ஊழலைப் பற்றிப் பேச பாஜகவிற்கு யோக்கியதை இருக்கிறதா?

காவிக் கும்பலுக்கு நெருக்கமானவர்கள், அடிபணிபவர்கள் எவ்வளவு கீழான மக்கள் விரோத, தேச விரோதக் குற்றங்களைச் செய்திருந்தாலும் அவர்கள் வெளிநாட்டிற்கு தப்பி செல்லலாம், ஏன் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகவும் கூட ஆகலாம். ஆனால் தனது திட்டங்களுக்கும், நோக்கங்களுக்கும் அடிபணியாதவர்களை  அமலாக்கத்துறை (Enforcement Directorate) மூலம் அச்சுறுத்துவதும் கைது செய்து சிறையில் அடைப்பதும் தொடர்கிறது.

நல்ல காலம் பிறக்குது! நல்ல காலம் பிறக்குது! இந்திய நாட்டு மக்களுக்கு நல்ல காலம் பிறக்குது என 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது உடுக்கையடித்தார் மோடி. தனது காவி-கார்ப்பரேட் பாசிச நோக்கத்தை மறைத்துக் கொண்டு, நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றம் எனப் பேசினார். நாட்டு மக்களும் அதை நம்பி வாக்களித்து அவரைப் பிரதமராகவும் ஆக்கினர்.

கடந்த 8 ஆண்டுகளாக வாக்களித்த மக்கள் படும் துன்ப துயரங்கள் சொல்லி மாளாது. ஆனால் மோடி-அமித்ஷா கும்பலோ நாடும், நாட்டு மக்களும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முன்னேறி வருவதாகப் பீற்றிக்கொண்டிருக்கிறது.

பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி விதிப்பு, மின்சாரக் கட்டண உயர்வு, பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு, பால் விலை உயர்வு, பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கான இரப்பர், பென்சில் விலை உயர்வு என மக்களை மரணக்குழியில் தள்ளிவிட்டு கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் கார்ப்பரேட் முதலாளிகள் வாங்கிய கடனில் 13.4 லட்சம் கோடியை Non-performing assets (செயல்படாத சொத்துக்கள்) என அறிவித்து தள்ளூபடி செய்துள்ளது. ஏழை மாணவர்கள் கல்லூரிப் படிப்பிற்காக வாங்கிய கடனையோ, கிராமப்புற ஏழை மக்கள் ஆடு, மாடு வாங்குவதற்கு வாங்கிய கடனையோ இவ்வாறு அறிவித்தது உண்டா?

இவர்கள் கூறும் நல்ல காலம் எல்லாம் நாட்டின் ஆகச் சிறுபான்மையினராக உள்ள பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளுக்குத் தானே தவிர மோடியின் உடுக்கை சத்தத்திற்கு மயங்கி வாக்களித்த மக்களுக்கு அல்ல என்பதையே மோடி-அமித்ஷா கும்பலின் நடவடிக்கைகள் உணர்த்துகின்றன.

எனவேதான் தனது காவி-கார்ப்பரேட் பாசிச நடவடிக்கைகளுக்கு ஒத்துவராத பிற கட்சிகளை அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ மூலம் வழிக்கு கொண்டு வருவதையும், வழிக்கு வராதவர்களை விசாரணை  என்ற பெயரில்  பல பொய் வழக்குகளைப் போட்டு அச்சுறுத்தி,  கைது செய்து சிறையில் அடைக்கிறது. அதேபோல் பாசிச நடவடிக்கைக்கு எதிராகப் பேசுபவர்களையும், எழுதுபவர்களையும், போராடுபவர்களையும் கருப்பு சட்டங்களின் மூலம் அடக்கி ஒடுக்குவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளது.

 

 

மறுபுறத்தில் இக்கும்பல் தனது ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்வதற்கும், பாஜக ஆட்சியில் இல்லாத பிற மாநிலங்களில் ஆட்சியைப் பிடிப்பதற்கும் உதவுகின்ற கறுப்பாடுகளுக்கு குற்ற வழக்குகளை மேற்கூறிய ஏஜென்சிகள், நீதிமன்றங்கள் மூலம் ஒன்றும் இல்லாமல் நீர்த்துப்போகச் செய்கிறது. இப்படி நீர்த்துப்போன வழக்குகளின் பட்டியல் மிகவும் நீளமானது. நினைவூட்டலுக்காக அவற்றிலிருந்து சில உதாரணங்களை வாசர்களின் பார்வைக்குத் தருகிறோம்.

500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பிற்கு பின்பு மக்கள் நிம்மதியாக தூங்குவதாகவும், கருப்பு பண முதலைகளின் தூக்கம் கெட்டுவிட்டதாகவும் மோடி அறிவித்தார். ஆனால் நடுத்தர மக்களும், ஏழை எளிய மக்களும் எப்படியெல்லாம் பரிதவித்தார்கள் என்பதை நாடே அறியும். உதாரணமாக திருமணத்தை நடத்துவதற்கு மணமகன்/மணமகளின் பெற்றோர்கள் தங்களது வங்கி கணக்கிலிருந்து ரூபாய் 2.5 இலட்சம் வரை மட்டுமே எடுக்க அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இதே காலகட்டத்தில் நடந்த பாஜக தலைவர்களின் வீட்டுத் திருமணம் மிகுந்த பொருட்செலவில் நடைபெற்றது.

பாஜக ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரியின் மகள் திருமணத்தில் அமித்ஷா, ராஜ்நாத்சிங் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு வந்த விருந்தினர்களை அழைத்து வருவதற்கு 50 விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கர்நாடக பாஜகவின் ஜனார்த்தன ரெட்டியின் மகள் திருமணம் ரூபாய் 550 கோடி அளவுக்கு செலவு செய்யப்பட்டு நடத்தப்பட்டதாக மதிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல் பாஜகவின் மகேஷ் சர்மாவின் மகள் திருமணமும் மிகுந்த பொருட்செலவில் நடத்தப்பட்டது.

 

 

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, மக்கள் உணவுக்கு கூட வழியில்லாமல்  திண்டாடிக் கொண்டிருந்த சமயத்தில் தான் பாஜக தலைவர்கள் தங்களது பிள்ளைகளின் திருமணத்தை கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து நடத்தினார்கள். இவ்வளவு பெரிய பணம் இவர்களுக்கு எங்கிருந்து வந்தது என்பதைப் பற்றி விசாரிக்குமாறு முன்னாள் வருவாய் துறை செயலர் ஈ.ஏ.எஸ் சர்மா இந்திய அமலாக்கத்துறைக்கு பலமுறை கடிதம் அனுப்பியுள்ளார். இதுமட்டுமில்லாமல் பணமோசடி தொடர்பான பல வழக்குகளை அமலாக்கத்துறையின் கவனத்துக்கு கொண்டுவந்த போதும் கூட இவைகளைப் பற்றியெல்லாம் மூச்சுக்கூட விடவில்லை இந்திய அமலாக்கத்துறை!

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு இந்திய வருமான வரித்துறை சுமார் 400 வழக்குகளை அமலாக்கத்துறைக்கு பரிந்துரை செய்துள்ளது. ஆனால் இதுவரை 13 வழக்குகள் மட்டுமே அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது என நிதியமைச்சகம் கூறியுள்ளது. இந்த சமயத்தில் தான் பாஜகவின் பல மாநில தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பணத்துடன் பிடிபட்டனர். ஆனால் அமலாக்கத்துறை இவர்கள் மீது எந்த வழக்குகளையும் பதிவு செய்யவில்லை. கட்காரி, எடியூரப்பா, ரெட்டி சகோதரர்கள், ரமேஷ் பொக்ரியால் உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கு எதிரான  வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு, ஊழல் குற்றச்சாட்டுகள் ஆகியவற்றின் மீது அமலாக்கத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இத்தனைக்குப்பிறகும் ஊழலை ஒழிக்கப் போவதாக முகமூடி அணிந்து கொண்டு உத்தமர் வேசம் போடும் மோடியின் ஆட்சியில் தான் இந்தியாவிலிருந்து அதிக எண்ணிக்கையில்  பணமோசடி குற்றவாளிகள் நாட்டைவிட்டு தப்பியோடியிருக்கிறார்கள். விஜய் மல்லையா 9000 கோடி ரூபாயை எஸ்.பி.ஐ வங்கியிடம் ஏய்த்து விட்டு நாட்டை விட்டு தப்பியோடினார். பணமோசடி தடுப்பு நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட முதல் குற்றவாளி விஜய் மல்லையா என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு பணமோசடி குற்றவாளி லலித் மோடி இங்கிலாந்துக்கு விமானம் ஏறி தப்பி  செல்வதற்கு துணை புரிந்த  அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோர் பற்றி பல கேள்விகள் அப்பொழுதே எழுப்பப்பட்டன.

டிசம்பர் 2021-ம் ஆண்டு ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில், சி.பி.ஐ பதிவு செய்த வங்கி மோசடி வழக்குகளின் 33 குற்றவாளிகள் நாட்டை விட்டு தப்பியோடிவிட்டதாக தெரிவித்தது. இதிலிருந்தே மோடி-அமித்ஷா கும்பலின் ஊழல் எதிர்ப்பு முகமூடியின் இலட்சணத்தை தெரிந்து கொள்ளலாம். இப்படி வெளிநாட்டிற்கு  தப்பியோடிய குற்றவாளிகளில் எத்தனை பேர் மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டனர் என்பது மோடி-அமித்ஷா கும்பலுக்கே வெளிச்சம்.

மே 2017 முதல் டிசம்பர் 2021 வரை பணமோசடி தடுப்பு சட்ட வழக்குகள் உட்பட சுமார் 515 வழக்குகள் அமலாக்கத்துறையால் பதிவுசெய்யப்பட்டுள்ளது என ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கராத் கூறியுள்ளார். இதில் மெஹூல் சோக்சி, நீரவ் மோடியின் 13000 கோடி மோசடி வழக்கு, ரிஷி அகர்வாலுக்கு சொந்தமான ஏபிஜி கப்பல் கட்டும் தளத்தின் 23000 கோடி மோசடி வழக்கு போன்றவை மக்களிடம் பேசு பொருளாகும் வரை அமலாக்கத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொதுமக்களின் பணத்தை வங்கியிடம் இருந்து கடன் என்ற பெயரில் கொள்ளையடித்த இந்த பணமோசடி குற்றவாளிகளின் வழக்குகளை பல ஆண்டுகளாக கிடப்பில் போட்டதிலிருந்தே அமலாக்கத்துறையும், மோடி-அமித்ஷா கும்பலும் யாருடைய நலனுக்காக வேலை செய்கிறார்கள் என்பது தெளிவு.

 

 

போன்சி திட்டத்தில் மோசடி செய்த நீரவ் மோடியின் மாமா மெஹூல் சோக்சி மீது நடவடிக்கை எடுக்க கோரி தில்லியை சேர்ந்த தொழில் முனைவர் வைபவ் குரோனியா கார்ப்பரேட் விவகாரத்துறைக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அக்கடிதம் மறுநாளே அமலாக்கத்துறைக்கு அனுப்பப்பட்டது. அக்கடிதத்தில் மெஹூல் சோக்சியும் அவரது கீதாஞ்சலி ஜெம்ஸும் போன்சி திட்டம் மூலம் முதலீட்டாளர்களின் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை ஏமாற்றியதாக 18 தனித்தனி புகார்கள் இணைக்கப்பட்டிருந்தது.

மேலும் சோக்சி மற்றும் அவரது நிறுவனங்கள் பல பொதுத்துறை வங்கிகளில் வாங்கியுள்ள கடனை திரும்ப செலுத்தாமல் ரூ.4000 கோடிக்கு மேல் பாக்கி வைத்திருப்பதாகவும், தனது பணத்தை எடுத்துக்கொண்டு நாட்டை விட்டு தப்பிச் செல்ல விரும்புவதாகவும் அந்த கடிதத்தில் அப்போதே குறிப்பிட்டிருந்தார் குரோனியா.

ஆனால் புதுதில்லி போலிசு சோக்சி மீது எப்.ஐ.ஆர் கூட பதிவு செய்ய மறுத்தது. இறுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கி 13000 கோடி மோசடி வழக்கில்  சோக்சி மீது போலீசில் புகார் அளித்த பிறகு  தான் வழக்கு பதிவு செய்தது. இதற்கிடையில் சோக்சியும் அவரது மருமகன் நீரவ் மோடியும் வெளிநாட்டிற்கு தப்பி சென்றுவிட்டனர்.

ஏபிஜி எனும் குஜராத்தை சேர்ந்த கப்பல் கட்டும் நிறுவனம் மோடியின் வைப்ரண்ட் குஜராத் எனும் நிகழ்ச்சியில் முதலீட்டாளராக இருந்தது. இக்குழுமத்தின் மீது நிதி பரிமாற்றத்தில் சட்டவிரோதமாக நடந்துகொண்டுள்ளதாகவும், மேலும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி குழுமத்திடமிருந்து சுமார் ரூ22,842 கோடி மோசடி செய்துள்ளதாகவும் எஸ்.பி.ஐ வங்கி புகார் செய்தது.  ஆனால் சி.பி.ஐ அமைப்பு, ஏ.பி.ஜி நிறுவனம் செய்த குற்றங்களுக்கு ஆதாரம் இல்லை எனக்கூறி ஒன்றரை ஆண்டு காலம் வழக்கு கூட பதிவு செய்யவில்லை.

அமெரிக்க கட்டுமான நிறுவனத்தின் லூயிஸ் பெர்கர் எனும் அதிகாரி அஸ்ஸாம் மற்றும் கோவாவில் தன்னுடைய திட்டத்தை செயல்படுத்துவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு  சுமார் 6 கோடியை லஞ்சமாக கொடுத்ததாக நியூ ஜெர்சி நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

 

புகைப்படம்: மோடியும் பிஸ்வா சர்மாவும்
புகைப்படம்: மோடியும் பிஸ்வா சர்மாவும்

 

அஸ்ஸாமில் அப்போதைய  காங்கிரசு ஆட்சியில்  பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் லூயிஸ் பெர்கர்  ஊழலுக்கு எதிராக மோடி புதுதில்லியில் ஒரு புத்தகம் வெளியிட்டார். இக்கூட்டம் நடந்த ஒரு மாதத்தில் பிஸ்வா சர்மா பா.ஜ.கவில் இணைந்து விட்டதால் இன்றுவரை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை பிஸ்வா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் அமெரிக்க நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஒரு வருட சிறைத் தண்டனையை வழங்கியது குறிப்பிடத்தக்கது. நம்நாட்டில் பிஸ்வா சர்மாவோ 2021ம் ஆண்டு பாஜகவின் சார்பில் அஸ்ஸாம் மாநிலத்தில் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.

காவிக் கும்பலுக்கு நெருக்கமானவர்கள், அடிபணிபவர்கள் எவ்வளவு கீழான மக்கள் விரோத, தேச விரோதக் குற்றங்களைச் செய்திருந்தாலும் அவர்கள் வெளிநாட்டிற்கு தப்பி செல்லலாம், ஏன் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகவும் கூட ஆகலாம். ஆனால் தனது திட்டங்களுக்கும், நோக்கங்களுக்கும் அடிபணியாதவர்களை  அமலாக்கத்துறை (Enforcement Directorate) மூலம் அச்சுறுத்துவதும். கைது செய்து சிறையில் அடைப்பதும் தொடர்கிறது. இதற்கு ‘வாளாக’ அமலாக்கத்துறை போன்ற ஏஜென்சிகள் மோடி-அமித்ஷா கும்பலின் அடியாட்படையாக செயல்பட்டு வருகின்றன.

நாடு முழுவதும் தனது அரசியல் அதிகாரத்தை நிலைநாட்ட வேண்டும் எனும் வேட்கையோடு இந்திய அமலாக்கத்துறை போன்ற அரசு ஏஜென்சிகளை  தீவிரமாக  முடுக்கி விட்டுள்ளது மோடி-அமித்ஷா கும்பல். கடந்த  மூன்று ஆண்டுகளில் மட்டும் அமலாக்கத்துறை சுமார் 2723 வழக்குகளை எடுத்துக்கொண்டுள்ளது.  இதுகாறும் எடுத்த வழக்குகளில் இதுவே அதிகப்படியான வழக்காகும். அமலாக்கத்துறையின் அலுவலகங்களை திரிபுரா, மணிப்பூர், சிக்கிம், மேகாலயா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் புதிதாக  தொடங்கியுள்ளதோடு மட்டுமில்லாமல். இந்த அமைப்பின் ஊழியர் எண்ணிக்கை மும்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

மோடியின் ஆட்சியில் அமலாக்கத்துறை 3010 சோதனைகளை நடத்தியுள்ளது. இதுவே முந்தைய காங்கிரசு ஆட்சியில் 112 சோதனைகள் மட்டுமே நடத்தியிருக்கிறது. இதிலிருந்தே மோடி -அமித்ஷா கும்பல் தனது காவி-கார்ப்பரேட் பாசிச நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு ஊழல் ஒழிப்பு, தேச முன்னேற்றம் என்ற பெயரில் அமலாக்கத்துறை போன்ற ஏஜென்சிகளை ஒரு கருவியாகப் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.

முதலாளித்துவத்தின் மறுகாலனியாக்க கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்திக்கொண்டே ஊழலை ஒழிப்பதாக பேசுவது மல்லாக்கப் படுத்துக்கொண்டு எச்சில் துப்புவதாகும். மற்றபடி மோடி-அமித்ஷா கும்பலின் உருட்டுகள் எல்லாம் காவி-கார்ப்பரேட் பாசிசத்தை விரைவுபடுத்துவதே அன்றி வேறொன்றும் இல்லை.

  • தாமிரபரணி

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன