மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து
தேசிய மருத்துவக் கமிசனின் அடாவடி 

அரசு மருத்துவக் கல்லூரிகளின் சிறு தவறையும் ஊதிப் பெருக்கும் தேசிய மருத்துவ கமிசன் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளை பற்றியோ, போதுமான பேராசிரியர்கள் இன்றிப் பாடம் நடத்துவது பற்றியோ, அவைகளால் பேருக்கு இயக்கப்படும் இலவச மருத்துவமனைகள் பற்றியோ கவலைப்படுவதில்லை. 

 

 

தமிழ்நாட்டில் உள்ள மூன்று முக்கிய அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்துள்ள தேசிய மருத்துவ கமிசன்,  இளநிலை மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கும் தடைவிதித்துள்ளது. சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் மருத்துவக் கல்லூரி மற்றும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய மூன்று அரசுக் கல்லூரிகளில் வருகைப் பதிவேட்டினைப் பராமரிக்கும் பயோமெட்ரிக் கருவிகள் சரியாக இல்லை, சிசிடிவிக்கள் சரியாக இயங்கவில்லை எனக் கூறி அதன் அங்கீகாரம் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. 

மருத்துவக் கல்விக்கான நீட் நுழைவுத் தேர்வு நடந்து முடிந்து, மாணவர் சேர்க்கை தொடங்கவிருக்கும் நிலையில் இந்த நடவடிக்கையின் காரணமாக இக்கல்லூரிகளில் உள்ள 500 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்த முடியாத சூழலை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் படிப்பிற்கான கட்டணமாக ரூபாய் 13,610  மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இம்மூன்று கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் சுமார் 500 மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் படிக்கும் வாய்ப்பும் பறிபோகும். 

வருகைப் பதிவேட்டினைப் பராமரிக்கும் முறையும், சிசிடிவிக்கள் வைத்திருக்கும் முறையும் ஒரு மருத்துவக் கல்லூரியில் போதுமான அளவிற்கு பேராசிரியர்கள் இருக்கிறார்களா என்பதைப் பரிசோதிப்பதற்கு தேசிய மருத்துவ கமிசன் கொண்டுவந்துள்ள நடைமுறைகள். தேசிய மருத்துவ கமிசன் உருவாக்கப்படுவதற்கு முன்னர் நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் ஆய்வு மேற்கொண்டு தேவையான கட்டமைப்பு வசதிகள் உள்ளனவா? போதுமான பேராசிரியர்கள் இருக்கிறார்களா? என சோதிக்கும் வேலையை இந்திய மருத்துவ கவுன்சில் செய்து வந்தது. ஆனால் இந்திய மருத்துவக் கவுன்சிலில் மலிந்திருந்த ஊழல் முறைகேடுகளின் காரணமாக, தனியார் மருத்துவக் கல்லூரிகள் தங்களது அங்கீகாரத்தை தக்கவைத்துக்கொள்ள பல்வேறு திருட்டுத்தனங்களைச் செய்து ஏமாற்றி வந்தனர். 

தனியார் மருத்துவக் கல்லூரிகள் தங்கள்து லாபத்தைப் பெருக்குவதற்காக போதுமான மருத்துவப் பேராசிரியர்களை பணிக்கு அமர்த்தாமல், இன்னும் சொல்லப்போனால் பேருக்கு இலவச மருத்துவமனை என்ற ஒன்றை வைத்துக் கொண்டு, ஆய்வு நேரத்தில் பேராசிரியர்களையும், நோயாளிகளையும் போலியாக காட்டி ஏமாற்றி வந்தனர். 

இந்திய மருத்துவக் கவுன்சில் கலைக்கப்பட்டு 2019ம் ஆண்டு தேசிய மருத்துவ கமிசன் உருவாக்கப்பட்ட பிறகு, அது மருத்துவக் கல்லூரிகளின் தரத்தை ஆய்வு செய்யும் வேலையைச் செய்து வருகிறது. தனியார் மருத்துவக் கல்லூரிகளைப் போல் லாபத்திற்காக இல்லாமல் அரசு மருத்துவக் கல்லூரிகளும், அரசு மருத்துவமனைகளும் மக்களுக்கு இலவச மருத்துவத்தை வழங்க நடத்தப்படுகின்றன. அங்கே பேராசிரியர்களையும், நோயாளிகளையும் போலியாக கொண்டுவந்து ஏமாற்றும் அவசியம் இல்லை.  

பயோமெட்ரிக் பதிவு இயந்திரங்களைப் பராமரிக்காததும், சிசிடிவிக்களை பராமரிக்காததும் தேசிய மருத்துவக் கமிசன் வழிகாட்டுதல்களை மீறிய சிறிய தவறுகள் தான். இந்தத்  தவறுகளைச் சுட்டிக் காட்டி சரி செய்வதற்கான கால அவகாசம் கொடுத்திருக்க வேண்டும். மாறாக கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்துச் செய்திருப்பது என்பது தேசிய மருத்துவக் கமிசன் உள்நோக்கத்துடன் செயல்படுவதைக் காட்டுகிறது. ஸ்டான்லி மருத்துவ கல்லூரி போன்ற மாநிலத்தின் பெரிய அரசு மருத்துவக் கல்லூரியிலேயே இது போன்ற சொத்தைக் காரணங்களைக் கூறி அங்கீகாரத்தை ரத்துச் செய்து, மாணவர் சேர்க்கைக்குத் தடை விதிப்பது கண்டிக்கத்தக்கது. 

அரசு மருத்துவக் கல்லூரிகளின் சிறு தவறையும் ஊதிப் பெருக்கும் தேசிய மருத்துவ கமிசன் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளை பற்றியோ, போதுமான பேராசிரியர்கள் இன்றிப் பாடம் நடத்துவது பற்றியோ, அவைகளால் பேருக்கு இயக்கப்படும் இலவச மருத்துவமனைகள் பற்றியோ கவலைப்படுவதில்லை. 

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவித இடங்களுக்கு மட்டுமே மாநில அரசு நிர்ணயிக்கும் கட்டணம் என்றும் மீதமுள்ள 50 சதவித இடங்களைத் தனியார் கல்லூரிகள் தங்கள் இஷ்டம் போல கட்டணங்களை நிர்ணயித்து கொள்ளையடித்துக் கொள்ளலாம் என வழி செய்து கொடுத்ததும் இதே தேசிய மருத்துவக் கமிசன் தான். மருத்துவக் கல்வியை முற்றிலும் தனியார்மயமாக்குவதற்கு இது போன்ற வேலைகளைத் தொடர்ந்து செய்து வரும் இந்த அமைப்பு தற்போது மிகக் குறைந்த கட்டணத்தில் மருத்துவக் கல்வியை வழங்கிவரும் அரசு மருத்துவக் கல்லூரிகளை வேண்டுமென்றே பழிவாங்குகிறது. 

  • அன்பு 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன