பற்றி எரியும் மணிப்பூர் – காவி கார்ப்பரேட் பாசிசத்தின் கோரத்தாண்டவம்!

காவி கார்ப்பரேட் பாசிசத்தின் லாபத்திற்காக சமூகத்தை, மதவெறி கொண்டும் இனவெறி கொண்டும், இரண்டாகப் பிளந்ததின் விளைவே இன்று மணிப்பூரில் நடக்கும் கலவரம். மணிப்பூரின் காட்டு வளத்தினைக் கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிப்பதற்காக, காடுகளில் வாழும் குக்கி இனத்தவரை வெளியேற்றும் நோக்கத்தோடு ஒன்றிய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்பட்டன. மாநிலத்தில் ஆட்சியைப் பிடிப்பதற்காகவும், பிடித்த ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளவும் காவி பாசிஸ்டுகள் இனவெறியையும், மதவெறியையும் திட்டமிட்டுப் பரப்பினர்.

இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன இன்றும் மணிப்பூர் பற்றி எரிகிறது. மே 3 அன்று தொடங்கிய கலவரம் இன்றும் அடங்கவில்லை. ஆங்காங்கே வெடிக்கும் துப்பாக்கிகளின் சத்தமும், உறவுகளையும் உடமைகளையும் இழந்து கதறும் மக்களின் அழுகுரலும் காற்றில் எதிரொலித்துக் கொண்டே இருக்கின்றன. மணிப்பூரின் கிராமங்கள் இன்னமும் எரிந்துகொண்டே இருக்கின்றன. மருத்துவமனைகள் வன்முறையினால் காயம்பட்டவர்களால் நிரம்பி வழிகின்றது. கோவில்களும் தேவாலயங்களும் மாறி மாறித் தாக்கப்படுகின்றன. மனிதத்தை மறுக்கும் மதவெறி பிஞ்சுக் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளையும் விட்டுவைக்கவில்லை. பள்ளிகளும் தீக்கிரையாக்கப்படுகின்றன. 

இதுவரை இந்த வன்முறைகளில் 122 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 300க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர், கிட்டத்தட்ட 50,000 பேர் வரை வீடிழந்து அகதிகளாக்கப்பட்டுள்ளனர். மணிப்பூர் மாநிலமே மைத்தேயி, குக்கி என இரண்டாகப் பிளந்து நிற்கிறது. தலைநகர் இம்பால் உள்ளிட்ட பள்ளத்தாக்குப் பகுதிகளில் இருந்து குக்கி இனத்தவர் விரட்டியடிக்கப்பட்டு அவர்களது சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. பதிலுக்கு குக்கிப் பழங்குடியினர் பெரும்பான்மையாக வசிக்கும் மலைக் கிராமங்களில் இருந்து மைத்தேயி இன மக்கள் விரட்டியடிக்கப்படுகின்றனர். எல்லைக் கிராமங்களில் வன்முறை அடங்காமல் தொடர்கிறது.

இராணுவம் வந்தால் வன்முறை அடங்கிவிடும் என்றார்கள். இராணுவம் வந்த பிறகுதான் கலவரம் மேலும் உக்கிரமடைந்துள்ளது. இரு தரப்பினரும் இராணுவத்துடன் நேரடியாக மோதுகின்றனர். ஆயுதக் கிடங்குகள் தாக்கப்பட்டு இதுவரை 4000 துப்பாக்கிகளும், ஐந்து லட்சத்திற்கும் அதிகமான தோட்டாக்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதால் இந்த மோதல் இன்னமும் உக்கிரமடைந்துள்ளது.

சமாதானப் பேச்சுவார்த்தைகள் பலனளிக்க மறுக்கிறது. தங்களது சமுதாயத்தின் நலன்களை உரக்கப் பேச மறுக்கும் அரசியல் தலைவர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்படுகின்றனர். இதனால் அரசியல் கட்சிகளுக்குள்ளும் பிளவுகள் அகலமாகின்றன. கட்சிகள் மட்டுமன்றி போலீசு, அரசு நிர்வாகம் என அனைத்தும் மைத்தேயி – குக்கி என இரண்டு பிரிவாக பிளந்து நிற்கிறது.

மாநில ஆட்சிக்கவிழ்ப்பு நாயகன், ‘நவயுக சாணக்கியன்’ அமித்ஷாவின் ராஜதந்திரங்கள் எதுவும் மணிப்பூரில் பலிக்கவில்லையாம். உக்ரைன் ரசியப் போரைத் தடுத்து நிறுத்தும் அளவிற்குச் சக்திபடைத்த உலகத் தலைவர் மோடிக்கோ மணிப்பூரைப் பற்றிச் சிந்திக்கவும் கூட நேரமில்லையாம். அமித்ஷாவால் முடியாததை மோடி முடித்துவைப்பார் என சிலர் மோடிக்கு அழைப்புவிடுக்கின்றனர். கலவரத்தின் சூத்திரதாரியிடமே அதனை அடக்கச் சொன்னால், அதனைச் செய்வாரா என்ன?

ஆம், காவி கார்ப்பரேட் பாசிசத்தின் லாபத்திற்காக சமூகத்தை மதவெறி கொண்டும் இனவெறி கொண்டும், இரண்டாகப் பிளந்ததின் விளைவே இன்று மணிப்பூரில் நடக்கும் கலவரம். மணிப்பூரின் காட்டு வளத்தினைக் கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிப்பதற்காக, காடுகளில் வாழும் குக்கி இனத்தவரை வெளியேற்றும் நோக்கத்தோடு ஒன்றிய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்பட்டன. குக்கி இனத்தவரை போதைப் பொருள் கும்பலாகவும், மியான்மரில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களாகவும் பிரச்சாரம் செய்தனர். மாநிலத்தில் ஆட்சியைப் பிடிப்பதற்காகவும், பிடித்த ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளவும் காவி பாசிஸ்டுகள் இனவெறியையும், மதவெறியையும் திட்டமிட்டுப் பரப்பினர். இதுகுறித்து எமது முந்தைய பதிவில் (மணிப்பூர் கலவரம் : இனச்சண்டையா? காடுகள் மீதான பழங்குடியினரின் உரிமைக்கான போராட்டமா?) விளக்கியுள்ளோம்.

 

காவி கார்ப்பரேட் பாசிஸ்டுகள் பற்றவைத்த நெருப்பு இன்று பெருந்தீயாகக் கொளுந்து விட்டு எரிகிறது. இந்தப் பெருந்தீயினைப் பயன்படுத்தி வேட்டையாட கார்ப்பரேட் வல்லூறுகள் காத்திருக்கின்றன.

சமூகம் மதவெறியாலும், இனவெறியாலும் பிளக்கப்பட்டால் என்ன நடக்கும் என்பதை மணிப்பூர் தெளிவாக காட்டிநிற்கிறது. காவி கார்ப்பரேட் பாசிசத்தின் கோர முகத்தின் இரத்த சாட்சியாய் இன்று மணிப்பூர் நம் கண் முன்னே எறிந்து கொண்டிருக்கிறது. இனியும் பாசிசம் எங்கோ தூரத்தில் இருக்கிறது, நம்மை ஒன்றும் செய்யாது எனக் கண்ணை மூடிக்கொண்டு நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ள முடியாது. ஏனெனில் இன்று மணிப்பூர் எரியும் போது நாம் கண்ணை மூடிக்கொண்டால் நாளை பாசிசம் நமது கதவைத் தட்டும்போது நமக்காக குரல் கொடுக்க யாரும் இருக்க மாட்டார்கள்.

  • அறிவு

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன