பில்கிஸ்பானு வழக்கின் கொலைக்குற்றவாளிகளை காப்பாற்றும் காவி பாசிஸ்டுகள்!

பில்கிஸ்பானு வழக்கின் குற்றவாளிகளுக்கு, குஜராத் அரசின் ஆதரவு, முழுமையான பொருளாதார மற்றும் சட்ட உதவிகள், சிறையில் ராஜகவனிப்பு என ஆர் எஸ் எஸ்-பாஜக வின் பேராதரவோடு உள்ளனர். கடந்த 15 வருட சிறைதண்டனையில் 3 வருடம் பரோலில் இருந்துள்ளனர். இதிலிருந்து குஜராத் அரசு, இக்குற்றவாளிகளை கையாண்ட விதத்தை நாம் புரிந்துகொள்ளலாம்

நீதிபதி ஜோசப்பின் அமர்வில்  இவ்வழக்கு விசாரிக்கப்பட்டிருந்தால் குறைந்தபட்சம் 11 பேரின் விடுதலை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கும். தற்போது வேறு அமர்வோ அல்லது வேறு நீதிபதியை கொண்ட அதே அமர்வோ இவ்வழக்கை விசாரிப்பதன் மூலம் இச்சிக்கலிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று பாஜக-ஆர்எஸ்எஸ் கும்பல் திட்டமிட்டு வேலைச் செய்திருக்கிறது.

பில்கிஸ் பானு வழக்கில் ஆயுள்தண்டணை விதிக்கப்பட்ட 11 பேரை மோடி அரசும் குஜராத் பாஜக அரசும் நன்னடத்தையின் அடிப்படையில் விடுதலை செய்ததை எதிர்த்து பில்கிஸ் பானு உட்பட பலர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தனர். இவ்வழக்கை நீதிபதி ஜோசப் மற்றும் நீதிபதி நாகரத்தினா அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த வாரம் செவ்வாயன்று இவ்வழக்கு விசாரணையின் போது நீதிபதி ஜோசப் தெரிவித்த கருத்துகள் இந்த 11 பேரையும் காப்பாற்ற துடிக்கும் மோடி அரசின் நடவடிக்கையை அம்பலப்படுத்திவிட்டது.

 

 

“இங்கே எதற்காக முயற்சி நடக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. நான் ஜூன் 16 அன்று பணி ஓய்வுப் பெறப்போகிறேன். அது உச்சநீதிமன்றத்திற்கு விடுமுறை காலம். எனவே, எனது கடைசி வேலை நாள் மே 19. இந்த அமர்வு உங்கள் வழக்கை விசாரிப்பதை நீங்கள் விரும்பவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால், இது எனக்கு நியாயமானதாக இல்லை. இந்த வழக்கு  இறுதி விசாரணை இன்று எடுத்துக் கொள்ளப்படும் என்று நாங்கள் தெளிவாக தெரிவித்திருந்தோம். நீங்கள் இந்த நீதிமன்றத்தின் அதிகாரிகள். அந்த பாத்திரத்தை மறந்துவிடாதீர்கள். நீங்கள் ஒரு வழக்கில் வெற்றி பெறலாம் அல்லது தோல்வியடையலாம். ஆனால், இந்த நீதிமன்றத்திற்கான உங்களது கடமையை மறந்துவிடாதீர்கள்.”

பில்கீஸ் பானு வழக்கை நீதிபதி ஜோசப் விசாரிக்கூடாது என்பதே மோடி கும்பலின் நோக்கம். மே 2 ம் தேதி விசாரிக்க வேண்டிய வழக்கை திட்டமிட்டே சில நொண்டிச் சாக்குகளைச் சொல்லி ஜூலை மாதத்திற்கு கடத்தி விட்டனர். அதன் வெளிப்பாடே நீதிபதி ஜோசப் பேசியிருப்பது. மார்ச் 27 ம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது படுகொலை குற்றம் நிருபிக்கப்பட்டு தண்டணை பெற்றுவருபவர்களை விடுதலை செய்வதற்கு எதனடிப்படையில் குஜராத் அரசும் ஒன்றிய அரசும் ஒப்புதல் அளித்தது என்பதற்கான ஆதாரத்தை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தவிட்டிருந்தனர். ஆனால் காவி கும்பலோ முதலில் ஆதாரங்களை ஒப்படைக்க முடியாது என்று கூறியது. பிறகு மூடிய கவரில் கொடுப்பதாகத் தெரிவித்தது. அதனை நீதிபதிகள் ஏற்கவில்லை. பிறகு நீதிமன்றத்தின் உத்திரவை எதிர்த்து மறுபரிசீலனை மனு தாக்கல் செய்யப்போவதாக ஏப்ரல் 28 வழக்கு விசாரணையின் போது உச்சநீதிமன்றத்தில் கூறியது.

மேலும் நீதிபதி ஜோசப் தனது வழிகாட்டுதலில்,  “கர்ப்பிணிப் பெண் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளால். பலர் கொல்லப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவரின் வழக்கை நிலையான பிரிவு 302 (கொலை) வழக்குகளுடன் ஒப்பிட முடியாது. ஆப்பிளை ஆரஞ்சு பழத்துடன் ஒப்பிட முடியாது என்பது போல, பலர் கொலை செய்யப்பட்ட ஒரு படுகொலை சம்பவத்தை ஒரு கொலையுடன் ஒப்பிட முடியாது. குற்றங்கள் பொதுவாக சமூகத்திற்கும் இனத்திற்கும் எதிராக செய்யப்படுகின்றன. சமமற்றவைகளாய் சமமாக நடத்த முடியாது.” “இங்கே கேள்வி, அரசாங்கம் தனது புத்தியைப் பயன்படுத்தியதா? என்ன தரவுகளின் அடிப்படையில் விடுதலை செய்வதற்கான முடிவை அரசாங்கம் எடுத்தது?,” “இன்று பில்கிஸ் ஆனால் நாளை அது யாராகவும் இருக்கலாம். அது நீங்களாகவோ அல்லது நானாகவோ இருக்கலாம். விடுதலைக்கான உங்களுடைய காரணங்களை நீங்கள் காட்டவில்லை என்றால், நாங்கள் எங்கள் சொந்த முடிவுகளை எடுப்போம்.” என்று கூறியிருந்தனர். மேலும் இவ்வழக்கு மே 2 அன்று விசாரிக்கப்படும் என்றும் கூறியிருந்தனர்.

 

 

ஆனால் மே 2 அன்றோ, பாலியல் வன்புணைர்வு மற்றும் படுகொலையில் சம்பந்தப்பட்ட 11 பேரின் வழக்குரைஞர்களில் சிலர் ஆஜராகவில்லை. சிலரோ தங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதம் கிடைக்கவில்லை என்றும் கடிதத்தில் உச்சநீமன்ற சீல் இல்லாமல் இருந்ததும் என்ற காரணங்களைக் கூறி வழக்கு விசாரணையை தள்ளிவைக்கக் கோரினர். ஆனால் உச்சநீதிமன்றம் கோடைகால விடுமுறை என்பதால் ஜுலை மாதம் தான் இவ்வழக்கு விசாரிக்க முடியும். பில்கிஸ் பானு தரப்பு வழக்குரைஞர்களோ கோடைகால சிறப்பு அமர்வில் விசாரிக்கலாம் என்று வாதிட்டனர். நீதிபதிகளும் இதனை ஏற்றுக் கொண்டனர். ஆனால் இவ்வழக்கில் ஒன்றிய அரசு மற்றும் குஜராத் அரசின் சார்பாக ஆஜரான சொலிசிடர் ஜெனரல் துசர் மேத்தா கோடை விடுமுறையில் எந்த வழக்கிலும் ஆஜராக விருப்பமில்லை என்று  அறிவித்துவிட்டார். ஆகையால் தற்போது வழக்கு ஜூலையில் விசாரணை நடத்த ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  

குற்றவாளிகள் 11 பேருடைய வழக்குரைஞர்களுக்கும் கடிதம் கிடைத்துவிட்டது, அனைத்துக் கடிதத்திலும் உள்ள உச்சநீதிமன்ற சீல்-ம் சரியானதே. மேலும் வழக்கு சம்மந்தமான தகவல்கள் சம்மந்தப்பட்ட வழக்குரைஞர்களுக்கு மின்னஞ்சலும் அனுப்பப்பட்டுவிட்டது. ஒரு குற்றவாளி மட்டும் இன்றுவரை சம்மனை வாங்கவில்லை. அவனுடைய வழக்குரைஞரும் உறவினர்களும் சம்மனை வாங்க மறுத்துவிட்டனர். எனவே உள்ளூர் பத்திரிக்கைகளில் செய்தி வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவ்வளவு செய்தும் இவ்வழக்கு விசாரணை நடக்கவிடாமல் இழுத்தடிப்பதற்கு காரணம், நீதிபதி ஜோசப் இவ்வழக்கை விசாரிக்காமல் இருக்க வேண்டும் என்ற நோக்கமேயன்றி வேறென்ன இருக்கமுடியும்?. இதை நீதிபதி ஜோசப் நீதிமன்றத்திலேயே சொல்லிவிட்டார். “நான் ஜூன் 16 அன்று பணி ஓய்வுப் பெறப்போகிறேன். அது உச்சநீதிமன்றத்திற்கு விடுமுறை காலம். எனவே, எனது கடைசி வேலை நாள் மே 19. இந்த அமர்வு உங்கள் வழக்கை விசாரிப்பதை நீங்கள் விரும்பவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.” என்றார்.

“வயது, குற்றத்தின் தன்மை, சிறையில் நடத்தை” ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கைதிகளுக்கு விடுதலை வழங்கப்பட்டதாக குஜராத் மாநில உள்துறை கூடுதல் செயலாளர் ராஜ்குமார் பத்திரிக்கைக்கு தெரிவித்திருந்தார். 11 பேருடைய விடுதலையை பரிசிலிப்பதற்காக குஜராத் அரசு அமைத்த கமிட்டியின் உறுப்பினரான அம்மாநில பாஜக எம்எல்ஏ ராகுல்ஜி, 11 பேரில் சிலர் பார்ப்பனர்கள். அவர்கள் நல்ல மதிப்பு கொண்டவர்கள், என்று கொலைகாரர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கியிருந்தார். மேலும் அது குஜராத் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருந்த நேரம்.  இவர்களுடைய விடுதலையை இந்து ஓட்டு வங்கிக்காகவும் பாஜக பயன்படுத்தியது.   எனவே, முறையான சட்டபாகுப்பாய்வோ அல்லது சட்ட விதிகளின் அடிப்படையிலோ குஜராத் அரசு 11 குற்றவாளிகளை விடுதலை செய்யவில்லை. தங்களுடைய இந்துத்துவா கண்ணோட்ட(நலன்களின்) அடிப்படையிலிருந்தே பாலியல் வன்புணர்வு/படுகொலை செய்த கொலைகாரர்களை ‘குற்றமற்றவர்களாக’ விடுதலை செய்துள்ளது என்பதை நாம் விளங்கிக்கொள்ளலாம். இதையும் ஏப்ரல் 28 ம் தேதி நீதிபதி ஜோசப் நீதிமன்றத்தில் பேசியதையும் ஒப்பிட்டுபாருங்கள், இவ்வழக்கை சங்கிகள் இழுத்தடிப்பதற்கான காரணத்தை நாம் புரிந்துக் கொள்ளமுடியும்.

 

 

மே 2 அன்றோ அல்லது ஜோசப்பின் அமர்விலோ இவ்வழக்கு விசாரிக்கப்பட்டிருந்தால் குறைந்தபட்சம் 11 பேரின் விடுதலை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கும். தற்போது வேறு அமர்வோ அல்லது வேறு நீதிபதியை கொண்ட அதே அமர்வோ இவ்வழக்கை விசாரிப்பதன் மூலம் இச்சிக்கலிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று பாஜக-ஆர்எஸ்எஸ் கும்பல் திட்டமிட்டு வேலைச் செய்திருக்கிறது.

பில்கீஸ் பானு பெரிய பின்புலம் இல்லாத ஒரு சாதாரண இஸ்லாமியப் பெண். தனக்கு இழைக்கப்பட்ட கொடுமையை எதிர்த்து குஜராத் அரசு அதிகாரிகளின் அலட்சியம், காவி கும்பல்களின் மிரட்டல்கள், பொருளாதார நெருக்கடி, பத்திரிக்கைகள் மற்றும் வழக்கு சம்மந்தமானவற்றை எதிர்கொள்வது என மிகக்கடுமையான போராட்டத்தின் வாயிலாக குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித்தர கடந்த இருபது ஆண்டுகளாக போராடிவருகிறார். ஆனால் குற்றவாளிகளோ ஏறத்தாழ கதாநாயர்களைப் போல சங்கிகளால் பிரச்சாரம் செய்யப்படுகிறார்கள். அவர்களுக்கு குஜராத் அரசின் ஆதரவு, முழுமையான பொருளாதார மற்றும் சட்ட உதவிகள்,  சிறையில் ராஜகவனிப்பு என ஆர் எஸ் எஸ்-பாஜக வின் பேராதரவோடு உள்ளனர். கடந்த 15 வருட சிறைதண்டனையில் 3 வருடம் பரோலில் இருந்துள்ளனர். இதிலிருந்து குஜராத் அரசு, இக்குற்றவாளிகளை கையாண்ட விதத்தை நாம் புரிந்துகொள்ளலாம். இதற்கு பின்னால் அப்பட்டமான இஸ்லாமிய வெறுப்பை அடிப்படையாகக் கொண்ட காவிப் பாசிசத்தைத் தாண்டி வேறு என்ன இருக்கிறது?          

அழகு

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன