திராவிட மாடலின் நில ஒருங்கிணைப்பு மசோதா,
கார்ப்பரேட்டுகளுக்கான மசோதா!

இந்த நில ஒருங்கிணைப்பு மசோதா உள்நாட்டு தொழில் வளர்ச்சிக்கான முன்தேவைக்கானது அல்ல. கார்ப்பரேட்டுகளின் தேவைக்கேற்பவே – கொள்ளைக்கேற்பவே கையகப்படுத்தப்படுகிறது

ஏழை நாடுகளின் நிலங்களை வளைத்துப் போட்டும் அதன் தொழிலாளர்களை குறைந்த கூலியில் சுரண்டியும் தன் இலாபத்தை கொழிக்க வைக்க வெறிநாயாக அலைகின்றன பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள். இவற்றின் வெறிக்கு இரையாக தழிழ்நாட்டின் நிலத்தின் உள்ள நீரிநிலைகளான, ஆறு, குளம்,  குட்டை, ஏரி, கால்வாய்  போன்றவை இருக்கும்  இடத்தில் தொழில் தொடங்க அனுமதி அளிக்க ஒரு நில ஒருங்கிணைப்பு மசோதாவை கொண்டு வந்திருக்கிறது திராவிட மாடல் அரசு. கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி  இம்மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சட்டமன்றக் கூட்டத் தொடரின் கடைசி நாளான ஏப்ரல் 21 அன்று தமிழக சட்டமன்றத்தில் மிக அதிரடியாக 17 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாவை விவாதத்திற்கு உட்படுத்தாமல், அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்ட 15 மசோதாக்கள் ஊடாகவே கூச்சல் குழப்பத்துடன், எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புகளுடன் அடாவடித்தனமாக குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்ட 12 மணி நேர வேலை மசோதாவின் ஊடாகவே இந்த நில ஒருங்கிணைப்பு மசோதாவும் சந்தடியில்லாமல் நிறைவேற்றப்பட்டுவிட்டது.

 

 

இந்த மசோதா என்ன சொல்கிறது?

இம்மசோதா 100 ஏக்கர் அல்லது அதற்கும் அதிகமான நிலங்களை தொழிற்சாலைகள் அமைப்பதற்குக் குவித்துக் கொடுத்தால், அவற்றில் உள்ள நீர் நிலைகள், ஓடைகள், வாய்க்கால் போன்றவைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று உறுதிமொழியுடன் விண்ணப்பிக்கலாம் என்கிறது. ஆனால், இந்த உறுதிமொழியை சோதித்து உறுதிப்படுத்துவதற்கான அதிகாரம் கொண்ட அமைப்பு பற்றி எதுவும் மசோதாவில் கூறப்படவில்லை. பன்னாட்டு நிறுவனங்களையும், இந்திய தரகு முதலாளிகளையும் தவிர நூறு ஏக்கரில் அமைந்துள்ள நிலத்தில் வேறு யாரும் தொழிற் தொடங்க முடியாது

இவ்விண்ணப்பத்தை பரிசீலிப்பதற்கென ஒரு நிபுணர் குழுவை திராவிட மாடல் அரசு உருவாக்கும். அவை அரசு அதிகாரிகள் சுற்றுச் சூழல் நிபுணர்கள் 5 பேர் உட்பட மொத்தம் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்படும். இக்குழு மாநிலத்தின் முக்கியத்துவம் கருதி அந்த விண்ணப்பங்களை சிறப்புத் திட்டத்தின் கீழ் பரிசீலித்து அங்கீகரிக்கும். இதற்காக அப்பகுதி மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தும். அக்கருத்தும் கூட அமையப்போகும் தொழிற்சாலை பற்றிய கேள்வியாக இருக்கக் கூடாது. நிபுணர் குழுவும் பாதிப்பு இருப்பதாகக் கருதினால் நிராகரிக்க முடியாது. எதிர்ப்புகள் இருப்பின் அவற்றையும் சேர்த்து ஒரு வரைவுத் திட்டத்தை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பத்தான் முடியும். இறுதி முடிவை திராவிட மாடல் அரசுதான் எடுக்கும். 2 மாதங்களில் எவ்வித சிக்கலும் இல்லாமல் நிறைவேற்றித் தரும் இந்த மசோதா குறித்து சட்டசபையில் விவாதிக்காமல் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றுவது ஜனநாயக விரோதமானது என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இப்பகுதியில் நீர்நிலைகள், ஓடைகள், வாய்க்கால்கள், விவசாயம், குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளாக இருந்தாலும் கூட  அவற்றை அடாவடித்தனமாக மக்கள் எதிர்ப்பையும் மீறி மக்கள் விரோத அரசுகள் அபகரித்துக் கொடுக்கும் என்பது 8 வழிச் சாலைத் திட்டம், கெயில் குழாய் பதிக்கும் திட்டம், மின்சார கோபுரம் அமைக்கும் திட்டம், பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டம் போன்றவைகள் நடைமுறை சான்றுகள்.

இந்த மசோதாவானது கார்ப்பரேட்டுகளுக்கு நிலம் வழங்குவதில் உள்ள அனைத்துச் சிக்கல்களையும், சவால்களையும் நீக்கிவிடும். அதாவது, பல்வேறு துறைகளின் அனுமதிக்காக காத்திருக்கவோ, அலையவோ வேண்டியதில்லை. இவை அனைத்தையும் ஒரே விண்ணப்பத்தின் கீழ் வழங்கி எஜமானர்களின் அலைச்சலை, இலஞ்சத்தை சுருக்கி அண்ணா ஹசாரேவின் சிங்கிள் விண்டோ சிஸ்டத்தின் மூலம் நிறைவேற்றித் தரும்.

இதற்கேற்ப நீர்நிலைகளைப் பாதுகாக்கும் சட்டங்கள் அனைத்தும் நீர்த்துப் போக வைக்கும். இதன் மூலம் நீர்நிலைகள், வாய்க்கால்கள், ஏரி, குளங்கள், ஓடைகள் அனைத்தும் தனியாருக்கு தாரைவார்க்கப்படும்..

இந்த நில ஒருங்கிணைப்பு மசோதா உள்நாட்டு தொழில் வளர்ச்சிக்கான முன்தேவைக்கானது அல்ல. கார்ப்பரேட்டுகளின் தேவைக்கேற்பவே – கொள்ளைக்கேற்பவே கையகப்படுத்தப்படுகிறது. அதனால், சிறு,குறு, நடுத்தர, தேசிய தொழில்கள் பலன் அடைய முடியாது.. .

எனவே, இம்மசோதா தேசிய நலன்களுக்கானதோ, உள்நாட்டுக்கான உற்பத்தியை மேம்படுத்துவதற்கானதோ அல்ல. மாறாக மறுகாலனியாக்கத்தின் கீழ் ஏகாதிபத்திய நிதிமூலதன ஆதிக்கத்தை நிறுவவும், சர்வதேச சந்தைக்கான உற்பத்தியை மேற்கொள்ளவும், ஏகாதிபத்திய கைக்கூலிகளான ஆட்சியாளர்கள் மூலம் கொண்டுவரப்படும் இம்மசோதா கார்ப்பரேட்டுகளுக்கானது, ஏகாதிபத்திய நிறுவனங்களுக்கானது.

இதற்கேற்ப இம்மசோதாவின் செயல்முறைகள் அனைத்தும் மாற்றியமைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக வரையறுக்கப்பட்ட சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக்கேற்ப செயல்படத் தேவை இல்லை.

இம்மசோதா சட்டமாக நிறைவேற்றப்பட்டுவிட்டால், நிலத்தை கையகப்படுத்தும் பகுதிகளிலுள்ள மக்களை அப்புறப்படுத்தவும் குடியிருப்புகளை இடித்துத் தள்ளவும் திராவிட மாடல் அரசு தயங்காது.

பசுமைப்புரட்சி திட்டம் கொண்டுவரப்பட்ட போதும் விவசாய உற்பத்தி பெருகும், விவசாயத்தில் முதலாளித்துவ உற்பத்தி வரும் என்று ஆட்சியாளர்கள் கதையளந்து அதனை விவசாயிகள் தலையில் இறக்கினர். இத்துடன் ஏகாதிபத்திய நாடுகளின் காலாவதியாகிப்போன எந்திரங்களை விவசாயிகள் தலையில் கட்டி, அவற்றின் விதைகளுக்கும், உரங்களுக்கும் நமதூ நிலத்தைப் பலியாக்கி அவை இலாபம் கொழுக்கவும் நம் விவசாயிகளைக் கடனாளியாக்கவும் செய்தது.

இது ஒருபுறம் உற்பத்தியைப் பெருக்கினாலும் மறுபுறத்தில் உள்நாட்டு விதைக்கும், இயற்கை உரத்திற்கும் பழக்கப்பட்டுப்போன நமது நிலத்தை அந்நிய விதைக்கும், உரத்திற்கும் உறைந்து போகச் செய்து சிதைத்துவிட்டது.

இதன்விளைவு இன்றுவரை ஏகாதிபத்தியங்கள் திணித்த செயற்கை உரத்திற்கும், விதைக்கும் கையேந்தி நிற்கும் அவலத்தை எவராலும் மறுக்க முடியாது. இதே நிலையில்தான் நாளை நீருக்கும் உணவுக்கும் நிலத்திற்கும் ஏற்படும்.

உள்நாட்டுத் தேவைக்கான உற்பத்தியைச் சிதைத்து அந்நிய சந்தைக்கான உற்பத்தியை விதைக்கும் திராவிட மாடல் உட்பட எந்த மாடல்களாக இருந்தாலும் அவை அனைத்தும் மறுகாலனியாக்கக் கொள்கையால் திணிக்கப்படும் கார்ப்பரேட்டுகளுக்கான மாடல்களே. இவற்றை முறியடிப்பதையே, மாற்றாக உள்நாட்டு தேவைக்கான உற்பத்தியை மேற்கொள்வதையே மக்களின் மாடலாக வரித்துக்கொள்வோம்.

  • மோகன்

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன