பாசிச ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க மோடி அரசின் ‘அஜெண்டா’க்களில் ஒன்றான பொதுசிவில் சட்டத்தைக் கொண்டுவருவது குறித்து 30 நாட்களுக்குள் கருத்துத் தெரிவிக்குமாறு கடந்த ஜூன் 14 அன்று ஒரு அறிக்கையை 22-வது சட்ட ஆணையம் வெளியிட்டுள்ளது.
கடந்த 2018-இல் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி பி.என்.சவுகான் தலைமையில் 21-வது சட்ட ஆணையம் பொது சிவில் சட்டம் குறித்து ஒரு அறிக்கையைக் கொடுத்தது. அதில் “இந்திய நாட்டிற்கு பொதுசிவில் சட்டம் அவசியம் இல்லை. தற்போதைய சூழலில் அது விரும்பத்தக்கது அல்ல” என்று கூறியுள்ளது. இருந்தும் வரப்போகிற 2024 தேர்தலை இலக்காக வைத்து மீண்டும் பொதுசிவில் சட்டத்தைத் தற்போதைய 22-வது சட்ட ஆணையத்தின் மூலம் கருத்துக் கேட்பு என்ற பெயரில் அமல்படுத்துவதற்கு துடிக்கிறது பாசிச ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. மோடி தலைமையிலான அரசு.
ஏற்கனவே இவர்களின் அஜெண்டாவில் இருந்த பாபர் மசூதியை இடித்துவிட்டு இராமர் கோவிலைக் கட்டுவது, ஜம்மு-காஷ்மீரின் 370-வது பிரிவை இரத்து செய்வது, போன்றவற்றை நிறைவேற்றிவிட்டனர். மீதுமுள்ள அஜெண்டாவான பொதுசிவில் சட்டத்தை நிறைவேற்றத் துடிக்கின்றனர். இதற்காக இவர்கள் பயன்படுத்தும் 22-வது ஆணையத்தை வைத்து ஏற்கெனவே தேசத் தூரோக சட்டத்தை (NSA) தொடரும் படியும், அதன் தண்டனைக்காலத்தை 7 ஆண்டுகளாக உயர்த்தும்படியும் ஒன்றிய அரசுக்கு பரிந்துரைக்கும்படி செய்தனர். தற்போது பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு அதே ஆணையத்தைப் பயன்படுத்தி கருத்துக் கேட்பு என்ற பெயரில் தன்னுடைய அடுத்தகட்ட சதியை அரங்கேற்றிவருகின்றனர்.
நீதிமன்றத் தீர்ப்பு மூலம் பாபர் மசூதி இடிப்பை நியாயப்படுத்தி அதே இடத்தில் இராமர் கோயிலைக் கட்ட அனுமதியைப் பெற்றதும் இராணுவத்தைப் பயன்படுத்தி தேசநலன் என்ற பெயரில் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டு ஜம்மு-காஷ்மீரின் 370-வது பிரிவை இரத்து செய்து அவற்றை யூனியன் பிரதேசமாக துண்டாடியுள்ளதையும் எவராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.
தற்போது சட்ட ஆணையம் மூலம் கருத்துக்கேட்பை நடத்தி பொதுசிவில் சட்டத்தை நிறைவேற்றிவிடுவார்கள் என்பதில் எந்தவித ஐயமும் கொள்ளத் தேவையில்லை.
இந்தச் சட்டம் நிறைவேறும்பட்சத்தில் இந்திய நாட்டின் பன்முகத் தன்மையைச் சிதைப்பதோடு, இசுலாமியர், கிறித்துவர், சுயமரியாதை, புரட்சிகர திருமணங்களுக்கான சட்ட அங்கீகாரமும் இரத்து செய்யப்படும். ஒரே திருமணமுறை என்ற பெயரில் புரோகித திருமண முறை சட்டமாகிவிடும்.
இது பல்வேறு பண்பாடுகளை, பழக்கவழக்கங்களை, திருமண முறைகளை – வழிபாட்டு முறைகளை, பகுத்தறிவுப் பண்புகளைக் கொண்டுள்ள பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதோடு, ஊறுவிளைவிக்கவும் செய்யும். படிப்படியாக ஒழித்துக்கட்டும்.
அரசியல், பொருளாதாரம், பண்பாடு, சமூக ஏற்றதாழ்வுகளை உடைத்து, ஒரே சீரான ஜனநாயகத்தை வளர்த்தெடுத்து பிற்போக்குத் திருமணங்களையும் மூட நம்பிக்கைகளையும் தகர்த்தெறிந்து, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை வளர்த்தெடுத்து முன்னேறிய சமூகமாக – உண்மையான ஒரு முதலாளித்துவ ஜனநாயகமாக – மாற்றியமைக்க வேண்டிய சூழ்நிலைகளைக் கொண்ட இந்நாட்டில் தடாலடியாக பொதுசிவில் சட்டம் அமல்படுத்துவது என்பது அப்பட்டமாக முதலாளித்துவ பாசிசத்தைத் திணிக்கும் சர்வாதிகாரச் செயலே.
ஜனநாயகத்தையே தீண்டாமையாகக் கருதும் வர்ணாசிரமத்தை நடைமுறைப்படுத்தி வரும் இந்த பார்ப்பன பாசிஸ்டுகள் பொதுசிவில் சட்டம் மூலம் திருமணம், விவாகரத்து, ஜீவனாம்சம், குழந்தைப் பாதுகாப்பு, சொத்து, தத்தெடுப்பது போன்றவைகளில் ஒரே முறையைக் கொண்டுவரப் போவதாகக் கூறுவது எவ்வளவு பெரிய பித்தலாட்டம்.
பெண்ணடிமைத்தனம் மாறக்கூடாது என்பதற்காகத்தான் பொதுசிவில் சட்டத்தை எதிர்க்கிறார்கள் என்கின்றன சங்கிகள். ‘பெண்ணடிமைத்தனம் மாறவேண்டும்’ என்று கதைக்கும் இந்தச் சங்கிகளின் முன்னோடிகளான இந்து மகாசபையினர்தான், ‘இந்துக்களுக்கு ஒரு பொதுவான சிவில் சட்டத்தைக் கொண்டுவர தனிநபர் சட்டங்களை உள்ளடக்கிய ஒரு சட்டத் தொகுப்பை அன்றைய பிரதமர் நேரு, பி.ஆர். அம்பேத்கர் தலைமையில் ஒரு குழுவை அமைத்தார். அக்குழுவில் பெண்களுக்கு சமவுரிமை, சொத்துரிமை, விவாகரத்து உரிமை ஆகியவைகளை உள்ளடக்கிய ஒரு மசோதா உருவாக்கப்பட்டதைக் கடுமையாக எதிர்த்தனர்.
இதனால் எவ்வித விளக்கமும் விவாதமும் இல்லாமல் மசோதா கைவிடப்பட்டது. இதுதான் இந்த அயோக்கிய சிகாமணிகளின் யோக்கியதை. இந்த மசோதா கைவிடப்பட்டதை டாக்டர் அம்பேத்கர் கடுமையாகக் கண்டித்து அமைச்சர் பொறுப்பிலிருந்து அன்றைக்கு விலகினார் என்பது வரலாறு.
சட்டம் இயற்றுவது நீதிமன்றத்தால் இயலாது என்பதால் சட்ட ஆணையம் மூலம் கருத்துக்கேட்பு என்ற பெயரில் நாடகமாடி பாசிச ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. மோடி கும்பல் நாடாளுமன்றத்தில் தன்னுடைய பெரும்பான்மை பலத்தை வைத்து கடந்த நாட்களில் குரல் வாக்கெடுப்பின் மூலம் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றியதைப் போல பொதுசிவில் சட்டத்தையும் நிறைவேற்றும். இவற்றை எதிர்க்கட்சிகளால் தடுக்க முடியாது. இது கடந்த நாட்களின் அனுபவம்.
இச்சட்டம் நிறைவேறாமல் தடுப்பதற்கான நடைமுறைப் போராட்டங்களை, நாடாளுமன்றத்திற்கு வெளியே முன்னெடுக்க வேண்டும். இத்துடன் நில்லாமல், சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர்., வேளாண் சட்டங்கள் ஆகியவற்றுக்கு எதிராக நடத்தப்பட்ட தொடர்ச்சியான, வீரியமான போராட்டங்களைப் போன்று பொதுசிவில் சட்ட எதிர்ப்புப் போராட்டங்களையும் கட்டியமைக்க வேண்டும். இதன் மூலமே பொதுசிவில் சட்டம் அமலாகமல் முறியடிக்க முடியும்.
மேலும் பாசிச எதிர்ப்பை ஏற்கும் அனைத்து மாநில அரசுகளையும் பொதுசிவில் சட்டத்திற்கு எதிராகத் தீர்மானங்களை நிறைவேற்ற வற்புறுத்த வேண்டும். இத்துடன், பொதுசிவில் சட்ட எதிர்ப்பை முன்னெடுக்கும் மக்களையும் – ஜனநாயக – புரட்சிகர சக்திகளையும் அவர்களின் போர்க்குணமிக்க போராடங்களையும் அங்கீகரித்து ஆதரவளிக்க வேண்டுமென்பதை வலியுறுத்த வேண்டும்.
- மோகன்