மணிப்பூர் மாநிலத்தில் 90 நாட்களாக கலவரம் தொடர்கிறது. இதுவரை இந்தக் கலவரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி வாயே திறக்கவில்லை. குக்கி இனப்பெண்களை நிர்வாணமாக்கி கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட காணொளி பரவி நாடு முழுவதும் அதிர்ச்சியும், பெரும் கண்டனங்களும் எழுந்த போதும் கூட, பெண்களுக்கு எதிரான வன்முறை எந்த மாநிலத்தில் நடந்தாலும் கண்டிக்கப்பட வேண்டும் எனப் பொதுவாக பேசினார் மோடி. தற்போது பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கி நடந்து வரும் வேளையில், எதிர்க்கட்சிகள் மணிப்பூர் கலவரம் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தித் தொடந்து பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வரும் சூழலில் கூட மோடி இந்த விவாதங்களில் கலந்து கொள்ளவில்லை, ஏன் பாராளுமன்றத்தின் பக்கமே கூட போகாமல் தவிர்த்து வருகிறார். மோடி மட்டுமல்ல பாஜகவின் முதல்நிலைத் தலைவர்கள் யாரும் மணிப்பூர் குறித்து விவாதிக்கத் தயாராக இல்லை.
மணிப்பூரின் பாஜக முதல்வர் பிரேன் சிங், ஆரம்பம் முதலே தான் சார்ந்துள்ள மெய்தி சமூகத்தின் குரலாக குக்கி இனத்தவர் மீது பழி போடும் வேலையைச் செய்து வருகிறார். மே மாதத்தில் வன்முறைச் சம்பவங்கள் நடக்க தொடங்கிய போதே, “இது இரு இனங்களுக்கு இடையிலான மோதல் அல்ல, குக்கி இன தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதல்” என பகீரங்கமாக பொய்யுரைத்தார். இதனை அப்போதே மறுத்த பாதுகாப்புப் படைகளின் தளபதி அணில் சௌகான், “மணிப்பூரில் தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் எவ்வித மோதலிலும் ஈடுபடவில்லை, துரதிஷ்டவசமாக அங்கே இரு இனக்குழுக்களுக்கு இடையே மோதல் நடக்கிறது” எனத் தெளிவுபடுத்தினார். இருந்தும் பிரேன் சிங் குக்கி இனத்தவர் மீது அவதூறு செய்வதை நிறுத்தவில்லை. பர்மாவிலிருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களும், போதைமருந்துக் கும்பலும் தான் கலவரத்திற்குக் காரணம் எனத் தொடர்ந்து கூறிவருகிறார்.
மணிப்பூர் பாஜக முதல்வர் பிரேன் சிங்கைப் போலவே அவரது அரசும் பெரும்பாண்மை மெய்தி இனமக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. மெய்தி இனத்தைச் சேர்ந்தவர்கள் அரசின் கிடங்கிலிருந்து ஆயுதங்களைக் கொள்ளையடித்த போது அதனைத் தடுக்க அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குக்கி இனத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் முதல்வர் பிரேன் சிங்கைப் பற்றிய பதிவு ஒன்றைப் பகிர்ந்ததற்காக அவரைக் கைது செய்த போலீசார், அந்த இளைஞரை மெய்தி இனத்தவரிடம் ஒப்படைத்துள்ளனர். அந்த இளைஞர் மெய்தி இனத்தவரால் அடித்தே கொல்லப்பட்டுள்ளார். குக்கி பழங்குடியின பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்ட சம்பவத்தில் கூட போலீசாரின் ஆதரவுடன்தான் பெண்கள் மீதான தாக்குதல் நடந்துள்ளது.
இது போன்ற பல சம்பவங்களில் மணிப்பூர் அரசு கலவரத்தைக் கட்டுப்படுத்தாமல் அதனை மேலும் மேலும் வளர்த்துவிடும் வேலையைச் செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. இருந்தும் மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்கை அப்பதவியிலிருந்து நீக்காமல் அவரைப் பாஜக பாதுகாத்து வருகிறது.
அதேசமயம் இன்னொரு பக்கம் பாஜகவின் இரண்டாம் கட்ட தலைவர்களை, இறக்கி விட்டு மணிப்பூர் குக்கி பழங்குடியினர் குறித்த பொய்களையும், அவதூறுகளையும், பிரச்சாரம் செய்து வருகின்றனர். குக்கி பழங்குடியினர்களை பர்மாவைச் சேர்ந்தவர்கள், வந்தேரிகள் என்றும், கிறிஸ்தவ கைக்கூலிகள் என்றும், போதைமருந்து மாபியா என்றும் குக்கி இனத்தவர்கள்தான் மணிப்பூர் கலவரத்திற்குக் காரணம் என இவர்கள் பேட்டி கொடுக்கின்றனர். இவர்களுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் காவிப் படைகள் களமிறக்கப்பட்டு பொய்ச் செய்திகளையும், காணொளிகளையும் பரப்பி வருகின்றனர்.
மணிப்பூரில் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல் குறித்துப் பேசினால் மேற்கு வங்கத்தில் நடந்ததைக் கண்டித்தீர்களா எனக் கேள்வி கேட்டுத் திசை திருப்புவது, மேற்கு வங்கத்தில் அப்படியெதுவும் தற்போது நடக்கவில்லை அது பொய்ச்செய்தி என்று கூறினால் காஷ்மீரில் பண்டிட்டுகள் கொல்லப்பட்டபோது அதனை ஏன் எதிர்க்கவில்லை என்று கேட்பது என திட்டமிட்டு அவதூறும் பொய்ப் பிரச்சாரமும் செய்கின்றனர்.
தமிழ்நாட்டிலும் காவிக் கும்பல் தனது பொய்ப்பிரச்சார வேலையைத் தொடர்கிறது. திமுக மணிப்பூர் பற்றிக் கண்டித்தால் இவர்கள் ஈழத்தமிழ் பெண்கள் மீதான வன்முறையைத் தடுக்க என்ன செய்தார்கள் எனக் கேட்பது, திருமாவளவன் மணிப்பூர் குறித்துப் பேசினால் வேங்கைவயலில் குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த போது திருமாவளவன் என்ன செய்தார் எனக் கேட்பது என்று சம்பந்தமே இல்லாமல் திசை திருப்பும் வேலையைச் செய்கின்றனர்.
இந்தப் பிரச்சாரத்தில் காவிக்கும்பலுக்கு சரியான பக்கவாத்தியமாக சீமானும் இணைந்து கொண்டு, மணிப்பூர் தாக்குதலைக் கண்டிக்கிறேன் என்கிற பெயரில் திமுகவையும், அதன் தோழமைக் கட்சிகளையும் கண்டித்துப் பேசுகிறார். மணிப்பூர் கலவரம் என்பது அம்மாநிலத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள பாஜக நடத்திவரும் ஒரு அரசியல் நடவடிக்கை, இப்படிப்பட்ட ஒரு நிகழ்வு நடக்கும் போது அதனைக் கண்டிக்காமல், கண்டிப்பவரது நோக்கம் குறித்து கருத்துச் சொல்வது பாஜகவைக் காப்பாற்றுவதன்றி வேறில்லை. பாஜகவைக் காப்பாற்றுவதற்காகத்தான் சீமான் தொடர்ந்து இது போலப் பேசி வருகிறார்.
தனது அரசியல் லாபத்திற்காகவும், பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகளின் லாபத்திற்காகவும் பாஜக மணிப்பூரில் நடத்திவரும் இந்தக் கலவரம் தற்போது இரு சமூக மக்களிடையே மிகப்பெரிய பிளவை ஏற்படுத்தியுள்ளது. மெய்தி இனத்தவருடன் இனி ஒன்றாக இருக்க முடியாது, எங்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என குக்கி இனத்தவர்களின் குரல் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. ஆனால் தனது பலம் முழுவதையும் பயன்படுத்தி கலவரத்தின் உண்மைக் காரணம் வெளியே வராதபடிக்குத் திசைதிருப்பும் வேலையைப் பாஜக செய்து வருகிறது. இதனை முறியடிக்க வேண்டும். தனது நலனிற்காக நரவேட்டையாடும் காவி கார்ப்பரேட் பாசிச சக்திகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டும்.
- அறிவு