நிறவெறி ஒடுக்குமுறையைப் பாதுகாக்கும் முதலாளித்துவ ஜனநாயகம்

நேட்டோ நாடுகள் தங்களது ஏகாதிபத்திய நலன்களுக்காக நடத்தும் போர்களை நிறுத்தாதவரை அகதிகள் பிரச்சனை தீரப்போவதும் இல்லை, அதனை வைத்து அதிகரித்துவரும் இனவெறி அரசியலும் முற்றுப்பெறப்போவதில்லை. இந்த உண்மையை மறைத்துவிட்டு ஒடுக்குமுறையின் மூலம் இனவெறிக்கு எதிரான போராட்டங்களை அடக்கிவிட எத்தனிக்கிறது பிரான்ஸ் அரசு.

கடந்த ஜுன் மாத இறுதியில் உலகின் இரண்டு “தலைசிறந்த ஜனநாயக” நாடுகளின் ஆளும்வர்க்கத்தின் அடிமனதில் ஊறித்திளைத்துள்ள நிறவெறி இனவெறிக் கருத்துக்கள் பகீரங்கமாக வெளிப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. ஒன்று பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த சிறுவன் ஒருவனை போலீசார் சுட்டுக் கொன்ற நிகழ்வு. மற்றது அமெரிக்க பல்கலைக் கழகங்களில் நிற அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக் கொள்கைகள் அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனக் கூறி அதனை தடை செய்யும் படி அமெரிக்க உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு. தங்களது நாடுதான் நவீன கால ஜனநாயகத்தின் பிறப்பிடம் என அடித்துக்கொள்ளும் அமெரிக்காவிலும், பிரான்சிலும் நிற அடிப்படையிலான பாகுபாடும் ஒடுக்குமுறையும் அந்நாட்டு முதலாளித்துவ ஜனநாயகத்தின் தூண்களால் எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றன என்பதை இந்த இரண்டு சம்பவங்களும் உறுதிசெய்துள்ளன.

ஜூன் மாதம் 27ம் தேதியன்று பிரான்ஸ் தலைநகர் பாரீசில், ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த, நகேல் மெர்ஜொக் என்ற 17 வயதுச் சிறுவன் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டான். வேகமாகச் சென்றது, தவறான பாதையில், பள்ளிப் பேருந்துகளுக்கு ஒதுக்கப்பட்ட பாதையில் சென்றது போன்ற போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்துக்காக, நகேலை பிரான்ஸ் போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர். நகேல் மீதான போலீசின் கொலைவெறித் தாக்குதல் என்பது தனிப்பட்ட சம்பவமாக இல்லாமல், பிரான்ஸ் நாட்டின் பாராளுமன்றம் தொடங்கி, போலீசுத் துறை வரையில் ஊறிப்போய்க் கிடக்கும் நிறவெறியின் துலக்கமான வெளிப்பாடாக இருப்பதால் இதற்கெதிரான மக்கள் போராட்டம் அங்கே மிகத் தீவிரமாக நடக்கிறது.

 

 

படுகொலை நடந்தது முதல் இன்றுவரை பிரான்ஸ் நாட்டின் பல்வேறு நகரங்கள் பற்றியெறிகின்றன. அதிக வருமானம் கொண்ட மேல்தட்டு வர்க்கத்தினருக்கான கடைகளைக் கொண்ட தெருக்கள் குறிவைத்துத் தாக்கப்படுகின்றன. விலையுயர்ந்த பொருட்களை விற்பனை செய்யும் ஆப்பிள், மேசிசஸ் போன்ற நிறுவனங்களின் கடைகள் சூறையாடப்படுகின்றன. இந்தப் போராட்டத்தினை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க நினைக்கும் இம்மானுவேல் மேக்ரான் தலைமையிலான பிரஞ்சு அரசாங்கம், 40,000க்கும் அதிகமான போலீசாரைக் களம் இறக்கியதுடன், ஆயிரக்கணக்கான இளைஞர்களை இதுவரைக் கைது செய்து சிறையிலடைத்துள்ளது.

பிரான்ஸ் உள்ளிட்ட ஐய்ரோப்பிய நாடுகளில் கடந்த இரு பத்தாண்டுகளில் மட்டும் பல இலட்சம் அகதிகள் குடியேறியுள்ளனர். தமது ஏகாதிபத்திய நலங்களைப் பாதுகாக்க அமெரிக்க தலைமையிலான நேட்டோ நாடுகள் கிழக்காசிய நாடுகளின் மீது தொடர்ந்துள்ள போர்களின் காரணமாக அந்நாடுகளில் வாழ்வை இழந்து அகதிகளாகப் பஞ்சம் பிழைக்க ஐரோப்பிய நாடுகளை நோக்கி மக்கள் அலை அலையாக புலம்பெயர்கின்றனர். இதற்கெதிராக எவ்வளவு கட்டுப்பாடுகளையும், கடுமையான தண்டனைகளையும் விதித்தாலும் ஐரோப்பிய நாடுகளால் அகதிகள் வருகையினைத் தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ முடியவில்லை.

அதிகரித்துவரும் புலம்பெயர் மக்களின் எண்ணிக்கையைக் காரணம் காட்டி மக்கள் மனதில் இனவெறியைத் தூண்டும் வலதுசாரிக் கட்சிக்களின் செல்வாக்கு இந்நாடுகளில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றது. தங்களை முற்போக்கானவர்களாக காட்டிக் கொள்ளும் கட்சிகள் கூட தேர்தல் வாக்குறுதிகளில் அகதிகள் பிரச்சனை குறித்து வலதுசாரிகளின் கோரிக்கைகளை அங்கீகரிக்கும் அளவிற்கு மக்கள் மனதில் இனப்பாகுபாடு அதிகரித்துள்ளது. புலம்பெயர் மக்களை தினசரிக் கையாலும் போலீசு உள்ளிட்ட அரசுத்துறையின் உருப்புக்களில் இத்தகைய இனப்பாகுபாடும் இனவெறியும் நிறம்பியிருக்கிறது.

நேட்டோ நாடுகள் தங்களது ஏகாதிபத்திய நலன்களுக்காக நடத்தும் போர்களை நிறுத்தாதவரை அகதிகள் பிரச்சனை தீரப்போவதும் இல்லை, அதனை வைத்து அதிகரித்துவரும் இனவெறி அரசியலும் முற்றுப்பெறப்போவதில்லை. இந்த உண்மையை மறைத்துவிட்டு ஒடுக்குமுறையின் மூலம் இனவெறிக்கு எதிரான போராட்டங்களை அடக்கிவிட எத்தனிக்கிறது பிரான்ஸ் அரசு.

இதற்கு முன்பு 2005ம் ஆண்டு இரண்டு கறுப்பினச் சிறுவர்கள் போலீசாரால் படுகொலை செய்யப்பட்ட போது பிரான்ஸ் முழுவதும் நடந்த வன்முறைகளையும் போராட்டங்களையும் கட்டுப்படுத்த முடியாமல் அவசர நிலை பிரகடணப்படுத்தப்பட்டு, போராட்டக்காரர்கள் மீது கடுமையான ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டது போன்று, இந்த முறையும் இராணுவத்தைக் கொண்டு போராட்டங்களை ஒடுக்குவதை நோக்கி பிரஞ்சு அரசாங்கம் சென்று கொண்டுள்ளது.

பாரீசில் கறுப்பினச் சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்ட நிகழ்விற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு அமெரிக்க உச்சநீதிமன்றம் பல்கலைக் கழகங்களில் நிற அடிப்படையிலான இடஒதுக்கீட்டை சட்டவிரோதம் என அறிவித்தது. ஹார்வர்டு மற்றும் வட கரோலினா பல்கலைக் கழகங்களில் மாணவர் சேர்க்கையின் போது கடைபிடிக்கப்படும் நிற அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரும் வழக்கில்தான் இத்தகையதொரு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

 

சமவுரிமைக்கான கறுப்பினத்தவரின் போராட்டம் என்பது அமெரிக்க வரலாற்றில் பல நூறு ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. உலகிற்கே ஜனநாயகம் குறித்து வகுப்பெடுக்கும் அமெரிக்கா தனது சொந்த நாட்டின் பிரஜைகளான கறுப்பினத்தவர்களை, தங்களது ரத்தாலும், வியர்வையினாலும் அமெரிக்கா எனும் நாட்டை கட்டியெழுப்பிய மக்களை தோலின் நிறத்தை வைத்துப் பிரித்துப்பார்த்து, கீழாக நடத்திவந்துள்ளது. அமெரிக்க வரலாறு என்பதே வெள்ளை நிறவெறிக்கு எதிரான கறுப்பினத்தவரின் போராட்டங்களும், அவர்கள் மீதான ஒடுக்குமுறைகளும் நிறைந்த வரலாறுதான். 1960கள் வரை ஓட்டுப்போடும் உரிமை உள்ளிட்ட எந்த உரிமையும் இல்லாமல் வாழ்ந்து வந்த கறுப்பின மக்களின் தொடர் போராட்டங்களுக்குப் பிறகுதான் அவர்களுக்கான உரிமைகள் ஒவ்வொன்றாக கிடைக்கத் தொடங்கின.

அப்படிப் போராடிப்பெற்ற உரிமைகளுள் ஒன்றுதான் இந்த நிற அடிப்படையிலான இடஒதுக்கீடு. இந்த இடஒதுக்கீடு என்பது அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் உள்ள பல்கலைக் கழகங்களில் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. பல்கலைக் கழகங்களில் பன்முகத் தன்மையைக் கொண்டுவரும் நோக்கில் இந்த ஒதுக்கீடு அமுல்படுத்தப்படுகின்றது. இதற்கெதிராகத்தான் தற்போது உச்ச் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதற்கு முன்னர் 1996ம் ஆண்டும் இதே போன்றதொரு தீர்ப்பினை உச்சநீதிமன்றம் வழங்கியது. அதுமுதல் கறுப்பினத்தைச் சேர்ந்த மாணவர்கள் பல்கலைக் கழகங்களில் உயர்படிப்பில் சேர்வது கணிசமான அளவு குறைந்தது. தற்போது வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பு கறுப்பின மாணவர்களுக்கு இருக்கும் குறைந்தபட்ச வாய்ப்பையும் பறித்துவிட்டது.

அமெரிக்காவிலும், பிரான்சிலும் நடந்துள்ள இந்த இரு வேறு சம்பவங்கள் சாராம்சத்தில் உணர்த்துவது ஒன்றுதான். முதலாளித்து அரசு என்பது என்னதான் ஜனநாயகப் பூர்வமானது என்று பறைசாற்றிக் கொண்டாலும், அதன் உள்ளூர நிறைந்திருப்பது மக்கள் மீதான ஒடுக்குமுறையும் சர்வாதிகாரமும்தான், அது, நிறவெறி, இனவெறி போன்ற கருத்துக்களைக் கொண்டு உழைக்கும் மக்களை ஒன்றுசேரவிடாமல் தடுத்துப் பிரித்துவைக்கும் நோக்கத்திற்காக அவற்றைப் பாதுகாக்கவும் செய்கிறது.

  • அன்பு 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன