மணிப்பூர் கலவரம் : இனச்சண்டையா? காடுகள் மீதான பழங்குடியினரின் உரிமைக்கான போராட்டமா?

இந்தியாவின் பொதுச் சொத்துக்களை பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், அதானி, அம்பானி போன்ற தரகு முதலாளிகளுக்கும் தாரை வார்ப்பதை நோக்கமாகக் கொண்டே காவி கும்பல், மணிப்பூரில் இனவெறித் தீயை மூட்டி கலவரத்தை தூண்டிவிட்டிருக்கிறது.

மே 3ம் தேதியன்று மணிப்பூரில் நடந்த கலவரத்தில் அம்மாநிலமே, கொழுந்து விட்டு எரிந்தது. அன்று நடந்த வன்முறையில் மட்டும் 60 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர், 231 பேர் காயமடைந்திருக்கின்றனர், 1700 வீடுகள் எரிக்கப்பட்டிருக்கின்றன, 35,000 பேர் அகதிகளாக அரசு முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இது மட்டுமின்றி கிறிஸ்துவ தேவாலயங்கள், மருத்துவமனைகள் அடித்து நொறுக்கப்பட்டு தீயிடப்பட்டன.  அங்கு வசிக்கும் குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களுடைய வீடுகள், வாகனங்கள், கடைகள்  தீவைத்து கொளுத்தப்பட்டிருக்கின்றன.  இதற்கெல்லாம் மேலாக குக்கி இனத்தவரின் பிரிட்டிஷ் எதிர்ப்பு போர் நினைவு சின்னம் அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறது. விங்ஸ்ஹின் வாட் எனும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

 

பழங்குடி பெண்களும், குழந்தைகளும் தங்களது கிராமங்களை விட்டு மலைப் பிரதேசங்களுக்கு ஓடுகின்றனர். அங்கு பயிலும் பிற மாநிலத்தை சார்ந்த மாணவர்களோ, மணிப்பூரை விட்டே வெளியேறி வருகின்றனர். மாநிலமெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு,  இணைய தொடர்புகள் நிறுத்தப்பட்டது. போராட்டக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு பிறக்கப்பிட்டது. இம்மாநிலத்தில் பற்றி எரியும் கலவரத்தை அடக்க இரானுவமும், போலீசும் குவிக்கப்பட்டுள்ளன.  மொத்தத்தில் மணிப்பூரில்  தற்போது நேரடியாக  ஒன்றிய பாஜக அரசின் தலைமையில் ”போலீசு-இரானுவ  இராஜ்ஜியம்” நிறுவப்பட்டுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் இந்த அளவுக்கு வன்முறை மற்றும் கலவரம் தொடரக் காரணம் என்ன?

மணிப்பூரின் சமவெளிப்பகுதியில் மைத்தி இனத்தைச் சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர். இவர்கள் சமவெளியில் பல நூறு ஆண்டுகளாக விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் தொகை அடிப்படையில் மாநிலத்தின் பெரும்பான்மையினரான இவர்கள் சமூக-பொருளாதார நிலைமைகளிலும் மாநிலத்தின் மற்ற பழங்குடியினரை விடவும் முன்னேற்றியவர்களாக இருக்கின்றனர். மைத்தி இனத்தில் பெரும்பான்மையினர் இந்துக்கள். மைத்தி இனத்தவர்  பேசும் மொழியான மணிப்பூரி தான் அரசியல் சாசனத்தின் எட்டாவது பிரிவில் இணைக்கப்பட்டுள்ளது. மணிப்பூரின் மொத்தமுள்ள 60 சட்டமன்ற உறுப்பினர்களில் 40 பேர் மைத்தி இனத்தை சேர்ந்தவர்களே. மீதமுள்ள 20 பேர் இதர பழங்குடி வகுப்புகளைச் சேர்ந்தவர்கள்.

குக்கி இனத்தைப் போன்றே மணிப்பூரின் காடுகளில் எண்ணற்ற பழங்குடிகள் வசிக்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் கிறித்துவ மதத்தை சேர்ந்தவர்கள். இப்பழங்குடிகள் தாங்கள் வசிக்கும்  காடுகளை பராமரித்து அதன் மூலம் தங்களை பேணி வருகின்றனர்.

 

 

மணிப்பூர் மாநிலத்தைப் பொருத்தவரை சமவெளியில் வசிக்கும் மைத்தி இனத்தவர்கள் வனப்பகுதியில் இடம் வாங்க முடியாது. அது பழங்குடியினருக்கு மட்டுமே அளிக்கப்படும் சலுகையாக இருக்கிறது. தங்களுக்கு வனப்பகுதியில் நிலம் வாங்க உரிமை வேண்டும் என்பதற்காகவும், பழங்குடியினர் பெறும் சலுகைகள் தங்களுக்கு வேண்டும் என்பதற்காகவும் பழங்குடி அந்தஸ்து வேண்டும் என, கடந்த பத்தாண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றார்கள். 

குறிப்பாக 2017ம் ஆண்டு பாஜக மணிப்பூர் மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்ததில் இருந்து பெரும்பான்மை மைத்தி இனத்தவரின் வாக்குகளைக் கைப்பற்றும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியது. இந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போதும் கூட மைத்தி இனத்தவருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்கப்படும் என பாஜக கூறியிருந்தது.

தற்போது இந்த கோரிக்கைகாக, மைத்தி இனத்தவர்கள் தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரித்த மணிப்பூர் உயர் நீதிமன்றம், இவ்விசயத்தில் தங்களுடைய நிலைப்பாட்டை ஒன்றிய அரசுக்கு மணிப்பூர் மாநில அரசு நான்கு வாரங்களுக்குள் பரிந்துரைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் தனது நிலைப்பாடு என்ன என்பதை வெளிப்படையாக அறிவிக்காத பாஜக அரசு, உயர்நீதிமன்றம், மைத்தி இனத்தவருக்கு பழங்குடியினருக்கான அந்தஸ்தை அளிக்க உத்தரவிட்டுள்ளதாக கூறுகிறது.

 

 

மணிப்பூர் மாநிலத்தில் மைத்தி இனத்தவர் மக்கள்தொகையில் 53 சதவீதம் இருக்கின்றனர். பழங்குடிகள் 40 சதவீதமாக இருக்கின்றனர். இந்நிலையில் 53 சதவீதம் உள்ளவர்களை பழங்குடிகளாக அறிவிப்பது என்பது ஒரு வகையில் பழங்குடியினரின்  சலுகைகளைப் பிடுங்குவதே அன்றி வேறு இல்லை. இந்த தீர்ப்பை எதிர்த்து, பழங்குடி மக்களும், பழங்குடி மாணவர்களும் தலைநகர் இம்பாலில் நடத்திய ஊர்வலத்தில் தாக்குதல் நடத்தப்பட்டு, பலர் உயிரிழந்தனர். அதன் பிறகு வன்முறை பல இடங்களுக்கும் பரவியது.

மணிப்பூர் கலவரத்தை இந்துக்களுக்கும் கிறித்துவர்களும் இடையிலான மோதல், பழங்குடியினர் இடஒதுக்கீடுக்கான இரு இனத்தவர்களுக்களுக்கு நடைபெறும் மோதல், பழங்குடி அந்தஸ்துக்கான தனிப்பட்ட ஒரு நீதிபதியின் தீர்ப்பினால் வந்த மோதல் என பத்திரிக்கைகள் ஒரு தோற்றத்தை உருவாக்குகின்றன. ஆனால் மணிப்பூர் கலவரத்தின் அடிப்படையான காரணத்தை அறிய நாம் சிறிது பின்னோக்கி செல்ல வேண்டியதிருக்கிறது.

இந்தியாவின் வடகிழக்கின் 7 சகோதரிகள் என்றழைக்கப்படும் 7 மாநிலங்களும் 1947ல் ஆங்கிலேயர் வசமிருந்து அதிகாரமற்றம் நடந்த பொழுது இந்தியாவுடன் இணைக்கப்படவில்லை. பின்னர் 1949இல் தான் கட்டாயமாக இந்தியாவுடன் பிணைக்கப்பட்டது. அன்றிலிருந்தே இப்பிராந்திய மக்கள் இந்தியாவின் அடக்குமுறைக்கு எதிராக தங்களது தேசிய சுய நிர்ணய உரிமைக்காக போராடி வருகின்றனர்.

இப்பிராந்தியத்தில் மைத்தி, நாகா, மிஜோ போன்ற வளர்ச்சி பெற்ற தேசிய இனத்தவரும், குக்கி போன்ற சிறுபான்மை இனத்தவரும், கணக்கற்ற இனக்குழுக்களும் இருக்கின்றனர். வடகிழக்கு பிராந்தியத்தை இந்தியாவுடன் இணைத்த பிறகு, தேசிய இனங்களுக்கு இடையே தீராப் பகைமையை மூட்டி பிரித்தாளும் சூழ்ச்சியுடன் இந்திய ஆட்சியாளர்கள் மாநிலங்களைப் பிரித்து உருவாக்கினர்.

அது மட்டுமின்றி 1952ல் அன்றைய இந்திய பிரதமர் நேருவுக்கும் அன்றைய பர்மா அதிபருக்கும் இடையேயிலான ஒப்பந்தம் மூலம் குக்கி  போன்ற பழங்குடி இன மக்கள் வாழ்ந்து வந்த மணிப்பூர்  காடுகளின் எல்லையோரப் பகுதிகள் பர்மாவுக்கு தாரை வார்க்கப்பட்டன.

இந்திய எல்லைக்குள் இருந்த நாகா, மிஜோ, மைத்தி இன மக்களுக்கு தேசிய இன மொழி அடிப்படையிலான மாநிலங்களாகப் பிரிக்கப்படவில்லை. உதாரணத்திற்கு நாகர்கள் வாழும் பகுதிகள் நாகலாந்தினுள் அல்லாது அசாம், மணிப்பூர், அருணாசலப்பிரதேசம் ஆகியவற்றிலும் இருக்குமாறு பிரிக்கப்பட்டது. அதே போல மணிப்பூர் மாநிலம் மைத்தி, நாகா இனங்களையும், குக்கி சிறுபான்மையினரையும் கொண்டதாகப் பிரிக்கப்பட்டது. இப்படி தன்னிச்சையாக மாநிலங்களை பிரித்து  இந்திய  அரசு இத்தனை ஆண்டுகாலம் ஆட்சி செய்து வருகிறது.

 

 

இதனை எதிர்த்து ஆரம்பத்தில் மணிப்பூர் மக்கள் அமைதி வழியில்தான் போராடத் தொடங்கினார்கள். எனினும், அங்கே இந்திய இராணுவம் குவிக்கப்பட்டது. பின்னர் பல ஆயுதக் குழுக்கள் தோன்றின. அவற்றை ஒடுக்குவது என்ற பேரில் இராணுவத்தின் ஆட்சி அங்கே நிரந்தரமாக்கப்பட்டு விட்டது. சுமார் 30 இலட்சம் மக்கள் தொகை கொண்ட  மணிப்பூரில் மட்டும் 100 பேருக்கு ஒரு சிப்பாய் வீதம் இரானுவம் நிறுத்தப்பட்டு இந்திய அரசு, அரசியல் அதிகாரம் செலுத்தி வருகின்றது. 

மைத்தி வகுப்புக்கு பழங்குடியினர் அந்தஸ்து என்பது தற்போதைய  கலவரத்திற்கான சருகை பற்ற வைத்த ஒரு தீப்பொறி தான். ஆனால் மணிப்பூர்  மாநிலம் தீப் பற்றி எரியக் காரணமே, ஒன்றிய மற்றும் மாநில பாஜக அரசுகள் காடுகளில் வாழும் குக்கி பழங்குடியினரை அப்புறப்படுத்த மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தான்

மணிப்பூர் பழங்குடி இனத்தவர்களை ஏன் காடுகளிலிருந்து ஒன்றிய அரசும், மாநில அரசும் அப்புறப்படுத்துகிறது? மணிப்பூரின் குக்கி மக்கள் ஏன் இதை எதிர்க்கிறார்கள்?

கடந்த மார்ச் மாதத்தில், மோடி அரசு வன பாதுகாப்புச் சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டு வந்தது. அதில் ஒரு பகுதியாக, ஒன்றிய அரசு விதிக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வனத்தை மாநில அரசுகள், தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யலாம் எனவும் சர்வதேச எல்லையை ஒட்டியுள்ள 100 கிலோமீட்டர் பரப்புள்ள காடுகளை தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பாதுகாக்கப்பட்ட பகுதியாக (Protected Area) அறிவிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. 

இதையொட்டி மணிப்பூர் மாநில பாஜக அரசு, மியான்மர் எல்லையில் இருக்கும் குக்கி இன மக்களை, தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் அவர்களின் காடுகளிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை தொடங்கி இருக்கிறது.

 

 

மணிப்பூரின் எல்லையான கிழக்கு மியான்மரில் இருந்து பல்வேறு காரணங்களுக்காக மணிப்பூர் பழங்குடி கிராமங்களில் தஞ்சம் புகும்  மியான்மர் மக்களை வந்தேறிகள் என்று கூறி அவர்களின் வருகையை மாநில பாஜக அரசு தடுத்து வருகிறது. இப்படி தஞ்சம் புகும் மக்கள் பெரும்பான்மையாக மியான்மரை சார்ந்த குக்கி இனமக்களே. இவர்கள் மணிப்பூரின் குக்கி இனத்தவரின் உறவினர்கள் கூட. நேருவின் காலத்தில் பர்மாவை ஒட்டிய மணிப்பூரின் வனப்பகுதியை தாரை வார்த்து விட்டு, தற்போது அப்பழங்குடி மக்களை வந்தேறிகளாக்குகிறது இந்திய அரசு.

அதுமட்டுமன்றி மணிப்பூர் குக்கி இனத்தவர்கள், காடுகளில் கஞ்சா பயிரிடுகின்றனர் என்று குற்றஞ்சாட்டுவதுடன், போதைப் பொருளை தடுப்பதாக கூறி பழங்குடி மக்களை காடுகளிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை மாநில பாஜக அரசு முடுக்கி விட்டுள்ளது. அப்பழங்குடி மக்களில் பலர் பிழைக்க வழியின்றி இது போன்ற கஞ்சா பயிர்களை பயிரிட்டு, தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர் என்பது உண்மைதான். ஆனால் ஒட்டுமொத்தமாக குக்கி இனத்தவர் முழுவதையும் போதைப் பொருள் கடத்தல் கும்பலாகவும், மியான்மரில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களாகவும் சித்தரிக்கின்றது மணிப்பூர் மாநில அரசு.

மணிப்பூரில் இத்தனை ஆண்டுகாலம் அரசியல் அதிகாரம் செலுத்திவரும் இந்திய ஒன்றிய அரசு, வடகிழக்கு மாநிலங்களுக்கு எந்த வித வளர்ச்சியையும் கொண்டு வந்துவிடவில்லை. வடகிழக்கு மாநிலங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு நீண்டகாலமாகவே பின் தங்கியே நிலையிலேயே இருத்தி வைக்கப்பட்டுள்ளன. 1960 களில் நடந்த இந்திய-சீன போருக்கு பிறகு எல்லைப்புற மாநிலங்களில் பொருளாதார வளர்ச்சியை மேற்கொள்வது பிரச்சினைக்குரியது எனக் காரணம் காட்டி திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

ஒன்றிய அரசின் கொள்கையினால் இம்மாநிலங்கள் பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையிலேயே இருக்கின்றது. சாலைகள், கட்டிடங்கள், பாலங்கள் அமைப்பது, போக்குவரத்து, தொலைதொடர்பு முதலான அனைத்தும் வட இந்திய தரகுமுதலாளிகளின் கைகளிலேயே இருக்கிறது. அரசுப் பதவிகளிலும் பிற மாநிலத்தவர்கள் பெருமளவில் இருக்கிறார்கள். இந்திய இரானுவத்தின் அடக்குமுறையில் பாதிக்கப்படாத மணிப்பூர் வீடுகளே இல்லை எனலாம்.

இவ்வாறு தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதன் விளைவாக, அரசாங்க சலுகைகளை கைப்பற்றும் போட்டா போட்டியிலும் மணிப்பூர் மக்கள் போராட நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.  இதில் தோற்றுப் போகும் பெரும்பான்மையான மணிப்பூர் இளைஞர் பட்டாளம் இந்தியா முழுக்க இருக்கும்  மாநிலங்களில் பிழைப்புக்காக இடம்பெயர்கின்றனர்.  மணிப்பூரின்  ஆண்களும், பெண்களும்  பல்வேறு மாநிலங்களில் உள்ள  முடிதிருத்தும் கடைகளிலும் உணவகங்களிலும் குறைந்த கூலிக்கு வேலை பார்த்து கொண்டு தங்களது பிழைப்பை நகர்த்துகின்றனர்.

குக்கி பழங்குடியினரை கஞ்சா பயிரிட்டுத் தான் வாழ வேண்டும் என்ற நிலைக்கு தள்ளியதுதான், இந்திய ஒன்றிய அரசு வடகிழக்கில் பல ஆண்டுகளாக, தனது இரானுவத்தின் துணை கொண்டு, நடத்திவரும் ஆட்சியின் சாதனை. மணிப்பூர் இளைஞர்களையும் போதைக்கு அடிமையாக்கி சீரழிப்பதை  இந்திய இரானுவம் திட்டமிட்டு செய்கிறது. கடந்த 2013 ஆம் ஆண்டு 15 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை மருந்துகளை கடத்த முயன்ற குற்றத்திற்காக  லெப்டினெண்ட் கலோனல் அஜய் சவுத்ரி, மியான்மர் அருகில் கைது செய்யப்பட்டார். ஆனால் தற்போதைய மாநில பாஜக அரசு  போதை பொருள் ஒழிப்பு என்ற பெயரில் மணிப்பூர் பழங்குடி மக்களை காடுகளிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

குக்கி பழங்குடி மக்கள்  தங்களது கிராமங்களின் மக்கள் நெருக்கம் அதிகமாவதால்  கிராமத்தின் எல்லையை பல இடங்களில் அதிகரித்து வீடு கட்டியுள்ளனர். ஆனால்   மாநில பாஜக அரசு  ரிசர்வ் காடுகளை குக்கி மக்கள் ஆக்கிரமிக்கிறார்கள் என்று கூறி 35க்கும் மேற்பட்ட கிராமங்களை இடித்து தள்ளுயிருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு  கூகுள் மேப் மூலம் காடுகளை பிரதி எடுத்துகொண்டு, பழங்குடி மக்கள் அங்கு குடியேறியதற்கான அடையாளம் இல்லை என விரட்டியடிக்கிறது.

இவ்வாறு ஒன்றிய-மணிப்பூர் மாநில பாஜக அரசுகள் குக்கி இனத்தவரை காடுகளிலிருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கையை எதிர்த்து அங்கு அவர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்கள். குக்கி இனத்தவரை காடுகளிலிருந்து அப்புறப்படுத்துவதற்கான  ஒரு துருப்பாக தான் மைத்தி – குக்கி இனங்களுக்குள் பிரித்தாளும் சூழ்ச்சியை ஆளும் ஒன்றிய பாஜக அரசு செயல்படுத்த முனைந்தது. ஆனால் குக்கி இன மக்களின் போராட்டத்தினால் அதன் பகற்கனவு தற்போது நொறுங்கி  போயிருக்கிறது.

வடகிழக்கு மாநிலங்களை பொறுத்தவரையில் ஒரு போராட்டம் முன்னணிக்கு வந்து அரசுக்கு நெருக்கடி ஏற்படும் போது, அச்சமயம் சாந்தப்படுத்துவது, சமாதானக் காவலராக நாடகமாடுவது, பேச்சுவார்த்தை முடிந்த பிறகு, ஒப்பந்தங்களை கிடப்பில் போடுவது, மீண்டும் மக்கள் போராடினால் ஆயுத குழுக்கள் மீது பழி போடுவது, அரசு பயங்கரவாத அடக்கு முறையை கட்டவிழ்த்து விடுவது என்பதை தான் இந்திய ஆட்சியாளர்கள் யுக்தியாக கடைப்பிடித்து வருகிறார்கள்.

மணிப்பூர் கலவரம் பெரிய அளவில் வெடித்தவுடன், மணிப்பூர் மக்களின் எதிர்ப்பை சமாளிக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா மைத்தி இன மக்கள் பழங்குடி அந்தஸ்து பெறுவதை அனைத்து தரப்பு மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி முடிவு செய்யப்படும் என தற்போது  சமாதான காவலராக  நாடகமாடுகிறார்.

இந்தியாவின் பொதுச் சொத்துக்களை பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், அதானி, அம்பானி போன்ற தரகு முதலாளிகளுக்கும் தாரை வார்ப்பதை நோக்கமாகக் கொண்டே காவி கும்பல், மணிப்பூரில் இனவெறித் தீயை மூட்டி கலவரத்தை தூண்டிவிட்டிருக்கிறது.

இதை வெறும் மணிப்பூரின் மைத்தி-குக்கி இனங்களுக்கிடையிலான மோதல் என்று பார்க்காமல், இயற்கை வளங்களைப் பன்னாட்டு முதலாளிகளுக்குத் தாரைவார்க்கும் ஒன்றிய பாஜக அரசிற்கு எதிராக காட்டின் மீதான தங்களது உரிமையை நிலைநாட்டிக்கொள்ள, தங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க பழங்குடியினர் நடத்தும் போராட்டமாகப் பார்க்க வேண்டியிருக்கிறது. 

  • தாமிரபரணி

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன