சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் துயரம்:
அதானிக்காக சத்தீஸ்கர் பழங்குடி வனத்தைத்  தாரை வார்க்கும் மோடி !

சத்தீஸ்கர் பழங்குடி மக்களின்  போராட்டம் வெறும் வாழ்வாதாரப் போராட்டம் மட்டுமல்ல. அனைத்து ஓட்டுக்கட்சிகளின் துரோகத்திற்கும்,  நாட்டின் இயற்கை வளத்தை கொள்ளையிடும் அதானி போன்ற பெருமுதலாளிகளுக்குத் தாரை வார்க்கும் மோடி அரசுக்கு எதிரான போராட்டமும் கூட.

இந்தியா என்ற நாடும், சத்தீஸ்கர் என்ற மாநிலமும் உருவாவதற்கு, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, ஹஸ்தியோ அரந்த் எனும் மிக அடர்ந்த வனப்பகுதி, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் தாயகமாக இருந்து வந்திருக்கிறது. சத்தீஸ்கரின் மூன்று மாவட்டங்களான கோர்பா, சுர்குஜா மற்றும் சூரஜ்பூர் ஆகியவற்றில் சுமார் 1500 சதுர கிலோ மீட்டருக்கு மேல் இந்த வனப்பகுதி பரவியுள்ளது. பழங்குடி மக்களுக்கு மட்டுமின்றி, வான் தொடும்  சால் மரங்கள், தேக்கு மரங்கள், மிக முக்கிய அரிய வகைத் தாவரங்களுக்கும்,  யானைகள் மற்றும் சிறுத்தைகள் போன்ற இந்தியாவின் அரியவகை விலங்குகளுக்கும், நாட்டின் பல்லுயிர் பெருக்கத்திற்கும் இந்த வனப்பகுதி ஒரு முக்கிய தளமாக இருந்து வருகிறது.

பழங்குடி மக்களின் தாயாக ஹஸ்தியோ அரந்த் காடு விளங்குகிறது. எனவே இக்காட்டின் புதல்வர்களாக தங்களது தாயான இக்காட்டை பராமரித்து வருகின்றனர். அதேபோல் காடும் இம்மக்களை பராமரித்துக் கொண்டது. ஆனால் இக்காடுகளில் புதைந்திருக்கும் 5 பில்லியன் டன் நிலக்கரி வளத்திற்காக, இக்காட்டின் ஒரு பகுதியை  சத்தீஸ்கர்  மாநில அரசு  23 நிலக்கரி சுரங்கங்களாகப் பிரித்தது. அதில் நான்கு நிலக்கரி சுரங்கங்களை இராஜஸ்தான் மாநில அரசுக்கு 2007-ம் ஆண்டு விற்றது.  இம்மாநில பாஜக அரசு, சுரங்கங்களில் இருந்து நிலக்கரியை எடுப்பதற்கு இந்தியாவையே சொந்தமாக்கத் துடிக்கும் அதானியை  தன்  கூட்டாளியாக (74 விழுக்காடு பங்கு) சேர்த்துக் கொண்டது.  அதன்பிறகு காங்கிரஸ் ஆட்சியிலும் இக்கூட்டுத் தொடர்ந்தது. மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் நடந்த நிலக்கரி ஊழலுக்கு பிறகு,  மாநில அரசுக்கும் – அதானி நிறுவனத்திற்கும் உள்ள ஒப்பந்தங்களை இரத்து செய்யும்படி கடந்த 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.  ஆனாலும், மாநிலத்தில் எந்தக் கட்சி ஆட்சி அமைத்தாலும்  அதானியுடனான கூட்டு மட்டும் மாறவேயில்லை.

 

 

இக்காடுகளில் நிலக்கரி எடுப்பதால், இப்பழங்குடி மக்களின் தாயான அடர்ந்த காடுகளும், வாழ்வாதாரமும் பாதிக்கப்படுவதை எதிர்த்து கடந்த 15  ஆண்டுகளுக்கும்   மேலாகப்    போராடி   வருகின்றனர். இவ்வேளையில் நிலக்கரிச் சுரங்க விரிவாக்கத்திற்கு வழங்கியுள்ள ஒப்பந்தம்  இப்பழங்குடி மக்களுக்குப்  பேராபத்தாக வந்துள்ளது.

தற்போதைய இராஜஸ்தான் மாநில காங்கிரசு அரசும் – அதானியின் கூட்டு நிறுவனமும் சுமார் 762 ஹெக்டேர் நிலப்பரப்பிலான தங்களது கிழக்கு பர்சா, காந்தா பார்சன்  நிலக்கரி சுரங்கங்களில்   நிலக்கரி தீர்ந்து விட்டதாக கூறி வருகிறது. இதனால் இராஜஸ்தானின் மின்நிலையங்களுக்கு நிலக்கரி தட்டுப்பாடு  உள்ளதாகவும் எனவே நிலக்கரித் தேவையை  உத்திரவாதப் படுத்துவதற்கும் இக்காடுகளில் உள்ள நிலக்கரி சுரங்கத்தினை விரிவாக்கம் செய்வதற்கு 2020-ம் ஆண்டு முதல் இம்மாநில அரசு, மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்துக்கு அழுத்தம் கொடுத்து வந்துள்ளது.  அதானி – இராஜஸ்தான் மாநில கூட்டு நிறுவனத்தின்  சுரங்கங்களின் விரிவாக்கத்திற்காக, சுமார் 1137 ஹெக்டேர் நிலப்பரப்பில் பரவியிருக்கும் சுமார் மூன்று இலட்சம் மரங்களை அழிக்க வேண்டியதிருக்கும். அதோடு கூடவே காட்பாரா எனும் பழங்குடியினரின் கிராமமே அழிந்து போகும் அபாயமும் உள்ளது.

சுரங்கங்களின் விரிவாக்கத்தையொட்டி, இந்திய அரசு நிறுவனங்களான இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனமும்,  இந்திய வனவிலங்கு நிறுவனமும் இணைந்து மே 2019 – பிப்ரவரி 2021 ஆகிய ஆண்டுக்களில் இப்பகுதியில் பல்லுயிர் பெருக்கம் ஆய்வை மேற்கொண்டது.

அதானி – இராஜஸ்தான் மாநில அரசு கூட்டு நிறுவனத்தின் நிலக்கரி சுரங்கங்களான  கிழக்கு பர்சா, காந்தா பார்சனில் இருந்து எதிர்பார்த்த அளவிற்கு நிலக்கரியைப் பிரித்தெடுக்கவில்லை என்கிறது இந்த ஆய்வின் முடிவு.

இச்சுரங்கங்களில் மொத்தமுள்ள 452.46 மில்லியன் டன் நிலக்கரி இருப்புகளில், மார்ச் 31, 2019 வரை 42.73 மில்லியன் டன் நிலக்கரியை  மட்டுமே  பிரித்தெடுத்துள்ளதாக பல்லுயிர் ஆய்வின் அறிக்கை தெரிவித்துள்ளது.

இச்சுரங்கங்களில் கடந்த 2012 முதல் 2022 வரையிலான ஆண்டுகளுக்குள் பிரித்தெடுக்கப்பட வேண்டிய நிலக்கரியின் அளவு 120 மில்லியன் டன் ஆகும். ஆனால் வெறும்  80.39 மில்லியன் டன் அளவு நிலக்கரியைத்தான்  அதானி -இராஜஸ்தான் மாநில அரசு கூட்டு நிறுவனத்தினால் பிரித்தெடுக்கப் பட்டிருக்கிறது என்கிறது ஜனவரி 2022 இந்திய சுற்றுச்சூழல் அமைச்சக கூட்டத்தின் முடிவு.

 

 

மேலும் இந்த ஆய்வு, நிலக்கரியைப் பிரித்தெடுப்பதற்காகத் தோண்டி எடுக்கப்படும் மண், அதிகளவில் கழிவுகளாக (overburden) வெளியேற்றப்படுகிறது எனவும், நிலக்கரியைப் பிரித்தெடுக்கும் திறன் மிகக் குறைவாகவே உள்ளது எனவும் கண்டறிந்துள்ளது. அதேபோல் கடந்த 2020 ஆண்டு வரை 146.32 மில்லியன் டன் மண் வெட்டியெடுக்கப் பட்டிருக்கிறது. ஆனால்  இதிலிருந்து வெறும் 63 மில்லியன் டன்  நிலக்கரி மட்டுமே பிரித்தெடுக்கப் பட்டிருக்கிறது என்கிறது பல்லுயிர் ஆய்வு. பொதுவாக நிலக்கரியைப் பிரித்தெடுக்கும்  திறன் விகிதம் ஒரு டன்னுக்கு 5.5 விழுக்காடு இருக்க வேண்டும் ஆனால் அதானி – இராஜஸ்தான் மாநில அரசு நிலக்கரி கூட்டு நிறுவனத்தின் திறன் (coal mine stripping ratio)  ஒரு டன்னுக்கு வெறும் 2.32 விழுக்காடு மட்டுமே இருக்கிறது.

இராஜஸ்தான் மாநில அரசு, அதானிக்காக நிலக்கரி  இருப்பு தீர்ந்துவிட்டது எனக் கூறிவரும் வேளையில். இச்சுரங்கங்களிலிருந்து தேவையான கொள்ளளவுக்கு நிலக்கரியைப் பிரித்தெடுக்காமலும், எடுக்கப்பட்ட நிலக்கரியின் திறன் மிக குறைந்த அளவில் இருப்பதையும் இந்திய வன நிறுவனங்கள் தனது ஆய்வு மூலம் அம்பலப்படுத்தி உள்ளது.

ஆனால் அரசு நிறுவனங்களின் ஆய்வுக்குப் பிறகும் ஒன்றிய மோடி அரசும், இராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில காங்கிரசு அரசுகளும் நிலக்கரி சுரங்க விரிவாக்கத்தை  மறுபரிசீலினை செய்யத் தயாராக இல்லை. நாட்டின் வளர்ச்சி, நாட்டைத் தொழில்மயமாக்குவது என்ற பெயரில் பழங்குடி மக்களின் வாழ்வையும், நாட்டின் இயற்கை வளத்தையும் பறிப்பதற்கு பாஜக அரசம், காங்கிரஸ் அரசும் மாறிமாறித் துரோகம் செய்து வருகிறது.

நிலக்கரிச் சுரங்க விரிவாக்கம் என்ற பெயரில் அதானி சூறையாடுவதற்கு, இவ்வனப்பகுதியை மோடி அரசு கடந்த பிப்ரவரி 2022 அன்று அனுமதி அளித்திருக்கிறது.

 

 

இச்சுரங்க விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக 300 மரங்களை அரசு வெட்டியதையடுத்து இப்பகுதிப் பழங்குடி மக்கள் நடத்திய  தீவிரமான போராட்டத்திற்குப் பிறகு தற்போது சத்தீஸ்கர் அரசு விரிவாக்கத் திட்டத்தை  ஒத்தி வைத்துள்ளது. நிலக்கரி விரிவாக்கத்திற்கு எதிராகவும், இயற்கைச் சூறையாடலுக்கு எதிராகவும் கண்டன ஊர்வலம், தொடர் முழக்கப்போராட்டமும் நடத்தி வருகின்றனர். மேலும் தங்களது கிராமங்களிலிருந்து சுமார் 300 கிமீ தொலைவில் உள்ள சத்தீஸ்கர் தலைநகருக்கு நடைபயணம் என சத்தீஸ்கர் வட்டாரப் பகுதியில் இப்பழங்குடி மக்கள்  தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். சத்தீஸ்கர் பழங்குடி மக்களின்  போராட்டம் வெறும் வாழ்வாதாரப் போராட்டம் மட்டுமல்ல. அனைத்து ஓட்டுக்கட்சிகளின் துரோகத்திற்கும்,  நாட்டின் இயற்கை வளத்தை கொள்ளையிடும் அதானி போன்ற பெருமுதலாளிகளுக்குத் தாரை வார்க்கும் மோடி அரசுக்கு எதிரான போராட்டமும் கூட.

 

சுற்றுச்சூழல் வழக்கறிஞர் தத்தா

                                                         

ஆனால் பழங்குடி மக்கள் போராட்டங்களை நசுக்குவதற்கு மோடி அரசு தீவிரமாக முயன்று வருகிறது. சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு குறித்துக் கருத்துத் தெரிவிப்பவர்களை வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என மோடி அரசு அவதூறு செய்து வ்ருகிறது. அதானியின் இந்திய நிலக்கரி சுரங்கங்களினால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேட்டைத் தொடர்ந்து அம்பலப்படுத்திவரும் சுற்றுச்சூழல் வழக்கறிஞர் ரித்விக் தத்தா மீது சிபிஜ மூலம் வழக்கு பதிவு செய்துள்ளது மோடி அரசு. தத்தா மீது முதல் தகவல் அறிக்கை சிபிஐ-யால் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தத்தாவின் மின்னஞ்சல்களை வைத்துக் கொண்டு வெளிநாட்டு அரசு சாரா நிறுவனத்திடம் பணத்தை வாங்கிக் கொண்டு இந்தியாவின் நிலக்கரித் திட்டங்களை தடுப்பதாகவும், இந்திய பொது நலனுக்கு எதிராக செயல்படுவதாகும்  குற்றம் சாட்டியுள்ளது.  வழக்கறிஞர் தத்தா,  நியாம்கிரி மலைப்பகுதியில் பாக்சைட் எடுப்பதை எதிர்த்து  அப்பகுதி பழங்குடியினருக்காக  போராடியவர், அதானியின் ஆஸ்திரேலிய நிலக்கரி சுரங்கத் திட்டத்திற்கு எதிராகவும்  தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். எனவேதான் போராடும் மக்களை அவதூறு செய்து தனிமைப்படுத்தவும், தங்களது அடக்குமுறைக்கு நியாயம் கற்பிக்கவும் இத்தகைய ஒடுக்குமுறைகளைக்  கையாண்டு வருகிறது  மோடி அரசு.

நாட்டின் இயற்கை வளத்தையும், பழங்குடி மக்களின் வாழ்வுரிமையையும் பறிப்பதோடு, இதற்கு எதிராகப் போராடும் ‘ஜனநாயக’ உரிமையையும் நசுக்குகின்றது மோடி அரசு. நாட்டின்  இயற்கை வளங்களை அதானி சூறையாடுவதற்கு மோடியின் தலைமையிலான அரசு ஒரு அடியாள் படையாக வெளிப்படையாகவே செயல்படுகிறது.  நாட்டின் வனப்பகுதியை சூறையாடும் அதானி போன்ற பெருமுதலாளிகளுக்கும், அடியாள் படையான மோடி அரசுக்கும் எதிராக நாம் போராடப் போகிறோமா? இல்லை நாட்டின் வனப்பகுதியும், பழங்குடி மக்களும் அழிவதை வேடிக்கை பார்க்கப் போகிறோமா?

  • தாமிரபரணி

செய்தி ஆதாரங்கள்:

https://scroll.in/article/1047086/modi-government-allowed-adani-run-mine-to-expand-even-when-it-hadnt-run-out-of-coal

https://thewire.in/government/cbi-books-environmental-lawyer-ritwick-dutta-for-stalling-coal-projects-using-foreign-funds

https://www.theguardian.com/environment/2022/dec/20/india-adani-coal-mine-kete-hasdeo-arand-forest-displaced-villages

 

 

 

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன