மெக்சிக்கோவின் அதிபராக இருந்த அமெரிக்க உளவாளி

அப்போதுதான் மெக்சிக்கோவின் எண்ணை வளம் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் மெக்சிக்கோ பொருளாதார ரீதியில் வளம் பெருவதுடன், அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலிருந்து வெளிவந்துவிடவும் முடியும் என்ற சூழல் ஏற்பட்டது. அப்படி மெக்சிக்கோ வளர்வதை அமெரிக்கா விரும்பவில்லை. அதன் விளைவு போர்ட்டிலோ மெக்சிக்கோவின் அதிபரானார்.

அந்நிய நாட்டு உளவாளி ஒரு நாட்டின் அதிபராக முடியுமா? அப்படி அதிபரானால் அந்த நாட்டின் நிலைமை என்னவாகும்? இன்னொரு நாட்டின் அரசியலில் தலையிட்டு தனது உளவாளியை அதிபராக்கும் அளவிற்கு சதிவேலையில் ஈடுபடும் நாடு எத்தகைய நாடாக இருக்க முடியும்? ஜனநாயகம், சுதந்திரம், இறையாண்மை என வாய்கிழியப் பேசும் அமெரிக்காதான் இப்படிப்பட்டதொரு கீழ்த்தரமான வேலையைச் செய்துள்ளது.

சமீபத்தில் அமெரிக்காவின் தேசிய ஆவணக் காப்பகம் வெளியிட்ட ரகசிய ஆவணங்களின் புதிய தொகுப்பில், 1976 முதல் 1982 வரையிலான காலகட்டத்தில் மெக்சிக்கோ நாட்டின் அதிபராக இருந்த ஜோஸ் லோபஸ் போர்ட்டிலோ, அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.வைச் சேர்ந்ததொரு உளவாளி என்பது அம்பலமாகியுள்ளது.

1963 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி ஜான் எஃப். கென்னடியின் படுகொலை தொடர்பான சிஐஏ விசாரணை தொடர்பான ஆவணங்களில், நவம்பர் 29, 1976 அன்று நடைபெற்ற சிஐஏ ஏஜென்ட்களின் சந்திப்பின் குறிப்பேடு உள்ளது. அதில் தங்களது உளவாளியாக உள்ள ஒருவர் மெக்சிக்கோவின் அதிபராக வரப்போவதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரி பில் ஸ்டர்பிட்ஸ் கூறியிருக்கிறார்.

 

 

அமெரிக்காவின் அண்டை நாடான மெக்சிக்கோவின் உள்நாட்டு அரசியலைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் விருப்பம். அதற்காக தனது உளவு நிறுவனங்களைப் பயன்படுத்தி பல சதி வேலைகளைச் செய்துள்ளது. 1950 முதல் மெக்சிகோவில் அமெரிக்கா செய்துள்ள சதிவேலைகள் பல ஏற்கெனவே அம்பலமாகியுள்ளன. மெக்சிக்கோவின் ஆயுதப் படைகளுக்கே கூட அமெரிக்க உளவு நிறுவனம் பயிற்சியளித்துள்ளது.

அந்நாட்டின் தலைநகரான மெக்சிக்கோ சிட்டியில் இருந்த அன்றைய சோவியத் யூனியன் மற்றும் சீன தூதரகங்களை உளவு பார்த்தது, தீவிர வலதுசாரிக் குழுக்களுக்கு நிதியளித்து அவர்களை வளர்த்துவிட்டது, இடதுசாரி மாணவர் இயக்கங்களுக்குள் ஊடுருவிச் சீர்குலைப்பது, அதேபோன்று அமெரிக்காவின் ஆதிக்கத்தை எதிர்க்கும் போராட்டங்களையும், இயக்கங்களையும் சீர்குலைப்பது, என அமெரிக்காவின் சதிகள் பல இதற்கு முன்னர் பொதுவெளியில் விடப்பட்ட சி.ஐ.ஏ வின் ரகசிய ஆவணங்களில் வெளிவந்துள்ளன.

அதேபோல மெக்சிக்கோவின் அதிபராக அமெரிக்க உளவாளி ஒருவர் பதவிவகித்தது, வெளிவருவதும் இது முதல் முறையல்ல. அடோல்போ லோபஸ் மேடியோஸ் (1958-1964), குஸ்டாவோ தியாஸ் ஓர்டாஸ் (1964-1970), மற்றும் லூயிஸ் எச்செவர்ரியா (1970-1976) ஆகிய மூன்று மெக்சிகன் அதிபர்களும் அமெரிக்க உளவாளிகள் என்பதும் ஏற்கெனவே அம்பலமானதுதான். இந்த மூன்று அதிபர்களும் தங்களது சொந்த நாட்டு மக்களுக்கெதிராக மிகப்பெரிய் மனித உரிமை மீறல்களையும், பல படுகொலைகளையும் நடத்திய கொடுங்கோலர்களாக இருந்தனர்.

தனது முன்னோடிகளைப் போல லோபஸ் போர்ட்டிலோ, கொடுங்கோலராக இல்லாவிட்டாலும், அமெரிக்க உளவாளியான அவர், மெக்சிக்கோ அதிபராக பதவியேற்ற்ற தருணம் மிகவும் முக்கியமானது. 1960களின் இறுதியில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த மெக்சிக்கோ 1970களின் தொடக்கத்தில்தான் அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்தது. அதே சமயம் அப்போதுதான் மெக்சிக்கோவின் எண்ணை வளம் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் மெக்சிக்கோ பொருளாதார ரீதியில் வளம் பெருவதுடன், அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலிருந்து வெளிவந்துவிடவும் முடியும் என்ற சூழல் ஏற்பட்டது.

அப்படி மெக்சிக்கோ வளர்வதை அமெரிக்கா விரும்பவில்லை. அதன் விளைவு போர்ட்டிலோ மெக்சிக்கோவின் அதிபரானார். அவரது ஆட்சிக்காலத்தில் எண்ணை நிறுவனங்களில் ஊழல் தலைவிரித்தாடியது, மெக்சிக்கோவின் இயற்கை வளம் ஓருசில முதலாளிகளின் பையை நிரப்ப பயன்பட்டது. அவரது ஆட்சிக்காலத்தின் முடிவில் மெக்சிக்கோ பொருளாதாரம் அதல பாதாளத்தில் வீழ்ந்ததுடன், பல கோடி மக்களின் வாழ்க்கையையும் நிர்மூலமாக்கியது.

ஆப்கான், ஈராக் என தனது இராணுவத்தின் பலத்தைக் கொண்டு பல நாடுகளை அமெரிக்கா ஆக்ரமித்திருந்தாலும், பல நாடுகளைத் தனது உளவு நிறுவனங்களைப் பயன்படுத்திக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. லத்தின் அமெரிக்க நாடுகளில் அமெரிக்கா நிகழ்த்திய ஆட்சிக் கவிழ்ப்புகளும் அரசியல் படுகொலைகளும் ஏராளம். இதற்கென ஆண்டுதோரும் கிட்டத்தட்ட 8 லட்சம் கோடி ருபாய்க்கும் அதிகமான தொகையை அமெரிக்கா செலவழிக்கிறது.

உலக நாடுகளில் அமெரிக்காவின் உளவுத்துறை கால்பதிக்காத நாடுகளே இல்லை என்று கூறும் அளவிற்கு அமெரிக்கா மற்ற நாடுகளின் உள்நாட்டு அரசியலில் நுழைந்து வேலை செய்கிறது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் அமெரிக்காவின் உளவு வேலைகள் குறித்து விக்கீலீக்ஸ் ஏற்கெனவே அம்பலப்படுத்தியுள்ளது. தற்போது சி.ஐ.ஏ. ரகசிய ஆவணங்களில் வெளிவந்திருப்பது அமெரிக்காவின் சதிகளில் ஒரு துரும்பு மட்டுமே, அதன் மிகப்பெரிய உளவு வலைப்பின்னல் இன்றைக்கும் தொடர்ந்து இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. ஆகையால், ஒரு நாட்டின் தலைவராக அமெரிக்க உளவாளி ஒருவர் இருந்ததாக வெளிவருவது இது முதல் முறையல்ல என்பது எந்த அளவிற்கு உண்மையோ, அதேபோல இதுவே கடைசி முறையாகவும் இருக்காது என்பது நிச்சயம்.

  • அறிவு

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன