ரூட்ஸ் தமிழ் – யூடியூப் சேனல் முடக்கம்
மக்கள் அதிகாரம் கண்டனம்

தமிழகத்தில் உள்ள அச்சு, காட்சி, சமூக ஊடகங்களில் இயங்கும் பாசிச எதிர்ப்பு கருத்துக்களை கொண்ட எல்லா ஊடகவியலாளர்கள், பத்திரிக்கையாளர்கள், நிரூபர்கள், செய்தி வாசிப்பாளர்களையும் – அவர்களுக்குள் பல்வேறு கருத்து மாறுபாடுகள் இருந்தாலும், எந்த அளவில் அவர்கள் பாசிசத்தை எதிர்த்தாலும் – ஒன்று சேர்த்து ‘பாசிச எதிர்ப்பு ஊடகவியலாளர் முன்னணி’ ஒன்றை நாம் கட்டியமைக்க வேண்டும். எதிரிகளும் உள்நுழைவதற்கு வசதியான “கருத்து சுதந்திரம்” என்னும் இற்றுப்போன கயிறைக் கொண்டல்லாமல், “பாசிச எதிர்ப்பு” என்ற கொள்கையால் உறுதியாக இம்முன்னணி கட்டியமைக்கப்பட வேண்டும். ஒன்றிய அரசின் இச்சட்டத் திருத்தத்தைப் பின்வாங்க வலியுறுத்தி மட்டுமல்ல, ஊடகத்துறையின்மீது தொடுக்கப்படும் அனைத்து பாசிச பயங்கரவாதத் தாக்குதல்கள், “வழிக்கு கொண்டுவரும்” நடவடிக்கைகள் அனைத்தையும் எதிர்த்த சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும், பிரச்சாரங்களையும், போராட்டங்களையும் ஒருங்கிணைந்த முறையில் இம்முன்னணி மேற்கொள்ள வேண்டும்.

அச்சுறுத்தி “ஒருவழிக்கு கொண்டுவர” துடிக்கிறது பாசிச கும்பல்!
அஞ்சாமல் எதிர்த்து நிற்போம்!
பாசிச எதிர்ப்பு ஊடகவியலாளர் முன்னணியைக் கட்டியமைப்போம்!

மக்கள் அதிகாரம்
பத்திரிக்கைச் செய்தி


அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயக சக்திகளே! ஊடகவியலாளர்களே!

ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. கும்பலையும், அவர்களின் தமிழக ஏஜெண்டுகளான நாம் தமிழர், சவுக்கு சங்கர் போன்றவர்களின் பல்வேறு பொய்கள், சதிகள், நடவடிக்கைகள், திட்டங்களை அம்பலப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்காற்றிய ரூட்ஸ் தமிழ் யூடியூப் சேனலானது, கடந்த 15.06.2023 அன்று ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MEITY) அழுத்தத்தால் இந்தியாவிற்குள் தடைசெய்யப்பட்டுள்ளது. தமிழக இணைய, சமூக ஊடக செயல்பாட்டாளர்களை நோக்கி மோடி அரசு தொடுத்துள்ள இப்பாசிசத் தாக்குதலை மக்கள் அதிகாரம் அமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது.

ஒன்றிய புலனாய்வு நிறுவனங்கள் மூலம் எதிர்க்கட்சிகள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்கள், வரலாற்றையும், பாடப்புத்தகங்களையும் திரித்து எழுதுவது, ஊடகங்கள், சமூக ஊடகங்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்கள் இவையணைத்தையும் தனித்தனியே பார்ப்பது தவறாகும். தேர்தல் நெருங்கும் தருணத்தில் தமக்கு எதிரானவர்களை அடக்கி ஒடுக்குகிறார்கள் என்று மட்டும் சுருக்கிப் பார்ப்பதும் தவறாகும். பா.ஜ.க. – ஆ.எஸ்.எஸ். கும்பலானது இந்தியாவில் பாசிச ஆட்சியதிகாரத்தை நிறுவுவதை நோக்கி தீவிரமாக வெறியோடு முன்னேறிக்கொண்டுள்ளது. எனவே அதற்கு எதிரான, தடையான, மாற்றுக் கருத்துள்ளவர்களையெல்லாம் ஒழித்துக் கட்டுவது அல்லது அச்சுறுத்தி “ஒருவழிக்கு  கொண்டுவருவது” (Synchronization) என்பதே அவர்களின் நோக்கம். இத்தகைய பாசிச பயங்கரவாத நடவடிக்கையின் வெவ்வேறு அம்சங்களே மேற்சொன்னவை.

வட இந்தியாவின் முன்னணி ஊடகங்களை (mainstream media) ஒருவழிக்கு[1] கொண்டுவந்த பிறகு, இணையதளம், சமூக வலைத்தளங்களில் இயங்குபவர்கள் மீது கொடூரமான பாசிசத் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டதை நாம் அறிவோம். அதானியின் முறைகேடுகளை அம்பலப்படுத்தியதற்காக எகனாமிக் பொலிடிகல் வீக்லி இதழிலிருந்து பரஞ்சோய் குஹா தாக்குர்தா வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டது; மோடிக்கு முதல் பக்க கவரேஜ் கொடுக்கவில்லை என்பதற்காக ஆங்கில இந்து நாளிதழின் ஆசிரியராக இருந்த சித்தார்த் வரதராஜனை தகுதியிறக்கம் செய்து அவரை வெளியேற நிர்ப்பந்தித்தது; மோடியை எதிர்த்து வட இந்தியாவில் பேசி வந்த ஒரே செய்தி நிறுவனமான என்.டி.டி.வி.யை அதானி மூலமாக சதித்தனமாகக் கைப்பற்றியது; ஆங்கில இணையதளமான “த வயர்”க்கு தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகளை அளித்துவருவது – என ஏராளமான உதாரணங்களைக் கூறலாம். இதேபாணியில்தான் தற்போது தமிழ்நாட்டிலும் காவி-கார்ப்பரேட் பாசிச கும்பல் செயல்பட்டு வருகிறது.

கடந்த 2020-இல் புதிய தலைமுறை, நியூஸ் 7 போன்ற முன்னணி ஊடகங்களில் மோடி அரசை விமர்சனம் செய்யும் பத்திரிக்கையாளர்கள், நெறியாளர்களைக் குறிவைத்து பிரச்சாரம் கட்டவிழ்த்துவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து நியூஸ் 18 தொலைக்காட்சியிலிருந்து ஹசீப், குணசேகரன், செந்தில்வேல் போன்றவர்கள் வெளியேற்றப்பட்டனர். இது தமிழக ஊடகவியலாளர்களை நோக்கி தொடுக்கப்பட்ட மிகமுக்கியமான பாசிசத் தாக்குதலாகும். இதன் பிறகு இந்த ஊடகங்களில் பணிபுரியும் மோடி எதிர்ப்பாளர்களும் கூட “அடக்கி வாசிக்கத்” தொடங்கிவிட்டனர். இவ்வாறு தமிழ்நாட்டிலும் தொலைக்காட்சி ஊடகத்தை ஒருவழிக்கு கொண்டுவந்த பின்னர் அருவருக்கத்தக்க வகையில் இந்த ஊடகங்கள் மோடி அரசின் ஊதுகுழல்களாக மாறியுள்ளதை நம் கண்முன்னே பார்க்கிறோம்.

இத்தகைய சூழலில்தான் அரண் செய், தமிழ்கேள்வி, பேரலை, ரூட்ஸ் தமிழ் போன்ற யூடியூப் சேனல்கள் தொடங்கப்பட்டன. அதானியின் பங்குச் சந்தை ஊழல், புல்வாமா தாக்குதல் பற்றிய சத்தியபால் மாலிக்கின் பேட்டி, மணிப்பூர் கலவரம் போன்ற தமிழகத்தின் முன்னணி ஊடகங்கள் பேசாத பல முக்கிய விவகாரங்களை (key issues) ஓரளவேனும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கியப் பங்காற்றியிருப்பது இந்த யூடியூப் சேனல்கள்தான். யூடியூப், முகநூல், டுவிட்டர் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களும் பாசிச கும்பல் பொய்ச் செய்திகளைப் பரப்ப ஏதுவான சாதனமாக இருக்கும் அதேவேளையில், அதற்கு எதிராக எழுதுபவர்கள், பேசுபவர்களது பதிவுகளை நீக்குவதற்கும், தடுப்பதற்கும், பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும் அது விதிமுறைகளை (community guidelines) வைத்துள்ளது.

இவைகளையும் தாண்டி இணைய, சமூக ஊடக வெளியில் பாசிசத்திற்கு எதிரான கருத்துப் பிரச்சாரத்தை முழுமையாக ஒழித்துக் கட்டும் நோக்கில் கடந்த மே மாதம் மோடி அரசால் கொண்டுவரப்பட்டதே தகவல் தொழில்நுட்பச் சட்டத் திருத்தமாகும். இச்சட்டத் திருத்தத்தின்படி நாடுமுழுவதும் 20 உண்மை சரிபார்க்கும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் “பொய்யானவை, தவறானவை, தவறாக வழிநடத்துபவை” (fake, false, misleading) என்று கருதும் எந்தப் பதிவையும், செய்தியையும், கட்டுரைகளையும், காணொளிகளையும் நீக்கவும் அவைகளை வெளியிட்ட தளங்களையே முடக்கவும் முடியும். இவ்வாறுதான் எவ்வித காரணமும் சொல்லப்படாமல் அரண்செய், பேரலை போன்றவற்றின் முகநூல் பக்கங்கள் முற்றாக முடக்கப்பட்டது. இதன் உச்சமாக 1.80 இலட்சம் சப்ஸ்கிரைபர்களுடன் இயங்கிவந்த ரூட்ஸ் தமிழ் சேனல் தற்போது முடக்கப்பட்டுள்ளது.

இவைகளிலும் ரூட்ஸ் தமிழ் முதலில் முடக்கப்பட்டதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று, அர்ஜூன் சம்பத், அண்ணாமலை, அமர்பிரசாத் ரெட்டி, சீமான், சவுக்கு சங்கர் போன்றவர்களை செய்தியாளர் சந்திப்பின்போது நேருக்கு நேராக அம்பலப்படுத்தியதால் அவர்களின் நீண்டநாள் இலக்காக பத்திரிக்கையாளர் கரிகாலன் இருந்து வந்ததே ஆகும். ரூட்ஸ் தமிழ் முடக்கத்தால் உளம் குளிர்வோரைத்தவிர வேறுயாரும் மேற்படி உண்மைகளை மறுக்கப்போவதில்லை.

ஏற்கனவே தமிழகத்தில் ரெட்பிக்ஸ், ஆதன் தமிழ், பேசு தமிழா பேசு போன்ற பல யூடியூப் சேனல்கள் பாசிச கும்பலின் ஊதுகுழல்களாக மாறியுள்ள சூழலில் எஞ்சியுள்ளவைகளையும் மிரட்டிப் பணியவைக்கும் பாசிச நடவடிக்கையே இது. இந்தத் தடையானது வழக்கமான, சாதாரண ஒரு நிகழ்வல்ல. தமிழக இணைய, சமூக ஊடக செயல்பாட்டாளர்கள் அனைவரை நோக்கியும் தொடுக்கப்பட்ட பகிரங்கமான பாசிச தாக்குதலாகும். “அடக்கி வாசித்துக் கொள்ளுங்கள் இல்லையேல் உங்களுக்கும் இதேகதிதான்” என்று மோடி அரசு விடுத்துள்ள பகிரங்கமான மிரட்டலாகும். தமிழ்நாட்டில் தொலைக்காட்சி ஊடகங்களை ஒரு வழிக்கு கொண்டுவந்த பிறகு சமூக ஊடகங்களையும் ஒருவழிக்கு கொண்டுவருவதை நோக்கிய முக்கிய நடவடிக்கையாகும்.

இத்தடையை எதிர்த்து இணையவெளியில் குறிப்பிட்டளவு ஆதரவு இருப்பது ஆறுதலளிக்கக் கூடியதாக இருந்தாலும் அது போதுமானதல்ல. இச்சம்பவம் ஓரிரு நாட்கள் பேசிவிட்டு கடந்து செல்லும் ஒரு விவகாரமல்ல. ஊடகவியலாளர்கள் மீதும், சமூக ஊடகங்கள் மீதும் தொடுக்கப்படும் இத்தகைய பாசிச பயங்கவரவாதத் தாக்குதல்களை எதிர்கொள்ள நாம் என்ன ஆயுதத்தை வைத்துள்ளோம் என்று பரிசீலிப்பதற்கான தருணமிது.

எதிரி ஒருங்கிணைந்த முறையில் ஒரு தாக்குதலைத் தொடுக்கும்போது நாமும் அதை ஒருங்கிணைந்த முறையில் எதிர்கொள்வதைப் பற்றிப் பரிசீலிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அச்சு, காட்சி, சமூக ஊடகங்களில் இயங்கும் பாசிச எதிர்ப்பு கருத்துக்களை கொண்ட எல்லா ஊடகவியலாளர்கள், பத்திரிக்கையாளர்கள், நிரூபர்கள், செய்தி வாசிப்பாளர்களையும் – அவர்களுக்குள் பல்வேறு கருத்து மாறுபாடுகள் இருந்தாலும், எந்த அளவில் அவர்கள் பாசிசத்தை எதிர்த்தாலும் – ஒன்று சேர்த்து ‘பாசிச எதிர்ப்பு ஊடகவியலாளர் முன்னணி’ ஒன்றை நாம் கட்டியமைக்க வேண்டும். எதிரிகளும் உள்நுழைவதற்கு வசதியான “கருத்து சுதந்திரம்” என்னும் இற்றுப்போன கயிறைக் கொண்டல்லாமல், “பாசிச எதிர்ப்பு” என்ற கொள்கையால் உறுதியாக இம்முன்னணி கட்டியமைக்கப்பட வேண்டும். ஒன்றிய அரசின் இச்சட்டத் திருத்தத்தைப் பின்வாங்க வலியுறுத்தி மட்டுமல்ல, ஊடகத்துறையின்மீது தொடுக்கப்படும் அனைத்து பாசிச பயங்கரவாதத் தாக்குதல்கள், வழிக்கு கொண்டுவரும் நடவடிக்கைகள் அனைத்தையும் எதிர்த்த சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும், பிரச்சாரங்களையும், போராட்டங்களையும் ஒருங்கிணைந்த முறையில் இம்முன்னணி மேற்கொள்ள வேண்டும்.

ஊடகத்துறையில் மட்டுமின்றி தொழிலாளிகள், விவசாயிகள், அறிவாளிகள், புரட்சியாளர்கள், ஜனநாயக சக்திகள், எதிர்க்கட்சிகள் அனைவரின் மீதும் தொடுக்கப்படும் பாசிச பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு எதிராகவும், அவர்களின் ஜனநாயக உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கும் வகையிலும், அவர்களோடு இணைந்து போராடும் வகையிலும் இம்முன்னணியை நாம் கட்டியமைக்க வேண்டும்.

இத்தகையதொரு முன்னணியை நாம் கட்டியமைக்காமல் ஊடகத்துறையின் மீது திணிக்கப்பட்டுள்ள பாசிச சட்டங்களை திரும்பப் பெற வைப்பது மட்டுமல்ல, பாசிச எதிர்ப்பு, ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. எதிர்ப்பைப் பற்றிப் பேசுவது கூட சாத்தியமில்லை எனும் நிலைமையை நோக்கிச் சென்றுகொண்டுள்ளோம். ரூட்ஸ் தமிழ் சேனல் முடக்கத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் இணைய, சமூக ஊடக செயல்பாட்டாளர்கள் தேர்ந்தெடுக்க இரண்டு பாதைகள்தான் உள்ளன. ஒன்று இந்த மிரட்டலுக்கு அடிபணிந்து “அடக்கி வாசித்து” கொண்டு தம் நிலையைத் தக்கவைத்துக் கொள்வது. இன்னொன்று பாசிச எதிர்ப்பு ஊடகவியலாளர் முன்னணி ஒன்றைக் கட்டியமைத்து பாசிச கும்பலை உறுதியுடன் எதிர்கொண்டு முன்னேறுவது. இடையில் ஏதும் இல்லை. பின்னதை நாம் செய்யவில்லையென்றால் முன்னது நிகழ்வதை யாராலும் தடுக்க முடியாது.

நாம் அடக்கி வாசிக்க வேண்டுமென்பதுதான் நமது எதிரியான காவி-கார்ப்பரேட் பாசிசக் கும்பலின் விருப்பம். ஊடகவியலாளர்களே உங்களின் விருப்பமென்ன?!

தோழமையுடன்,
முத்துக்குமார்,
மாநில செயலாளர்,
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு.
தொடர்புக்கு – 97901 38614.

 


[1] வட இந்தியாவில் தொலைக்காட்சிகள் மோடி அரசின் ஊதுகுழலாக மாறியுள்ளதற்கு ஆயிரமாயிரம் சாட்சியங்கள் உள்ளன. எனினும், டெல்லி ஜகாங்கிர்புரியில் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் இசுலாமியர்களின் வீடுகளை புல்டோசர்கள் வைத்து இடித்துத் தரைமட்டமாக்கிய காட்சிகளை ஒரு ஐ.பி.எல். விளையாட்டைப் போல விதந்தோதி தொலைக்காட்சி நிரூபர்கள் வர்ணித்ததை அம்பலப்படுத்தி பிரண்ட்லைன் இதழில் வெளிவந்த ஒரு கட்டுரையைப் படியுங்கள் அதன் பேரபாயம் புரியும்.  Media sellout: List of TV news anchors toeing the government’s line grows https://frontline.thehindu.com/cover-story/media-sellout-list-of-tv-news-anchors-toeing-the-governments-line-grows/article38483279.ece

 

One comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  1. ஊடகவியலாளர்கள் தன் நிலையை இனியாவது உணர்ந்து கொள்ள வேண்டும்.