தி.மு.க. பிரச்சாரகர் மருதையனின் திண்ணை உபதேசங்களும்
பாட்டாளி வர்க்கக் கட்சியின் பாசிச எதிர்ப்பும்!

“பாசிசம்” “பாசிச எதிர்ப்பு” “பாசிசத்தை வீழ்த்த வேண்டும்” என்ற சொற்கள் பேஷனாகிவிட்ட இன்றைய காலத்தில், அதற்கான சாத்தியமான ஒரேயொரு மாற்றாக தேர்தலில் சரணடையச் சொல்லி பாசிச எதிர்ப்பை முனைமழுங்கடிக்க வைக்கும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிற இன்றைய காலத்தில், தேர்தலுக்கு வெளியேதான் பாசிசத்தை வீழ்த்த முடியும் என்று ஒருவார்த்தை பேசினால் கூட ‘எதார்த்தம் புரியாதவர்கள்’ ‘கோமாளிகள்’ ‘பாசிச ஆதரவாளர்கள்’ என்று முத்திரை குத்தி தனிமைப்படுத்த தீவிரமான முயற்சிகள் நடக்கிற இன்றைய காலத்தில் கீழ்க்காணும் நமது நிலைப்பாட்டை எல்லா இடங்களிலும் திரும்பத் திரும்ப வலியுறுத்திப் பேச வேண்டிய நிலைமையில் இருக்கிறோம். பாசிச எதிர்ப்பு பற்றிய சகிக்கவொண்ணாத வெற்றுக்கூச்சல்களுக்கு நடுவே, ஆக்கப்ப்பூர்வமான நம் நிலைப்பாட்டை ஓங்கிக் கத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம். இல்லையென்றால் தேர்தல் மாயை என்ற ஆழிப்பேரலை பாசிச எதிர்ப்பு முனையைமழுங்கடித்து பாசிச ஆட்சியதிகாரம் நிறுவப்படுவதற்கு இட்டுச் சென்றுவிடும் பேரபாயம் நம்முன் உள்ளது.

 

 

 

மார்க்சிய-லெனினிய சொல்லாடல்கள் மூலம் தன் ‘வாதங்களை’ அடுக்கி, கேட்பவர்களையே ஒருகணம் திக்குமுக்காட வைத்துவிடும் ‘சொலல் வல்லனும்’ தி.மு.க.வின் ‘மார்க்சிய’ பிரச்சார பீரங்கியுமான திருவாளர் மருதையன், கடந்த 28.05.2023 அன்று ரூட்ஸ் தமிழ் யூடியூபுக்கு ஒரு பேட்டியளித்துள்ளார். பாடகர் கோவன் ஏன் கள்ளச் சாராய சாவுகளை எதிர்த்துப் பாடவில்லை என்பது தொடர்பான பேட்டியான அதில், அக்கருப்பொருளையும் தாண்டி பாசிச எதிர்ப்பு பற்றியும், பாசிச எதிர்ப்பில் புரட்சிகர அமைப்புகளின் செயல்பாடுகள் பற்றியும் புரட்சிகர அமைப்புகளை இழிவுபடுத்தும் வகையிலும், மட்டம்தட்டி மதிப்பிழக்கச் செய்யும் வகையிலும் திமிருடன் பேசியுள்ளார்.

அப்பேட்டியில் கள்ளச்சாராயம், டாஸ்மாக் பிரச்சனை உள்ளிட்டவற்றைப் பற்றி அவர் பேசியதைவிட பாசிச எதிர்ப்பு பற்றி ‘அக்கறையோடும் பொறுப்புணர்வோடும்’ அவர் பேசியது முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், நாம் உண்மையான அக்கறையுடனும் பொறுப்புணர்வுடனும் அதைப் பரிசீலிப்போம். மருதையன் தன் வாதத்துடன் உணர்ச்சியைக் கலந்து பேசும் உத்தியைக் கடைபிடிப்பவர். இந்தப் பேட்டியிலும் “பெரியார் செய்ததைப் போல 365 நாளும் 24 மணிநேரமும் நாம் கீழே மக்கள் இயக்கத்தைக் கட்ட வேண்டும். பாசிசத்தை பாதிக்கப்படும் ஒரு இசுலாமியனின் மனநிலையில் இருந்து பார்க்க வேண்டும். கோவன் எத்தகைய பின்னணியிலிருந்து வந்தவர், எத்தகைய தியாகங்களைச் செய்தவர் தெரியுமா” என்று உணர்ச்சி பொங்க பேசியுள்ளார். எப்போதும் உணர்ச்சிகள் அறிவின் கண்களை மறைத்துவிடக் கூடிய அபாயம் இருப்பதால் நாம் இந்த உணர்ச்சிகளையெல்லாம் ஓரம் தள்ளிவிட்டு உண்மையைப் பரிசீலிப்பதில் அக்கறை செலுத்துவோம்.

கம்யூனிஸ்டுகள் பாசிச எதிர்ப்பை தி.மு.க.விடமும் காங்கிரசிடமும் விட்டுவிட்டார்கள் என்ற விமர்சனம் வைக்கப்படுகிறதே” என்ற கேள்விக்கு பதிலளிக்கும் மருதையன், “அப்போது புரட்சிகர அமைப்புகள், இயக்கங்களாகிய நீங்கள் தலைமை தாங்குங்கள். நீங்கள் முன்னாள் வாருங்கள். நாங்கள் தலைமை தாங்குகிறோம் பின்னால் வாருங்கள் என்று தி.மு.க.விடமும் பிற கட்சிகளிடமும் போய் பேசுங்கள்” என்று நக்கலடிக்கிறார். இத்தோடு நில்லாமல் “ஒரு நகைச்சுவைக் காட்சியில் பைத்தியக்காரனாக வரும் சந்தானம் “நான் டாக்டர் நான் டாக்டர்” என்று பேசுவதை போல, இன்றுள்ள எதார்த்தம் புரியாமல் இவர்களும் (புரட்சிகர இயக்கங்கள்) தாங்கள்தான் பாசிச எதிர்ப்பைத் தலைமை தாங்குவோம் என்று கோமாளித்தனமாகப் பேசிகிறார்கள்” என்று ஏளனம் செய்கிறார்.[1] இதையே வேறு வார்த்தைகளில் “தமிழ்நாட்டில் பா.ஜ.க-வை உறுதியாக எதிர்க்க தி.மு.க-வை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்?” என்று ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில் கோவனும் கூறுகிறார்.[2]

காவி-கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிராக தமிழ்நாட்டில் உறுதியாக செயல்பட்டு, மக்களைத் திரட்டிக் கொண்டிருந்த ஒரு புரட்சிகர அமைப்பை உடைத்துவிட்டு, மா-லெ சித்தாந்தத்தை துறந்தோடி தற்போது தி.மு.க.விடம் தஞ்சம் புகுந்திருக்கும் மருதையன் இப்படிப் பேசுவதில் வியப்பேதுமில்லை. மேற்படி வாதத்தில் மருதையன் ஒப்புக்கொள்ளும் முக்கியமான விசயம் என்னவென்றால், புரட்சிகர இயக்கங்கள் பலவீனமாக இருக்கும் இன்றைய “எதார்த்த சூழலில்” தி.மு.க.வும் காங்கிரசும்தான் பாசிச எதிர்ப்பை தலைமை தாங்குவார்கள்; இதை எதிர்த்துப் பேசுவது என்பது “எதார்த்தம்” புரியாத “கோமாளித்தனம்” என்பதே!

பாசிச எதிர்ப்பை தி.மு.க., காங்கிரசு தலைமையில் விட்டுவிட்டு புரட்சிகர அமைப்புகள் அவர்கள் பின்னால் வால்பிடித்துச் செல்ல வேண்டும்’ என்ற தனது கருத்தை வெளிப்படையாக உளறி ஒப்புக்கொண்டமைக்காக மருதையனுக்கு நன்றி சொல்வோம். ஏனென்றால் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போது “பாசிசத்தை எதிர்க்க தேர்தலும் ஒரு களமே! எனவே தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிப்போம்!” என்று ஆரவாரத்துடன் பிரகடனப்படுத்திய நாள்முதல்[3] இன்றுவரை வெளிப்படையாக மருதையன் இதைப் பேசியதில்லை.

 

 

மருதையன் தி.மு.க.வின் பிரச்சாரகராக எல்லா விவகாரங்களிலும் பேசுகிறார் என்பதையும் ‘பாசிச எதிர்ப்புக்கு தி.மு.க.வும் காங்கிரசும்தான் தலைமைதாங்க வேண்டும். புரட்சிகர அமைப்புகள் அவர்களின் பின் வால்பிடித்துச் செல்ல வேண்டும் அல்லது அவர்களிடம் சரணாகதி அடைய வேண்டும்’ என்ற கருத்தைத்தான் அவர் தொடர்ந்து தமிழ்நாட்டில் விதைத்து வருகிறார் என்பதையும் அவரது பேட்டியை தொடர்ந்து பார்ப்பவர் யாரும் புரிந்துகொள்வது கடினமல்ல. எனினும் இக்கருத்தை வெளிப்படையாகப் பேசினால் நகைப்புக்குள்ளாகிவிடும் என்பதை ‘புரட்சியாளர்’ மருதையன் நன்கு அறிவார்.

அதனால்தான் “அதிகார வர்க்கம், நீதிமன்றம், ஊடகம், நாடாளுமன்ற-சட்டமன்றங்கள் (legislature) ஆகிய ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் மூன்றையும் பாசிச கும்பல் கைப்பற்றிக் கொண்டது. எனவே நம்மிடம் இருப்பது சட்டமன்றமும் நாடாளுமன்றமும்தான். அதையும் விட்டுவிடக் கூடாது. பாசிச எதிர்ப்புக்கு தேர்தலையும் ஒரு களமாகப் பயன்படுத்த வேண்டும். தி.மு.க. பாசிசத்தையெல்லாம் வீழ்த்தாது. மாறாக ஒரு தடையரணாக செயல்படும். நமக்கு மூச்சுவிடுவதற்கான ஒரு தருணம் கிடைக்கும். அந்தத் தருணத்தில் கீழே நாம் மக்கள் இயக்கத்தை கட்ட வேண்டும்” என்று ஏதோ புரட்சியின் மீதும், சமூக மாற்றத்தின் மீதும், பாசிச எதிர்ப்பின் மீதும் அக்கறை உள்ளதுபோல பேசிவந்தார்.

பாசிச எதிர்ப்பை தி.மு.க., காங்கிரசு தலைமையில் விட்டுவிட்டு புரட்சிகர இயக்கங்கள் அவர்கள் பின்னால் வால்பிடித்துச் செல்ல வேண்டும்’ என்ற தனது கருத்துக்கு அவர் சொல்லும் காரணங்கள் ஒன்றும் புதிதானவையல்ல. “இன்றைய எதார்த்த சூழலில் (பாட்டாளி வர்க்கமாகிய) நீங்களெல்லாம் தலைமை தாங்க முடியுமா?”, “நீங்கள் அழைத்தால் வள்ளுவர் கோட்டத்திற்கு 5 பேர் புதிதாக வருவார்களா”, “இப்படியெல்லாம் இல்லாத சூழலில் கம்யூனிஸ்டுகள்தான் பாசிச எதிர்ப்பை தலைமை தாங்க வேண்டுமென்று பேசுவது கோமாளித்தனமானது” என்றெல்லாம் சீறியெழுவதோடு, “நீங்கள் எதார்த்தம் புரியாதவர்கள்”, “பாசிச எதிர்ப்புப் போரட்டத்தில் பொறுப்புணர்வு அற்றவர்கள்”, “இசுலாமியர் மனநிலையில் இருந்து பாசிசத்தைப் பார்க்காமல் திண்ணையில் அமர்ந்து ஊர்நாயம் பேசுபவர்கள்” என்று நம்மீது வசைமாறி பொழிகிறார்.

தி.மு.க., காங்கிரசு போன்ற ஆளும் வர்க்கக் கட்சிகள் பாசிச எதிர்ப்புக்கு தலைமை தாங்க முடியாது!

 ஏனெனில்,

பாசிசம் என்பது “நிதிமூலதனத்தின் ஆகப் படுமோசமான, பிற்போக்கான, ஆக அதிகமான ஆதிக்க இனவெறிகொண்ட, ஆகப்படுமோசமான ஏகாதிபத்திய நபர்களின் பயங்கரத் தன்மை கொண்ட சர்வாதிகாரம் ஆகும்.” (தோழர் டிமிட்ரோவ், ஐக்கிய முன்னணி தந்திரம், பக்கம்-3)

“பாசிசம் அதிகாரத்திற்கு வருவது என்பது சாதாரணமான முறையில் ஒரு முதலாளித்துவ அரசாங்கம் போய் அடுத்த முதலாளித்துவ அரசாங்கம்  வருவதைப் போலல்ல. முதலாளித்துவ வர்க்க ஆதிக்கத்தின் ஒரு அரசாங்க வடிவத்திலிருந்து அதாவது முதலாளித்துவ ஜனநாயகத்திலிருந்து அடுத்த வடிவம் பகிரங்கமான பயங்கர வடிவத்திலான சர்வாதிகார முறையாக மாறி இடம்பெறுவதாகும்.” (மேற்படி, பக்கம்-6) (அழுத்தமும் அடிக்குறிப்பும் எம்முடையது)

‘பாசிசம்’ என்ற சொல் பேஷனாகிவிட்ட இன்றைய காலத்தில் பலரும் பாசிசம் என்பதை பார்ப்பனிய, இந்துத்துவ நடவடிக்கைகள் என்ற அளவில் மட்டுமேதான் புரிந்துவைத்துள்ளனர். பாசிசம் என்பது சாரம்சத்தில் நிதிமூலதனத்தின் ஆகப்பிற்போக்கான கும்பலின் பகிரங்கமான பயங்கரவாத சர்வாதிகாரமாகும். அதாவது முதலாளித்துவத்தின் ஜனநாயக வடிவம் பகிரங்கமான அப்பட்டமான சர்வாதிகாரமாக மாற்றப்படுவதாகும். இதுதான் அதன் வர்க்க குணாம்சம். ஒவ்வொரு நாட்டின் தனிச்சிறப்பான தன்மைக்கேற்றவாறு அது வருகிறது. இந்தியாவில் பாசிசமானது ஜனநாயகத்தை அதன் வாசனையின்றி ஒழித்துக்கட்டத் துடிக்கும் பார்ப்பனிய சித்தாந்தத்தை இயல்பாகத் தேர்ந்தெடுத்துக்கிறது.

தமிழ்நாட்டிலோ அல்லது இந்தியாவிலோ பாசிசம் என்ற சொல்லை மந்திரச் சொல்லாக ஜெபிப்பவர்களும், பாசிசத்தை எதிர்ப்பதாகக் கூறிக்கொள்பவர்களில் பலரும் இந்தப் புரிதலில் இருந்து பாசிசத்தை எதிர்ப்பதில்லை. பாசிசத்தை எதிர்ப்பதாகச் சொல்லிக்கொள்பவர்கள் டிமிட்ரோவின் இந்த வரையறுப்பை ஏற்றுக்கொள்ளாமல் அதில் ஒரு அங்குலம் கூட முன்னே செல்ல முடியாது.

பாசிசம் என்பது நிதிமூலதனத்தின் ஆகப்பிற்போக்கான கும்பலின் பகிரங்க சர்வாதிகாரம் என்பதால் நிதிமூலதனத்தின் ஆதிக்கத்தை எந்த வர்க்கம் உறுதியாக எதிர்க்க முடியுமோ அந்த வர்க்கம்தான் பாசிச எதிர்ப்பிலும் உறுதியான, சரியான தலைமையளிக்க முடியும். அதாவது பாட்டாளி வர்க்கமும் அதன் முன்னணிப்படையான புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சியும் தான் பாசிச எதிர்ப்பில் உறுதியான, சரியான தலைமையளிக்க முடியும். இதுதான் பாசிச எதிர்ப்பின் பாலபாடமாகும். பாசிச எதிர்ப்பை தலைமை தாங்குவது என்பதைப் பற்றிப் பேசும்போது நாம் சித்தாந்த ரீதியான தலைமையைப் பற்றியே பேசுகிறோம். எண்ணிக்கையில் பலமாக இருப்பதையோ, நாங்கள் சொல்வதைத்தான் பிற கட்சிகளும் கேட்டு நடக்க வேண்டும் என்ற பொருளிலோ கூறவில்லை.

ஆனால் தி.மு.க., காங்கிரசு போன்ற ஆளும் வர்க்கக் கட்சிகள் பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். பாசிச கும்பல்களுடன் முரண்பட்டாலும் அவை தம்மளவிலேயே பாசிசத்தை எதிர்ப்பதில்லை. அதாவது நமது நாட்டில் நிதிமூலதனத்தின் பயங்கர சர்வாதிகார ஆட்சி நிறுவப்படவுள்ளது என்ற புரிதலிலிருந்து அதை எதிர்ப்பதில்லை. இன்று உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பாசிச இயக்கங்கள் தோன்றி, வளர்ந்து, அதிகாரத்துக்கு வருவதற்கு அடிப்படையே உலகமயம், தனியார்மயம், தாராளமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கைகள்தான். ஆனால் மேற்படி கட்சிகளும் இதே கொள்கையைத்தான் ஏற்றுக்கொண்டு அமுல்படுத்துகின்றன. குறைந்தபட்சம் இப்போதைய நிலைமையிலும் கூட மாற்றுப் பொருளாதாரக் கொள்கைகளை – அவை புதிய ஜனநாயக பொருளாதாரக் கொள்கை அடிப்படையில்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை – முன்வைத்து எதிர்ப்பதோ, மக்களிடம் பிரச்சாரம் செய்வதோ இல்லை. இதே மறுகாலனியாக்கக் கொள்கையை மோடி கும்பல் அமுல்படுத்தும்போது மக்கள் எதிர்ப்பதற்கு ஏற்றவாறு, அதற்கு முகம் கொடுக்கும் வண்ணம் எதிர்த்துப் பேசுகின்றன, போராடுகின்றன.

எனவே, மார்க்சிய-லெனினிய வரையறுப்பின்படி, தி.மு.க., காங்கிரசு, போன்ற கட்சிகள் பாசிச எதிர்ப்பில் எத்தகைய சக்திகள்? மேற்படி கட்சிகளெல்லாம் தம்மளவில் ஒரு பாசிசக் கொள்கைகளைக் கொண்ட சக்திகள் இல்லை. அதாவது ஆகப் பிற்போக்கான, இனவெறி, மதவெறி, சாதிவெறி, தேசவெறி கொண்ட கட்சிகளாக இல்லை. இதுவே சிவசேனை, நாம் தமிழர் போன்ற கட்சிகளை எடுத்துக் கொண்டால் அவை தம்மளவிலேயே பாசிசக் கொள்கைகளைக் கொண்ட சக்திகளாகும். தி.மு.க. காங்கிரசு போன்ற கட்சிகள் மருதையனது பார்வையில் பாசிச எதிர்ப்பில் தலைமை தாங்கும் சக்திகள். ஆனால் மா-லெ பார்வையில் அவர்கள் தம்மளவில் பாசிச சக்திகளாக இல்லாத, சமரச-ஊசலாடும் சக்திகள். அவை தம்மளவில் ஒரு பாசிச சக்தியாக இல்லாத காரணத்தினாலும் பாசிசத்தை அமுல்படுத்தும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பலோடு முரண்படுவதாலும் நம்முடன் – அதாவது பாட்டாளி வர்க்கத்துடன் – வந்து சேர்வதற்கு வாய்ப்புள்ளது. அவ்வளவுதான்!

சமரச-ஊசலாடும் சக்திகளைப் பற்றிய மார்க்சிய வரையறுப்பே, அவர்கள் எதிரி பக்கமும் சாயலாம், நம் பக்கமும் வரலாம், நடுவிலும் நிற்கலாம் என்பதே. இந்த இரட்டைத் தன்மையானது (duality) அவர்களின் வர்க்க இயல்பிலிருந்து பிறக்கிறது. எனவே, பாசிசத்தை எதிர்த்துப் போராடுவதில் தலைமை தாங்கும் வர்க்கமாகிய பாட்டாளி வர்க்கமும், அதன் முன்னணிப்படையான புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சியும் மேற்படி சமரச சக்திகளை எதிரி பக்கம் தள்ளிவிடும் முயற்சிகளை எதிர்த்து, தம் பக்கம் வென்றெடுக்கப் போராட வேண்டும் அல்லது குறைந்தபட்சம் நடுநிலையாக வைத்திருக்கப் போராட வேண்டும்.

பா.ஜ.க.வும், காங்கிரசும், தி.மு.க.வும், எல்லாரும் ஒன்று என்று கூறுவது சாராம்சத்தில் பாசிசக் கட்சியும் பிற கட்சிகளும் ஒன்று என்று கூறுவதாகும். அதாவது பாசிச எதிர்ப்பில் சமரச-ஊசலாடும் கட்சிகளையும் பாசிசக் கட்சிகள் என்று கூறி அவர்களை பிரதான எதிரியின் பக்கம் தள்ளிவிடுவதாகும். இந்தக் கண்ணோட்டத்தில் நாம் இந்த வாதம் அபாயகரமானது என்று பார்க்கிறோம், எதிர்க்கிறோம்.

அதேசமயம், மேற்படி கட்சிகளானது பாசிச எதிர்ப்பில் சமரச-ஊசலாடும் சக்திகள் என்பதால் அவர்கள் பாசிச எதிர்ப்புக்கு தலைமை சக்தியாக இருக்க முடியாது. அவர்களால் பாசிசத்தை எதிர்த்த உறுதியான போராட்டம் நடத்த இயலாது. எந்தச் சமயத்தில் வேண்டுமானாலும் பாசிசத்தை எதிர்த்த போராட்டத்தைக் கைவிடவோ, ஏன் துரோகம் இழைக்கவோ கூட வாய்ப்புள்ள சக்திகள் என்றுதான் பார்க்கிறோம். இது நமது விருப்பமல்ல. புறநிலை உண்மையாகும். பாசிசத்தை எதிர்த்த போராட்டத்தில் பாட்டாளி வர்க்கக் கட்சிதான் உறுதியான, சரியான தலைமையளிக்க முடியும்.

ஆனால் தி.மு.க.வோ தன்னளவில் பாசிசத்தை எதிர்க்கும் கட்சியல்ல. பாசிச சர்வாதிகாரத்தை நிறுவத் துடிக்கும் பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளை எதிர்க்கிற கட்சி. அவ்வளவுதான்! அந்த அமைப்புகளை எதிர்ப்பதுகூட தன்னளவில் ஒரு சித்தாந்த அடிப்படையைக் கொண்டஅல்ல. உதாரணமாக, திராவிடர் கழகமோ பிற பெரியார் இயக்கங்களோ பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளை தன்னளவில் பெரியாரிய சித்தாந்த அடிப்படையில் எதிர்க்கின்றன. ஆனால் தி.மு.க.வில் இப்படி சித்தாந்த ரீதியாக ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வை எதிர்ப்பவர்கள் மிக மிகச் சொற்பம். மருதையன் ஏளனம் செய்கிறாரே புரட்சிகர அமைப்புகள் அவைகளின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டால் கூட இவர்களின் எண்ணிக்கை சொற்பமானதுதான். தன்னளவில் தி.மு.க. பாசிச கும்பலை எதிர்க்கவில்லை என்றால் எந்த அடிப்படையில் அது எதிர்க்கிறது? தமிழகத்தில் பல பத்தாண்டுகளாக பெரியார் கீழே மக்களிடம் கட்டியெழுப்பிய பார்ப்பனிய எதிர்ப்புணர்வும், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக புரட்சிகர அமைப்புகள் பார்ப்பனிய பயங்கரவாதத்திற்கு எதிராகவும் மறுகாலனியாக்கச் சுரண்டலுக்கு எதிராகவும் செய்த பிரச்சாரங்கள், குறிப்பாக 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு பாசிச மோடி கும்பல் திணித்த பல்வேறு திட்டங்கள், நடவடிக்கைகளுக்கெதிரான போராட்டங்கள் தமிழ்நாட்டில் கட்டியெழுப்பப் பட்டிருப்பதாலும் இவைகளின் விளைவாக, தமிழக மக்களின் உணர்வு பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு எதிராக இருப்பதால், அக்கும்பல் மீது ஒரு வெறுப்பு தமிழகத்தில் நிலவுவதனால் தி.மு.க. அதற்கு முகம் கொடுக்கும் வகையில் இப்பாசிச அமைப்புகளை எதிர்க்கிறது. இதுதான் தி.மு.க. பாசிச கும்பலை எதிர்ப்பதற்கான அடிப்படை. ஆனால் இந்த வகை எதிர்ப்புகளும் கூட ஒரு எல்லைக்கு மேல் செல்லாமல் தி.மு.க. பார்த்துக் கொள்கிறது. உதாரணமாக தி.மு.க.வில் இருக்கும் ஆ.ராசா போன்ற ஒருசில பெரியாரிய கொள்கைப் பற்றாளர்கள் சனாதானத்தை எதிர்த்து சற்று கடுமையாகப் பேசினால் கூட அவர்களை அடக்கி வைக்க வேண்டும் என்றே அக்கட்சி நினைக்கிறது.

இதிலிருந்து பெறப்படுவது என்னவெனில், இன்று தி.மு.க. இந்தளவு பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். கும்பலை எதிர்ப்பதற்குக்கூட பெரியாரும் புரட்சிகர அமைப்புகளும் விதைத்துள்ள பார்ப்பனிய எதிர்ப்புணர்வு மக்களிடையே நிலவுவதுதான் பிரதானமான காரணமாகும். நாம் சொல்லும் புரிதலில் பாசிசத்தை அல்ல, பாசிசத்தைக் கொண்டுவரும் சக்திகளைக் கூட தன்னளவில் ஒரு சித்தாந்த அடிப்படையில் நின்று எதிர்க்காத ஒரு கட்சி பாசிச எதிர்ப்புக்கு தலைமை தாங்கும் என்று கூறுவது “கோமாளித்தனம்” மட்டுமல்ல, பாசிச எதிர்ப்பை முனைமழுங்கடிக்கும் அபாயகரமானதுமாகும்.

எனவே. தி.மு.க. போன்ற சமரச-ஊசலாடும் கட்சிகளையே கூட பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பில் உறுதியாக இருக்க நிர்ப்பந்திக்கவும், பாசிசத்தை எதிர்த்த போராட்டத்தில் மேலும் நம் பக்கம் இழுத்து வரவும் கீழே அது எந்த அடிப்படையில் இப்போது நிற்கிறதோ, அதே அடிப்படையை விரிவுபடுத்த வேண்டும். அதாவது மக்களிடையே பாசிச எதிர்ப்பு அரசியலை மேலும் வீச்சாகக் கொண்டு செல்ல வேண்டும். ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி தன் சொந்த முயற்சியில் மக்களைத் திரட்ட அயராது போராட வேண்டும். அதேசமயம் மேற்படி கட்சிகள் பாசிசத்தோடு சமரசம் செய்துகொள்வதையும், மக்களுக்கு விரோதமாக நடந்துகொள்வதையும் அம்பலப்படுத்த வேண்டும். மக்களிடம் பாட்டாளி வர்க்கக் கட்சி உருவாக்கும் இந்த பாசிச எதிர்ப்புணர்வு தரும் அழுத்தம்தான் மேற்படி கட்சிகளை நம்முடன் ‘பேச்சுவார்த்தைக்கு’ வர குறைந்தபட்சம் நிர்ப்பந்திக்கும். அல்லது குறைந்தபட்சம் அவர்கள் எதிரி பக்கம் சாயாமல் தடுக்கும். மாறாக, தி.மு.க. போன்ற கட்சிகள் தலைமை தாங்கும், நாம் பின் செல்வோம் என்று கூறுவது நடைமுறையில் பாசிச எதிர்ப்பைக் கைவிடுவதாகும். பாட்டாளி வர்க்கக் கட்சியை தனது ஆயுதங்களையெல்லாம் கீழே போட்டுவிட்டு யுத்தத்தை வேடிக்கை பார் என்று கூறுவதாகும்.

நீங்கள் சொல்வதெல்லாம் கோட்பாட்டளவில் சரிதான். பாட்டாளி வர்க்க இயக்கம் பலவீனமாக உள்ள, இந்தியாவில் ஒன்றுபட்ட ஒரு மா-லெ கட்சியே இல்லாத “இன்றைய எதார்த்த சூழலில்” இதெல்லாம் சாத்தியமில்லை; இப்படிப் பேசுவது “கோமாளித்தனமானது”; வறட்டுச் சூத்திரவாதம்’ என்று யாரேனும் கேட்கலாம். இன்று மா-லெ இயக்கம் பலவீனமாக, சிதறுண்டு கிடப்பது உண்மைதான். இந்த உண்மையிலிருந்து பெறப்படுவது என்னவெனில், சிதறிக் கிடக்கும் மா-லெ குழுக்கள் பாசிசத்தை எதிர்த்த போராட்டத்தை நடத்தும் அதேசமயம், பாட்டாளி வர்க்க இயக்கத்தையும், ஒரு பலமான கட்சியையும் கட்டியமைக்கப் போராட வேண்டும் என்பதே. அதற்கான வழிமுறைகளைத்தான் நாம் தேட வேண்டும். காலுக்கேற்ப செருப்பைச் செய்ய வேண்டும், செருப்புக்கேற்ப காலை வெட்டுவது மடமை. ஆனால் மருதையனோ “இன்றைய எதார்த்த சூழல்” இப்படி இருப்பதால் சமரச-ஊசலாடும் சக்திகளிடம் புரட்சிகர அமைப்புகள் சரணடைந்துவிடுமாறு உபதேசிக்கிறார். அதாவது, பாசிசத்தை எதிர்த்த போராட்டத்தில் ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவை நம் பக்கம் வென்றெடுப்பதற்கு பதிலாக, அவர்களின் காலில் பாட்டாளி வர்க்கத்தைச் சரணடையச் சொல்கிறார்.

இதற்கு அவர் சொல்லும் வாதங்கள்தான் நகைச்சுவையானது. “இன்று நாம் தண்ணீரில் தத்தளிக்கிறோம். நமக்கு ஒரு வாழைமரம்தான் கிடைத்துள்ளது. நீங்கள் கரையில் நின்றுகொண்டு ஒரு படகு செய்யச் சொல்வது கோமாளித்தனமானது. கிடைத்துள்ள ஒரு வாழைமரத்தை வைத்துக் கொண்டு கரைசேரும் வழியைத்தான் இப்போது பார்க்க வேண்டும்” என்கிறார். மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதைப் போல பாசிச எதிர்ப்பைப் பற்றி கேவலப்படுத்தும் விதமாக இருக்கிறது இந்த உவமை. இருக்கட்டும். பாட்டாளி வர்க்க இயக்கம் பலவீனமாக இருப்பதால் அதைக் கட்ட வேண்டும் என்று பேசுவதெல்லாம் கோமாளித்தனமானது. மாறாக, தி.மு.க., காங்கிரசைப் பிடித்துக் கொண்டு (அதாவது அவர்களிடம் சரணடைந்து) பாசிச எதிர்ப்புப் போரில் கரை சேர வேண்டுமாம் எது சரியானது என்பதையெல்லாம் இப்போது பேசாதீர்கள், எது சாத்தியமனது என்பதைப் பாருங்கள் என்பதுதான் இந்த வாதத்தின் சாரம்சமாகும்.

இலக்கு இமயமலை என்றால் பயணம் வடக்கு நோக்கித்தான் இருக்க வேண்டும்” அதேபோல, பாசிசத்தை வீழ்த்துவதற்கான போராட்டம் என்றால் அதற்கு குறுக்குவழியோ, எளிமையான வழியோ இல்லை. நீண்ட நெடிய துயரமிக்க விடாப்பிடியான போராட்டத்தின் மூலமே அதைச் சாத்தியப்படுத்த முடியும். தி.மு.க.வின் முதுகின் மேலேறி சவாரி செய்வதன் மூலம் பாசிசத்தை வீழ்த்திவிடலாம் அல்லது தடுத்துவிடலாம் என்று மணப்பால் குடிப்பதுதான் உண்மையில் “கோமாளித்தனமானது”. இத்தகைய நீண்ட நெடிய துயரமிக்க விடாப்பிடியான போராட்டத்திற்கு பாட்டாளி வர்க்கமும் அதன் முன்னணிப்படையான கம்யூனிஸ்டு கட்சியும்தான் தலைமை தாங்க வேண்டும். தலைமை தாங்க முடியும். சமரச-ஊசலாடும் சக்திகள் தலைமை தாங்க முடியாது. அதாவது ஒரு வாழை மரத்தை நம்பி கரையேற முடியாது.

தி.மு.., காங்கிரசை விமர்சித்தால் பாசிசத்திற்கு சாதகமாக அமைந்துவிடுமா?

தி.மு.க. காங்கிரசு போன்ற கட்சிகள் செய்யும் தவறுகளை எதிர்த்துப் பேசுவது பா.ஜ.க.வுக்கு சாதகமாக முடிந்துவிடும். பா.ஜ.க. உள்ளே வர சாதகமாகிவிடும்” என்றவொரு பயங்கரமான வாதம் பொதுவெளியில் வைக்கப்படுகிறது. பலரும் இந்தவாதம் சரிதான் என்று நம்புகின்றனர். மருதையனோ ஒருபடி மேலே போய் புரட்சிகர அமைப்புகள் தி.மு.க.வை விமர்சனம் செய்தால் கூட “ஒரு ஹார்மோனி இசைபோல பா.ஜ.க.வுக்கு சேவை செய்யும் நோக்கத்தில் அது வந்துவிடும்” என்று கூறுகிறார். அதேபோல கள்ளச்சாராய சாவு விவகாரத்தை பா.ஜ.க., அ.தி.மு.க., நாம் தமிழர் போன்ற கட்சிகள் கையில் எடுத்திருப்பதாலேயே நாமும் இப்போது அதைப் பேசுவது பா.ஜ.க.வுக்கு சாதகமாகிவிடும் என்று பொருள்படும்படி பேசுகிறார். மேற்படி வாதங்கள் உண்மையா?

பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். கும்பல் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு கட்சிகளை தங்களின் முதன்மை எதிரியாகப் பார்க்கிறது என்பதும் நாடு தழுவிய அளவில் காங்கிரசை முதன்மை எதிரியாகப் பார்க்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை. அவ்வகையில் தமிழ்நாட்டில் தி.மு.க.வை அழித்து ஒழிக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல் பல்வேறு கேடுகெட்ட சதிகளைச் செய்துவருகிறது என்பதும் மறுக்க முடியாத உண்மைதான். ஆனல் இந்த உண்மையிலிருந்து தி.மு.க., காங்கிரசு உள்ளிட்ட சமரச சக்திகளை விமர்சிக்கவே கூடாது, நிபந்தனையின்றி ஆதரிக்க வேண்டும் என்று முடிவெடுத்தால் அதுதான் உண்மையில் பாசிசத்துக்கு சாதகமாக அமையும்.

பாசிசம் மக்களிடம் செல்வாக்குப் பெறுவதற்கான முக்கியமான காரணமாக டிமிட்ரோவ் கூறுவதாவது:

“பாசிசத்திற்கு மக்களிடமிருந்த செல்வாக்குக்கு என்ன ஆதாரம்? பாசிசம் மக்களைக் கவர முடிந்ததற்குக் காரணம், அது மக்களுடைய ஆக அவசர அவசியமான தேவைகளையும், கோரிக்கைகளையும் பற்றி ஆவேசமாக அடித்துப்பேசி வேண்டுகோள் விடுக்கிறது. பாசிசம் மக்களுடைய உள்ளங்களிலே ஊறிப்போயிருக்கிற வெறுப்புகளையும், தப்பெண்ணங்களையும் கிளறித் தூண்டிக் கிளப்பி[விடுகிறது]” (டிமிட்ரோவ், மேற்படி, பக்கம்-8)

உதாரணமாக கள்ளச்சாராய சாவு விசயத்தையோ, டாஸ்மாக் விசயத்தையோ எடுத்துக் கொள்ளுங்கள். இப்பிரச்சனையை பா.ஜ.க., நாம்தமிழர், அதிமுக ஆகியவை கையில் எடுத்து திட்டமிட்டு செயல்பட்டு வருவது உண்மைதான் என்பது ஒருபுறமிருந்தாலும், மக்களைப் பொறுத்தவரையில் இதை முக்கியமான பிரச்சனையாகத்தான் பார்க்கிறார்கள். அப்போது ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி அதை எதிர்த்துப் பேசியாக வேண்டும். தி.மு.க. போன்ற சமரச சக்திகளை கீழிருந்து நிர்ப்பந்தித்து கள்ளச்சாராய, டாஸ்மாக் விவகாரத்தில் ஒரு குறிப்பிட்ட தீர்வைக் காணப் போராட வேண்டும். அப்போதுதான் பாசிசத்தின் வாய்ச்சவடால் பேச்சுக்களுக்கு மக்கள் மயங்காமல், அதாவது பாசிசத்தின் செல்வாக்கு மக்கள் மத்தியில் விரிவடையாமல் தடுக்க முடியும். இல்லையேல் ஒருவேளை நாளை பா.ஜ.க.வே இதை மிகப்பெரிய பிரச்சனையாக ஊதிப் பெருக்கி போராட்டங்களைக் கட்டியெழுப்பினால், “மக்களிடம் ஆவேசமாக அடித்துப் பேசி வேண்டுகோள் விடுத்தால்” மக்கள் மத்தியில் அக்கட்சியின் செல்வாக்கு வளர்வதில்தான் போய் முடியும். தி.மு.க. நமக்கு எதிரிதான் என்று மக்கள் பார்ப்பதற்கான வாய்ப்பே அதிகரிக்கும். இதுதான் உண்மையில் பா.ஜ.க. உள்ளே வர வழிவகுக்கும்.  

இன்னுமொரு உதாரணத்தைச் சொல்கிறோம். புதிய கல்விக் கொள்கையின் பல அம்சங்களை தி.மு.க. நடைமுறைப்படுத்தி வருவது அனைவரும் அறிந்ததே. இது தி.மு.க. பாசிச கும்பலுடன் சமரசம் செய்துகொள்வதன் துலக்கமான வெளிப்பாடாகும். நாமும் இதெல்லாம் ஒரு பிரச்சனையா, இப்போதைக்கு ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. எதிர்ப்புதான் பிரதானம் என்று பேசினால், அல்லது இப்பிரச்சனையை பேசாமல் கடந்துபோனால், பொதுக்கல்வியில் அக்கறை கொண்ட ஜனநாயக சக்திகளும் மக்களும் என்ன நினைப்பார்கள்? “தி.மு.க.தான் பா.ஜ.க.வின் உண்மையான பி அணி பாருங்கள்! பா.ஜ.க.வின் கல்விக் கொள்கையை எதிர்ப்பதாக நாடகமாடி அதையே அமுல்படுத்திகிறார்கள்” என்று பா.ஜ.க.வின் உண்மையான பி அணியான நாம் தமிழர் கட்சி “அடித்துப் பேசும்” வாதங்களை ஏற்கும் நிலைக்கு நாமே அவர்களைத் தள்ளுவதில்தான் இது போய்முடியும்.

எனவே, தி.மு.க. போன்ற சமரச சக்திகள் தவறுகள் செய்யும்போதும், அவர்கள் பாசிச கும்பலுடன் சமரசம் செய்யும் இடங்களிலும் அதை அம்பலப்படுத்தி போராடி, அதை முறியடிக்கும்போதுதான் பாசிஸ்டுகளின் வாய்ச்சவடால்களுக்கு மக்கள் மயங்குவதை ஓரளவேனும் தடுத்து நிறுத்துவது சாத்தியம். வேறு வார்த்தையில் சொல்வதானால் ‘பா.ஜ.க. உள்ளே வருவதை’ தடுப்பது சாத்தியம்.

எனவே, பாட்டாளி வர்க்கக் கட்சியானது பாசிசத்தை எதிர்த்த போராட்டத்தில் சமரச சக்திகளும் பாசிச சக்திகளும் ஒன்று என்று பேசுவதை எதிர்க்கும் – உதாரணமாக ஆரிய மாடலும் திராவிட மாடலும் ஒன்றே, பா.ஜ.க.வும் காங்கிரசும் ஒன்றே என்று பேசுவதை எதிர்க்கும் – அதே வேளையில் சமரச சக்திகளை நிபந்தனையின்றி ஆதரிப்பதையும், அவர்களை விமர்சிக்கவே கூடாது என்ற கூற்றையும் கடுமையாக எதிர்க்கிறோம். மக்களின் அவசர, அவசிய தேவைகள் குறித்து இடையறாது பிரச்சாரம் செய்வதையும், அதன்மூலம் சமரச-ஊசலாடும் சக்திகளுக்கு கீழிருந்து ஒரு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி தொடர்ந்து இடையறாது செய்ய வேண்டும்.

ஆனால் மருதையன் போன்ற பாசிச எதிர்ப்பு பற்றி எந்தவித அக்கறையுமற்றவர்களும், தி.மு.க.விடம் தஞ்சமடைந்து கிடப்பவர்களும்தான் பாசிசத்தை ஒரு பூச்சாண்டியாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். பூச்சாண்டியைக் காட்டி குழந்தைக்குச் சோறு ஊட்டுவது போல பா.ஜ.க. உள்ளே வந்துவிடும் அதனால் தி.மு.க.வை விமர்சிக்காதீர்கள் என்று பேசுகிறார்கள். உண்மையில் இப்படிப் பேசுபவர்கள்தான் பாசிசம் உள்ளே வருவதற்கான வாயிற்கதவை திறந்து வைக்கிறார்கள்.

தேர்தலின் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியுமா?

 “பாசிசம்” “பாசிச எதிர்ப்பு” “பாசிசத்தை வீழ்த்த வேண்டும்” என்ற சொற்கள் பேஷனாகிவிட்ட இன்றைய காலத்தில், அதற்கான சாத்தியமான ஒரேயொரு மாற்றாக தேர்தலில் சரணடையச் சொல்லி பாசிச எதிர்ப்பை முனைமழுங்கடிக்க வைக்கும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிற இன்றைய காலத்தில், தேர்தலுக்கு வெளியேதான் பாசிசத்தை வீழ்த்த முடியும் என்று ஒருவார்த்தை பேசினால் கூட ‘எதார்த்தம் புரியாதவர்கள்’ ‘கோமாளிகள்’ ‘பாசிச ஆதரவாளர்கள்’ என்று முத்திரை குத்தி தனிமைப்படுத்த தீவிரமான முயற்சிகள் நடக்கிற இன்றைய காலத்தில் கீழ்க்காணும் நமது நிலைப்பாட்டை எல்லா இடங்களிலும் திரும்பத் திரும்ப வலியுறுத்திப் பேச வேண்டிய நிலைமையில் இருக்கிறோம். பாசிச எதிர்ப்பு பற்றிய சகிக்கவொண்ணாத வெற்றுக்கூச்சல்களுக்கு நடுவே, ஆக்கப்ப்பூர்வமான நம் நிலைப்பாட்டை ஓங்கிக் கத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம். இல்லையென்றால் தேர்தல் மாயை என்ற ஆழிப்பேரலை பாசிச எதிர்ப்பு முனையைமழுங்கடித்து பாசிச ஆட்சியதிகாரம் நிறுவப்படுவதற்கு இட்டுச் சென்றுவிடும் பேரபாயம் நம்முன் உள்ளது.

பா.ஜ.க. என்பது பிற கட்சிகளைப் போல ஒரு கட்சியல்ல. பார்ப்பனிய சித்தாந்தத்தால் மேலிருந்து கீழ்வரை வெறியூட்டப்பட்ட ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பின் அரசியல் முகம். அதிகாரவர்க்கத்தின் அனைத்து மட்டங்களிலும், நீதிமன்றங்களிலும், போலீசிலும், இராணுவத்திலும், ஊடகத் துறையிலும் இந்த சித்தாந்தத்தால் ஆயுதபாணியாக்கப்பட்டவர்களைக் கொண்டு நிரப்பியிருப்பதுமட்டுமல்ல, அதற்கு வெளியிலும் பல்வேறு பெயர்களில் இரகசிய, அரை இரகசியக் குழுக்களையும் ஆயுதப் படைகளையும் கட்டியமைத்துள்ளது. இவையெல்லாம் காசுக்கு வேலை செய்யும் கூலிப்படைகளல்ல. சித்தாந்த ரீதியாக வெறியூட்டப்பட்ட படைகள்.

மேலும், “பாசிசத்தின் குதிகால் நரம்பே அதன் மக்கள் அடித்தளம்தான்” என்று தோழர் டிமிட்ரோவ் கூறுவார். 1975-இல் அன்றைய சோவியத் சமூக ஏகதிபத்திய அடிவருடியான இந்திரா காந்தி பாசிசத்தைக் கொண்டுவரும்போது, அமெரிக்க ஏகாதிபத்தியமும் இந்திய ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவும் அதை அகற்ற விரும்பியது. கீழே மக்கள் அடித்தளத்தை உருவாக்கி அதன் பிறகு பாசிச ஆட்சியை நிறுவது என்றல்லாமல், மேலே பாசிச ஆட்சியதிகாரத்தை நிறுவிய பிறகு கீழே மக்கள் அடித்தளத்தை உருவாக்குவது என்ற வகையில் இந்திரா பாசிச ஆட்சியானது கொண்டுவரப்பட்டது. மேலே பாசிசம் நிலைநாட்டப்பட்ட பிறகு, கீழே மக்கள் அடித்தளத்தை உருவாக்க இந்திரா பாசிச அரசு முயன்றாலும் அம்முயற்சி வெற்றியடையவில்லை. இந்திரா பாசிச ஆட்சியானது தேர்தல் மூலமே அகற்றப்பட்டதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று மக்கள் அடித்தளம் இல்லாமையாகும்.

ஆனால் காவி-கார்ப்பரேட் பாசிசம் அத்தகையதல்ல. உறுதியான, விடாப்பிடியான பல்வேறு சதித்தனங்களின் மூலம் மக்களின் பெரும்பான்மையினரது ஆதரவையும் வென்றெடுக்க இடையறாது வேலைசெய்துவருகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் பழைமையான பார்ப்பனிய சித்தாந்தத்தையும், நூறாண்டுகளுக்கும் மேலான அமைப்பு பலத்தையும் கொண்டுள்ள, இன்று உலகிலுள்ள பாசிச இயக்கங்களிலேயே மிகப்பெரியதும், வலிமையானதுமான ஆர்.எஸ்.எஸ். தனக்கான மக்கள் அடித்தளத்தை உருவாக்க நூறாண்டுகளாக்கும் மேலாக முயன்று வருகிறது. அதில் குறிப்பிட்டளவு வெற்றியும் பெற்றுள்ளது. ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பல் உருவாக்கியிருக்கும் இந்த மக்கள் அடித்தளத்தை எதிர்த்து செயல்பட முடியாமலும் மாற்று ஒன்றை வைக்க முடியாமலும் அதற்குட்பட்டு செயல்பட வேண்டிய நிலையிலும்தான் எதிர்க்கட்சிகளே இருக்கின்றன. திரிணாமுல் கட்சி துர்கா பூஜையை கோலகலமாக நடத்துவதும், ராகுல் காந்தி பூனூலை காட்டுவதும், கெஜ்ரிவால் ரூபாய் நோட்டுக்களில் இலட்சுமி படம் போட வேண்டுமென்று பேசுவதும், ஏன் பார்ப்பனியம் என்ற சொல்லைக் கேட்டாலே காறி உமிழ்ந்த தமிழ்நாட்டில் ‘நாங்கள்தான் உண்மையில் இந்துக்களுக்கு ஆதரவானவர்கள்’ என்று தி.மு.க. பேச வேண்டியிருப்பதும் காவி-கார்ப்பரேட் பாசிச கும்பல் மக்கள் அடித்தளத்தை உருவாக்குவதில் அடைந்துள்ள வெற்றியையே குறிக்கிறது. காசுக்கு விலைபோகும் பிழைப்புவாதிகளைத் தாண்டி, சித்தாந்த ரீதியாகவே ஆர்.எஸ்.எஸ்-இன் கருத்துக்கள் பலவற்றை ஏற்றுக்கொள்ளும் பலர் எல்லாக் கட்சிகளிலும் எல்லா மட்டங்களிலும் இருக்கிறார்கள்.

2024 தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியிலிருந்து இறக்கப்பட வேண்டும் என்பது அவசியமானது என்றாலும்கூட, அவ்வாறு ஆட்சியிலிருந்து இறக்கப்பட்டாலும் ஒன்றிய ஆட்சியதிகாரம் என்னும் ஒரு ஆயுதத்தைத்தான் அது இழந்து நிற்கும். நாடாளுமன்ற ஆட்சியதிகாரம் என்ற இந்த ஒரு ஆயுதத்தை மட்டும் நம்பி அவர்கள் இல்லை. மேற்சொன்னவைதான் அவர்களது முக்கியமான ஆயுதங்கள். இத்தகைய வெறியூட்டப்பட்ட படையைக் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையே கவிழ்ப்பதையும், நாடாளுமன்றத்தைத் தாக்குவதையும், கலவரத்தை நடத்தி ஆட்சியை மீண்டும் பிடிப்பதையும் எளிமையாகச் செய்ய முடியும். ஏற்கனவே அதிபர் தேர்தல் தோல்வியை ஏற்க மறுத்த குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டிரம்ப்பின் பாசிசப் படைகள் அமெரிக்காவின் கேபிடல் மாளிகையைத் தாக்கியதும், பொல்சோனாராவின் பாசிசப் படைகள் பிரேசிலில் கலவரத்தை நிகழ்த்தியதும் நம் கண்முன்னே இருக்கும் சாட்சியங்கள். இதெல்லாம் இந்தியாவில் நடக்காது என்று மனப்பால் குடிப்பவர்களுக்கு, கர்நாடக தேர்தலில் காங்கிரசு வென்றால் “கர்நாடகம் கலவர பூமியாக மாறும்” என்று அமித்ஷா பகிரங்கமாக மிரட்டியது இந்தப் பொருளில்தான் என்பதை நினைவூட்டுகிறோம். போலிசு, இராணுவம், நீதித்துறை உள்ளிட்ட அரசமைப்பையே பாசிசமயமாக்குவதில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருப்பதாலும், பெரும்பான்மை மக்களைச் சித்தாந்த ரீதியாகவே அவர்கள் பின்னால் திரட்டி வைத்திருப்பதாலும் அமெரிக்காவிலும், பிரேசிலிலும் தோல்வியடைந்த முயற்சிகள் இங்கே எளிதில் வெற்றி பெறவே வாய்ப்புள்ளன.

எனவே, பாசிசத்தை வீழ்த்த வேண்டுமானால் தேர்தலுக்கு வெளியில் பாசிசத்தின் அடித்தளமான அதன் குதிகால் நரம்பை அறுத்தெறிய – அதாவது அது மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ள பாசிசக் கருத்துக்களை அறுத்தெறிய – நாம் இடையறாது மக்களிடம் பிரச்சாரம் செய்வதிலிருந்து தொடங்க வேண்டும். அவ்வாறான பிரச்சாரங்களின் மூலம் தேர்தலுக்கு வெளியே பாசிசப் படையை எதிர்க்கும் சித்தாந்த ரீதியான உறுதியான படையை நாம் கட்டியமைப்பதிலிருந்து நம் பணியைத் தொடங்க வேண்டும். கூலிக்காக வருபவர்களையல்ல, வடக்கில் பசுவுக்காக இசுலாமியனை அடித்துக் கொன்றால் தெற்கில் கொதித்தெழுந்து பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிடும் கொள்கை உணர்வு கொண்ட மக்கள் படையைக் கட்டியமைக்க வேண்டும்.

இத்தகையதொரு மக்கள் படையைக் கட்டாமல், பாசிசத்தின் குதிகால் நரம்பான அதன் மக்கள் அடித்தளத்தை அறுத்தெறியப் போராடாமல் பாசிச எதிர்ப்பு பற்றிப் பேசுவதெல்லாம் வீண்பேச்சுக்கள்தான். மருதையனது வார்த்தையிலேயே சொல்வதானால் “திண்ணையில் அமர்ந்து ஊர்நாயம் பேசும்” கதைதான்.

பாசிசம் இன்று ஏறித்தாக்கி வருகையில் நீங்கள் பழையபாணியில் தேர்தல் புறக்கணிப்பு என்று கூறுவது பொருத்தமற்றதுதானே, அந்த வகையில் தேர்தலையும் ஒரு களமாகப் பயன்படுத்த வேண்டும் என்று மருதையன் தரப்பினர் கூறுவது சரிதானே என்று கூட சிலர் நினைக்கலாம். செயல்தந்திரத்தின் கீழ் பல்வேறு போராட்ட வடிவங்களில் தேர்தலும் ஒரு போராட்ட வடிவம் என்ற பொதுக்கோட்பாட்டை எந்த மார்க்சியவாதியும் மறுக்கப்போவதில்லை. ஆனால் மருதையன் கோவன் கும்பலோ இந்த பொதுக் கோட்பாட்டுக்குள் வசதியாகப் புகுந்துகொண்டு தி.மு.க.வின் பிரச்சாரக பீரங்கிகளாக மாறியுள்ளதை மூடி மறைக்கிறார்கள்; புரட்சிகர வேடம் போட்டு திரிகிறார்கள் என்பதே உண்மை.

ஒருவரது கருத்தை அவரது வார்த்தகைகளில் இருந்தல்ல அவரது நடைமுறையில் உரசித்தான் உண்மையைக் காண முடியும், காண வேண்டும். வாயளவில் பேசுவதெல்லாம் அவர்களது கருத்துக்களாக எடுத்துக்கொள்ள முடியாது. “தேர்தலுக்கு வெளியில்தான் பாசிசத்தை முறியடிக்க முடியும் என்பதை எல்லாக் கட்சிகளும் ஒப்புக் கொள்கிறார்கள். அது ஒரு அரிய கண்டுபிடிப்பல்ல[4] என்று பேசும் மருதையன் உண்மையில் அதுதான் அவரது உண்மையான கருத்தென்றால் இந்த இரண்டாண்டுகளில் தேர்தலுக்கு வெளியிலும் பாசிசத்தை வீழ்த்த செய்த பணி என்ன என்று பட்டியலிட வேண்டும். தேர்தலில் தி.மு.க.வுக்கு வாக்களித்தால் மட்டும் போதாது, நாம் இன்னின்ன வேலைகளைச் செய்ய வேண்டும் என்று எத்தனை துண்டுப் பிரசுரங்களை அச்சடித்து மக்களிடம் விநியோகம் செய்துள்ளரா? அல்லது தமிழ்நாட்டின் மாநில அரசு அதிகாரத்துக்கு உட்பட்டு குறைந்தபட்சம் அதிகார வர்க்கத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ். ஆதரவு நபர்களையேனும் மாற்றியமைக்கவாவது தி.மு.க. அரசை நிர்ப்பந்தித்துள்ளாரா? இல்லை வேறு ஏதேனும் செய்துள்ளாரா? எதுவும் இல்லை.

மாறாக, தி.மு.க.வினரே கண்டு அசந்துபோகும் அளவுக்கு, தி.மு.க.வுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகளும் கூட கூச்சப்படும் அளவுக்கு எல்லாப் பிரச்சனைகளிலும் தி.மு.க.வினரின் தவறுகளை மூடிமறைத்து, அவர்களுக்குச் சேவை செய்யும் திருப்பணியை மட்டும் தான் செய்துவருகிறார். அதுவும் மா-லெ சொல்லாடல்கள் மூலம் அச்சேவையைச் செய்து வருகிறார்.

தமிழக அரசு 12 மணி நேர வேலைச் சட்டத்தை மசோதாவா அறிமுகப்படுத்தியபோதே பலர் அதை எதிர்த்துப் பேசியிருந்தனர். எமது இணையதளத்திலும் நாம் இதை எதிர்த்து எழுதியிருக்கிறோம்.[5] ஆனால் இச்சட்டம் எதிர்ப்பையடுத்து நிறுத்திவைக்கும் வரை மருதையன் இதுபற்றி வாய்திறக்கவில்லை. நிறுத்திவைக்கப்பட்ட பிறகு இதைக் கண்டிப்பதைப் போலக் கண்டித்துவிட்டு இது தி.மு.க.வின் “ஜனநாயக ரீதியான நடவடிக்கை” என்று சான்றிதழும் வழங்கினார். கள்ளக்குறிச்சி மாணவி மரணத்திற்கு நீதிகேட்டு போராடியவர்கள் மீது போலிசு வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்ட விவகாரத்தில், ‘அரசு-அரசாங்கம் என்ற இரட்டையாட்சிமுறை இங்கே இருக்கிறது; போலிசு, அதிகார வர்க்கம் உள்ளிட்ட இந்தக் கட்டமைப்பே தனியார் பள்ளி முதலாளிகளுடன் கூட்டு வைத்துக் கொண்டுதான் இயங்குகிறது. இதில் கட்சிகளுக்கும் பங்கிருக்கிறது என்றபோதிலும், இந்த கட்டமைப்பே இப்படித்தான் இருக்கிறது’ என்று கூறி தி.மு.க.வை காப்பாற்றிவிட்டார் மருதையன். அதாவது இந்த அரசுக் கட்டமைப்பைப் பயன்படுத்திக் கொண்டு சமூக மாற்றத்தைச் சாதிகக் முடியாது என்பதற்காக சொல்லப்படும் இரட்டையாட்சி முறை பற்றிய விளக்கத்தை தி.மு.க. இதில் ஒன்றும் செய்ய வாய்ப்பில்லை என்பதுபோலப் பேசும் தனது ஆளும்வர்க்கச் சேவைக்கு மருதையன் திறமையாக எடுத்துப் பயன்படுத்திக் கொண்டார். இன்னும் ஏராளமாகச் சொல்லலாம்.

மார்க்சியத்தை இவ்வாறு திரித்துப் புரட்டி முதலாளி வர்க்கம் உச்சி குளிர்ந்து போகும் அளவுக்கு அவர்களுக்கு சேவை செய்யும் ‘மார்க்சியவாதிகள்’ மீது லெனின் கீழ்க்காணும்வாறு காறி உமிழ்கிறார்.

“ஒடுக்கப்பட்ட வர்க்கங்களை “ஆன்மதிருப்தி” பெறச் செய்வதும், அவைகளை ஏமாற்றுவதும், அதேசமயம புரட்சி போதனையிடமிருந்து அதன் சாரப்பொருளைக் களைந்து, அதன் புரட்சி முனையை மழுங்கடித்து, அதைக் கொச்சைப்படுத்துவதும்தான் இந்த முயற்சியின் நோக்கம். முதலாளித்துவ வர்க்கத்தாரும் தொழிலாளி வர்க்க இயக்கத்திலுள்ள சந்தர்ப்பவாதிகளும் இன்று மார்க்சியத்தை இவ்வாறு “பதனம் செய்வதில்” ஒன்றுபடுகிறார்கள். இந்தப் போதனையின் புரட்சித் தன்மையை, இதன் புரட்சி ஆன்மாவை அவர்கள் விட்டொழிக்கவோ, மூடி மறைக்கவோ, திரித்துப் புரட்டவோ செய்கிறார்கள். முதலாளித்துவ வர்க்கத்துக்கு ஏற்புடையதை, அல்லது ஏற்புடையதாய்த் தோன்றுவதை முதன்மையாய் முன்னிலைக்குக் கொண்டுவந்து மெச்சிப் புகழ்கிறார்கள்.” (லெனின் நூல்திரட்டு தொகுதி – 2, மாஸ்கோ வெளியீடு, தமிழ், பக்கம் 210-211)

தன்னுடைய குருவான மருதையனை வழியில் கோவனும் இதேபோல்தான் பேசிவருகிறார். உதாரணமாக, “பா.ஜ.க. அரசு கொண்டுவந்த 12 மணிநேர வேலைநேர சட்டத்தை தி.மு.க. அரசு நிறைவேற்ற முயன்றதே” என்று ஆனந்த விகடன் நிரூபர் கேட்கும் கேள்விக்கு பதிலளிக்கும் கோவன் “தொழில் துறையில் தமிழ்நாட்டை நம்பர்-1 மாநிலமாக்கத்தான் தி.மு.க இந்த மசோதாவை நிறைவேற்றியது” என்று வெளிப்படையாக ஆளும் வர்க்கத்தின் குரலாக ஒலிக்கிறார். மேலும், குடிநீரில் மலம் கலந்த வேங்கைவயலுக்கும் ஆணவப்படுகொலைகள் நடந்த கிருஷ்ணகிரிக்கும் முதல்வர் செல்லாதது குறித்த கேள்விக்கு “முதல்வருக்கு வேறு வேலைகள் இருந்திருக்கலாம்” என்று பேசுகிறார். தி.மு.க.வுடன் கூட்டணியில் இருக்கும் திருமாவளவன் கூட ‘முதல்வர் அங்கு சென்றிருக்க வேண்டும்’ என்று பேசும் போது, கோவனோ “முதல்வருக்கு வேறு வேலைகள் இருந்திருக்கலாம்”  என்று தி.மு.க.வின் தொண்டராகவே மாறிவிட்டார்.[6]

இதுதான் இவர்கள் தேர்தலையும் ஒரு களமாகப் பயன்படுத்துவதன் யோக்கியதை. மற்றபடி இதற்கும் பாசிச எதிர்ப்புக்கும் எள்முனையளவும் சம்பந்தமில்லை.

மருதையன் இசுலாமியனது மனநிலையிலிருந்து பாசிசத்தைப் பார்க்கிறாராஜெயமோகன் மனநிலையிலிருந்து புரட்சிகர அமைப்புகளை இழிவுபடுத்துகிறாரா?

அடுத்து பாசிசத்தை வீழ்த்துவதற்காக ‘கீழே மக்கள் இயக்கத்தைக் கட்டுவது’ பற்றி “ஒரு இசுலாமியனின் மனநிலையில் இருந்து பாசிசத்தைப் பார்க்கும்” மருதையன் அக்கறையோடும் பொறுப்புணர்வோடும் பேசும் விசயங்களைப் பார்ப்போம். “தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றியது. ஆனால் நாம் கீழே நீட்டுக்கு எதிராக மாணவர் இயக்கத்தைக் கட்டியிருக்கிறோமா? இந்த இரண்டு ஆண்டு தி.மு.க. ஆட்சியைப் பயன்படுத்திக் கொண்டு நாம் எதாவது மக்கள் இயக்கத்தைக் கட்டியிருக்கிறோமா?” என்று புரட்சிகர அமைப்புகளை நோக்கி ‘அக்கறையோடு’ கல்லெறிகிறார். பாசிசம் ஏறித்தாக்குகிறது என்பதை “ஒரு பாதிக்கப்படும் இசுலாமியனது மனநிலையில் இருந்து பார்க்கவேண்டும்” என்று உணர்ச்சி பொங்க பேசுகிறார். நாம் இப்படிக் கேட்போம். பாசிச எதிர்ப்புக்கு யார் தலைமை தாங்குகிறார்களோ, அவர்களுக்குத்தானே கீழே மக்கள் இயக்கத்தைக் கட்ட வேண்டிய பொறுப்பு, அதாவது பாசிச எதிர்ப்பு அரசியலை கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு, பிரதானமாக இருக்கிறது. எனவே நீங்கள் தி.மு.க.வின் மாணவர்-இளைஞர் அணியைப் பார்த்துத்தானே இந்தக் கேள்வியை எழுப்ப வேண்டும். பாசிச எதிர்ப்பு போராட்டத்திற்கு தலைமை மட்டும் தி.மு.க.வும் காங்கிரசும் தாங்க வேண்டுமாம். ஆனால் மக்கள் இயக்கத்தை மட்டும் புரட்சிகர அமைப்புகள் கட்ட வேண்டுமாம். என்னே மருதையனின் உபதேசம்!

இந்தக் கேள்வியை நீங்கள் மருதையனிடம் எழுப்பினால், ‘அவர்கள் தேர்தல் கட்சிகள். தேர்தல் வரம்பிற்குள் எதைச் செய்ய முடியுமோ அதைத்தான் செய்வார்கள். செய்ய முடியும். நாம்தான் இந்த மூச்சுவிடும் அவகாசத்தைப் பயன்படுத்திக் கொண்டு மக்கள் இயக்கத்தைக் கட்ட வேண்டும்’ என்று பதிலளிப்பார். சரி ‘தேர்தல் வரம்பிற்குள் எதைச் செய்ய முடியுமோ அதைச் செய்கிற கட்சி பாசிச எதிர்ப்பை மட்டும் எப்படி தலைமை தாங்கி வழிநடத்தும் என்று சொல்கிறீர்கள்’ என்று நீங்கள் மடக்கிக் கேட்டால் அவர் திக்குமுக்காடிப்போவார்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றியது. ஆனால் நாம் கீழே நீட்டுக்கு எதிராக மாணவர் இயக்கத்தைக் கட்டியிருக்கிறோமா? இந்த இரண்டு ஆண்டு தி.மு.க. ஆட்சியைப் பயன்படுத்திக் கொண்டு நாம் எதாவது மக்கள் இயக்கத்தைக் கட்டியிருக்கிறோமா? பெரியார் 365 நாளும் 24 மணிநேரமும் மக்கள் இயக்கத்தைக் கட்டினார். ஆனால் நாம் என்ன செய்தோம்?” என்று ‘கீழே மக்கள் இயக்கத்தைக் கட்டுவதை’ பற்றி அக்கறையோடு பேசும் திருவாளர் மருதையன் அவர்களே! தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மூச்சுவிடுவதற்கான தருணம் கிடைக்கும். அதை வைத்துக் கொண்டு மக்கள் இயக்கத்தைக் கட்ட வேண்டும் என்று பேசியவர்கள் நீங்கள்தான். நாங்களல்ல. புரட்சிகர அமைப்புகள் என்ன செய்தது? என்ன செய்தது? என்று கேட்பதைத் தவிர நீங்கள் இந்த இரண்டாண்டுகளில் கட்டிய மக்கள் இயக்கம் என்ன? நீங்கள் எந்த புரட்சிகர அமைப்பில் இணைந்து பணியாற்றுகிறீர்கள்? எல்லா புரட்சிகர அமைப்புகளும் சிவப்பு ஓவைசிக்களாக மாறிவிட்டதென்றால் நீங்கள் சொல்வதை அமுல்படுத்தும் ஒரு அமைப்பில் சேர்ந்தோ அல்லது புதிதாக ஒரு அமைப்பைக் கட்டியோ 365 நாளும் 24 மணி நேரமும் வேலை செய்து மக்களைத் திரட்ட வேண்டியதுதானே? அப்படிச் செய்வதை யார் தடுத்தார்? நீங்கள் சொல்லும் பெரியார் ஒரு அமைப்பில் இருந்துகொண்டுதானே மக்கள் இயக்கத்தைக் கட்டினார்? அல்லது தங்களைப் போன்று தனிநபராக இருந்துகொண்டு உபதேசம் செய்துவந்தாரா? எல்லா இடங்களிலும் தன்னை ஒரு கம்யூனிஸ்டு போல காட்டிக்கொள்ளும் நீங்கள், “தான் ஒரு கம்யூனிஸ்டு. ஆனால் கட்சியில் இணைந்து செயல்பட மாட்டேன் என்று கூறுபவன் கம்யூனிஸ்டே அல்ல” என்ற லெனினின் வரையறுப்பை நன்கு அறிந்த நீங்கள் ஏன் ஒரு கட்சியைக் கட்டவில்லை?

நான் சொல்வதை நானே எந்த அமைப்பில் இணைந்தும் நடைமுறைப்படுத்த மாட்டேன். ஒரு தனிநபராக இருந்து உபதேசம் செய்வேன். என் உபதேசத்தைக் கேட்டு புரட்சிகர அமைப்புகள் செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்படவில்லை எனில் நீங்கள் எல்லாரும் ‘திண்ணையில் அமர்ந்து ஊர் நாயம் பேசுபவர்கள். பாசிச எதிர்ப்பைப் பற்றி அக்கறையற்றவர்கள், சிவப்பு ஓவைசிக்கள்’. ஆஹா ‘கீழே மக்கள் இயக்கம் கட்டுவதைப்’ பற்றிய மருதையனின் பொறுப்புணர்வை என்னவென்று சொல்வது! இதுதான் “இசுலாமியர் மனநிலையில் இருந்து பாசிசத்தை பார்க்கும்” மருதையனது பதைபதைப்பின் யோக்கியதை!!

புரட்சிகர அமைப்புகள் என்று சொல்லிக் கொள்பவைகளெல்லாம் “வள்ளுவர் கோட்டத்திலோ, சேப்பாக்கத்திலோ ஒரு ஆர்ப்பாட்டத்தை அறிவிப்பார்கள். அதில் புதிதாக ஒரு 5 பேர் வந்தால் அதிசயம். அவர்களும் காலப்போக்கில் இத்தகைய போராட்டங்கள் ஒரு சடங்கு என்று புரிந்துகொள்வார்கள். எனவே, இதனால் பலனில்லை” என்று போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் ஜெயமோகன் பாணியில் பேசும் மருதையன்தான் 365 நாளும் 24 மணிநேரமும் மக்கள் இயக்கத்தைக் கட்டுவதைப் பற்றி கவலைப்படுகிறாராம். சரி இவையெல்லாம் அடையாளப் போராட்டங்கள் மக்களைத் திரட்ட உதவாது என்றால் மக்கள் இயக்கத்தை எப்படிக் கட்டுவது? உங்களைப் போல யூடியூபில் அமர்ந்துகொண்டு உபதேசம் செய்வதன்மூலமா?!

தான் சொல்வதையே கூட எந்த வகையிலும் நடைமுறைப்படுத்த போராடாத, யூடியூபில் அமர்ந்து பேசுவதையே முழுநேரத் தொழிலாகக் கொண்ட இவர் பாசிசத்தை எதிர்ப்பதில் பொறுப்புணர்வு மிக்கவராம். வீதியில் சென்று மக்களைத் திரட்டும் புரட்சிகர அமைப்புகள் திண்ணையில் அமர்ந்து ஊர்நாயம் பேசுபவர்களாம். என்னே மருதையனின் வாதம்!

இவ்வாறு பாசிச எதிர்ப்பில் துளியளவும் அக்கறையற்ற மருதையன், தனது தி.மு.க. விசுவாசத்திற்காக “இன்றைய சூழலில் நீங்களெல்லாம் தலைமை தாங்குவீர்களா”, “சந்தானம் போல நான் டாக்டர், நான் டாக்டர் என்று கோமாளித்தனமாக உளறாதீர்கள்”, “நீங்கள் அழைத்தால் வள்ளுவர் கோட்டத்தில் நடக்கும் போராட்டத்திற்கு புதிதாக 5 பேர் வருவானா”… என்றெல்லாம் புரட்சிகர அமைப்புகளை மட்டம்தட்டி மதிப்பிழக்கச் செய்கிறார்.

1980-களில் இருந்து ம.க.இ.க. மற்றும் எமது தோழமை அமைப்புகள்தான் பார்ப்பன பாசிச அபாயம் என்ற அரசியலை முன்வைத்து மக்களைத் திரட்டி வந்தது. தமிழ்நாட்டில் பெரியாருக்கு அடுத்தபடியாக பார்ப்பனியத்தை எதிர்த்ததில் குறிப்பிடத்தக்க பங்கை எமது அமைப்புகள் ஆற்றியுள்ளன. இவை எமது எதிரிகளும் அங்கீகரிக்கும் உண்மை. இந்தியாவில் வேறெந்த மா-லெ குழுவும் செய்யாத வகையில், அவர்களே பிரம்மித்துப் பார்க்கும் வகையில் கடந்த காலங்களில் எமது அமைப்பு மக்களைத் திரட்டியுள்ளது. பல பத்தாயிரக்கணக்கான் மக்களை ஓட்டுக் கட்சிகளால் கூட சாராயமின்றி, பணமின்றி திரட்டமுடியாது. ஆனால் இவைகள் ஏதுமின்றி எமது அமைப்பு திரட்டியுள்ளது. இவைகளின் தொடர்ச்சியாகத்தான் பிப்ரவரி 23, 2020-இல் காவி-கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிராக 40,000 பேரைத் திரட்டி மாபெரும் மாநாட்டையும் நடத்தினோம். பாசிசத்தை எதிர்த்த போராட்டத்தில் இம்மாநாடு முக்கியமானதொரு திருப்புமுனையாகும். இவையணைத்தின் காரணமாக பார்ப்பன பாசிச கும்பல் தமிழ்நாட்டில் தனது முக்கியமான எதிரியாக எமது அமைப்பைத்தான் பார்த்தது.

இசுலாமியனின் மனநிலையில் இருந்து பாசிசத்தைப் பார்ப்பதாகவும், கீழே மக்கள் இயக்கத்தைக் கட்டுவதைப் பற்றி அக்கறைப்படுவதைப் போலவும், புரட்சிகர அமைப்பு பாசிச எதிர்ப்பை தலைமை தாங்குவது கோமாளித்தனம் என்றெல்லாம் பேசுகிற இதே மருதையன்தான், சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர். கொண்டுவந்து இசுலாமியர்களை உள்நாட்டு அகதிகளாக்கியபோது, டெல்லியில் அவர்கள் மீதான பாசிச வெறியாட்டம் ஏவிவிடப்பட்டு 59 பேரை துடிதுடிக்கக் கொன்றபோது, காவி-கார்ப்பரேட் பாசிச எதிர்ப்பில் தமிழ்நாட்டில் உறுதியாக இருந்த ஒரேயொரு மா-லெ அமைப்பான எமது அமைப்பை சதி செய்து உடைத்து பாசிச எதிர்ப்பு முகாமை பலவீனமாக்கி பாசிசத்திற்கு சேவை செய்த முதன்மை சூத்திரதாரி. இதை எமது அமைப்பைக் கவனித்துவரும் யாரேனும் மறுக்க முடியுமா? இப்படிப்பட்ட ஒரு நபர் மேற்படியெல்லாம் பேசுவதற்கு எவ்வளவு வன்மமும் ஆணவமும் இருக்க வேண்டும்! பாசிசத்துக்கு சேவை செய்யும் விதமாக பாசிச எதிர்ப்பு முகாமான எமது அமைப்பைப் பிளந்து பலவீனமாக்கிய துரோகத்தைச் செய்த இவர் பாசிச எதிர்ப்புப் போராளியாக வெளியே வலம் வருவது மட்டுமின்றி ‘இன்று நீங்களெல்லாம் (புரட்சிகர அமைப்புகள்) தலைமை தாங்குவீர்களா. புரட்சிகர அமைப்புகள் பாசிச எதிர்ப்பில் பொறுப்புடனும் அக்கறையுடனும் இல்லை. இசுலாமியர் மனநிலையில் இருந்து பாசிசத்தைப் பார்க்கவில்லை. திண்ணையில் அமர்ந்து ஊர்நாயம் பேசுகிறார்கள்’ என்றெல்லாம் பேசுவது எவ்வளவு அருவருப்பானது! பல பத்தாயிரக்கணக்கில் மக்களைத் திரட்டிக்காட்டிய எமது அமைப்பைப் பிளந்துவிட்டு, நீங்கள் அழைத்தால் வள்ளுவர் கோட்டத்தில் புதிதாக ஒரு 5 பேர் வருவார்களா என்று கேலி-கிண்டலுடன் பேசுவது ஆணவத்தின் உச்சமல்லவா!

எனவே, தி.மு.க. விசுவாசியாக மாறி அதைமூடி மறைக்க பாசிச எதிர்ப்பு பற்றி பேசித் திரியும் மருதையன் முன்வைக்கும் கருத்துக்கள் சாரம்சத்தில் அபாயகரமானவை, பாசிச எதிர்ப்பை முனை மழுங்கடித்து பாசிசத்திற்கு சேவை செய்யும் தன்மையிலானவை.

உண்மையிலேயே பாசிச எதிர்ப்பில் அக்கறை கொண்டு தேர்தலின் மூலமே பாசிசத்தை வீழ்த்திவிடலாம், தடுத்துவிடலாம் என்று பேசுபவர்களும், தி.மு.க., காங்கிரசின் பின்னால் போய் இதைச் செய்துவிட முடியும் என்று எண்ணுபவர்களும் நாங்கள் கூறுவதைப் பற்றி சற்று சிந்தித்துப் பாருங்கள். பாசிசத்தை வீழ்த்த எளிமையான, குறுக்கு வழிகள் இல்லை.

  • செங்கனல் ஆசிரியர் குழு

 

000

குறிப்பு : பாசிச எதிர்ப்பில் ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி சமரச சக்திகளை எப்படிக் கையாள வேண்டும், அதில் மருதையனது உபதேசங்கள் எங்கனம் அபாயகரமானவை, தனது தி.மு.க. விசுவாசத்திற்காக புரட்சிகர அமைப்புகளை எவ்வாறு மட்டம்தட்டி, இழிவுபடுத்துகிறார் என்பவைகளைப் பற்றித்தான் இக்கட்டுரையில் எழுதியுள்ளோம். சாராயமா? சனாதானமா? மதுவெறியா? மதவெறியா? மது ஒழிப்பெல்லாம் இப்போதைக்கு சாத்தியமில்லை என்று சாராயப் பிரச்சனை தொடர்பாகவெல்லாம் இவர்கள் பேசியவை பற்றி விரைவில் எழுதுகிறோம்.

 


 

[1] காண்க – ரூட்ஸ் தமிழ் மேற்கண்ட பேட்டி, 52.10 ஆவது நிமிடத்தில்.. https://www.youtube.com/watch?v=04ibJujm260

[2] காண்க – ஆனந்த விகடனுக்கு கோவன் அளித்த பேட்டி https://www.vikatan.com/lifestyle/culture/folk-and-cultural-singer-kovan-interview

[3] பாசிச எதிர்ப்புக்கு தேர்தலும் ஒரு களமே! தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிப்போம்! – இடைவெளி கட்டுரை https://idaiveli.wordpress.com/2021/03/09/elections-also-can-be-a-platform-to-fight-fascism-lets-vote-for-the-dmk-alliance/

[4] முதலில் “பாசிசத்தை தேர்தலுக்கு வெளியில்தான் வீழ்த்த முடியும் என்பதை எல்லாக் கட்சிகளும் புரிந்துள்ளார்கள்” என்று கூறுவது சற்றும் உண்மையில்லாத ஒன்று. பாசிசத்தை வீழ்த்துவது என்றால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை ஒன்றிய ஆட்சியதிகாரத்தில் இருந்து இறக்குவது என்ற வரம்பிற்குள்தான் அனைத்துக் கட்சிகளும் மக்களிடம் பிரச்சாரம் செய்கின்றன.

[5] காண்க – செங்கனல் கட்டுரை, http://senkanal.com/index.php/2023/04/15/factories-act-ammendment/

[6] ஆனந்த விகடனில் வெளியான கோவனது மேற்கண்ட பேட்டி

2 Comments

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  1. நீண்ட மாதங்களுக்குப் பிறகு செறிவான தெரு கட்டுரையைப் பார்க்கிறேன்.

    மருதையனின் முதலாளித்துவ சித்தாந்தக் கருத்துக்களை பொதுவெளியில் அம்பலப்படுத்துவதற்கு இது துணை புரியும் என்று நம்புகிறேன்.

    கட்டுரையில் குறிப்பிட்ட லெனினது மேற்கோள் மருதையனுக்குப் பொருந்தாது என்பதே எனது கருத்து. மார்க்சியம் கற்றிருந்த போதிலும், மருதையன் முதலாளித்துவ சிந்தனையோடு சதிகாரனாகவும் மாறி விடுகிறார். இதை அவரது கிரியா ஊக்கி கோட்பாட்டில் இருந்தே புரிந்துகொள்ள முடியும்.

    அதாவது, திமுகவிற்கு முட்டுக்கொடுப்பதோடு சுருக்கிப் பார்க்க முடியாது. உண்மையில் அவரது நோக்கம், பெயரளவில் கூட இடதுசாரி (மா-லெ) வாசனை முகிழ்த்துவிடக் கூடாது – அமைப்பால் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். இதன்மூலம் தன்னை பாசிஸ்டுகளின் அடியாளாக நிரூபித்திருக்கிறார்.

  2. இன்றைய குழப்பம் நிறைந்த தமிழக அரசியல் சூழலை மிக எளிதாக விளக்கியும் தெளிவான அரசியல் நிலைப்பாட்டை எட்டவும் வழி வகுக்கிறது இக்கட்டுரை. செங்கனல் ஆசிரியர் குழுவினர்க்கு நன்றி