ம.பியில் பழங்குடி தொழிலாளி மீது சிறுநீர் கழித்த சம்பவம்: பெருகி வரும் காவி கிரிமினல்கள்!

மதம், இனம், மொழி, சாதி என காவி பாசிஸ்டுகள் தூண்டிவிடும் அனைத்து கலவரங்களிலும் உட்புதுந்து வினையாற்றி விட்டு வெளிவரும் பொறுக்கிகள் பட்டாளம், அதில் கிடைக்கும் அறுவடையில் கணிசமான பங்கை ருசி பார்த்தவுடன் மேலும் மேலும் வெறிகொண்ட மிருகமாக மாறுகிறது.

இப்படிப்பட்ட ஒரு மிருகம் தான் மத்திய பிரதேசத்தின் பிரவேஷ் சுக்லா. ம.பி யின்  சித்திக் மாவட்டத்தில் உள்ள பழங்குடி தொழிலாளி  முகத்தின் மீது சிகரெட் புகைத்தப்படி இம்மிருகம் சிறுநீர் கழிக்கும் காணொளி சமூக வலைத்தளத்தில் பரவியதால், இவன் கைது செய்யப்பட்டுள்ளான். இவனுக்கு பாஜகவுடன் தொடர்பு இருப்பதாக ம.பியின் முன்னாள் முதல்வர்  கமல்நாத் குற்றம் சாட்டியுள்ளார்.

இச்சம்பவம் நடந்து மூன்று மாதங்களுக்கு பிறகு, தற்போது இக்காணொளி சமூகவலைத்தளங்களில் வெளிவந்த உடன்தான்  கைது நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. மூன்று மாதங்களாக இவன்  கவுரவத்தோடு வெளிஉலகில் நடமாடிக்கொண்டு இருந்திருக்கின்றான். இச்சம்பவத்திற்கு பிறகும் அப்பழங்குடி தொழிலாளியை மிரட்டி,  சிறுநீர் கழித்த காணொளி போலியானது என  அவர் கையாலேயே கடிதம் வெளியிட வைத்துள்ளது இந்தக் கிரிமினல் கூட்டம்.

பழங்குடி மக்கள் மீதான பாஜகவின் வன்மம் சந்திக்கு வந்த பின்பு, ம.பி. முதல்வர் சிவராஜ்சவுகானோ அப்பழங்குடி தொழிலாளியை தன் வீட்டுக்கு அழைத்து, மாலை, மரியாதை, பாத பூஜை என பாவமன்னிப்பு நாடமாடுகிறார்.

 

 

பழங்குடியினரின் தோழனாக தன்னை காட்டி கொண்டு, சுயவிளம்பரம் தேடி இக்கிரிமினல் செயலை நீர்த்து போகச் செய்வதற்காகன யுக்தியே இது.

ம.பியில் மட்டும் பழங்குடியினருக்கு எதிராக பல ஆயிரக்கணக்கான குற்றச்செயல்கள் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது என்கிறார் பிரியங்கா காந்தி. இது போன்ற மிருகங்கள் நடத்தும் கிரிமினல் செயல்கள் ம. பியில் மட்டுமில்லை, இந்தியாவெங்கும் பரவி வருகின்றன.

பிரவேஷ் சுக்லா போன்ற கிரிமினல்கள் தனது தனிப்பட்ட வலிமையை நம்பி இது போன்ற மிருகத்தனத்தில் இறங்குவதில்லை என்பது யாவரும் அறிந்த உண்மை. இது போன்ற கிரிமினல்களுடன் வலம் வந்து விட்டு இப்போது இவனுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என நாடகமாடுகிறது பாஜக.

நாகரீக சமுதாயம் என பீற்றி கொள்ளும் சமயத்திலும் ஒடுக்குமுறைக்கு ஆளாகும் இது போன்ற பழங்குடி மக்களை அரசோ, போலீசோ  காத்ததாக வரலாறு இல்லை. இது போன்று சாதி,இன, மத வெறிபிடித்து  கிரிமினல் குற்றம் புரிபவர்களை அரசோ, போலிசோ தண்டித்ததாகவும் வரலாறு இல்லை.  

இது போன்ற கிரிமினல்களுக்கும் அவர்களின் அனைத்து விதமான ஒடுக்குமுறைக்கும்  மக்களால் மட்டுமே   தண்டனை தர முடியும்! அதற்கு இக்காவி கிரிமினல்களுக்கு எதிராக நாம் வலுவாக அணிதிரள வேண்டியிருக்கிறது!

 

  •  சந்திரன்

 

 

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன