நீதிக்காக போராடும் மல்யுத்த வீராங்கனைகள்
பாலியல் குற்றவாளியைப் பாதுகாக்கும் பாஜக அரசு

“நமது ஜனநாயகம் நமது உத்வேகம், நமது அரசியலமைப்பு நமது தீர்மானம்” என நரேந்திர மோடி, “ஜனநாயகத்தின் கோவில்” என்று வர்ணிக்கப்படும் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தைத் திறந்து வைத்து தனது ஆட்சியின் ஜனநாயகம் குறித்து சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்த அதே வேளையில், புதிய பாராளுமன்றக் கட்டிடத்திற்கு அருகிலேயே ஜந்தர் மந்தர் பகுதியில் அமைதியான வழியில் போராடிக் கொண்டிருந்த மல்யுத்த வீராங்கனைகளை தில்லி போலீசார் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்து ஜனநாயகத்தின் உண்மையான அர்த்தத்தை நடைமுறையில் காட்டிவிட்டனர்.

 

 

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக உள்ள, பாஜக எம்.பி. பிர்ஜ் பூசன் சரண் சிங்கிற்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பிர்ஜ் பூசன் சிங்கை கைது செய்ய வேண்டும், இது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை பொது வெளியில் வெளியிட வேண்டும், இந்திய மல்யுத்தக் கழகத்தின் தற்போதைய நிர்வாகக் குழுவை முற்றிலுமாக கலைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மல்யுத்த வீராங்கனைகள் ஜனவரி மாதம் முதல் பல கட்டங்களாகப் போராடி வருகின்றனர்.

ஒலிம்பிக் போட்டிகளிலும், ஆசியப் போட்டிகளிலும், இதுபோன்ற பல சர்வதேச போட்டிகளிலும் இந்தியா சார்பில் போட்டியிட்டு பல பதக்கங்களை வென்ற முன்னணி மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகாட், சங்கீதா போகாட், சாக்ஷி மாலிக், போன்றவர்களுடன், தேசிய சர்வதேசிய மல்யுத்த போட்டிகளில் விளையாடிய நூற்றுக்கணக்கான வீராங்கனைகள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மல்யுத்த வீராங்கனைகளின் இந்தப் போராட்டத்தில் அவர்களுக்கு ஆதரவாக பஜ்ரங் புனியா, சத்யவர்த் கடியான், சோம்வீர் ரதி உள்ளிட்ட மல்யுத்த வீரர்களும் களத்தில் உள்ளனர்.

கடந்த ஜனவரி மாதத்தில் 30க்கும் மேற்பட்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மல்யுத்த கூட்டமைப்பு கட்டிடத்திற்குள் ஆர்ப்பாட்டம் செய்தனர். மல்யுத்த வீராங்கனைகள், பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதும் பயிற்சியாளர்கள் பலர் மீதும் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

 

 

இது தொடர்பாக பேசிய வினேஷ் போகாட், “பிரிஜ் பூஷண் சிங்கும் பயிற்சியாளர்களுக்கான தேசிய முகாமில் பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்குப் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுக்கின்றனர்,” என்று அழுதபடியே கூறினார்.

“அவர்கள் எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட்டு எங்களை துன்புறுத்துகிறார்கள். எங்களைச் சுரண்டுகிறார்கள்,” என்றும் போகாட் கூறினார்.

அதனைத் தொடர்ந்து கூட்டமைப்பின் தற்போதைய நிர்வாகக் குழு கலைக்கப்பட்டு பிர்ஜ் பூசன் சிங் கைது செய்யப்படும் வரை தத்தம் வீடுகளுக்கு திரும்பப் போவதில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். அப்போது இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க மேற்பார்வைக் குழுவை அமைப்பதாக ஒன்றிய அரசு அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

ஆனால் பாலியல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட மேற்பார்வைக் குழு கண்துடைப்புக்கு ஒரு விசாரணையை நடத்திவிட்டு ஒரு அறிக்கையை அரசிடம் சமர்பித்துள்ளது. இதுவரை அந்த அறிக்கை வெளியிடப்படாததையும், பிர்ஜ் பூசன் சிங் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாததையும் வைத்து, அரசு பிர்ஜ் பூசனைக் காப்பாற்றும் வேலையில் இறங்கியுள்ளதைப் புரிந்து கொண்ட மல்யுத்த வீராங்கனைகள் அடுத்த கட்டப்போராட்டத்தை அறிவித்தனர்.

ஏபரல் மாத இறுதியில் புதுதில்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் தங்கி போராடத் தொடங்கிய மல்யுத்த வீராங்கனைகள் பிர்ஜ் பூசனுக்கு எதிராக தில்லி போலீசில் புகார் அளித்தனர். ஆனால் முதலில் அந்தப் புகார்களுக்கு எப்.ஐ.ஆர். போட மறுத்த தில்லி போலீசார், மல்யுத்த வீராங்கனைகள் உச்ச நீதிமன்றத்தை அனுகிய பிறகே பிர்ஜ் பூசன் மீது இரண்டு எப்.ஐஆர்களைப் பதிவு செய்தனர். அதில் ஒன்று போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது.

 

 

ஆனால் இந்தப் புகார்களின் மீது வேறு எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. பிர்ஜ் பூசன் கைத் செய்யப்படவில்லை. மாறாக போராடும் வீராங்கனைகள் மீது தனது அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டது தில்லி போலீசு. முதலில் இரவு நேரத்தில் மின்சாரத்தை துண்டிப்பது, தண்ணீர் இணைப்புகளைத் துண்டிப்பது போன்ற வேலைகளைச் செய்தனர். பின்னர் தில்லியில் மழை பெய்து போராட்டத் திடலை மழைநீர் சூழ்ந்த போது போராடும் வீரர்களுக்கு போர்வையும், உலர்ந்த படுக்கைகளும் கொண்டுவந்த அவர்களது ஆதரவாளர்களை தடுத்து நிறுத்தியதுடன் அவர்களைத் தாக்கி, விரட்டியடித்தனர்.

அதேசமயம் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டங்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவு பெருக ஆரம்பித்தது. மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக மற்ற விளையாட்டு வீரர்கள் பலர் தங்களது ஆதரவை வெளிப்படையாக காட்ட தொடங்கினர். ஹரியானா மாநில விவசாய சங்கப் பிரதிநிதிகள் போராடும் வீரங்கனைகளைச் சந்தித்து ஆதரவைத் தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரியங்கா காந்தி போராட்டக்காரர்களைச் சென்று சந்தித்தார்.

பிர்ஜ் பூசன் சிங்கிற்கு எதிராக இத்தனை எதிர்ப்புகள் இருந்தும் அவரைப் பாஜக அரசு தொடர்ந்து பாதுகாத்து வருகிறது. அவர் மீது நடவடிக்கைகள் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை. உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பிஜ் பூசன் சிங், அம்மாநிலத்தில் மூன்று மாவட்டங்களில் பாஜக கட்சியில் செல்வாக்கு செலுத்தும் தலைவராக உள்ளார். இம்மாவட்டங்களில் உள்ள 4 எம்.பி. தொகுதிகளிலும், 10 எம்.எல்.ஏ. தொகுதிகளிலும் இவர் கை காட்டுபவர்தான் பாஜக வேட்பாளராக முடியும்.

கடந்த 2011 ஆண்டு முதல் தொடர்ந்து மூன்று முறை இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக உள்ளார். அவரது மகனும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் துணைத்தலைவருமான பிரதீக் பூசன் உ.பி.யின் பாஜக எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

 

 

பிர்ஜ் பூசன் சிங் மீது கொலை, தீவைப்பு மற்றும் நாசவேலையில் ஈடுபட்டதாக ஏற்கெனவே பல வழக்குகள் பதியப்பட்டும் விசாரணையின்றி கிடப்பில் போடப்பட்டுள்ளன. சமீபத்தில், ஜார்கண்டில் நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய மல்யுத்த போட்டியின் போது, ​​அவர் மேடையிலேயே ஒரு மல்யுத்த வீரரை அறைந்துள்ளார்.

அரசியல் செல்வாக்கும், அதிகாரத் திமிறும் கொண்ட பிர்ஜ் பூசன் சிங் மீதான பாலியல் புகார்களை பாஜக அரசு கண்டுகொள்ளவே இல்லை. மாறாக போராட்டக்காரர்களை எப்படி ஒடுக்குவது என்றுதான் பார்த்தது. இதன் தொடர்ச்சியாகத் தான் கடந்த ஞாயிறன்று போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று கைது செய்துள்ளனர்.

தற்போது அடுத்த கட்டப் போராட்டமாக இந்தியா சார்பில் போட்டியிட்டு ஒலிம்பிக், காமன்வெல்த், மற்றும் ஆசிய போட்டிகளில் தாங்கள் வென்ற பதக்கங்களை கங்கை நதியில் தூக்கியெறியப் போவதாக அறிவித்துள்ள வீராங்கனைகள், பிர்ஜ் பூசனைக் கைது செய்ய ஐந்து நாள் கெடு விதித்துள்ளனர். பெண் பெருமை, பாரதத் தாய், தேசிய பெருமிதம் என பெண்களைப் பற்றி வாயளவில் புகழும் காவிக் கும்பல் தங்களது அரசியல் லாபத்திற்காக எத்தகைய பாலியல் குற்றவாளியையும் பாதுகாக்கும் என்பதையும், அதற்காக முன்னணி விளையாட்டு வீரர்களையும், அவர்கள் தேடித்தந்த பெருமையையும் கூடப் பலிகொடுக்கும் என்பதையும் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் அம்பலப்படுத்தியுள்ளது.

  • அழகு

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன