மாநில கல்விக் கொள்கையும் தமிழக கல்விச் சூழலும்

 

 

பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஓரிரு வாரங்களில் திறக்கப் போகின்றன. பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை நல்ல பள்ளியிலும் கல்லூரியிலும் சேர்ப்பதற்கு ஆளாய் பறக்கின்றனர். பணம் இல்லாமல் நல்ல கல்வி இல்லை என்பது யதார்த்தமாகியுள்ள நிலையில் கல்வி கட்டணங்களுக்காகவும் நன்கொடைகளுக்காகவும் லட்சங்களை திரட்டவேண்டிய நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்காக கோவை பகுதியில் மட்டும் நாள் ஒன்றுக்கு 10லிருந்து 12 கிலோ வரை பழைய தங்க நகைகள் விற்கப்படுவதாகவும், ஒரு வாரத்தில் மட்டும் 6 கோடி அளவிற்கு பழைய நகை வர்த்தகம் நடந்திருப்பதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருப்பதே இதற்கு சாட்சியம்.

இருவாரங்களுக்கு முன்பு 2023ம் ஆண்டுக்கான உயர்கல்வி நிறுவனங்கள் தரவரிசைப் பட்டியலை (NIRF) ஒன்றிய அரசு வெளியிட்டது. அதில் இந்தியாவிலேயே தமிழகத்தில் இருந்துதான் பல்வேறு  பாடப் பிரிவுகளில் அதிக கல்லூரிகள்(132) முதல் நூறு இடங்களை பிடித்திருந்தன. அவற்றில் 67% கல்லூரிகள் தனியார் கல்லூரிகள். குறிப்பாக கலை-அறிவியல், சட்டம், மருத்துவம், பல்மருத்துவப் பிரிவுகளில் 90% தனியார் கல்லூரிகள் என்பது கவனத்தில் கொள்ளவேண்டியது. பல்மருத்துவப் பிரிவில் முதலிடம் பிடித்த ஒரு தனியார் பல்மருத்துவக் கல்லூரி தரவரிசையில் முன்னிலை பெறுவதற்காக ஆய்வுகட்டுரைகளில் (self citation) குளறுபடி செய்துள்ளதாக Science பத்திரிக்கை கூறுகிறது. தரவரிசைப் பட்டியலில் முன்னிலை பெறுவதன் மூலம் இக்கல்லூரிகள் பல லாபங்களைப் பெறுகின்றன. இக்கல்லூரிகளில் வசூலிக்கப்படும் நன்கொடைகளுக்கு கட்டுப்பாடுகளே இல்லை. அரசு நிர்ணயித்ததை விட அதிக அளவில் கல்விக் கட்டணங்களையும் வசூலிக்கின்றன.

மேலும், தனியார் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள் மீதான உழைப்புச்சுரண்டல் என்பது பாக்ஸ்கானை விட மோசமானது. அரசு கல்லூரிகளில் பணிபுரியும் ஒப்பந்த பேராசிரியர்களோ அடிமட்ட சம்பளத்திற்கு வேலைசெய்கின்றனர். இவையெல்லாம் அரசுக்கு தெரிந்திருந்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.

இவையனைத்துமே கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக அமல்படுத்தப்பட்டு வரும் தனியார்மய-தாரளமய-உலகமயக் கொள்கைகளின் விளைவுகளே. தற்போது தேசிய கல்விக் கொள்கை (NEP-2020) என்ற பெயரில் கல்வித்துறைக்குள் கார்ப்பரேட்டுகளை அனுமதிப்பதையும் காவிமயத்தை புகுத்துகின்ற வேலையையும் ஒன்றிய பாஜக அரசு செய்து வருகிறது.

தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாக சொன்ன தமிழக அரசு, தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்காலக் குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கென தனித்துவமான மாநில கல்விக் கொள்கை ஒன்றை உருவாக்குகிறோம் என்று அறிவித்து, பேரா. ஜவகர் நேசன் உள்ளிட்ட 13 பேர் கொண்ட குழுவை கடந்தாண்டு அமைத்தது. ஆனால், மாநிலக் கல்விக் குழு அறிக்கையை இன்னும் தயாரித்து முடிக்காத நிலையில், பொதுவெளியில் எதிர்ப்பதாகக் கூறிகொள்ளும் தமிழக அரசு,  தேசிய கல்விக் கொள்கையின் பல பரிந்துரைகளை பள்ளி மற்றும் உயர்கல்வியில் படிப்படியாக அமல்படுத்தி வருகிறது.

“…..தேசியக் கல்விக்கொள்கை 2020 இன் அடியைப் பற்றி மாநிலக் கல்விக்கொள்கையை வடிவமைக்கும் திசையில் குழு முன்னோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறது.” என்ற விமர்சனத்தை முன்வைத்து உயர்நிலக் கல்விக் குழுவிலிருந்து விலகுவதாக பேரா. ஜவகர் நேசன் கடந்த மாதம் அறிவித்தார். தேவையான ஆதாரங்களுடன் பேராசிரியர் முன்வைத்திருந்த பல விமர்சனங்களுக்கு இன்றுவரை கமிட்டி விளக்கம் தரவில்லை. இந்நிகழ்வுகள் மாநிலக் கல்விக் கொள்கை என்பதே ஒரு கண்துடைப்புக்கான நடவடிக்கை என்பதை உறுதிசெய்வதாகவே உள்ளது.

தனியார் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளைக்கும் பேராசிரியர்களின் மீதான கட்டற்ற சுரண்டலுக்கு எதிராக கடுமையானச் சட்டங்களைக் கொண்டுவருவது மிகவும் அவசியமாகும். மேலும், கல்வியில் தனியார்மயம் என்பது அனைவருக்கும் கல்வி குறிப்பாக  தரமானக் கல்வி என்பதையே இல்லாமல் செய்துவிடும். எனவே கல்வியில் தனியார்/கார்பரேட் மயத்தை ஒழிப்பதும் அதற்கு வழிகாட்டியாக உள்ள தேசிய கல்விக் கொள்கை-2020ஐ அமல்படுத்த விடாமல் தடுப்பதும் மிகவும் முக்கியப் பணியாகும்.  

One comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன