீட் தேர்வு
நீதி வேண்டுமா? வீதிக்கு வா!


மக்கள் அதிகாரம் – பத்திரிகை செய்தி!

14.08.2023

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! மாணவர்களே! கல்வியாளர்களே!
சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன், தனது மருத்துவ கனவு நனவாகாததால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சி.பி.எஸ்.சி. பள்ளி மாணவரான ஜெகதீஸ்வரன் பொதுத்தேர்வில் 424 மதிப்பெண்கள் பெற்றும், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ இடம் கிடைக்காததால் தனது மருத்துவ படிப்பு கானல் நீராகியது கண்டு மனம் நொந்து, தற்கொலை செய்து கொண்டுள்ளார். மகனின் சாவைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் தமிழக மக்களின் மனதை உலுக்கியுள்ளது.
இவை தற்கொலையல்ல. ஆளுநர் ஆர்.என்.ரவியும் பாசிச மோடி அரசும் சேர்ந்து செய்த பச்சைப் படுகொலை என்கிறோம். இப்படுகொலையை மக்கள் அதிகாரம் அமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது.
“தகுதியான திறமையான மருத்துவர்களை உருவாக்கவே நீட்டைக் கொண்டு வருகிறோம்” என்று மோடி அரசு அளந்துவிட்டதெல்லாம் அண்டப் புளுகுகள் என அம்பலமாகி நாடே நாறுகிறது. புற்றீசல் போலப் பெருகியுள்ள கோச்சிங் செண்டர்கள் பெற்றோரின் இரத்தத்தை உறிஞ்சி கொள்ளை இலாபமடிக்கின்றன. அனிதா தொடங்கி ஜெகதீஸ்வரன் வரையில் நீட் தேர்வால் பல மாணவர்கள் தங்களது இன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். நாள்தோறும் நரபலி கேட்கும் நாசகரத் தேர்வான நீட் இன்னும் எத்தனை மாணவர்களின் உயிரைக் குடிக்க நாம் அனுமதிக்கப் போகிறோம்!
தமிழக சட்டசபையில் நீட் தேர்வு விலக்கு மசோதாவை நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிய பின்பும், மாதக்கணக்கில் ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளார். நீட் விலக்கு மசோதாவிற்கு எப்போது கையெழுத்துப் போடுவீர்கள் என ஒரு மாணவியின் பெற்றோர் கேட்ட கேள்விக்கு, “நான் இருக்கும் வரை கையெழுத்துப் போடமாட்டேன்” என பாசிஸ்டுகளுக்கே உரிய ஆணவத்துடன் பதிலளிக்கிறார்.
சூத்திரன், தாழ்த்தப்பட்டவன் படிக்க கூடாது என்பதுதான் மனுநீதி. காசு இல்லாதவன் படிக்க கூடாது என்பதுதான் மறுகாலனியாக்க நீதி. இவ்விரு நீதியையும் நிலைநாட்டி நாட்டை இந்துராஷ்டிரமாக அறிவிக்கும் திசையில் மூர்க்கமாகச் செயல்படும் காவி-கார்ப்பரேட் பாசிசக் கும்பலின் தமிழக ஏஜெண்டான ஆர்.என்.ரவியிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்.
“ஆளுநர் இப்படி மசோதாவைக் கிடப்பில் போடுவது அரசியலைமைப்புக்கு விரோதமானது” என்று பலர் விமர்சிக்கின்றனர். ஆனால் இது முழு உண்மையல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தை விட, தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநருக்கு வானளவிய அதிகாரத்தை – குறிப்பாக பிரிவுகள் 111, 200, 361 ஆகியவை – அரசியல் சட்டமே வழங்கியுள்ளது. இதன்படி சட்டமன்றத்தில் நிறைவேற்றிய ஒரு மசோதாவை தன் விருப்பத்திற்கேற்ப, காலவரம்பின்றி ஆளுநர் நிறுத்தி வைக்க முடியும். பிரிவு 361-இன் படி, உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களோ கூட இவற்றில் தலையிட முடியாது. அடிப்படையிலேயே மக்களுக்கு விரோதமான இந்த அரசியல் சட்டத்தையும் பயன்படுத்திக் கொண்டுதான் ஆர்.என்.ரவி வெறியாட்டம் போடுகிறார்.
எனவே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் மசோதாவை எங்கிருந்தோ வந்த ஆளுநர் முடக்க வசதி செய்துள்ள இந்தப் போலி ஜனநாயக அரசுக் கட்டமைப்பில் தீர்வைத் தேடிப் பயனில்லை. நீட்டை எதிர்த்த மசோதாவிற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் தர வேண்டுமென்றால், மோடி அரசைப் பணிய வைக்க வேண்டுமென்றால் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராகப் போராடியதை போல், ஸ்டெர்லைட்டை மூடிய மக்களின் போராட்டங்களைப்போல வீதியில் திரள வேண்டும். இன்னொரு அனிதாவோ, ஜெகதீஸ்வரனோ தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் முன் வீதியில் திரள்வோம்! பாசிசக் கும்பலுக்குப் பாடம் புகட்டுவோம்!
இவண்,
தோழர் முத்துக்குமார்,
மாநில செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு
9790138614

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன