எதிர்க்கட்சிகளின் பாட்னா கூட்டம் :
ஆரம்பமானது தொகுதிப் பங்கீட்டுக்கான பேரம்.

கூட்டத்தில் கலந்து கொண்ட யாரும் பாஜகவின் பாசிச நடவடிக்கைகளை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து கவலைப்பட்டதாகவோ, எதுவும் பேசியதாகவோ தெரியவில்லை. ஒவ்வொரு கட்சித் தலைவரும் தங்களது நலனுக்கு ஏற்றவாறு இந்தக் கூட்டணியை எப்படி வளைப்பது, பாராளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களைப் பெறுவதற்கு மற்ற கட்சிகளை எப்படி பணியவைப்பது என்பதை நோக்கமாக கொண்டே கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவருகிற சூழலில், பாஜகவிற்கு எதிரானதொரு தேர்தல் கூட்டணியை உருவாக்கும் முயற்சியாக, பல்வேறு கட்சித் தலைவர்கள் ஒன்றாக கூடிப் பேசியிருக்கிறார்கள். பீகார் தலைநகர் பாட்னாவில், அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார் இல்லத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 23) இந்தக் கூட்டம் நடைபெற்றது.

தில்லி முதல்வர் அரவிந்த் கெஜிரிவால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, மற்றும் சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்.எல்.) லிபரேசன் உள்ளிட்ட 15 கட்சிகளின் தலைவர்கள், கிட்டத்தட்ட நாடு முழுவதிலும் பாஜகவிற்கு எதிராக தேர்தலில் போட்டியிடும் அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள், இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

 

 

மூன்று மணிநேரம் நடந்த இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள், தாங்கள் ஒன்றாக இணைந்து அடுத்த தேர்தலைச் சந்திக்கப் போவதாக கூறியுள்ளனர்.

இந்தக் கூட்டத்தினை தமிழ்நாட்டு ஊடகங்கள், குறிப்பாக சமூக ஊடகங்கள் மிகப்பெரிய வெற்றியாகவும், சாதனையாகவும் கொண்டாடுகின்றன. “இனி பாஜக அவ்வளவுதான்”, “எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்துவிட்டன”, “அடுத்த தேர்தலில் பாஜக மண்ணை கவ்வ போகிறது”, “பாஜக பயந்து நடுங்குகிறது” என்று வலைத்தளம் முழுவதும் பதிவுகளும், கீச்சுகளும், வீடியோக்களும் நிரம்பி வழிகின்றது.

ஆனால் எதிர்க்கட்சிகளின் இந்தக் கூட்டம் அவர்களின் பலத்தைக் காட்டுவதற்கு பதில் பலவீனத்தை பகிரங்கமாக மேடை போட்டுக் காட்டிவிட்டது.

காங்கிரசுக்கு எதிராக தில்லி, பஞ்சாப், மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் நேரடியாக போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி, தில்லி மாநில அரசின் உரிமையை பறிக்கும் பாஜகவின் அவசர சட்டத்தை காங்கிரஸ் எதிர்க்கவில்லை என்ற காரணத்தைக் காட்டி இந்த பேச்சுவார்தையிலிருந்து வெளியேறப் போவதாக நேரடியாகவே மிரட்டுகிறது.

இதே ஆம் ஆத்மி கட்சி காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து (சட்டப்பிரிவு 370 மற்றும் 35A) ரத்து செய்யப்பட்ட போது அதனை வரவேற்றதை, ஜம்மு காஷ்மீர் மாநில தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் ஒமர் அப்துல்லா சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார்.

பாட்னா கூட்டம் நடப்பதற்கு சில நாட்கள் முன்பு கூட மேற்கு வங்கத்தின் தொகுதிகள் அனைத்தையும் தங்களுக்கு ஒதுக்கிவிட்டு, ராஜஸ்தான், குஜராத், கோவா மாநிலங்களில் அனைத்து தொகுதிகளிலும் காங்கிரசு போட்டியிட்டுக் கொள்ளட்டும் என திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பேனர்ஜி பேசி வந்தார்.

இதையே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, வேறு வார்த்தைகளில், மாநில கட்சிகளின் தலைமையில் ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டணி அல்லது தொகுதி பங்கீடு தேவை எனக் கூறி தங்களது மாநிலத்தில் தாங்கள் தான் கூட்டணியை தொகுதி பங்கீடுகளை முடிவு செய்வோம் என்பதை முன்வைத்து பேசியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை தில்லி, பஞ்சாப், குஜராத், மேற்குவங்கம், கேரளா என ஒவ்வொரு மாநிலத்திலும் தங்களுக்கு எதிராக தேர்தலில் போட்டியிடும் கட்சிகளை தொகுதிப் பங்கீட்டிற்கு எப்படியாவது உடன்படச் செய்துவிட வேண்டும், அதன் மூலம் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற தனது நோக்கத்திற்கு ஊறு விளையாத அளவிற்கு இந்த கட்சிகளின் கோரிக்கைகள் அனைத்திற்கும் செவி சாய்க்க தயாராக இருக்கிறது.

கூட்டத்தில் கலந்து கொண்ட யாரும் பாஜகவின் பாசிச நடவடிக்கைகளை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து கவலைப்பட்டதாகவோ, எதுவும் பேசியதாகவோ தெரியவில்லை. ஒவ்வொரு கட்சித் தலைவரும் தங்களது நலனுக்கு ஏற்றவாறு இந்தக் கூட்டணியை எப்படி வளைப்பது, பாராளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களைப் பெறுவதற்கு மற்ற கட்சிகளை எப்படி பணியவைப்பது என்பதை நோக்கமாக கொண்டே கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

இதனை தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் வெளிப்படையாகவே கூறிவிட்டார். 25 ஆண்டுகளாக சிவசேனை கட்சிக்கு எதிராக செயல்பட்டு வந்த சரத்பவார் ஆட்சியைப் பிடிப்பதற்காக, அதே கட்சியுடன் கூட்டணி வைத்ததை, அதாவது காவி பாசிச சக்தியான பாஜகவிற்கு எதிராக இன்னொரு காவி பாசிச சக்தியான சிவசேனையுடன் கூட்டு வைத்த சந்தர்ப்பவாதத்தை, அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இந்த கூட்டணியில் எப்போது வேண்டுமானாலும் பாஜக அணிக்கு தாவக் கூடிய மதில்மேல் பூனைகளான ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசும், ஒரிசாவின் பிஜு ஜனதா தளமும் இருப்பது சரத்பவாரின் கூற்றுக்கு வலுச்சேர்க்கிறது.

இதில் நடுவில் சிபிஐ சிபிஎம் கட்சிகளின் குறைந்தபட்ச பொது வேலைத்திட்டம் என்ற கோரிக்கைக்கு செவி சாய்ப்பதற்குத் தான் யாருக்கும் பொறுமையில்லை. அனைவரும் அடுத்த கட்டத்திற்கு, தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசுவதை நோக்கி நகர்ந்துவிட்டனர்.

அடுத்ததாக ஜுலை 12ம் தேதி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில், சிம்லாவில் கூடி தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசவிருப்பதாக  அறிவித்துள்ளனர்.

கொள்கையேதும் இல்லாத, தேர்தல் வெற்றியை மட்டுமே நோக்கமாக கொண்ட  இந்தச் சந்தர்ப்பவாத கூட்டணியை பாசிச எதிர்ப்பு தேசிய முன்னணியாக காட்டுகிறார்கள். ஆனால் ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது தளபதி என்பது போல  ஒவ்வொரு கட்சியும் இந்தப் பேச்சுவார்த்தையை ஒவ்வொரு திசையில் இழுத்துச் சென்று மூழ்கடிக்கும் வேலையை செவ்வனே செய்து வருகின்றன.

  • அறிவு   

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன