தேசிய கல்வி கொள்கை 2020
தமிழக அரசு முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்!
பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு

பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு – தமிழ்நாடு

ccce.eduall@gmail.com – 9444380211


16-05-2023

NEP–2020: தமிழ்நாடு அரசு முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்!

மாநிலக் கல்விக் கொள்கையைத் தயாரிப்பதற்காக அமைக்கப்பட்ட மாநில உயர்நிலைக் கல்விக் குழுவிலிருந்து பேரா. ஜவகர் நேசன் விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் தனது பத்திரிக்கை செய்தியில் “இரகசியமாகவும், ஜனநாயகமற்ற முறையிலும் செயல்படும் தலைமையைக் கொண்டுள்ளதாலும், சில மூத்த IAS அதிகாரிகளின் அதிகார எல்லை மீறல்களாலும், முறையற்ற தலையீடுகளாலும் இயங்க முடியாமல் உயர்நிலைக் கல்விக் குழு தடுமாறிக் கொண்டிருக்கிறது. அதன் விளைவாக, தேசியக் கல்விக்கொள்கை 2020-ன் அடியொற்றி மாநிலக் கல்விக்கொள்கையை வடிவமைக்கும் திசையை நோக்கிக் இக்குழு சென்று கொண்டிருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.

இன்னும் ஓரிரு மாதங்களில் கல்விக் கொள்கை அறிக்கை வெளியாகிவிடும் என்று மிகவும் எதிர்பார்த்திருந்த நிலையில் மாநிலக் கல்விக் கொள்கையைத் தயாரிப்பதற்காக அமைக்கப்பட்ட உயர்நிலைக் கல்விக் குழுவிலிருந்து அதன் முக்கிய உறுப்பினரான பேரா. ஜவகர் நேசன் வெளியேறியிருக்கிறார். மேலும் வெளியேறுவதற்கானக் காரணமாக அவர் முன்வைத்துள்ள விமர்சனங்கள் மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

ஒன்றியப் பாஜக அரசு கொண்டுவந்த தேசிய கல்விக் கொள்கையை அன்று தமிழகத்தின் எதிர்கட்சியாக இருந்த திமுக எதிர்த்தது. 2021-ல் ஆட்சிக்கு வந்த உடன் 13-08-2021 அன்று சட்டசபையில் ‘தமிழ்நாட்டிற்கென தனித்துவமான புதிய கல்விக் கொள்கையை உருவாக்க ஒரு குழு அமைக்கப்படும்’ என்று அறிவித்தது. அதன் பிறகு 13 பேர் கொண்ட குழுவை அமைத்து அதற்கான அரசாணையை 05-04-2022 அன்று வெளியிட்டது. இக்குழுவை, “தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்காலக் குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கென தனித்துவமான மாநில கல்விக் கொள்கை ஒன்றை வகுப்பதற்கு” ஆன கல்விக் குழு என்றே திமுக அரசு அறிவித்தது.

இதற்கிடையில், NEP-ல் சொல்லப்பட்டுள்ள பல பரிந்துரைகளை வெவ்வேறு பெயர்களில் (பள்ளிகல்வி மற்றும் உயர்கல்வியில்) தமிழக அரசு தொடர்ந்து நடைமுறைப்படுத்திக் கொண்டே வருகிறது. தேசிய கல்விக் கொள்கையில் உள்ள நல்ல அம்சங்களை எடுத்துக்கொள்ளலாம் எனப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியிருந்தார். தமிழகத்தில் உள்ள தானியார் கல்வி நிறுவனங்கள் NEP-ன் பரிந்துரைகளை மிகத்தீவிரமாக அமல்படுத்தி வருகின்றனர். மாநிலத்திற்கான கல்விக் கொள்கையைத் தயாரிப்பதற்கு குழு அமைக்கப்பட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில், தமிழகத்திலுள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் NEP-ன் பரிந்துரைகளை அமல்படுத்தி வருவதைக் குறித்து எந்த வினையும் ஆற்றாமல் தமிழக அரசு மௌனம் காத்து வருகிறது. இச்சூழலில் தான் மாநிலக் கல்விக் குழுவில் உள்ள பேரா. ஜவகர் நேசன் தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையிலேயே மாநிலக் கல்விக் குழு பயணிக்கிறது என்று முன்வைத்துள்ள குற்றச்சாட்டானது தேசியக் கல்விக்கொள்கையில் தமிழக அரசு இரட்டை நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்கிறதோ என்ற ஐயத்தை எழுப்புகிறது.

மேலும் “மூத்த ஐஏஎஸ் அதிகாரி த.உதயச்சந்திரன், கடும் சினத்துடன் தகாத வார்த்தைகளைக் கூறி என்னை அச்சுறுத்தி, அவர் திணிக்கும் நிபந்தனைகளை வலுக்கட்டாயமாக ஏற்றுச் செயல்பட வேண்டும் என அழுத்தம் தந்தார். இத்தகைய அதிகாரியின் வரம்பு மீறிய செயல்களையும் பாதுகாப்பற்ற நிலையையும் கடந்த சில மாதங்களில் குழுத்தலைவரிடம் பலமுறை முறையிட்டும் கூட, அதற்கு எந்தவித எதிர்வினையும் ஆற்றாமல், அவை அனைத்தையும் புறந்தள்ளும் போக்கையே கடைபிடித்தார்” என்று பேரா. ஜவகர் நேசன் கூறியுள்ளார். தனது இரண்டாவது பத்திரிக்கைச் செய்தியில் இதற்கான விரிவான விளக்கத்தையும் அளித்துள்ளார்.

தமிழகத்திற்கென தனித்துவமான கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட உயர்நிலைக் கல்விக்குழு NEP-2020-ன் பாதையில் செல்கிறது என்றக் குற்றச்சாட்டை குழுவின் முக்கிய நபரே எழுப்பியுள்ளதால் இது குறித்து முறையாக விசாரித்து தமிழக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக்குழு தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறது. கூடவே குழுவின் ஒருங்கிணைப்பாளரே இக்குற்றச்சாட்டை எழுப்பியுள்ளதால் தமிழக அரசால் வெளியிடப்படும் கல்விக் கொள்கையானது அரசாணையில் கூறியுள்ளது போன்று தமிழகத்திற்கென தனித்துவமானக் கல்விக் கொள்கையாக இருக்குமா? என்ற கேள்வி எழுகின்றது. ஆகவே தமிழக அரசு தனியார்மய, வணிகமயக் கார்ப்பரேட் மற்றும் சனாதனக் கூறுகளைக் கொண்டில்லாமல், அறிவியல் கண்ணோட்டத்தினை உருவாக்கும் அடிப்படையில் கல்விக் கொள்கையை தமிழக அரசு உருவாக்கிட தற்போது உள்ள கல்விக் குழுவைக் கலைத்துவிட்டு முழுமையாக கல்வியாளர்களைக் கொண்ட ஒரு புதிய குழுவை உருவாக்கிட வேண்டும் எனப் பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு தமிழக அரசைக் கோருகிறது.

* * * * * * * *

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன