ஆர்.எஸ்.எஸ்.-ன் ‘தேச’துரோக பார்ப்பன – பாசிச பாரம்பரியம் பாகம் – 3

ஆர்எஸ்எஸ் – இன் தலைமைக் குருவாக மிக நீண்டகாலம் அதாவது 33 ஆண்டுகள் பதவி வகித்தவர் “குருஜி” கோல்வால்கர். ஆனால் அதற்குள், “என் கண்முன்னால் ஒரு சிறு வடிவிலான இந்து ராஷ்டிரத்தைக் காண்கிறேன்” என்று அதன் நிறுவன குரு ஹெட்கேவார் தனது இறுதி உறையில் பீற்றிக் கொள்ளும் அளவு ஆர்எஸ்எஸ் வளர்ந்துவிட்டது. அசாம், ஒரிசா, காஷ்மீர் தவிர அனைத்து மாநில பிரதிநிதிகள் பங்கேற்ற ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் பயிற்சி முகாம் 1940-இல் நாகபுரியில் நடந்தபோதுதான் அவ்வாறு ஹெட்கேவார் குறிப்பிட்டார்.

கோல்வால்கரின் தலைமைக் காலத்தில் தான் கடும் நெருக்கடிகளையும், தீவிர வளர்ச்சியையும், நடவடிக்கைகள் மற்றும் சித்தாந்த உருவாக்கம் இரண்டிலும் மேலும் மூர்க்கமான பாசிச மயமாவதையும் ஆர்எஸ்எஸ் கண்டது. முக்கியமாக “1942 வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தின் போது ஒதுங்கியிருந்து தனிமைப்பட்டது. நாடு பிரிவினையைப் பயன்படுத்தி, 1946 – 47 கால மதவெறிக் கலவரங்களில் பங்கேற்றது, காந்தி கொலை – தடை காரணமாகப் பின்னடைவிற்குள்ளானது. நேரு – இந்திரா “மோகம்”. பாக் – இந்திய போர்களின் “தேசிய” வெறி ஆகியவற்றின் பிடியில் மக்கள் சிக்கியிருந்தபோதும் இரகசியமான, சீரான வளர்ச்சியை கண்டது கோல்வால்கர் காலத்தில் குறிப்பிடத்தக்கவை.

ஹெட்கேவாரரைப் போலவே மராத்தியப் பார்ப்பனரான கோல்வால்கர், அவரைவிடத் தீர்க்கமான, தெளிவான பாசிச கண்ணோ.ட்டம் உடையவர். தலைமை குருவாக பொறுப்பேற்பதற்கு முன்பே “நாம் அல்லது நமது தேசத்தின் விளக்கம்” என்கிற நூலை 1938 – இல் கோல்வால்கர் பிரசுரித்தார். பின்னர் அவர் ஆற்றிய உரைகள், எழுதிய கட்டுரைகள் “சிந்தனைகளின் தொகுப்பு” என்கிற நூலாக வெளிவந்தது. இவை இரண்டும் ஆர்எஸ்எஸ் – இன் இந்துமத வகுப்புவாத பாசிச சித்தாந்தத்தின் அப்பட்டமான விளக்கமாக இருக்கின்றன. எனவே இவ்விரு நூல்களும் தமது அதிகாரப்பூர்வ வெளியீடுகளோ, சித்தாந்தமோ அல்லவென்று இப்போது ஆர்எஸ்எஸ் மூடிமறைக்க எத்தணிக்கிறது. ஆனால் அதன் பாசிச சித்தாந்த அடிப்படையாக அவை விளங்குவதை “இடதுசாரி” அறிவுஜீவிகள் பலரும் நிரூபித்து விட்டனர்.

இந்த நாட்டில் வாழ்பவர்கள், அவர்கள் எந்த மத்தினர் ஆனாலும் “இந்திய தேச” மாக அமைகின்றனர் என்பது பிராந்திய அடிப்படையிலான தேசம்; ஆனால் இந்து உணர்வு, நாகரிகம், பண்பாடை ஏற்று வாழ்பவர்கள் மட்டுமே “இந்திய தேச” மாக அமைகின்றனர் என்பது கலாச்சார அதாவது மத அடிப்படையிலான தேசம். இவற்றில் இரண்டாவதுதான் “இந்திய தேச” மான இருக்கமுடியும். அதுதான் – இந்துராஷ்டிரம் என்பதுதான் ஆர்எஸ்எஸ்  சித்தாந்தம். இதுவே ஆர்எஸ்எஸ் – இன் சித்தாந்த குரு சவார்கர், நிறுவன குரு ஹெட்கேவாரின் கருவாக இருந்தது; என்றாலும் சவார்கரின் “பிறந்தபூமி”, “புண்ணியபூமி” விளக்கத்தில் இன்னும் சிறிதளவு “பிராந்திய அடிப்படையிலான தேசியவாடை வீசியது. அதில் பிற மதத்தினரையும் “இந்தியதேச” த்துக்குள் சகித்துக்கொள்வதற்கான வாய்ப்பு இருப்பதாகக் கருதிய கோல்வால்கர், இந்துக்களை மட்டுமே கொண்ட “கலாச்சார அடிப்படையிலான தேச” மே இந்திய தேசியம் அதாவது இந்து ராஷ்டிரம் என்பதை ஆணித்தரமாக நிறுவினர்.

 

 

“ஜெர்மானிய தேசிய கௌரவம், பெருமிதம் இன்றைய விவாதப்பொருளாக இப்போது மாறியிருக்கிறது. ஜெர்மனி, அதன் தேசியம் மற்றும் கலாச்சாரத் தூய்மையைக் காப்பதற்காக அந்நாட்டிலிருந்து செமிட்டிக் இனங்களை – அதாவது யூதர்களைக் களையெடுத்ததன் மூலம் உலகயே குலுங்கச்செய்தது. இங்கு தேசிய கௌரவம் – பெருமிதம் அதன் உச்சபட்சமாகப் பிரதிபலித்தது. ஆணிவேர் வரை வேறுபாடுகளைக் கொண்டுள்ள (பூர்வகுடி) இனங்களும் கலாச்சாரங்களும் ஒரே ஒருமையாக ஒன்று கலப்பது எப்படி முடியவேமுடியாது என்பதைக்கூட தெட்டத்தெளிவாக ஜெர்மனி காட்டிவிட்டது; இந்துஸ்தானம் கற்றுப் பலனடைவதற்கான ஒரு நல்ல பாடமாக இது நமக்கு கிடைத்திருக்கிறது”. (நாம் அல்லது நமது தேசத்தின் விளக்கம். பக்-27)

நாஜிசத்திலிருந்து கற்ற பாடத்தை இந்தியாவிற்கு பிரயோகிக்கிறார் கோல்வால்கர்;

“புத்திசாலித்தனமான பழம் தேசங்கள் வழங்கியுள்ள இந்தக் கண்னோட்டத்தில் இருந்து, இந்துஸ்தானத்தில் உள்ள இந்து அல்லாத மக்கள் இந்துக் கலாச்சாரம் மற்றும் மொழியைத் தமதாக ஏற்றுக்கொள்ளவேணடும்; இந்துமதத்தைப் புனிதமாக மதித்தப்  போற்றக் கற்றுக்கொள்ளவேண்டும்; இந்து தேசத்தை ஏற்றிப் புகழ்ந்து போற்றுவதைத் தவிற வேறெந்த சிந்தனைக்கும் இடம்தரக்கூடாது; அதாவது இந்த நாடு மற்றும் இதன் பலம்பெரும் மரபுகள் மீதான சகிப்பின்மையையும் நன்றியில்லாமையையும் கைவிடுவது மட்டுமல்ல, அவற்றின்மீது பக்தியும் பாசமும் வைக்கும் நேர்மறையான கண்னோட்டத்தையும் கூட வளர்த்துக் கொள்ளவேண்டும். ஒரேவார்த்தையில் சொல்வதானால் அவர்கள் அந்நியர்களாக இருப்பதற்கு முடிவுகட்ட வேண்டும் அல்லது சிறப்புரிமைகளுக்குரியவர்கள், அதைவிடக்குறைவாக முன்னுரிமைக்குறியவர் என்பது மட்டுமல்ல குடியுரிமைக்குறியவர்கள் என்பதைக் கூட கோரமுடியாதவாறு இந்து தேசத்திற்கு முற்றாக அடிமைப்பட்டே இந்த நாட்டில் வாழமுடியும் ( மேற்படி பக்கம் 52)

அனைத்து மதத்தினருக்கும் மத மற்றும் பண்பாட்டு உரிமைகள் உட்பட ஜனநாயக, து மறுக்கும் மேற்கண்ட கோல்வால்கரின் இந்து ராஷ்டிர விளக்கமே இன்னமும் ஆர்எஸ்எஸ் – இன் சித்தாந்தமாக உள்ளது. இந்துவாக பிறந்தவர்கள் மட்டுமே இந்த “தேச” த்துக்குரியவர்கள் என்பதை மேலும் வெறியோடு பின்வருமாறு கோல்வால்கர் எழுதியுள்ளார்.

“நமது இந்த மாபெரும் நாடு – அதன் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கில் பரந்து விரிந்துள்ள அனைத்துக் கிளைகளோடும், அந்த மிகப்பெரிய கிளைகளில் அடங்கியுள்ள பிராந்தியங்களோடும் – வடக்கே இமயமலையில் இருந்து எல்லாத் தீவுகள் உட்பட தெற்கே உள்ள மாகடல் வரை ஒரு மிகப்பெரிய இயற்கையான ஒற்றை உறுப்பாகும் இந்த மண்ணின் குழந்தையாக நன்கு வளர்ந்தோங்கிய நமது சமுதாயம் இங்கே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறது. இந்த சமுதாயம், குறிப்பாக நவீன காலத்தில் இந்து சமுதாயம் என்பதாக அறியப்படுகிறது. இது ஒரு வரலாற்று உண்மையும்கூட ஏனென்றால் இந்து மக்களின் முன்னோர்கள்தாம் இந்தத் தாய்நாட்டின் மதிப்பீடுகளையும் மரபுகளையும்…. கடமைகளையும் உரிமைகளையும் நிறுவி இதன் புனிதத்தையும் ஐக்கியம் – ஒருமைப்பாட்டையும் காப்பதற்காக இரத்தம் சிந்தினார்கள். இந்துமக்களே இவையனைத்தையும் செய்தார்கள் என்கிற உண்மைக்கு நமது ஆயிரக்கணக்கான ஆண்டுகால வரலாறு தெள்ளத்தெளிவான சாட்சியமாக விளங்குகிறது இந்த மண்ணின் மைந்தனாக இந்து மட்டுமே வாழ்கிறன் என்பதே இதன் பொருள்”. (மேற்படி பக்-123, 24)

இந்திய இஸ்லாமியர்களையும் கிருஸ்தவர்களையும் பொருத்தவரை, “அவர்கள் இந்த நாட்டில் பிறந்தவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை ஆனால் அவர்கள் இந்த நாட்டிற்கு விசுவாசமானவர்களா?… இல்லை அவர்களது (மத – கடவுள்) நம்பிக்கையில் மாற்றம் ஏற்பட்டதோடு இந்த தேசத்தின் மீதான அவர்களது பாசமும் அர்பணிப்புக்கான உணர்வும் போய்விட்டது” (மேற்படி பக்-127 –128)

இந்தக் கூற்றின்படி இந்து மதத்துக்கு விசுவாசமாக இருக்கிறார்களா, இல்லையா என்பதுதான் தேசப்பற்றுக்கான அடிப்படை என்று கோல்வால்கர் வரையறுக்கிறார். குறிப்பாக இசுலாமியர்கள் அனைவரும் தேசதுரோகிகள் என்பதுதான் அவரது தீர்மானகரமான முடிவு. அதைப் பின்வருமாறு கூறுகிறார.

“இந்த நாட்டின் எதிரிகளோடு தம்மை இனங்காட்டிக் கொள்ளும் ஓர் உணர்வையும் கூட அவர்கள் வளர்த்துக் கொண்டுள்ளார்கள். சில அந்நிய நாடுகளைத் தமது புனித இடங்களாக அவர்கள் கருதுகிறார்கள. அவர்கள் தங்களை சேக்குகள், சையதுகள்… என்றழைத்து கொள்ளுகிறார்கள். வெல்லவும் அரசுகளை நிறுவவுமே இங்கு வந்ததாக அவர்கள் இன்னமும் நம்புகிறார்கள். எனவே மத நம்பிக்கையில் ஏற்பட்ட ஒரு மாற்றமாக மட்டும் நாம் அதை நாம் பார்க்கக்கூடாது; மாறாக தேசிய இனத்துக்குறிய (அடையாள) மாற்றமாகவும் நாம் பார்க்கவேண்டும். தாய்த்தேசத்தை அனாதரவான நிலையில் விட்டுவிட்டு எதிரி முகாமில் சேருவதை ஒரு துரோகமாக அல்லாது வேறெப்படிக் கருதமுடியும்? (மேற்படி பக்கம் – 128)

 

 

இவை கோல்வால்கரின் தனிப்பட்ட கருத்தோ, ஏதோ ஒரு சமயம் வெளிப்பட்ட பிதற்றலோ அல்ல. ஆர்எஸ்எஸ் – இன் 60 ஆண்டுகளுக்கு மேலான, உறுதியான, தொடர்ச்சியான சித்தாந்தமாகவே இருந்துள்ளன. அதன் அதிகாரப்பூர்வ ஏடுகளில் அடிக்கடி இவையே பிரதிபலித்துள்ளன. உருது இந்தியாவில் தோற்றிய “தேசிய” மொழிகளில் ஒன்றுதான்; என்றாலும் அடிமைத்தனத்துக்கான அந்நிய மொழியாகவே அதைக்கருதி ஆர்எஸ்எஸ் எதிர்த்து வருகிறது. “உருதுவின் பெயரால் இன்னொரு பாகிஸ்தான் உருவாக அனுமதியோம்” என்று ஆர்எஸ்எஸ் – இன் ஆர்கனைசர் எழுதியது. அதேபோல் சமஸ்கிருதம் அல்லது இந்திக்குப் பதிலாக ஆங்கில மொழியை விரும்புவதாகக் கூறி இந்தியக் கிருத்துவர்கள் ஏசப்படுகின்றனர். பஞ்சாபில் வாழும் இந்துக்கள் தங்கள் தாய்மொழியாக பஞ்சாபியை பதிவு செய்வதற்குப் பதில் இந்தியைப் பதிவு செய்யும்படி ஆர்எஸ்எஸ் கும்பலால் நிர்பந்திக்கப்படுகின்றனர், சைன, பௌத்த மதங்களைப் பற்றி “அவர்கள் பொருளாதார, தத்துவார்த்த சிந்தனைக்கு எப்போதும் பங்களிப்பு செய்ததே கிடையாது” என்று இழிவுபடுத்தினர்.

மற்றவர்களது மதச்சார்பின்மை போலியானது. தம்முடையதுதான் உண்மையான “மதச்சார்பின்மை” என்று பீற்றிக்கொள்ளும் இந்துமத பாசிஸ்டுகளின் மதவெறியைப் பின்வருமாறு ஆர்கனைசர் ஏடு ஒப்புக்கொள்கிறது.

“நமது கலாச்சாரம் மகத்தானதாக பூத்துக்குலுங்க வேண்டும் என்பதையே இந்து விரும்புகிறான். ஒரு முஸ்லீமை ஜனாதிபதியாகவும், இன்னொரு முஸ்லீமை தலைமை நீதிபதியாகவும் உட்கார வைத்தபிறகும் முஸ்லீம்களுக்கு பதவி அளிப்பதில்லை என்று இந்து மீது அவதூறு பொழிகிறார்கள்… பாகிஸ்தான் ஒரு முஸ்லீம் நாடாக இருப்பதைப்போல அல்லது பிரிட்டன் ஒரு கிருத்தவ நாடாக இருப்பதைப்போல இந்தியா ஒரு இந்துநாடு என்கிற உண்மையை முஸ்லீம்கள் ஏற்றுக்கொண்டாக வேண்டும்”. (ஆர்கனைசர் 1970, ஜனவரி – 4)

இப்படி மாற்று மதத்தினரை அந்நியர்கள், தேசதுரோகிகள் என்று முத்திரை குத்திச்சாடும் ஆர்எஸ்எஸ் கும்பல் பிரிட்டிஷ் காலனிய எதிர்ப்பு தேசியத்தை ஏற்கவோ, மதிக்கவோ மறுக்கிறது. அதன் மூலம் உண்மையில் தாமே தேசதுரோகிகள் என்பதை அக்கும்பல் ஒப்புக்கொள்கிறது. ஆங்கிலேய எதிர்ப்பு பற்றி கோல்வால்கர் பின்வருமாறு தனது எரிச்சலை வெளிப்படுத்தியுள்ளார்.

“தேசம் பற்றிய நமது கண்ணோட்டத்துக்கு அடிப்படையாக அமைந்துள்ள பிராந்திய அடிப்படையிலான தேசியம் மற்றும் பொது எதிரி ஆகிய கோட்பாடுகள் நேர்மறையான, உத்வேகம் ஊட்டக்கூடிய நமது உண்மையான இந்து தேசியம் என்கிற உள்ளடக்கத்தை இழக்கச் செய்கின்றன. இதனால் நமது சுதந்திரப்போராட்ட இயக்கங்கள் பலவற்றையும் முற்றிலும் பிரிட்டிஷ் எதிர்ப்பு இயக்கமாக மாற்றிவிட்டனர். பிரிட்டிஷ் எதிர்ப்பாளனாக இருப்பது தேசியம் மற்றும் தேசப்பற்றுக்கு இணையாக வைக்கப்பட்டது. இந்தப் பிற்போக்கான கண்ணோட்டம் சுதந்திரப் போராட்டப் போக்கு முழுவதன் மீதும், அதன் தலைவர்கள், பொதுமக்கள் மீதும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது”. (கோல்வால்கர், நாம் அல்லது நமது தேசிய விளக்கம். பக்கம் 142 – 143)

நேருவுக்கு எதிரான பதவிப்போட்டியில் அன்றைய போலீசு மந்திரியாக இருந்த வல்லபாய் படேலுக்கு ஆர்எஸ்எஸ் ஆதரவளித்ததால் அதற்குப் பிரதிகூலமாக அதிகார அரவனைப்பும் பெற்றது.

ஆர்எஸ்எஸ் – இந்து மகாசபாவின் வளர்ப்பு பிள்ளையான நாதுராம் கோட்சே காந்தியைச் சுட்டுக் கொன்றதைத் தொடர்ந்து அந்த அமைப்புகள் தடைசெய்யப்பட்டிருந்த காலகட்டம் இந்துமதவெறிப் பாசிஸ்டுகளுக்கு ஒரு நெருக்கடியைக் கொடுத்தது. ஆனால் விரைவிலேயே தடையை நீக்குவதற்கான பேரத்தைக் காங்கிரசு ஆட்சியாளர்களுடன் நடத்தியது. தரகுப் பெருமுதலாளியான ஜி.;டி. பிர்லாவைத் தூதுவராகப் பயன்படுத்தி நேரு, படேலுடன் இரகசியப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. ஏகாதிபத்திய உலகப் போரை தொடர்ந்து வந்த உலகம் தழுவிய கம்யூனிச எழுச்சி குறிப்பாக கிழக்கு ஐரோப்பா – சீனா புரட்சி வெற்றிகள், கொரியா, வியட்நாம், இந்தோனேசியா, பர்மா என ஆசிய நாடுகளில் கம்யூனிசப் புரட்சியாளர்களின் முன்னேற்றம், இவற்றோடு தெழுங்கான ஆயுதப்போராட்டம் ஆகியவற்றை காரணம் காட்டி கம்யூனிச ஆபத்தில் இருந்து நாட்டை மீ:ட்பதற்கு காங்கிரசு – ஆர்எஸ்எஸ் கூட்டணி அவசியத்தை வழியுறுத்தி நேரு, படேலுக்கு கோல்வால்கர் கடிதங்கள் எழுதினார்.

“கம்யூனிசத்தின்பால் இந்திய இளைஞர்கள் தீவிரமாக ஈர்க்கப்படுகின்றனர். அதைத் தடுப்பதற்கான சக்தியாக இருந்த ஆர்எஸ்எஸ் இப்போது இல்லை என்பதுதான் காரணம். இந்த ஆபத்தை எதிர்த்துப் போராடவதில் கலாச்சார அடிப்படையில் ஆர்எஸ்எஸ் உதவும். காங்கிரசு அதிகாரத்திலும், ஆர்எஸ்எஸ் அமைப்பு ரீதியான கலாச்சாரச் சக்தியாகவும் இருப்பதால் அவை இணைந்து இந்த (கம்யூனிச) ஆபத்தை முறியடித்து விடமுடியும். (குருஜிக்கும் அரசுக்கும் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் உடைய கடிதங்களின் ஒரு தொகுப்பு. உண்மையின் மீது குற்ற விசாரணை. ஆர்எஸ்எஸ் வெளியீடு பக்கம் – 23 -26) என்று கோல்வால்கர் எழுதினார்.

ஆச்சாரிய கிருபலானி தலைமையிலான கையெழுத்து இயக்கம், பிறகு ஒரு குறுகிய சத்தியாகிரகம், சிறைநிரைப்புப் போராட்டம் நடத்தியது ஆர்எஸ்எஸ் கும்பல். பிர்லா மூலம் அரசுடன் நடதிய பேரத்தின் அடிப்படையில் ஒரு எழுத்துப் பூர்வமான அமைப்புச் சட்டம், உறுப்பினர்கள் பதிவேடு. பெற்றோர் அனுமதி இல்லாமல் சிறுவர்களைச் சேர்ப்பதில்லை மற்றும் கலாச்சாரத் துறையில் மட்டுமே  பணியாற்றுவது ஆகிய நிபந்தனைகளை ஆர்எஸ்எஸ் ஏற்றது. இவை எதுவும் பாரிய நிபந்தனைகள் அல்ல என்றாலும் இதற்காக 1949 ஜூலையில் ஆர்எஸ்எஸ் தடை நீக்கப்பட்டது.

அதன்பிறகு ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் மற்றும் அமைப்புப் பணிகளுக்கு புத்துயிர் ஊட்டும் முயற்சியில் கோல்வால்கர் ஈடுபட்டார். 1954 மார்ச் மாதம் நடந்த மாவட்ட நிர்வாகிகள் மாநாட்டில் இந்துத்துவத்திற்கு புதுவியாக்கியானம் கொடுத்து ஒரு நீண்ட சொற்பொழிவாற்றினார். பொருள்முதல்வாதம் மற்றும் தனிமனிதத்துவத்திற்கு முக்கியத்துவம்  அளிக்கும் மேற்கத்திய தத்துவத்தில் இருந்து மாறுபட்ட சமூகக்கண்ணோட்டத்தை அடிப்படையாகக் கொண்டதுதான் இந்துத்துவம்; தனிமனிதன் – சமூகம் அல்லது குடும்பம் – இயற்கை – தெய்வீகம் என்கிற நான்கு அடுக்குகளைக் கொண்டதுதான் இந்துத்துவம்; சமூகம் மற்றும் இயற்கையைப் புனிதமாக மதிப்பதன் மூலம் இறைவனை அடைவதுதான் இந்துத்துவம் – என்றுக் கூறி தனது மதவாதக்கண்ணோட்டத்துக்குப் புதிய பூச்சு தந்தார். அறிவு – அதிகாரம், செல்வம், உழை ப்பு (புத்தி – ராஜ்யம் – தனம் – சிரமம்) ஆகிய நான்கு சக்திகளின் முரணற்ற ஒருங்கிணைந்த அமைப்புதான் இந்து தர்மம் என்று சொன்னார். உண்மையில் இது பார்ப்பனன் – சத்திரியன் – வைசியன் – சூத்திரன் என்று நான்கு வருண சனாதன தருமத்தின் மறுவிளக்கம் தான். சாதி, பால் மற்றும் வர்க்க அடிப்படையிலான சுரண்டலையும், ஒடுக்கு முறையையும் அவற்றின் விளைவான போராட்டங்களையும் மூடிமறைத்து இந்து சமூகம் என்பது முரண்பாடுகள் அற்ற சாந்தமும் – ஒற்றுமையும் கொண்டது என்று பித்தலாட்டம் செய்வதுதான் கோல்வால்கரின் சித்தாந்த வியக்கியானம்.

இப்புதிய சித்தாந்த வியாக்கியானத்துக்கேற்ப இந்துக்களை அணிதிரட்டுவதற்காக பல புதிய துணை அமைப்புகளை நிறுவுவது என்று ஆர்எஸ்எஸ் முடிவு செய்து, தொழிலாளர்கள் மத்தியில் பணியாற்ற பாரதீய மஸ்தூர் சங்கம் (BMS), மாணவர் மத்தியில் பணியாற்ற அகில பாரதிய வித்தியார்த்தி பரிசத் (ABVP), அரசியலுக்கு பாரதிய ஜனசங்கம் (BJS), மதத்துக்கு விசுவ இந்துப் பரிசத் (VHP) ஆகியவற்றை கட்டியமைப்பது என்று தீர்மானித்தது.

 

 

தொழிலாளர்கள் கம்யூனிச சங்கங்களில் சேருவதைத் தடுத்து, கருங்காலித் தனத்தில் ஈடுபடுத்துவதுதான் BMS நடவடிக்கை. தொழிலாளி வர்க்க சர்வதேச ஒற்றுமையைக் குறிக்கும் மேதினத்துக்குப் பதிலாக விசுவகர்மப் பூசை நடத்துகிறது. அதேபோல மாணவர்களுக்கு வியாஸ் பூசை நடத்தக்கோரும் ABVP உண்மையில் மாணவர்கள் போராட்டங்களை முறியடிக்கும் குண்டர்படையாகவும், ஆர்எஸ்எஸ்-க்கு ஆள்சேர்க்கும் அமைப்பாகவும் பயன்படுத்தப்படுகிறது. சில சில்லரை சலுகைகளுக்காகப் போராடும் ABVP பெரும்பாலும் புரட்சிகர, முற்போக்கு மாணவர் இயக்கங்களை எதிர்ப்பதையே முக்கிய நடவடிக்கையாகக் கொண்டுள்ளது.

இந்துமதவெறிப் பிரகடணங்களை மூடிமறைத்துக் கொண்டு பொதுவான சில கவர்ச்சிவாதத் திட்டங்களை முன்வைத்து அரசியல் செல்வாக்கு பெற்று அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக அமைக்கப்பட்டதுதான் பாரதிய ஜனசங்கம். காங்கிரசில் இருந்து வெளியேறிய இந்து வெறியர் சியாமா பிரசாத் முகர்ஜி என்னும் வங்கப்பார்ப்பனர் தலைமையில் தீனதயாள் உபாத்தியாயா, வாஜ்பாயி, அத்வானி போன்ற சிலரை ஆர்எஸ்எஸ் பிரதிநிதியாக அரசியலுக்கு அனுப்பி இந்தக் கட்சி துவங்கப்பட்டது. முதலாளித்துவ தனிமனிதத்துவம், மார்க்சிய சோஷலிசம் இரண்டிலிருந்தும் மாறுபட்ட “ஒருங்கிணைந்த மனிதத்துவம்” என்பதை பாரதிய ஜனசங்கத்தின் தத்துவமாக தீன்தயாள் உபாத்தியாயா வகுத்தளித்தளித்தார். மனிதன் – இயற்கை, தனிமனிதன் – சமூகம், உழைப்பு – மூலதனம் ஆகியவற்றுக்கிடையில் முரண்பாடற்ற, சாந்தமான உறவை ஏற்படுத்துவதுதான் இந்த ஒருங்கிணைந்த மனிதத்துவத்தின் அடிப்படை என்று அவர் விளக்கினார். பார்ப்பன சனாதன வர்ணசிரம தர்மத்தையே தேசிய தர்மம் என்று புதுவடிவில் விளக்கம் தரும் இந்துத்துவத்தின்படி தருமம் என்பது அரசுக்கும் மேலானது; நாடாளுமன்றததைவிட தேசியக் கலாச்சாரமும் தர்மமுமே முக்கியமானது. தேர்தல்களும் நாடாளுமன்றமும் இவற்றைத் தீர்மானிக்க முடியாது – என்று வாதாடும் “ஒருங்கிணைந்த மனிதத்துவம்” உண்மையில் ஒரு இந்துமதவாத பாசிச ஆட்சிக்கான தத்துவத்தையே முன்வைக்கிறது.

வடமாநிலங்களில் படிப்படியாக வளர்ந்து வந்த பாரதீய ஜனசங்கம், 1976 – 77 அவசரகால ஆட்சிக்குப் பிறகு உருவாகிய ஜனதா கட்சியில் இணைந்தது. மொரார்ஜி தலைமையிலான ஜனதா அரசாங்கத்தில் ஏறக்குறைய இரண்டரை ஆண்டுகள் பங்கேற்றது. அதைப் பயன்படுத்திக்கொண்டு ஆர்எஸ்எஸ் – இன் துணை அமைப்புகள் விரிவுபடுத்தப்பட்டன. ஜனதா கட்சி பிளவுபட்டு, ஆட்சி கவிழ்ந்த பிறகு தனியாகவே பாரதிய ஜனதா கட்சியாக இந்து மதவெறிப் பாசிஸ்டுகள் அமைத்துக் கொண்டனர். அது மற்றபிற ஆர்எஸ்எஸ் பரிவாரங்களின் அரசியல் தலைமையாக விளங்குகிறது.

 

 

பார்ப்பன அறிவுஜீவிகளாலும், நடுத்தர இளைஞர்களாலும் தோற்றுவித்து வளர்க்கப்பட்ட  ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகளும், மரபுவழி மதத் தலைவர்கள் – குருமார்களின் நேரடித் தொடர்பில்லாமல் இருப்பதை கோல்வால்கர் கண்டார். இந்துமத சாதுக்கள் – சன்னியாசிகள், மகந்துகள், புரோகிதர்களின் பலத்தைத் திரட்டுவதன் அவசியத்தை உணர்ந்தார். பல்வேறு இந்துமதப் பிரிவுகள், போக்குகளில் உள்ள வேறுபாடுகளைக் களைந்து ஒரே வார்ப்பாக மாற்றுவதற்கும், மேலை நாடுகளில் வாழும் இந்துக்களின் ஆதரவைத் திரட்டுவதற்கும் இந்துமதத் தலைவர்களின் மாநாடு ஒன்றை 1964-இல் பம்பாயில் கோல்வால்கர் கூட்டினார். அப்போது சிவராம் சங்கர், ஆப்தே என்கிற இன்னொரு ஆர்எஸ்எஸ் மராத்தியப் பார்ப்பனர் தலைமையில் விசுவ இந்து பரிசத் என்கிற தனி அமைப்பைத் தொடங்குவதாக முடிவானது.

ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகள் தம்மை ஒரு தேச சக்தியாக காட்டிக்கொள்வதற்காக சில முக்கிய நடவடிக்கைகளில் ஈடுபடும்படி செய்தார் கோல்வால்கர். கம்யூனிசப் புரட்சியாளர்களின் தெழுங்கானாப் பேரெழுச்சியை முறியடிப்பதற்கு வினோபா, பாவே துவங்கிய பூதான இயக்கம்; போர்த்துகீசிய காலனியப் பகுதிகளை விடுவிப்பதற்கு நடந்த சத்தியாக்கிரகம்; அசாமில் கிழக்கு வங்க அகதிகள் மற்றும் அசாம் பூமி அதிர்ச்சிக்குப் பலியானவர்கள் நிவாரணப் பணிகள் 1962 இந்தோ – சீன மற்றும் 1963 இந்தோ – பாக் போர்களில் ராணுவத்துக்கு உதவும் பணிகள் ஆகியவற்றில் ஈடுபட்டதன் மூலம் நல்லபிள்ளை வேடம் போட்டனர். 1963 குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க அனுமதி பெரும் அளவுக்கு ஆர்எஸ்எஸ் –  இன் தேசிய வேடம் வெற்றி பெற்றது.

இவ்வாறு சவார்கர் – ஹெட்கேவார் ஆகியோரால் வித்தூன்றி செடியாக வளர்க்கப்பட்ட ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகள் கோல்வால்கரால் நீரிட்டு, உரமிட்டு, நச்சு மரமாகவே வளர்ந்தது. கோல்வால்கருக்குப் பிறகு அது மராத்தியப் பார்ப்பனர்களான தேவரஸ் சகோதரர்களின் தலைமையின் கீழ் நாட்டின் மிகப் பெரிய பாசிச சக்தியாக வளர்க்கப்பட்டது. முந்தைய “குருஜி” க்களைப் போல சித்தாந்த ரீதியில் முக்கியப் பங்களிப்பு எதையும் செய்யவில்லையானாலும் இந்து மதப் பாசிச வெறியூட்டும் நடவடிக்கைகள் மேலும் தீவிரமாகவும் வீச்சோடும் ஆர்எஸ்எஸ்-ஐ உருவாக்கியவர்கள் இந்த தேவரஸ் சகோதரர்கள்.

தொடரும்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன