தோழர் அன்பழகனின் முதலாம் ஆண்டு நினைவேந்தல்

 

 

அன்பார்ந்த தோழர்களே! உழைக்கும் மக்களே!

இந்திய கம்யூனிச இயக்கத்தைப் பீடித்திருந்த வலது சந்தர்ப்பவாதத்தை திரைகிழித்து, வசந்தத்தின் இடிமுழக்கமென எழுந்தது, நக்சல்பாரி உழவர் பேரெழுச்சி. அதைத் தொடர்ந்து 1969-இல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் (இ.பொ.க. மா-லெ) தோற்றுவிக்கப்பட்டது. எனினும் அது இடது சாகசவாதத்தால் சிதறுண்டு போனது. இத்தகைய இடது, வலது சந்தர்ப்பவாதங்களுக்கெதிராக ஆக்கப்பூர்வமான மக்கள் திரள் வழியை வகுக்கும் போராட்டத்தில் மாநில அமைப்புக் கமிட்டி (மா.அ.க.) உதயமானது.

மா.அ.க.வை நிறுவியவர்களில் ஒருவரும், 40 ஆண்டுகளாக அதற்குத் தலைமையளித்து வழிநடத்தியவரும்தான், தியாகத் தோழர் அன்பழகன். 08.02.1948 இல் நாமக்கல் பகுதியில் பிறந்த அவர், இளம் வயதிலேயே தன்னை நக்சல்பாரி இயக்கத்துடன் இணைத்துக் கொண்டார். பின் 50 ஆண்டுகளுக்கும் மேலாக எவ்வித ஊசலாட்டமுமின்றி பாட்டாளி வர்க்க விடுதலைக்காகப் பாடுபட்டுத் தன் இன்னுயிரை ஈந்தார்.

70-களில் சிறு குழுவாக இருந்த மா.அ.க.வை ‘தமிழகத்தின் மிகப்பெரிய நக்சல்பாரி அமைப்பு’ என்று எதிரிகளும் அங்கீகரிக்கும் வண்ணம் வளர்த்தெடுத்ததில் தலையாய பாத்திரம் ஆற்றியவர். 1992-இல் நடத்தப்பட்ட கருவறை நுழைவுப் போராட்டம் முதல், டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டம், ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம், சி.ஏ.ஏ. எதிர்ப்பு மாநாடு உள்ளிட்ட பல போராட்டங்கள், மாநாடுகள், இயக்கங்கள் அனைத்தையும் தலைமை தாங்கி வழிநடத்தியவர்.

நக்சல்பாரிகள் என்றாலே காடுகளில் அலைந்து திரிபவர்கள், வன்முறையாளர்கள் என்ற எண்ணம் மாறி, அவர்கள் நாட்டுப்பற்றாளர்கள் என்ற மதிப்பு மக்கள் மத்தியில் உருவாகியிருக்கிறதென்றால் அதற்கான காரண கர்த்தாக்களில் அவர் முதன்மையானவர். இன்றளவிலும் தமிழ்நாட்டில் கார்ப்பரேட் கொள்ளைக்கெதிரான உணர்வு இருக்கிறதென்றால், பார்ப்பன பாசிசக் கும்பல் கால்பதிக்க முடியாத கோட்டையாகத் தமிழகம் திகழ்கிறதென்றால் அப்பெருநெருப்பை மூட்டி அணையாமல் பாதுகாத்த சிறுபொறிதான், தோழர் அன்பழகன்.

பல்வேறு கட்சிக் கலைப்புவாத, மா-லெ விரோதப் போக்குகளுக்கெதிராகப் போராடி மா-லெ அடிப்படையைப் பாதுகாத்தது மட்டுமின்றி, சமரச, சீர்திருத்த சக்திகளையும் திரைகிழித்து மக்களை மா-லெ அரசியலின் பால் வென்றெடுக்க அயராது பாடுபட்டவர்.

அவரது இழப்பு இந்தியப் புரட்சிகர இயக்கத்துக்கும், உழைக்கும் மக்களுக்கும் பேரிழப்பாகும்! அவரது செங்குருதியால் சிவந்த பாதையில் பயணித்து புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தி முடிப்போம்!!

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு
89030 42388, 90252 13374, 97901 38614 

 

 

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன