மேக்கேதாட்டு அணை : காங்கிரசின்
இனவெறி அரசியல்

கடந்த காலங்களில் எப்படியிருந்தாலும், தற்போதைய சூழலில் இந்து மதவெறி பாசிச சக்தியான பாஜகவிற்கு மாற்றாக, தன்னை முன்னிறுத்தும் வேலையில் ஈடுபட்டுவரும் காங்கிரஸ் கட்சி அதற்கு நேர்மாறாக இதுபோன்றதொரு இனவெறி நடவடிக்கையில் ஈடுபடுவதென்பது, பாசிச எதிர்ப்பில் அதன் சமரச, ஊசலாட்டத் தன்மையை காட்டிக் கொடுத்துள்ளது. காங்கிரஸ் செய்யும் இந்த இனவெறி அரசியல், மக்களைப் பிரிப்பதன் மூலம், காவி பாசிசத்திற்குச் சேவை செய்யவே பயன்படும்.

 

 

காவிரி நதி, கர்நாடக – தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கும் ஜீவநதியாக இருக்கிறதோ இல்லையோ இருமாநில அரசியல் கட்சிகளின் அரசியல் வாழ்வைக் காப்பாற்றும் ஜீவநதியாக என்றைக்கும் இருக்கிறது. பாஜக, காங்கிரஸ், மத சார்பற்ற ஜனதா தளம் என கர்நாடகத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் எடியூரப்பா, பொம்மை, சித்தராமையா, குமாரசாமி என யார் முதலமைச்சராக பொறுப்பேற்றாலும் கட்டாயம் காவிரி பிரச்சனையைப் பூதகரமாக்கி அதில் அரசியல் ஆதயம் தேடுவதை மட்டும் கைவிடமாட்டார்கள்.

காவிரியில் தமிழகத்திற்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய நீரைத்தர மறுப்பது தொடங்கி புதிய அணைகள் கட்டுவது வரை எல்லா இடத்திலும், தமிழகத்திற்கு ஆதரவாக கர்நாடகத்திற்கு துரோகம் செய்வதாக குற்றம் சுமத்துவதில், ஒருவரை ஒருவர் விஞ்சி நிற்கின்றனர்.

தற்போது மீண்டும் காவிரிக்கு குறுக்கே மேக்கேதாட்டில் அணை கட்டும் பிரச்சனையைக் கையில் எடுத்துள்ளது கர்நாடக காங்கிரஸ் அரசு. காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை கடந்த சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியிலேயே ஆட்சிக்கு வந்தால் மேக்கேதாட்டு அணை கட்டப்படும் என உறுதி அளித்திருந்தது. காங்கிரஸ் கட்சி கர்நாடக சட்டசபைத் தேர்தலில் வென்று ஆட்சியமைத்ததும், துணை முதலமைச்சர் டி.கே சிவக்குமார், இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகளுடம் ஆலோசனை நடத்தியதுடன், மேகதாதுவில் நிச்சயமாக அணைகட்டப்படும் என பேட்டியளித்தார். அதனைத் தொடர்ந்து அணை கட்ட அனுமதி வழங்கக்கோரி ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தையும் தில்லி சென்று நேரடியாகச் சந்தித்தார்.

 

 

இந்நிலையில் கர்நாடக நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து பேசிய அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா மேக்கேதாதுவில் அணைக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும், பூர்வாங்கப் பணிகள், நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்படும் என அறிவித்தார். இதற்குத் தமிழக அரசு கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்ததுடன், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தில்லி சென்று ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரைச் சந்தித்து அணை கட்ட அனுமதி வழங்கக் கூடாது என கோரிக்கை விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து இரு மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சிகளும், தலைவர்களும் அணை கட்டுவதற்கு ஆதரித்தும் எதிர்த்தும் தங்களது பங்கிற்கு அறிக்கைகள் விட ஆரம்பித்துள்ளனர்.

2018ம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பு, தமிழகத்தின் உரிமைகளுக்கு எதிராக, தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் தீர்ப்பாக இருந்தாலும் கூட, காவிரிக்குக் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டவேண்டும் என்றால் தமிழக அரசின் ஒப்புதல் இன்றிக் கட்ட முடியாது எனத் தெளிவாக கூறியுள்ளது. ஆனால் கர்நாடக அரசைப் பொறுத்தவரை, காவிரியின் கடைமடைப் பகுதியான தமிழகத்தின் உரிமை குறித்த, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு, உச்ச நீதிமன்றத் தீர்பு என எதையும் பொருட்படுத்தாமல் செயல்படுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். காவிரியில் வெள்ளம் வரும்போது அதன் உபரி நீரைத் திறந்துவிடும் பகுதியாக மட்டுமே தமிழகத்தினை கர்நாடக அரசு பார்க்கிறது.

கடந்த காலங்களில் எப்படியிருந்தாலும், தற்போதைய சூழலில் இந்து மதவெறி பாசிச சக்தியான பாஜகவிற்கு மாற்றாக, தன்னை முன்னிறுத்தும் வேலையில் ஈடுபட்டுவரும் காங்கிரஸ் கட்சி அதற்கு நேர்மாறாக இதுபோன்றதொரு இனவெறி நடவடிக்கையில் ஈடுபடுவதென்பது, பாசிச எதிர்ப்பில் அதன் சமரச, ஊசலாட்டத் தன்மையை காட்டிக் கொடுத்துள்ளது. காங்கிரஸ் செய்யும் இந்த இனவெறி அரசியல், மக்களைப் பிரிப்பதன் மூலம், காவி பாசிசத்திற்குச் சேவை செய்யவே பயன்படும். இருந்தும் தமது குறுகிய நலன்களுக்காக, அரசியல் ஆதாயத்திற்காக கர்நாடக தலைவர்களின் இனவெறி நடவடிக்கையை காங்கிரஸ் கட்சி அனுமதிக்கிறது.

கர்நாடக காங்கிரஸ் தலைவர்களின் இந்த இனவெறி நடவடிக்கையைக் கண்டிக்கத் துப்பில்லாமல், தமிழகத்து காங்கிரஸ் தலைவர்கள் திமுகவுடன் இந்தப் பிரச்சனையில் ஓரணியில் நின்று அணை கட்டப்படுவதை எதிர்ப்பதாக கூறுவதெல்லாம் தொட்டிலை ஆட்டிப் பிள்ளையைச் சமாதானப்படுத்தும் முயற்சியன்றி வேறில்லை.

இதில் தமிழகத்து பாஜகவினர் நடத்தும் நாடகம்தான் கேலிக்கூத்தானது. பாஜகவிற்கு எதிரான கட்சிகளின் அடுத்த கூட்டம் பெங்களூரில் நடக்கவிருப்பதால், அந்தக் கூட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொள்ள பெங்களூரு சென்று வந்தால், சென்னையில் “கோ பேக் ஸ்டாலின்” என்று போராட்டம் நடத்தப்போவதாக அண்ணாமலை மிரட்டியுள்ளார். ஆனால் கர்நாடகாவில்  பாஜக ஆட்சியில் இருந்த ஒவ்வொரு முறையும் மாநில அரசு மேகேதாட்டில் அணை கட்ட ஒன்றிய அரசிடம் ஒப்புதல் கேட்டுள்ளது. கர்நாடகத்தில் பாஜகவின் முதலமைச்சர்களாக இருந்த எடியூரப்பாவும், எஸ்.ஆர்.பொம்மையும் இதற்காக ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சர்களைச் சந்தித்துள்ளனர். கடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலின் போது அதே பொம்மைக்கு ஆதரவாகத்தான் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார். அதையெல்லாம் மக்கள் மறந்துவிடுவார்கள் என எண்ணி இன்று தமிழக மக்கள் மீது அக்கறை இருப்பது போல அண்ணாமலை நாடகமாடுகிறார்.

காங்கிரசின் துரோகமும், பாஜகவின் நாடகமும் ஒருபுறம் என்றால், காங்கிரசையும் திமுகவையும் பிடித்து பாசிச ஆற்றைக் கடந்துவிடலாம் என உபதேசிப்பவர்களின் நிலைதான் காவிரிப் பிரச்சனையில் கவலைக்கிடமாக உள்ளது. பாசிச எதிர்ப்பில் திமுக காங்கிரசிடம் இடதுசாரிகளைச் சரணடையச் சொல்பவர்கள் காங்கிரசின் இனவெறி அரசியல் குறித்து என்ன சொல்லப்போகிறார்கள். கள்ளச்சாராய சாவுகள் குறித்துப் பேசினால் “சாராயமா? சனாதனமா?” எதை எதிர்ப்பது முக்கியம் எனக் கேள்வி எழுப்பியவர்கள் இன்று “காவிரித் தண்ணியா, காவி பாசிசமா” எது வேண்டும் என முடிவு செய்துகொள்ளுங்கள் எனக் கூறினாலும் கூறுவார்கள்.

  • அறிவு

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன