ஒரிசா ரயில் விபத்து – தனது தவறை மறைக்க
கிரிமினல் சதி, சிபிஐ விசாரணை என நாடகமாடும் காவி கும்பல்

விபத்து எற்பட வாய்ப்புள்ளது என்ற எச்சரிக்கையையும், பாதுகாப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளில் உள்ள குறைபாடுகளையும் பலர் சுட்டிக்காட்டியதையும் ரயில்வே அமைச்சகமும், ஒன்றிய அரசும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் தங்களது தவறை மறைக்க, ரயில் விபத்திற்கு சதிச்செயல் காரணமாக இருக்கலாம் என கதை கட்டும் வேலையில் தற்போது காவிக் கும்பல் இறங்கிவிட்டது.

 

 

ஒரிசா மாநிலத்தில் நடைபெற்ற ரயில் விபத்தில் 300க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். 1000க்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தக் கோர விபத்தில் மூன்று ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதியிருக்கின்றன.

மேற்குவங்க மாநிலம் ஹவுராவிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஒரிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானாக பஜார் பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு சரக்கு ரயிலின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் அருகிலிருந்த தண்டவாளத்தில் தடம்புரண்டு விழுந்துள்ளது. அந்த தண்டவாளத்தில் பெங்களுருவிலிருந்து ஹவுரா நோக்கிச் சென்று கொண்டிருந்த விரைவு ரயிலின் மீது இந்தப் பெட்டிகள் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கிறது.

ஜூன் 2ம் தேதி இரவு 7 மணிக்கு நடைபெற்ற இந்த விபத்திற்கு, எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட மாற்றமே காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். அதாவது சரக்கு ரயில் நின்று கொண்டிருந்த அதே ரயில்பாதையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் செல்வதற்கான சிக்னல் கொடுக்கப்பட்டதால், நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் மீது மணிக்கு 128 கிலோமீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியிருக்கிறது.

ஒரே இருப்புப் பாதையில் வரும் இரண்டு ரயில்களும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகாமல் தடுப்பதற்கான ‘கவச்’ என்று அழைக்கப்படும் மோதல் தடுப்பு அமைப்பு இந்தப் பாதையில் செல்லும் ரயில்களில் இல்லை.

சிக்னல் தொழில் நுட்பம் பழுதானாலும், ரயில் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது என்பதை சென்சார் மூலம் தொலைவிலேயே உணர்ந்து ரயிலின் வேகத்தை குறைத்து விபத்து  நேர வாய்ப்புள்ள இடத்திற்கு 400 மீட்டர் முன்பே  ரயிலை நிறுத்தக்கூடிய நவீன கவசம் என்றழைக்கப்படக்கூடிய ”கவச் நவீன தொழில்நுட்பம்” இரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாவதை தவிர்க்கும் என கடந்த ஆண்டு ஆரவாரத்துடன் அறிமுகப்படுத்தினார்கள். ஆனால் அதனைப் பயன்பாட்டிற்கு கொண்டு வர நிதி ஒதுக்கவே இல்லை.

இது குறித்து கடந்த பிப்ரவரி மாதம் யஸ்வந்த்பூர் – நிஜாமுதின் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரள்வதிலிருந்து நூலிழையில் தப்பிய போது தென்மேற்கு ரயில்வே கோட்டத்தின் முதன்மை தலைமை இயக்க மேலாளர் ஒன்றிய அரசின் ரயில்வே துறைக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் சிக்னல் அமைப்புகளில் உள்ள பிரச்சனை சரிசெய்யப்படாவிட்டால் எதிர்காலத்தில் ரயில்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது எனத் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோன்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரயில்கள் தடம்புரள்வது குறித்த அறிக்கையில் இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி (CAG), இந்திய ரயில்வேயின் பாதுகாப்புப் பிரிவில் போதுமான பணியாளர்கள் நியமிக்கப்படாமல் இருப்பது பராமரிப்புப் பணிகளில் தேக்கத்தை ஏற்படுத்தி பாதிப்பை உண்டாக்கும் எனக் கூறியிருக்கிறார். அதே போன்று நிதி ஒதுக்கீட்டின் போது ரயில்வே துறையில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்கென ஒதுக்கப்படும் நிதி கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து கணிசமான அளவு குறைக்கப்பட்டுள்ளதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறு விபத்து எற்பட வாய்ப்புள்ளது என்ற எச்சரிக்கையையும், பாதுகாப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளில் உள்ள குறைபாடுகளையும் பலர் சுட்டிக்காட்டியதையும் ரயில்வே அமைச்சகமும், ஒன்றிய அரசும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் தங்களது தவறை மறைக்க, ரயில் விபத்திற்கு சதிச்செயல் காரணமாக இருக்கலாம் என கதை கட்டும் வேலையில் தற்போது காவிக் கும்பல் இறங்கிவிட்டது. “விபத்து நடந்த விதம், அங்குள்ள சூழல் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது, கிரிமினல் சதி நடந்திருப்பது தெரிய வருகிறது. எனவே ரயில்வே துறை இந்த விபத்து குறித்த முழு வழக்கையும் சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரை செய்கிறது” என ரயில்வே அமைச்சர் அஸ்வினி பிரசாத் கூறியுள்ளார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக ரயில்வே துறையில் மோடி அரசு செய்ததெல்லாம், விமானத்தில் பயணிக்கும் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்களை ரயிலில் பயணிக்க ஈர்ப்பதற்கு நாடு முழுவதும் அதிவேக வந்தே பாரத் ரயில்களை அறிமுகப்படுத்தியது மட்டும்தான். ஒன்றிய அரசின் மிகப் பெரிய சாதனையாக மார்தட்டிக் கொள்ளும் இந்த ரயில்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக மோடியே சென்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

தனி நிதிநிலை அறிக்கையுடன் இருந்த ரயில்வே துறையை, பொது நிதிநிலையறிக்கையுடன் இணைத்த பிறகு சாமானியர்களுக்கு என இதுவரை எதுவுமே செய்யப்படவில்லை. சொல்லப்போனால் சாமானிய மக்களைப் பாதிக்கின்ற நடவடிக்கைகளைத் தான் திட்டமிட்டு அமுல்படுத்தியது மோடி அரசு. முதியவர்களுக்கன கட்டணச் சலுகையை நீக்கியது, பெரும்பாலான ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளின் எண்ணிக்கையைக் குறைத்தது, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளை நீக்கியது, விமான டிக்கெட்டுகளைப் போல நேரத்திற்கு நேரம் விலை உயரும் பிரீமியம் தட்கல் முறையை விரிவுபடுத்திப் பல ரயில்களை அதில் கொண்டு சேர்த்தது என சாமானிய மக்களைச் சுரண்டும் வேலையில் ஒன்றிய அரசும் ரயில்வே துறையும் ஈடுபட்டது.

அதுமட்டுமன்றி ரயில்வே துறையைத் தனியார்மயமாக்கும் திட்டத்துடன், செலவுகளைக் குறைப்பது, ஊழியர் எண்ணிக்கையைக் குறைப்பது, நிரந்தர ஊழியர்களைக் குறைப்பது, எல்லா இடங்களிலும் தற்காலிகப் பணியாளர்களை நியமிப்பது என தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இரயில்வே துறையில் கடைநிலை ஊழியரிலிருந்து மேல்மட்ட அதிகாரிகள் வரை  சுமார் மூன்று இலட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை இதனால் இரயில்வே ஊழியர்களின் வேலைப்பளு கடுமையாக உயர்ந்துள்ளது.

விபத்தைத் தடுக்கும் கவச் தொழில்நுட்பம் இதுவரை வெறும் இரண்டு சதவீத ரயில்களில் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது. அதாவது 13,000 என்ஜிகளில் வெறும் 65ல் மட்டும் பொருத்தப்பட்டிருக்கின்றன. அதுவும் பணக்காரர்கள் பயணிக்கும் அதிவேக வந்தே பாரத் ரயில்களில் மட்டுமே இவை பொருத்தப்பட்டுள்ளன. சாமானியர்கள் பயணிக்கும் ரயில்களில் பழங்கால பாதுகாப்பு ஏற்பாடுகள் மட்டுமே உள்ளன.

இது மட்டுமில்லாமல்  இந்திய இரயில்வே துறையின் அடித்தள கட்டமைப்பை மோடி அரசு சிதைத்து வருகின்றது என்பதற்கு பல உதாரணங்களை கூற முடியும்.

  • 100 வண்டிகள் செல்ல வேண்டிய இடத்தில் 130, 150 வண்டிகள் செல்வதாக ரயில்வேயின் அறிக்கைகளே சுட்டிக் காட்டுகின்றன. எனவே சரக்கு போக்குவரத்துக்கு தனி வழித்தடமும், பயணிகள் வண்டிகளுக்கு தனி வழித்தடமும் அமைக்கப்பட வேண்டும் என்ற இரயில்வே திட்டத்திற்கு நிதி ஒதுக்காமல் மோடி அரசு கிடப்பில் போட்டுள்ளது.
  • தண்டவாள பராமரிப்பு ஊழியர்களான டிராக் மேன்கள் 4 லட்சம்  பேராக இருந்தது வெறும் 2 லட்சமாக பேராக குறைக்கப்பட்டனர்.  இதில் காண்ட்ராக்ட் முறை வேறு புகுத்தப்பட்டு வருகின்றது.
  • இந்திய இரயில்வேயின் டாஸ்க் போர்ஸ்  என்ற அதிகாரிகளின் கமிட்டி, ஆண்டுதோறும் 200 ரயில் நிலையங்களில் சிக்னல் கட்டமைப்பு பழுதடை வதாகவும், ஆனால் நூறு தான் புதுப்பிக்கப்படுவதாகவும் அதிலும் ஏராளமான இரயில் நிலையங்கள் நிதிப்பற்றாக்குறை காரணமாக நிலுவையில் உள்ளதாகவும் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது.
  • ஆண்டுதோறும் பழுதாகும் 4500 கிமீ இரயில்வே தண்டவாளங்களில் நிதிப்பற்றாக்குறை காரணமாக வெறும் 2000 முதல் 2500 கிமீ வரை தண்டவாளமே பழுது நீக்கப்படுகின்றது என 2017லேயே இரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்து இருந்தார். 2018ம் ஆண்டு கணக்கின் படி நாடு முழுவதும் 11,000 கிமீ தண்டவாளம் பழுதுநீக்கப்படாமல் இருந்தது. கொரோனா கால இடைவெளிக்குப் பிறகு இது இன்னும் இரு மடங்கு அதிகரித்திருக்க வேண்டும் என கூறப்படுகிறது.

இப்படி இரயில்வே துறையின் கட்டமைப்பு சிதைத்து வரும்  மோடி அரசு நடத்தியிருக்கும் படுகொலையே இந்த ரயில் விபத்து.

தற்போது நடந்திருக்கும் விபத்தில் பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் மேற்கு வங்கம் மற்றும் ஒரிசா மாநிலங்களில் இருந்து தென்மாநிலங்களுக்கு பிழைப்பு தேடி வரும் புலம் பெயர் தொழிலாளர்கள். முன்பதிவில்லாத பெட்டியில் மூச்சுவிடக்கூட இடமில்லாமல் அடைத்துக் கொண்டு பயணம் செய்து தங்களது பிழைப்பைத் தேடி கூலி வேலைக்கு வந்துகொண்டிருந்த இந்தத் தொழிலாளர்களின் உயிர் பறிபோனதற்கு மோடி அரசே முழு முதற்காரணம். இந்த ரயில் விபத்து என்பது மோடி அரசு நடத்தியிருக்கும் படுகொலை. இதற்குத் தார்மீக ரீதியில் பொறுப்பேற்காமல் கிரிமினல் சதி, சிபிஐ விசாரணை எனக் கூறி நாடகமாடுகிறது இந்தக் காவிக் கும்பல்.

  • அறிவு

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன