2000 ரூபாய் நோட்டும் காவிகளின் அண்டப்புளுகும்

2000 ருபாய் நோட்டை திரும்பப் பெறுவது கறுப்புப் பணத்தை ஒழிக்கும், ஊழலை ஒழிக்கும் எனப் புளுகுகிறார்கள். கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும் என்பார்கள். ஆனால் மானங்கெட்ட காவிகளின் அண்டப்புளுகு எட்டு நிமிடம் கூட தாக்குப்பிடிக்கவில்லை.

 

 

2016ம் ஆண்டு பணமதிப்ப்பிழப்பு நடவடிக்கையினை மோடி தலைமையிலான காவி கார்ப்பரேட் பாசிச கும்பல் அமுல்படுத்தியபோது நாட்டு மக்கள் அனைவரும் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்தனர். மக்கள் வங்கிகளிலும், ஏடிஎம் வாசல்களிலும் நீண்ட வரிசைகளில் காத்துக் கிடந்தனர். பணம் எடுப்பதற்காக வரிசையில் நின்று பலர் உயிரைவிட்டனர். அவசர மருத்துவ தேவைகளுக்கும், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கும் கூடப் பணம் எடுக்க முடியாமல் அவதிப்பட்டனர். பல லட்சம் சிறு தொழில் கூடங்கள் நட்டமடைந்து மூடப்பட்டன. அதனை நம்பியிருந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்தனர்.

புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுக்களில் 24 சதவீத நோட்டுக்களைச் செல்லாது என அறிவித்த மோடி அரசு அதற்கு பதிலாக அன்றைக்குக் கொண்டு வந்த 2000 ரூபாய் நோட்டுக்களைத் தற்போது செல்லாது என அறிவித்துள்ளது. வரும் செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு 2000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என மத்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

இந்த அறிவிப்பு வந்தவுடனேயே 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது பட்ட துயரங்கள் அனைத்தும் நினைவுக்கு வந்து மக்களைப் பயமுறுத்துகின்றது. 23ம் தேதி முதல் 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்த போதும் 21ம் தேதி முதலே மக்கள் வங்கிகளுக்குப் படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

பாஜக தலைவர்கள் வழக்கம் போல இந்த நடவடிக்கையியனை “கறுப்புப் பணத்திற்கு எதிரான இரண்டாவது சர்ஜிகல் ஸ்டிரைக்” எனப் புகழ்ந்து பிரச்சாரம் செய்கின்றனர். கறுப்புப் பணத்தை ஒழிப்பதாக கூறிக்கொண்டு 2000 ரூபாய் நோட்டைக் கொண்டுவந்த அதே கும்பல் இன்று 2000 ரூபாய் நோட்டால் கறுப்புப் பணம் அதிகரித்துவிட்டதாக கூறுகிறது.

கடந்த முறை 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்த போது 20% நோட்டுக்கள் அதாவது 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கறுப்புப் பணம் திரும்ப வராது என மோடி அரசு கூறியது. ஆனால் 99.3% நோட்டுக்கள் வங்கிகளுக்குத் திரும்ப வந்து இவர்களது கூற்றைப் பொய்யென நிரூபித்தன. இருந்தும் கூட சிறிதும் வெட்கமின்றி அதே காரணத்தை மீண்டும் கூறிவருகின்றனர்.

அதேபோல, 2019ம் ஆண்டு முதலே 2000 ரூபாய் நோட்டுக்களை அச்சடிப்பதை ரிசர்வ் வங்கி நிறுத்திவிட்டு புழக்கத்தில் இருந்து அதனை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் சாதாரண மக்கள் கையில் 2000 ரூபாய் நோட்டுக்கள் இல்லை என்றும் பெரும் பணக்காரர்கள் மற்றும் பதுக்கல்காரர்களிடம் தான் அவை இருக்கின்றன என்று அடுத்த பொய்யை பரப்பி வருகின்றனர். இதனையே வேறு வார்த்தைகளில் என்னிடம் ஒரு 2000 ரூபாய் நோட்டு கூட இல்லை என்றும் 2000 ரூபாய் நோட்டு திரும்ப பெறும் அறிவிப்பால் திமுகவினர்களுக்கு தான் பாதிப்பு என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஆனால் கடந்த ஆண்டு இறுதியில் மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளபடிப் பார்த்தால் 245 கோடி 2000 ரூபாய் நோட்டுக்கள், அதாவது 4.95 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நோட்டுக்கள் இன்றும் புழக்கத்தில் உள்ளன. மே மாதம் 19ம் தேதி ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகள் நேரடியாக பணம் எடுப்பவர்களுக்கு கொடுத்துள்ளன, ஏடிஎம்களில் நிரப்பிவந்துள்ளன. ஆகையால் சாதாரண மக்களிடம் 2000 ரூபாய் நோட்டுக்கள் இல்லை, அதனைச் செல்லாது என்று கூறுவதால் அவர்களுக்கு பாதிப்பில்லை என்று கூறுவது சுத்தப் பொய்.

அடுத்ததாக பணப்பரிவர்த்தனை டிஜிட்டல்மயமாகிவிட்டது ஆகையால் மக்கள் அதிக பாதிப்பை அடையமாட்டார்கள் என்றொரு வாதத்தையும் பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால் கடந்த ஆறு ஆண்டுகளில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் அளவு அதிகரித்திருந்தாலும் அவை பெரும்பாலும் சிறிய தொகையைச் செலுத்துவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. இன்றைக்கும் பணமாக பரிவர்த்தனை செய்யப்படுவதுதான் பிரதானம். கடந்த அக்டோபர் மாத நிலவரத்தின்படி 30.88 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கான ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் உள்ளன. இது 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்னர் இருந்த 17 லட்சம் கோடி என்ற அளவை விட 72 சதவீதம் அதிகம். ஆனால் இதையெல்லாம் மறைத்துவிட்டு மக்கள் டிஜிட்டல் பரிவர்த்தணைக்கு மாறிவிட்டார்கள் ஆகையால் பணமதிப்பிழப்பு அவர்களைப் பாதிக்காது என காதில் பூச்சுற்றுகிறார்கள்.

உண்மையில் பண மதிப்பிழப்பு நடவடிக்கைகள் பெறும் பணக்காரர்களையும், ஊழல் பேர்வழிகளையும், பதுக்கல்காரர்களையும் பாதிக்கவில்லை, பாதிக்கப்போவதும் இல்லை. கடந்த முறை ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பு மக்களுக்குத்தான் அதிர்ச்சியளிக்கும் வகையில் திடீரென அறிவிக்கப்பட்டது. ஆனால் பாஜக ஆதரவு தொழிலதிபர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும், கட்சித்தலைவர்களுக்கும் பல நாட்களுக்கு முன்னதாகவே இவ்விசயம் கசியவிடப்பட்டது. இதனை ராஜஸ்தான் மாநில பாஜக எம்.எல்.ஏ. பவானி சிங் ரஜாவத் பகீரங்கமாகவே ஒத்துக்கொண்டுள்ளார்.

பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட பிறகும் கூட சாதாரண மக்கள்தான் தங்களது சொந்தப் பணத்தை எடுக்க வங்கி வாசலில் காத்துக் கிடந்து உயிரைவிட்டனர். வரி கட்டாமல் ஏய்க்கும் பெரும் பணக்கார தொழிலதிபர்கள், பலகோடி ரூபாய் கறுப்புப் பணத்தை சம்பளமாக வாங்கும் சினிமா நட்சத்திரங்கள், லஞ்சம் வாங்கிக் குவிக்கும் அரசு அதிகாரிகள், ஊழல் அரசியல்வாதிகள் என யாரும் பணம் எடுக்க ருபாய் நோட்டுக்களை மாற்ற வரிசையில் நிற்கவில்லை.

செல்லாத பணத்தை குறைந்த மதிப்புடைய நோட்டுக்களாக, தங்கமாக, அமெரிக்க டாலர்களாக, கமிசனுக்கு மாற்றித் தரும் புரோக்கர்கள் நாடு முழுவதும் இதற்கென செயல்பட்டனர். அவர்களைத் தடுக்கவோ கைது செய்யவோ அரசு எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்த்தது.

அமித்ஷாவைத் தலைவராகக் கொண்ட குஜராத் கூட்டுறவு வங்கி ஒன்று, பணமதிப்பிழப்பு அறிவிப்பு வந்த அடுத்த ஐந்து நாட்களில் 750 கோடி ரூபாய் அளவிற்கான வைப்புத் தொகையை பெற்றது அம்பலமானது. நாடு முழுவதும் இது போன்ற பல நூறு கூட்டுறவு வங்கிகளில் கறுப்புப் பணம் வெள்ளையாக்கப்பட்டது. செல்லாத நோட்டுக்களை 37 சதவித கமிசனுக்கு மாற்றிக்கொள்வதற்கு அமித்ஷாவின் வீட்டிற்கு முன்பாகவும், அலுவலகத்திற்கு முன்பாகவும் வரிசைகட்டி நிற்கிறார்கள் என அமித்ஷாவின் நண்பரும் அரசியல் குருவுமாகிய யதின் ஓஜா மோடிக்குக் கடிதம் எழுதினார். 

ஆனால் இன்றுவரை கறுப்புப் பணத்தை மாற்றிக் கொடுத்த புரோக்கர்கள் ஒருவர் மீது கூட வழக்குப் பதியப்பட்டு தண்டிக்கப்படவில்லை. இருந்தும் 2000 ருபாய் நோட்டை திரும்பப் பெறுவது கறுப்புப் பணத்தை ஒழிக்கும், ஊழலை ஒழிக்கும் எனப் புளுகுகிறார்கள். கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும் என்பார்கள். ஆனால் மானங்கெட்ட காவிகளின் அண்டப்புளுகு எட்டு நிமிடம் கூட தாக்குப்பிடிக்கவில்லை. 

கடந்த முறையைப் போன்றே இந்த முறையும் நோட்டுக்களை மாற்றும் வேலை துரிதமாக நடக்கிறது. பணத்தை மாற்றுவதற்கு தங்க நகைகள் வாங்குவது ரிசர்வ் வங்கி அறிவிப்பிற்குப் பிறகு பலமடங்கு அதிகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன. எனவே 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கு கறுப்புப் பண பேர்வழிகளுக்குத் தடையேதும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

ஆனால் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுக்கள் அனைத்தும் வங்கிகளுக்குத் திரும்ப வந்து கறுப்புப் பணத்தை ஒழிப்பதாக கூறியவர்கள் முகத்தில் காறி உமிழ்ந்தால் கூட அதனைத் துடைத்துக் கொண்டு மீண்டும் அதே பொய்யை அவர்கள் திரும்பத் திரும்பக் கூறுவார்கள்.

2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் நோக்கமாக கூறப்பட்டவைகள் அனைத்தும் தோல்வியடைந்துவிட்டன அதன் மிச்ச சொச்சமாக இருப்பது இந்த 2000 ரூபாய் நோட்டு மட்டும்தான். இன்று அதனையும் செல்லாது என அறிவித்துவிட்டனர். ஊழல் ஒழிப்பு கசப்பு மருந்து என்ற பெயரில் தொடுக்கப்பட்ட தாக்குதலுக்கு பலியான நூற்றுக்கணக்கானவர்களது மரணத்திற்கும், வாழ்க்கையிழந்து துயரப்பட்ட பலலட்சம் உழைக்கும் மக்களுக்கும் இதுவரை பதிலேதும் சொல்லாத காவிக்கும்பல் இன்று மீண்டும் அதே நடவடிக்கையைக் கையில் எடுத்துள்ளது.

  • வின்சென்ட்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன