நீட் : அம்மாசியப்பனின் அறச்சீற்றம் – கவிதை

அம்மாசியப்பன் கொண்டாடத்தக்க அறச்சீற்றம்தான்!
கொண்டாட அருகதை உள்ளதா நமக்கு?

யாரும் நினைத்திருக்க வாய்ப்பில்லை,
கவர்னர் மாளிகைக்குள்ளிருந்தே நீட்டுக்கெதிராக
கலகக் குரலொன்று ஒலிக்குமென்று.

யாரும் நினைத்திருக்க வாய்ப்பில்லை,
தூத்துக்குடி விமானத்தில் தமிழிசையைப் பார்த்ததும்
“பாசிச பா.ஜ.க. ஒழிக” என மாணவியொருத்தி வெடித்தெழுவாள் என்று.

யாரும் நினைத்திருக்க வாய்ப்பில்லை,
கர்நாடகத்தில் ‘ஹிஜாபை கழற்று’ எனச் சூழ்ந்துகொண்ட
ஓநாய்களுக்கு நடுவே
தன்னந்தனியாக ஒரு பெண் கர்ஜிப்பாள் என்று.

அண்டை வீட்டார் சண்டை போட்டு
மண்டை உடைந்தாலும்
“அமைதியாய் இருப்பதே அறிவுடைமை” என்ற
நாசகர கலாச்சாரம் நடுத்தர வர்க்கத்தைப் பீடித்திருக்கிறது.

தாய்ப்பால் வயதிலிருந்து ஊட்டப்படும் இத்தன்னலவெறியின் மீது
இவர்கள் காறி உமிழ்கிறார்கள்!

அமைதியின் அருவருப்பை உடைத்தெறிந்து
அநீதியை எதிர்த்து வெடித்தெழும் இக்கலகக் குரல்கள்
தலையில் தூக்கிவைத்துக் கொண்டாட வேண்டியவைதாம்!

ஆனால்,
இடை ஆடையை விட தன்னலத்தை
இறுக்கமாக உடுத்திக் கொண்டிருக்கும் நாம்
இவர்களைக் கொண்டாடும் அருகதை உள்ளவர்களா?

நீட்டில் தன் மகள் வெற்றி பெற்றாலும்
“நீட் அநீதியானது” என வெடிக்கிறார் அம்மாசியப்பன்.
ஆளுநரிடமே இப்படிப் பேசுவதால்
ஆசை மகளின் எதிர்காலம் பாழாகுமோ என அஞ்சவில்லை.

வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டிய நிலைமையிருந்தும்
“பாசிச பா.ஜ.க. ஒழிக” என பகிரங்கமாக முழங்குகிறாள் சோபியா.
எப்.ஐ.ஆர். ஏதும் போட்டு
எதிர்காலத்தை பாழாக்கிவிடுவார்களே என்று கணக்குப் போடவில்லை.

ஆயிரக்கணக்கானோரின் இரத்தத்தை சுவைத்த
அந்த ஓநாய்களைப் பார்த்ததும்
அணிச்சையாக வெடிக்கிறது இவர்களின் கோபம்.

நாமாக இருந்தால் என்ன செய்திருப்போம்!
“எல்லாம் சரிதான், எதிர்காலம் என்னாகும்” எனக்
கூட்டிக் கழித்துப் பார்த்து
கும்பிடு போட்டிருப்போம்!

ஒருபடி மேலேபோய்
“உனக்கேன் இந்த வேலை” என
உபதேசமும் செய்திருப்போம்!

“என்னை நான் பார்த்துக் கொள்வேன், எவன் எக்கேடு கெட்டால் என்ன” எனும்
கேடுகெட்ட மனப்பான்மைதான்
அறிவுடைமையென ஆகிவிட்ட காலத்தில்,
அம்மாசியப்பன்களின் அறச்சீற்றம் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடத்தக்கது.

கொண்டாடும் அருகதைதான் நமக்கில்லை.

அசிங்கமான இக்கலாச்சாரத்துக்கு நடுவே
அவ்வப்போது வெடித்தெழுகின்றன இக்குரல்கள்
அதனால்தான் இவை கொண்டாடப்பட வேண்டியவை!
கொண்டாடும் அருகதைதான் நமக்கில்லை!

அம்மாசியப்பன் காறி உமிழ்ந்தது
ஆளுநர் மீது மட்டுமல்ல,
அறிவுடைமையென நாம் கருதிக்கொண்டிருக்கும் அமைதியின் மீதும்தான்.

  • ரவி

One comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன