மின் கட்டண உயர்வு: மறுகாலனியாதிக்கத்தின்
நேரடி சுரண்டல்!

மறுகாலனியாக்க கொள்கையின் கீழ் நாட்டின் குடிமக்கள் அனைவரையும் நுகர்வோராகவும், தமக்கு தேவையான பொருட்கள் மற்றும் சேவைகளை தாமே விலைகொடுத்து வாங்கிகொள்ள வேண்டும் என அரசு கருதுகிறது. தண்ணீர் முதற்கொண்டு அனைத்தும் வணிகப் பொருட்களாக மாற்றப்பட்டு விட்டன.

தமிழ்நாட்டு மக்கள் மீது அடுத்த கட்ட பொருளாதார தாக்குதல், மின் கட்டண உயர்வு என்ற பெயரில் திணிக்கப்பட்டுள்ளது. ஒன்பது மாதங்களுக்கு முன்பு அனைத்து பயன்பாட்டாளர்களுக்கும் மின்சார கட்டணத்தை  உயர்த்திய தமிழக அரசு இந்த முறை வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு மின்சார கட்டணத்தை, யூனிட் ஒன்றுக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை  உயர்த்தியுள்ளது.

ஏற்கனவே காய்கறிகள், பால், மருந்து, சமையல் எரிவாயு என அனைத்தின் விலைகளும் உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், ஜூலை 1 முதல் மின் கட்டண உயர்வும் வந்து சேர்ந்திருக்கிறது. இந்தக் கட்டண உயர்வு வீட்டுப் பயன்பாட்டிற்கான இணைப்புகளுக்கு இல்லை என்பதால் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது என முதலமைச்சர் கூறுகிறார்.

ஆனால் கடை வாடகை,  முலப்பொருட்கள் விலை ஏற்றம், ஊழியர்கள் சம்பளம்  என சிறுகுறு தொழில் முனைவோர், சிறு கடை வியாபாரிகள் ஏற்கனவே துயரத்தில் இருக்கிறார்கள். இக்கட்டண உயர்வால் மேலும் இவர்கள் நொடிந்து போவார்கள். வணிக நிறுவனங்களின் மின்சார கட்டணம் உயரும் போது பொதுமக்கள் வாங்க கூடிய அத்தியாவசிய பொருட்களின் விலைவாசியும்  உயரும். இது  எல்லாதரப்பு மக்களையும் பாதிக்கும்.

 

 

மாநில மின்சார வாரியங்களின் நட்டத்தை ஈடு செய்ய அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு ஒரு மூறை மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கூறியுள்ளதால், மின்சாரக் கட்டணம் இனி ஒவ்வொரு ஆண்டும் உயர்த்தப்படும்.

கடந்த முறை மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டபோது, அப்போதைய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்கட்டணத்தை உயர்த்த வேண்டும் என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 18 முறை கடிதம் எழுதி தமிழக அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததாக கூறியிருந்தார்.

தமிழ்நாட்டின் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என மத்தியில் இருந்து உத்தரவு போடும் இந்த ஒழுங்குமுறை ஆணையம் என்பது பொருளாதார நிபுணர்கள், தொழில் வல்லுநர்கள் என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்களின் அதிகாரிகளும், ஊழியர்களும், கார்ப்பரேச் சேவைக்கென பயிற்றுவிக்கப்பபட்டுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் கொண்ட தனிச்சையான குழுவாகும். இதன் கீழ் அனைத்து மாநிலங்களின் மின்சார வாரியங்களையும் கொண்டு வந்து அதன் கட்டுப்பாட்டில் இருக்கும் படி செய்துள்ளனர்

மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய அமைச்சரவைக்கு ஏன் மின்கட்டண உயர்வை அமல்படுத்தும் அதிகாரமில்லை?  மக்கள் பிரதிநிதிகள் இல்லா நிபுணர்கள் குழு மின்கட்டண உயர்விற்கு ஏன் துடிக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டுமானால் மின்சாரத் துறையில் தனியார்மயமாக்கலின் வரலாற்றை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் எனும் மறுகாலனியக் கொள்கைகள் புகுத்தப்பட்டதோடு சேர்த்து, அதற்கு ஏற்ப அரசின் பாத்திரமே மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மறுகாலனியாக்க கொள்கையின் கீழ் நாட்டின் குடிமக்கள் அனைவரையும் நுகர்வோராகவும், தமக்கு தேவையான பொருட்கள் மற்றும் சேவைகளைத் தாமே விலைகொடுத்து வாங்கிகொள்ள வேண்டும் என அரசு கருதுகிறது.

தண்ணீர் முதற்கொண்டு அனைத்தும் வணிகப் பொருட்களாக மாற்றப்பட்டு விட்டன.  கழிவுநீர் அகற்றுதல், குப்பைகளை அகற்றுதல் தொடங்கி அனைத்து சேவைகளும் தனியார்மயமாக்கப்பட்டுள்ளது.

மின்சாரத்தை தனியார்மயமாக்கும் சட்டம் 1998 ஆம் ஆண்டிலேயே இயற்றப்பட்டது. ஆனால் இச்சட்டம் தனியார்மய நடவடிக்கைகளுக்கு போதுமானதாக இல்லை என்பதால் மறுகாலனியாக்க கொள்கையின் கீழ் அப்பட்டமாக  2003 ஆம் ஆண்டு  பாஜக ஆட்சியில்  மின்சார சட்டம் என்ற  புதிய சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டம் அமலாக்கப்படும் வரை மின்சாரத்துறை சம்பந்தமான அனைத்து வேலைகளையும் அரசே நிர்வகித்து வந்தது.

அரசின் கையில் போதிய நிதியில்லை; முதலீடுகள் செய்ய நிதிப்பற்றாக்குறை உள்ளது என்ற முகாந்திரத்திலும், பொதுத்துறை நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குகின்றன; புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டு தொழில்துறை நவீனமாக்கப்பட வேண்டியுள்ளது என்று கூறிக்கொண்டு மின்சாரத்துறை பல ஆண்டுகளாகப் பாடுபட்டு உருவாக்கி வைத்திருக்கும் அடிப்படை கட்டுமானங்கள், சாதனங்கள், பிற வசதிகளைத் தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் நோக்கோடு இச்சட்டம் இயற்றப்பட்டது..

 

 

இச்சட்டத்தின் மூலம்  மின் உற்பத்தி, மின் அனுப்புகை, மின் விநியோகம் ஆகிய 3 பணிகளையும் மின்வாரியமே செய்யக்கூடாது என்று வாரியங்கள் மூன்றாக உடைக்கப்பட்டன.  இந்த மூன்று  பிரிவுகளிலும் தனியார் நிறுவனங்கள் புகுத்தப்பட்டன. அதன் பிறகு தனியார் முதலாளிகளால் மின்சார உற்பத்தி நிலையங்கள் தொடங்கப்பட்டன. மின்சார வாரியங்கள் மின் உற்பத்தியை நிறுத்திவிட்டு, தனியாரிடமிருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்ய ஆரம்பித்தன.

இந்த சட்டம் செய்த மற்றுமொரு மிக முக்கியமான விசயம் மின்சார கட்டணத்தின் மீது  அரசுக்கு இருந்த கட்டுப்பாடை நீக்கியது ஆகும். இதன் மூலம்  மின்சாரம் என்ற அடிப்படை தேவையை எல்லா மக்களுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டியது தன் பொறுப்பு கிடையாது என்று அரசு தன் பொறுப்பிலிருந்து விலகியது.

அரசுத் துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் பிரச்சாரத்திற்காக பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் ஊழல் மலிந்து போயிருக்கின்றன எனவும், தேர்தல் கட்சிகள் ஆட்சியை தக்கவைப்பதற்காக மின்சார கட்டணத்தை  உயர்த்தாமல் இருக்கின்றன என்றும்,  இதனால்  மின்சாரத்துறை போன்ற அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மட்டமாக செயல்படுகிறது என்றும் பொதுக்கருத்துக்கள் மக்கள் மத்தியில் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு முறை ஆட்சிக்கு வந்த மாநில அரசுகளும் இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த  அரசுகளினால் தான் மின்சாரத்துறைக்கு நட்டம் என பரஸ்பர குற்றச்சாட்டுகளை அடுக்கின.

தகுதியான, நேர்மையான, நிர்வாக நுணுக்கங்கள் அறிந்த அதிகார வர்க்கத்தினரிடம் கொள்கை முடிவுகள் எடுக்கும் அதிகாரத்தை கொடுப்பதன் மூலமே இத்தகைய பிரச்சினைகளுக்குத் தீர்வுக் காண முடியும் என மறுகாலனியாக்க மரபுகள் உருவாக்கப்பட்டன. அரசு ஏகபோகமாக  இருந்த மின்சாரத் துறையின் அமைச்சரவைகளுக்கு வெளியே, சுயேச்சையான அதிகாரம் கொண்ட  ஒழுங்குமுறை ஆணையங்கள்  உருவாக்கப்பட்டு அதிகார வர்க்கத்தின் கையில் முடிவெடுக்கும் அதிகாரங்களும் மாற்றிக் கொடுக்கப்பட்டன. இவ்வாறு உருவாக்கப்பட்டது தான் ”மின்சார ஒழுங்குமுறை ஆணையம்”.

இந்த ஆணையத்தில் மக்கள் ஒரு நுகர்வோராக மட்டுமே இருக்க முடியும், ஒழுங்கு முறை ஆணையம் நிர்ணயிக்கும் விலையில் மின்சாரத்தை வாங்கி கொள்ள வேண்டும்.  மின்சார கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை. அதிகார வர்க்கமான ”ஒழுங்குமுறை ஆணையங்கள்” மின்சார கட்டணத்தை உயர்த்துவது பற்றியெல்லாம் மக்களுக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் பொறுப்புடன் பதில் கூற வேண்டிய அவசியமில்லை.

 

 

மாறாக, ஒழுங்குமுறை ஆணையம் என்ற இந்த அமைப்பு, மாநில அரசுகளின் மின்சார நடவடிக்கைகளான தனியாரிடமிருந்து மின்சார கொள்முதல் விலை,  மக்களுக்கான விற்பனை கட்டணம் போன்றவற்றை கண்காணித்து எந்த விலைக்கு வாங்க, விற்க வேண்டும் என கட்டளையிடும் அரசு உறுப்பாக மக்கள் மீது எந்த வித அக்கறையற்று இருக்கும்.

அதிகாரவர்க்கத்தின் கையில் பொறுப்பை ஒப்படைத்தால் மின்சாரத்துறை இலாபத்தில் இயங்கும் என்பதற்கு  மாறாக ஒழுங்குமுறை ஆணையம் நிர்வகித்தும் மின்சார வாரியத்தின்  நட்டம் கடந்த இருபது ஆண்டுகளாக பல மடங்கு அதிகரித்த வண்ணம் உள்ளது.

கார்ப்பரேட் முதலாளிகளின் கைப்பாவையான மோடி அரசு, பதவியேற்ற பின்னர் 2022ஆம் ஆண்டு மின்சார சட்ட திருத்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இச்சட்ட மசோத விவசாயிகளுக்கான  இலவச மின்சார மானியத்தை ஒழிக்கவும், விநியோக நிறுவனங்கள் மற்றும் உற்பத்தி அலகுகளை ஒட்டுமொத்தமாக தனியார் வசம் ஒப்படைக்கவும் வழி செய்கிறது.  

இம்மசோதா மூலம் மாநில அரசின் மீது தனியார் முதலாளிகளின் பிடிகளை மேலும் இறுக்குவதற்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தை கண்காணிக்க மற்றொரு ஆணையம் அமைக்கப்படுகிறது. இவ்வாறு கார்ப்பரேட் முதலாளிகளின் தேவைகளை ஈடுசெய்யும் வகையில் அதிகாரவர்க்கம் எனும் அரசு உறுப்புகள் மென்மேலும் பெருக்கப்படுகிறது. அரசு ஏகபோகமாக இருந்த மின்சாரத்துறையை திட்டமிட்டு நட்டப்படுத்தி தொலைதொடர்பு துறை போல அவற்றை ஒழிக்கும் திட்டமாக புதிய சட்டங்கள், திட்டங்கள் இயற்றப்படுகின்றன.

நமது வரிப்பணம், மின்சாரத்துறையின் சொத்துக்கள், அதன்  வளங்கள், சாதனங்கள், அத்துறை ஊழியர்களின் உழைப்பாற்றல் ஆகியவற்றை கார்ப்பரேட் முதலாளிகள்  பயன்படுத்தி பகற்கொள்ளையடிக்கவும் இவர்களின் இலாப வேட்கைக்காக உழைக்கும் மக்களை சுரண்டவும், விவசாயிகளை இன்னும் போண்டியாக்கவுமே,  ஒன்றிய அரசின் மூலம் மின்சார சட்டம் எனும் கொள்கை பூர்வ முடிவெடுக்கிறார்கள், அதற்காக கார்ப்பரேட் முதலாளிகளும் அதன் கைப்பாவையான மோடி அரசும் மின்சார ஒழுங்குமுறை வாரியங்கள்  எனும்  அதிகாரவர்க்கத்தை  ஒரு கருவியாக பயன்படுத்துகிறார்கள்.  

மக்கள் தங்களது அடிமனதில் எதிர்ப்பார்த்து கொண்டிருப்பது போல மின்சார கட்டண  விலை குறைப்புக்கு நாடாளுமன்றத்தையும், சட்டமன்றத்தையும் இனிமேலும் நம்பி பயனில்லை. ஏனென்றால் மின்சாரத்தை ஒரு  இலாபமீட்டும் சரக்காக  மறுகாலனியாக்க கொள்கையின் கீழ் கார்ப்பரேட் முதலாளிகள் மாற்றிவிட்டார்கள்.

  • தாமிரபரணி

 

தகவல் உதவி

  1. https://tamil.indianexpress.com/tamilnadu/electricity-tariff-will-be-increased-in-tamil-nadu-announced-by-minister-senthil-balaji-481263/
  2. https://www.thehindu.com/news/national/explained-why-is-there-uproar-over-the-electricity-amendment-bill-2022/article65755167.ece

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன