கார்ப்பரேட் திருடர்களை காப்பாற்றும் ரிசர்வ் வங்கி

உழைக்கும் மக்கள், வங்கியில் இருந்து தாங்கள் வாங்கிய கடனை அடைக்க முடியவில்லை என்று அவமானத்திற்கு அஞ்சி தற்கொலை செய்து கொள்ளும் நாட்டில் தான், பல லட்சம் கோடி ரூபாய் வங்கி கடன்களை பட்டை நாமம் போட்ட கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வங்கி அமைப்பின் விதிகள் என்ற பெயரில் சலுகைகள் காட்டப்படுகின்றன

இந்தியாவின்  கருப்பு பணம் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், அதை அடுத்த விமானத்தில் மூட்டையாக கட்டி வந்து உள்நாட்டில் கொட்டப் போவதாகவும்  மோடி கதையளந்து, வருடங்கள் பல உருண்டோடி விட்டன.  இப்படி போலி வீரம் பேசிய  மோடி- அமித்ஷா கும்பல் இந்திய பொதுத்துறை வங்கிகளிடமிருந்து சட்டபூர்வமாகவே கடன்கள் என்ற பெயரில் பல இலட்சம் கோடிகளை கொள்ளையிட்ட கார்ப்பரேட் முதலாளிகள் குறித்து கள்ள மெளனம் சாதிப்பதோடு அவர்களுக்கு பல சலுகைகளை புதிய திட்டங்கள் மூலம் அவ்வப்போது வாரி வழங்குகிறார்கள்.

இந்திய ரிசர்வ் வங்கி ஜூன் 8ம் தேதி, சமரச தீர்வு மற்றும் தொழில்நுட்ப ரீதியான கடன் தள்ளுபடிக்கான நடவடிக்கை (Framework for Compromise settlements and Technical Write offs)  என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையின் வாயிலாக,   வங்கிக் கடனை வேண்டுமென்றே திருப்பி செலுத்தாதவர்கள் மற்றும் கடன் மோசடியில் ஈடுபட்ட கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பம்பர் பரிசை அறிவித்திருக்கின்றது ரிசர்வ் வங்கி.

இந்த புதிய வழிகாட்டுதல் முறையின் படி வங்கிக் கடன்களை வேண்டுமென்றே திருப்பி செலுத்தாதவர்கள் மற்றும் கடன் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு  கடன் நிலுவைத் தொகையை திரும்பப் பெறுவது தொடர்பாக, சமரசத் தீர்வை வங்கிகள் காணலாம் என்றும் சமரச தேதியில் இருந்து 12 மாதங்களுக்கு பிறகு மீண்டும் வங்கிகள் கடன் வழங்கலாம்  என்று அறிவித்துள்ளது.  

 

 

ரிசர்வ் வங்கி கடன் மோசடியில் ஈடுபடுவர்களுடன் எந்த வித சமரச முயற்சியிலும் வங்கிகள் ஈடுபடாது என கடந்த ஜூன் மாதம் 2019ஆம் ஆண்டு தன் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

நாடாளுமன்றத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு  மார்ச் மாதம் அரசு அளித்த தகவலின் படியே,  வேண்டுமென்றே கடனை திருப்பி செலுத்தாத வங்கி கணக்கு எண்ணிக்கை 15,778 என்றும் இதன் மூலம் 3 லட்சத்து 40 ஆயிரத்து 570 கோடி ரூபாய் வங்கி கடன்கள் நிலுவையில் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தொகையில் 92,570 கோடி ரூபாய் 50 பெரிய கடனாளிகளிடம் இருந்து வங்கிக்கு வரவேண்டியிருக்கிறது. இந்த கடன்களில் 85 விழுக்காடு கடன்கள் எஸ்பிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடா போன்ற பொதுத்துறை வங்கிகள் வழங்கியது தான்.

வங்கி கடன்களை மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற மெஹூல் சோக்சியின் வங்கி கடன் நிலுவைத் தொகை மட்டும்  7,848 கோடி ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது

மெஹூல் சோக்சி, நீரவ் மோடி, விஜய் மல்லையா போன்ற கார்ப்பரேட் முதலாளிகள் நாட்டின் பொதுத்துறை வங்கிக்கு பட்டை நாமம் போட்டு வெளிநாட்டுக்கு தப்பி சென்று  சில  ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.  ஆனால் இந்த பண மோசடி கையாடல் பேர்வழிகளுக்கு எதிராக, மோடி அரசு தன் அரசு ஏஜென்சிகள் மூலமாக  ஒரு துரும்பை  கூட அசைக்கவில்லை.

ஆனால் தற்போது தன் கைப்பாவையான ரிசர்வ் வங்கி மூலம் இது போன்ற ஏமாற்று பேர்வழிகளுக்கு வெகுமதி அளிப்பது போல  வங்கியுடன் சமரசம் செய்துகொள்ள வாய்ப்பளிப்பது எண்ற புது வழிமுறையை உருவாக்குகிறது.

உழைக்கும் மக்கள்,  வங்கியில் இருந்து தாங்கள் வாங்கிய கடனை அடைக்க முடியவில்லை என்று அவமானத்திற்கு அஞ்சி தற்கொலை செய்து கொள்ளும் நாட்டில் தான்,  பல லட்சம் கோடி ரூபாய் வங்கி கடன்களை பட்டை நாமம் போட்ட கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வங்கி அமைப்பின் விதிகள் என்ற பெயரில் சலுகைகள் காட்டப்படுகின்றன

ஏற்கெனவே கடன் வாங்கி ஏமாற்றிய ஏமாற்றுப் பேர்வழிகளுக்கு மீண்டும் கடன் கொடுத்து வங்கிகளைத் திவாலாக்குவதன் மூலம் உழைக்கும் மக்களின் சேமிப்பை ஒட்டுமொத்தமாக துடைத்தெறியத் திட்டமிடுகிறது காவி பாசிச கும்பல்.

  • தாமிரபரணி

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன