விவசாயிகள், பொதுமக்கள் மீது போலீசாரை கொண்டு தாக்குதல் நடத்திய NLC நிர்வாகத்தையும் தமிழக போலீசையும் மக்கள் அதிகாரம் வன்மையாகக் கண்டிக்கிறது!

 
விளைந்த நெற்பயிர்களை காப்பதற்காக போராடிய விவசாயிகள், பொதுமக்கள் மீது
ஆயிரக்கணக்கான போலீசாரை குவித்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய NLC நிர்வாகத்தையும் தமிழக போலீசையும்
மக்கள் அதிகாரம் வன்மையாகக் கண்டிக்கிறது!

மக்கள் அதிகாரம் – பத்திரிகை செய்தி
29-07-2023
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
கடலூர் மாவட்டம், நெய்வேலி NLC இரண்டாவது சுரங்க விரிவாக்க பணிக்காக மேல் வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, ஆதனூர், கரிவெட்டி, கத்தாழை உள்ளிட்ட கிராமங்களில் என் எல் சி நிர்வாகம் விவசாயிகளின் விளை நிலங்களைக் கையகப்படுத்தி இழப்பீடு வழங்கியுள்ளது. இந்த இழப்பீடு முழுமையாக வழங்கப்படவில்லை என அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
25/07/2023 அன்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம், என்எல்சி நிர்வாகம், விவசாயிகள் பங்கு பெற்ற பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஒருபுறம் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே மறுபுறம் வளையமாதேவி பகுதியில் பரவனாறு விரிவாக்க பணிக்கு வாய்க்கால் வெட்டும் வேலையில் என்எல்சி நிறுவனம், நூற்றுக்கணக்கான காவல்துறையினர், 30க்கும் மேற்பட்ட ராட்சத மண்வெட்டும் இயந்திரங்கள் மூலம் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு, விளைந்து அறுவடைக்கு தயாராக இருக்க கூடிய நெற்பயிர்களை அழித்து அராஜகம் செய்கிறது.
நில எடுப்பு என்கிற பெயரில் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை காது கொடுத்தும் கேட்காமல், மறுவாழ்வு,மறு சீரமைப்பு திட்டங்களை நிறைவேற்றாமல் கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றாமல் தொடர்ந்து NLC நிர்வாகம் விவசாயிகளை வஞ்சித்து வருகிறது. தங்களது கோரிக்கைக்காக அமைதி வழியில் போராடிய விவசாயிகளை,நூற்றுக்கணக்கான காவல்துறையினரின் உதவியோடு பொதுமக்களை போராட விடாமல் முடக்கும் என்எல்சி நிர்வாகத்தின் செயலை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.
2010-ல் இந்தோனேசியாவிலிருந்து நிலக்கரி மற்றும் மின்உற்பத்திக்கான உபகரணங்கள் இறக்குமதி செய்ததில் அதானி, எஸ்ஸார், டாடா போன்ற கார்ப்பரேட்டுகள் 50,000 கோடியை கொள்ளையடித்தனர். இவ்வாறு மக்கள் பணத்தை கார்ப்பரேட்டுகளுக்கு வாரிகொடுத்து மின் துறையை நட்டத்தில் தள்ளிய மத்திய அரசு, விவசாயிகளின் நியாயமான கோரிகைக்கு செவிசாய்க்க மறுக்கிறது. இந்த அநீதிக்கு தமிழக அரசும் துணைநிற்பதை மக்கள் அதிகாரம் கண்டிக்கிறது.
ஆகவே, NLC நிர்வாகத்தின் அராஜகத்தை கண்டித்து விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு தமிழகம் முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகள் துணை நிற்க வேண்டும் என்று தோழமையோடு கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
தோழர் முத்துக்குமார்
மாநில செயலாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு
97901 38614

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன