குஜராத் படுகொலைக் குற்றவாளிகள் தொடர்ந்து விடுவிக்கப்படுவது ஏன்?

2002 குஜராத் கலவரத்தின் போது நரோதாகாமில் குறைந்தது 11 முஸ்லிம்களை படுகொலை செய்ததாக பாஜக–வின் முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானி மற்றும் சங்கப் பரிவாரத்தின் ஒன்றான பஜ்ரங் தளத்தின் தலைவர் பாபு பஜ்ரங்கி உட்பட 66 பேரை அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் இரண்டு வாரத்திற்கு முன்பு விடுதலை செய்துள்ளது.

குஜராத் படுகொலையின் போது முஸ்லிம்களுக்கு எதிராக மிகப்பெரிய வன்முறையை கட்டவிழ்த்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பாஜக மற்றும் சங்கப் பரிவாரங்களைச் சேர்ந்த முக்கிய குற்றவாளிகள் தொடர்ந்து விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். குஜராத் இனக் கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் நீண்ட பட்டியலில் இருந்து தற்பொழுது விடுதலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.

குஜராத்தின் கோத்ரா நகரில் இரயில் பெட்டியில் ஏற்பட்ட தீவிபத்தினால் 60 கரசேவகர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து வன்முறை தொடங்கியது, இதற்காக 11 முஸ்லிம்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர். (வெளியில் இருந்து இரயில் பெட்டிக்குள் தீ மூட்ட வாய்ப்பில்லை எனவும், உள்ளிருந்துதான் தீ மூட்டப்பட்டிருக்க வேண்டும் எனவும் பானர்ஜி கமிசன் அறிவித்தப் பிறகும் தண்டனை இரத்து செய்யப்படவில்லை) எனினும் இக்கோரச் சம்பவத்தைக் காரணம் காட்டி 2,000-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். இப்படுகொலையை செய்ததாக பாஜகவினர் மீதும், சங்கப் பரிவாரத்தின் தலைவர்கள் உட்பட நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

இதில் பல வழக்குகளில் இந்து மதவெறி கும்பலைச் சேர்ந்தவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இன்னும் சில வழக்குகள் நடந்துகொண்டிருக்கின்றன. அதேசமயம் கடந்த 2014ம் ஆண்டு மோடி பிரதமராக பதவியேற்றது தொடங்கி இந்தப் படுகொலைகளில் தொடர்புடைய குற்றவாளிகளை குஜராத் நீதிமன்றங்கள் மட்டுமே அதிக எண்ணிக்கையில் விடுவித்துள்ளது. இதில் பல வழக்குகளில் பல்வேறு நீதிமன்றங்கள் வழங்கிய முந்தைய தண்டனைகளை இரத்து செய்யப்பட்டுள்ளது.

 

 

நரோதா காம் படுகொலை என்பது குஜராத்தில் நடந்த இரண்டாவது பெரிய படுகொலை வழக்காகும். இவ்வழக்கின் முக்கியக் குற்றவாளியான கோட்னானி நரேந்திர மோடி தலைமையிலான மாநில பாஜக அரசாங்கத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக்கான அமைச்சராக இருந்தவர். இவர் குஜராத்தில் 97 முஸ்லிம்கள் கொல்லப்பட்ட முதல் படுகொலை வழக்கான நரோதா பாட்டியா படுகொலையில் ஈடுபட்டதற்காக 2012-ம் ஆண்டில் இருபத்தெட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர். ஆனால், 2018-ம் ஆண்டில் குஜராத் உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். இவ்வழக்கின் மற்றொரு முக்கியக் குற்றவாளியான பாபு பஜ்ரங்கிக்கு மரணிக்கும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் எந்தவித சீராய்வு மனுவும் இல்லாமலேயே ஆயுள் தண்டனை 21 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது நரோதா காம் படுகொலை வழக்கிலிருந்தும் பாபு பஜ்ரங்கி விடுதலை செய்யப்பட்டிருப்பது படுகொலைக் குற்றவாளிகள் தொடர்ந்து விடுவிக்கப்படுவதற்கு ஒரு துலக்கமான எடுத்துக்காட்டாகும்.

2014க்கு பிறகு இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களின் பட்டியல் மிக நீளமானது.

2015-ம் ஆண்டு குஜராத்தின் பிரந்திஜ் நகருக்கு அருகே தங்கியிருந்த மூன்று பிரிட்டிஷ் முஸ்லிம்களையும், அவர்களது வாகன ஒட்டுநரையும் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேரை சபர்கந்தா நீதிமன்றம் விடுதலை செய்தது.

ஜூன் 2016-ல், குஜராத்தின் குல்பர்க் சொசைட்டியில் முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எஹ்சான் ஜாஃப்ரி உட்பட 69 முஸ்லிம்களை படுகொலை செய்வதற்கு காரணமான 36 பேரை அகமதாபாத் நீதிமன்றம் விடுதலை செய்தது.

அக்டோபர் 2016-ல், குஜராத்தின் மெஹ்சானாவில் உள்ள சர்தார்புராவில் 33 முஸ்லிம்களின் படுகொலையில் தொடர்புடைய 31 குற்றவாளிகளில் 14 பேரை குஜராத் உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது. மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 31 பேரை சிறப்பு நீதிமன்றம் விடுவித்ததற்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்தது.

கலோல் தாலுகாவின் பாலியாட் கிராமத்தில் கலவரம் செய்ததாகவும், அங்குள்ள முஸ்லிம்களின் சொத்துக்களை சேதப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்ட 28 பேரையும் காந்திநகர் நீதிமன்றம், சாட்சியங்கள் இல்லை என்று கூறி, விடுதலை செய்தது.

அதேபோல் மே 2018-ல், ஆனந்தில் உள்ள ஓட் (ode) படுகொலையில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தண்டிக்கப்பட்ட மூன்று நபர்களை குஜராத் உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. 19 பேரின் தண்டனையை உறுதி செய்த அதே வேளையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 23 பேரை விசாரணை நீதிமன்றம் விடுதலை செய்ததையும் அது உறுதி செய்தது.

ஜனவரியில், பஞ்சமஹாலில் உள்ள நீதிமன்றம் படுகொலையின் போது இரண்டு குழந்தைகள் உட்பட 17 முஸ்லிம்களைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 22 பேரை விடுதலை செய்தது.

ஏப்ரல் 2-ம் தேதி, காந்திநகர் அருகே கலோலில் கூட்டுப் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 27 பேரையும், ஆதாரம் இல்லாத காரணத்தால் விடுதலை செய்தது. கூடுதல் அமர்வு நீதிபதி எல்.ஜி.சுடாஸ்மா, “எந்த ஆதாரமும் இல்லாமல் வெறும் சந்தேகத்தின் அடிப்படையில்” தொடரப்பட்ட வழக்கு எனக் குறிப்பிட்டிருந்தார்.

2022 ம் ஆண்டு ஆகஸ்டு 15ம் தேதி பில்கிஸ்பானு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறையில் இருந்த குற்றவாளிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

 

 

இப்படி தொடர்ந்து குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுவதற்கான காரணம் ஆர்எஸ்எஸ்-சும், அதன் சித்தாந்தத்தைக் கொண்டு இயங்கிவரும் அரசியல் கட்சியான பாஜகவுமே ஆகும். ஆர்எஸ்எஸ்-சின் சித்தாந்தம் அகண்ட பாரதம் ஆகும். அதில் சிறுபான்மையினத்தவருக்கு எந்த உரிமையும் இல்லை. அவர்கள் ஒன்று தாய் மதத்திற்கு திரும்ப வேண்டும் அல்லது காவிகளுக்கு கட்டுப்பட்டு மூன்றாம் தரக் குடிமக்களாக வாழ்ந்து கொள்ளட்டும் என்பது தான் அவர்களது நிலைப்பாடு.

ஏறத்தாழ குஜராத் இனப்படுகொலைக் குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுவிட்டார்கள். அப்படியானால் 2000-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் தானே தற்கொலை செய்து கொண்டார்களா? பில்கிஸ் பானோவை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததும், அவரது குடும்பத்;தைக் கொலை செய்ததும் வேற்றுகிரகவாசிகளா? முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எஹ்சான் ஜாஃப்ரி தனது வீட்டில் நெருப்பை மூட்டி அதில் குதித்தாரா?

 

 

இல்லை. அவ்வாறு ஆர்எஸ்எஸ்-பாஜக ஒருபோதும் சொன்னதில்லை. மாறாக கோத்ரா இரயில் எரிப்பில் படுகொலை செய்யப்பட்ட 60 கரசேவகர்களுக்கு ஆதரவாக வெகுண்டெழுந்த இந்துக்கள் இதனைச் செய்தார்கள். இதனை ஒரு வினைக்கான எதிர்வினையாக மட்டுமே பார்க்கவேண்டும் என்பதே ஆர்எஸ்எஸ் – பாஜக-வின் நிலைப்பாடு.

அப்படியானால் இதுபோன்ற எதிர்வினைகளைத் தவிர்கவே முடியாதா? என்றால் நிச்சயம் முடியாது என்பதே ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் நமக்கு அளிக்கும் பதிலும், இனி கோத்ரா போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கான எச்சரிக்கையும் ஆகும். கோத்ரா இரயில் பெட்டி எரிப்பில் பானர்ஜி அறிக்கையின் விளக்கம் ஒருபுறம் இருக்க, இந்த வழக்கில் குற்றவாளிகள் ஆக்கப்பட்ட முஸ்லிம்கள் இன்றுவரை தண்டனையை அனுபவித்து வருகின்றனர் என்பதிலிருந்து அவர்களது எச்சரிக்கையைப் புரிந்துகொள்ள முடியும்.

இதுபோன்ற எச்சரிக்கை, தண்டனைக் கைதிகளுக்கு மட்டுமல்ல இவ்வழக்குக்கு எதிராகப் பேசுகின்ற, எழுதுகின்ற, போராடுகின்ற ஜனநாயக சக்திகளுக்கும், முற்போக்காளர்களுக்கும், சமூக செயல்பாட்டாளர்களுக்கும் இடப்படுகின்ற எச்சரிக்கையாகும். இதனை தீஸ்தா சேதல்வாத், ஸ்ரீகுமார், சஞ்சீவ் பட் ஆகியோர்களின் கைது, சிறை போன்ற நடவடிக்கைகளின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

இதுமட்டுமல்ல, மக்களின் எண்ணங்களிலிருந்தும், இளைய சமூகத்திடம் இஸ்லாமியர்களின் வரலாற்றை மறைப்பதற்காகவும் மொகலாயர்களைப் பற்றிய வரலாற்றைப் பாடப்புத்தகங்களில் இருந்து நீக்கியுள்ளர். அதேபோல் புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை கொண்டவர்களுடைய வரலாற்றைப் பாடப்புத்தகங்களில் சேர்த்துள்ளனர்.

இப்படி தனது ஒரு நூற்றாண்டுக் கனவான அகண்ட பாரதத்தை நிறுவிட வழி நெடுகிலும் இரத்தக் கவிச்சியுடன் காவி பாசிஸ்டுகள் அழைந்து கொண்டிருக்கிறார்கள். அதன் ஒரு பகுதிதான் இந்தகைய விடுதலைகள் என்பதைப் புரிந்து கொள்ளவும், போராடவும் வேண்டும்.

  • மகேஷ்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன