சிலிகான் வேலி – சிக்னேச்சர் – கிரெடிட் சூயிஸ்
திவாலாகும் வங்கிகள் :
முட்டுச் சந்தில் முதலாளித்துவப் பொருளாதாரம்!
பாகம் 4

வங்கித்துறை நெருக்கடிக்குக் காரணம் : ஏகாதிபத்திய முதலாளித்துவக் கட்டமைப்பே!

கொரோனா ஊரடங்கு, ரசியா உக்ரைன் போரின் விளைவாகவே விநியோக சங்கலி கடுமையாக பாதிக்கப்பட்டு (supply chain disruption), அதனால் பொருட்களின் வரத்து குறைந்து பணவீக்கம் ஏற்பட்டது; இதன் காரணமாகவே பெடரல் வங்கி வட்டிவீதத்தை உயர்த்தியது. எனவே, இந்த வங்கித்துறை நெருக்கடியானது, கொரோனா, ரசிய-உக்ரைன் போர் இவையிரண்டால் ஏற்பட்ட தற்செயலான விளைவு என்பதுபோல விளக்குகிறார்கள் முதலாளித்துவ அறிஞர்கள். அதாவது இந்த வங்கித்துறை நெருக்கடிக்கும் ஏகாதிபத்திய முதலாளித்துவக் கட்டமைப்புக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதுபோல விவரிக்கிறார்கள்.

 

 

முதலில் இவர்கள் விளக்கும் இரண்டு விசயங்கள்தான் பணவீக்கத்துக்குக் காரணம் என்று எடுத்துக் கொண்டால் கூட, கொரோனா பெருந்தொற்றுக்கும்[1], ரசியா உக்ரைன் போருக்குமே கூட ஏகாதிபத்திய முதலாளித்துவக் கட்டமைப்புதான் காரணமாகும்.

1970-களில் தேக்கவீக்க நெருக்கடியில் விழுந்த உலக ஏகாதிபத்திய முதலாளித்துவக் கட்டமைப்பானது, அதிலிருந்து மீண்டுவர உலகமயம், தனியார்மயம், தாராளமயம் என்ற கொள்கையை முன்வைத்தது. அதுவும் 2008 உலகப் பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு முட்டுச் சந்துக்கு வந்துவிட்டது. எனவே, இந்த நெருக்கடியைத் தீர்க்கவே ஏகாதிபத்தியங்கள் மூர்க்கமான போர்வெறியுடன் அலைகின்றன. எனவே, ரசியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்துவரும் போரானாது, சரிந்துவரும் அமெரிக்க மேல்நிலை வல்லரசின் மேலாதிக்கத்தைத் தக்கவைப்பதற்கும், உலகை மேலாதிக்கம் செய்யத் துடிக்கும் ரசிய மேல்நிலை வல்லரசுக்கும் இடையிலான போரே ஆகும். உலக மேலாதிக்கமே இப்போரின் மையமாக இருக்கிறது. எனவே, கொரோனா பெருந்தொற்று, ரசியா-உக்ரைன் போர் இவற்றால் பணவீக்கம் ஏற்பட்டது என்று வைத்துக் கொண்டாலும் அதற்கு ஏகாதிபத்திய முதலாளித்துவக் கட்டமைப்பே அடிப்படைக் காரணமாகும்.

உண்மையில் தற்போது அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பணவீக்கத்திற்கு இவையிரண்டுமே காரணம் என்றாலும், இவையிரண்டால் ஏற்பட்ட விநியோகச் சங்கிலி பாதிப்பு (supply chain disruption) தற்போது ஓரளவு சீரடைந்துவிட்டது. ஆனாலும் அமெரிக்காவில் பணவீக்கம் கட்டுக்குள் வரவில்லை. உண்மையில் அமெரிக்காவின் தற்போதைய பணவீக்கத்திற்கு மிக முக்கியமான காரணமே, கடந்த 14 ஆண்டுகளாக பெடரல்வங்கியின் வட்டி வீதம் மிகமிகக் குறைவாக இருந்ததும், அதனால் கோடிக்கணக்கான டாலர் சந்தையில் கடனாகக் கொட்டப்பட்டு, நிதிமூலதன கும்பல்களின் ஊக வாணிபச் சூதாட்டம் கட்டுக்கடங்காமல் பெருகியதுதான்.

முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடியின் அடிப்படையே மிகை உற்பத்தி (அராஜக உற்பத்தி) காரணமாக ஆட்குறைப்பு செய்யப்படுவதும், வாங்கும் சக்தி வற்றிப்போவதுமான நச்சுசூழல்தான். 2008 நெருக்கடிக்குப் பிறகு அமெரிக்கப் பொருளாதாரத்தில் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான எந்தவித நடவடிக்கையும் பெரிதாக மேற்கொள்ளப்படவில்லை. அமெரிக்காவில் வேலையில்லாத் திண்டாட்டம் 2008-ஆம் ஆண்டில் இருந்ததைப் போலவே 2022 இலும் இருந்ததே அதற்குச் சான்று.[2]

மாறாக 2008-ஆம் ஆண்டு நெருக்கடிக்குப் பிறகு அமெரிக்கப் பொருளாதாரத்தைத் தூண்டியெழுப்ப, பெடரல் வங்கியானது வட்டிவீதத்தை 0.5%-லேயே பராமரித்தது. 2016-18 காலகட்டத்தில் வட்டிவீதம் 2% ஆ உயர்ந்ததைத் தவிர வட்டி வீதம் பெரிதாக உயர்த்தப்படவே இல்லை. 0.5% என்பது மிகக்குறைவான வட்டிவீதமாகும். குறைவான வட்டிவீதத்தில் கடன் தரும்போது நிறுவனங்கள் மலிவாகக் கடன்பெற்று அதை உற்பத்தியில் செலுத்தும்போது வேலைவாய்ப்பு பெருகி பொருளாதாரம் இயங்கும் என்பது இதற்குச் சொல்லப்படும் வாதமாகும்.

இதனால் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிதிமூலதனக் கும்பல்களும் எளிதில் கடன் பெறுவது சாத்தியமாகியது. ஏற்கனவே மிகை உற்பத்தி காரணமாக உலகம் முழுவதும் வாங்கும் சக்தி வற்றிப்போயிருக்கும் சூழலில், இந்தப் பணத்தை உற்பத்தி, சேவைத்துறையில் இலாபகரமாக முதலிட்டு முதலாளித்துவம் இயங்குவதற்கான வாய்ப்புகள் ஏறத்தாழ அருகி இருந்தது. உலகம் முழுவதும் உற்பத்தித் துறைகள் அருகி இருந்ததால் நிதிமூலதனக் கும்பல்கள் தாம் பெற்ற கடனை, ஊகவாணிபச் சூதாட்டத்தில் போட்டு இலாபம் பார்த்தன. அதாவது பங்குச் சந்தையிலும், பத்திரங்களை வாங்கி விற்பதிலும் இன்னபிற சூதாட்டங்களிலும் போட்டு இலாபமடித்தன.

மேலும், நெல்லுக்கு இரைக்கும் நீர் புல்லுக்கும் புசிவதுபோல, வட்டிவீத குறைவால் அமெரிக்க மக்களும் எளிதில் கடன் பெற முடிந்தது. இதனால் சந்தையில் செய்ற்கையாக தேவை உருவாகி, விலைகள் செயற்கையாக பலமடங்கு (inflated) உயர்ந்தன. உதாரணமாக, மலிவாகக் கடன் கிடைத்ததால் வீட்டு மனைகளின் செயற்கையாக தேவை உயர்ந்து, வீட்டுமனைகளின் விலைகள் பலமடங்கு உயர்ந்தன.

அதேசமயம் அமெரிக்காவில் வேலையின்மை வீதம் 2008-ஆம் ஆண்டில் இருந்ததைப் போலவே 2022 இலும் இருந்தது. அதாவது, மக்களின் வேலைவாய்ப்பு பெருகி, அதிலிருந்து மக்களின் வாங்கும் சக்தி பெருகி, பணப்புழக்கம் அதிகரிக்கவில்லை. மக்கள் வாங்கும் சக்தி வற்றியிருக்கும்போதே சந்தையில் கோடிக்கணக்கான டாலர்கள் மலிவான கடனாகக் கொட்டப்பட்டன. அதை நிதிமூலதனக் கும்பல்கள் ஊகவாணிபச் சூதாட்டத்தில் திருப்பி விட்டன. எனவேதான் பத்தாண்டுகளுக்கும் மேலாக வட்டிவீதம் உயர்த்தப்படாததால் தற்போது பணவீக்கம் ஏற்பட்டுள்ளது.

இதைத்தான், 2006-2011 வரை பெடரல் வைப்புத்தொகை காப்பீட்டு நிறுவனத்தின் (FDIC – Federal Deposit Insurance Corporation) தலைவராக இருந்த ஷீலா பேர் ‘14 ஆண்டுகள் வட்டிவீதம் குறைவாகப் பராமரிக்கப்பட்டு, சந்தையில் மலிவாக கடன் கொட்டப்பட்டதே (14 years of easy money) தற்போதைய நெருக்கடிக்குக் காரணம்’ என்று கூறுகிறார். உண்மை இவ்வாறிருக்க, அமெரிக்க பெடரல் ரிசர்வின் தற்போதைய இயக்குனரான ஜெரோம் பாவெல் “தொழிலாளர்களின் ஊதியம் உயர்ந்திருப்பதால்தான் தற்போது அமெரிக்கவில் பணவீக்கம் (wage push inflation) ஏற்பட்டுள்ளது” என்று நா கூசாமல் புளுகுகிறார்.

“முதலாளித்துவம் அதன் நெருக்கடியிலிருந்து மீண்டுவர எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், முதலாளித்துவ நெருக்கடியை மேலும் ஆழமானதாக, பரந்ததாக, தீவிரமானதாக மாற்றும்” என்று மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் 200-ஆண்டுகளுக்கு முன்பு கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் கூறியதையே நடப்பு நிகழ்வுகள் மெய்ப்பிக்கின்றன.

அதாவது, 2008 நெருக்கடியிலிருந்து மீண்டெழுவதற்காக, அமெரிக்க ஏகாதிபத்தியம் வட்டிவீதத்தைக் குறைத்து பல பில்லியன் டாலர்களை சந்தையில் கொட்டியது, அதுவே பணவீக்கத்தைத் தோற்றுவித்து வங்கிகள் அடுத்தடுத்து திவாலாவதற்கு இட்டுச் சென்றுள்ளது. இன்னுமொரு எடுப்பான உதாரணத்தைக் கூற வேண்டுமெனில், திவாலாகும் நிலையிலிருந்து கிரெடிட் சூயிஸ் வங்கியை வாங்க யு.பி.எஸ். வங்கி விருப்பம் காட்டவில்லை. மாறாக, சுவிட்சர்லாந்து அரசு நிர்ப்பந்தித்து இந்த இணைப்பைச் செய்துள்ளது. இதன் மூலம் பிரச்சனை தற்காலிகமாகத் தணிந்தாலும், கிரெடிட் சூயிசின் நெருக்கடி யு.பி.எஸ்.க்கு கைமாற்றப்பட்டுள்ளது என்பதே உண்மை. யு.பி.எஸ். திவாலாகும் நிலை ஏற்பட்டால் அது சுவிட்சர்லாந்தின் பொருளாதாரத்தையே திவாலாக்கிவிடும்.

இரண்டாவதாக, அமெரிக்காவிலும் சரி, உலகளவிலும் சரி கார்ப்பரேட் வங்கிகள் உற்பத்தி நிறுவனங்களுக்குக் கடனளித்தோ அல்லது உற்பத்தித் துறைகளில் மூலதனத்தைப் போட்டோ உத்திரவாதமான இலாபம் எடுப்பதற்கான நிலைமைகள் முதலாளித்துவ நெருக்கடியின் விளைவாக அருகியுள்ளன. எனவேதான் உலகம் முழுவதும் வங்கிகள், நிதிமூலதனக் கும்பல்கள் பங்குச் சந்தை சூதாட்டத்திலும், பங்கு பத்திரங்களிலும், இதர ஊக வாணிபச் சூதாட்டத்திலும் ஈடுபடுகின்றன. எனவேதான் ஒப்பீட்டளவில் பாதுகாப்பான முதலீடு என்று கருதப்பட்டாலும் அரசாங்கப் பத்திரங்களில் முதலீடு செய்வதைத் தாண்டி சிலிகான் வேலி வங்கிக்கு வேறு இலாபகரமான, உத்திரவாதமான வருமானம் அளிக்கக்கூடிய துறைகள் ஏதுமில்லை. எனவேதான் அரசாங்கப் பத்திரங்களில் அவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்துள்ளது.

கார்ப்பரேட் வங்கிகள் பத்திரங்கள், பிணையங்களை வாங்கி வைத்திருந்தாலும்கூட, ஆண்டாண்டுக்கு வட்டி பெற வேண்டும், அவை முதிர்வு பெறும் வரையில் காத்திருந்து பணத்தை திரும்ப எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவைகள் பெரும்பாலும் வாங்கப்படுவதில்லை. மாறாக அப்போது குறிப்பிட்டதொகைக்கு வாங்கிய பத்திரம் சந்தையில் நல்லவிலை வரும்போது விற்று இலாபமடிக்க வேண்டும் என்ற ஊகவாணிபச் சூதாட்ட நோக்கத்திலிருந்தே வாங்கப்படுகின்றன.

இதற்கு மிகச் சிறந்த உதாரணங்களில் ஒன்று கிரெடிட்சூயிஸ் வங்கி. இவ்வங்கியானது, அமெரிக்காவின் பெரிய வங்கிகளுடன் போட்டியிடுவதற்காக, பல்வேறு ஊகவாணிபச் சூதாட்டத்தில் ஈடுபட்டது. உதாரணமாக முதிர்வு காலத்தை அறிவிக்காத பத்திரங்களை (AT1 Bonds)[3] அதிகளவில் வெளியிட்டு கடனைத் திரட்டியுள்ளது. அவ்வாறு திரட்டப்பட்ட பணத்தை மீண்டும் ஊகபேரச் சூதாட்டத்தில் போட்டது. மேலும், பல்கேரியாவில் உள்ள போதை மருந்து கடத்துபவர்கள் பணமோசடியில் ஈடுபட உதவி செய்து அதன் மூலம் ஆதாயமடைந்ததாக கிரிமினல் குற்றச்சாட்டு அவ்வங்கியின் மீது உள்ளது. அதேபோல கிரீன் சில், ஆர்கிகாஸ் கேபிடல் மேனேஜ்மண்ட் ஆகிய இரு நிதிசூதாடி கும்பல்களுக்கு கடனளித்து அதன் மூலம் 9.500 கோடி ரூபாயை இழந்துள்ளது. எனவே, பணவீக்கத்திற்கும் சரி, வங்கிகள் திவாலானதற்கும் அடிப்படைக்காரணமே நிதிமூலதனத்தின் இயல்பான ஊகபேரச்சூதாட்டம்தான்.

“நிதிமூலதனமானத்தைக் கொண்டு சுகஜீவிகளாக வாழ்வோரின், அதாவது எந்தத் தொழில் நிலையத்திலும் எந்தப் பங்கும் எடுத்துக் கொள்ளாமல் சோம்பேறி வாழ்க்கையையே தொழிலாகக் கொண்டு “சீட்டுக் கத்தரித்து” வாழ்வோரின் வர்க்கம் ஒன்று, துல்லியமாகச் சொல்லப்போனால் படிவம் ஒன்று வெகுவாய் வளர்ந்துவிட்டது” (லெனின் நூல்திரட்டு 2, பக்கம் 160)

“தனது மூலதனத்தைக் கொண்டு சுகஜீவிகளாய்ச் “சீட்டுக்கத்தரித்து” வாழும் முதலாளிகளின் ஒருபெரும் பிரிவு தோற்றுவிக்கப்படுவதில் முதலாளித்துவத்தின் அழுகல் தன்மை வெளியாகிறது. இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்சு, ஜெர்மனி – தலைமையிலான இந்நான்கு ஏகாதிபத்திய நாடுகளில் ஒவ்வொன்றிலும் பணவுறுதிச் சீட்டுகளில் (securiy bonds) 10,000 அல்லது 15,000 கோடி பிராங்குகள் வரை மூலதனம் போடப்பட்டிருக்கிறது. இதிலிருந்து இந்நாடுகள் ஒவ்வொன்றும் 800 கோடிக்கும் குறையாமல் வருமானம் பெறுகிறது.” (லெனின் – ஏகாதிபத்தியமும் சோசலிசத்தில் பிளவும், பக்கம் 5, அழுத்தம் நமது)

எனவே, இந்த நெருக்கடியைத் தீர்க்க முதலாளித்துவத்திடம் எந்தத் தீர்வும் இல்லை. இந்த நெருக்கடியானது முதலாளித்துவத்தின் மிகை உற்பத்தியின் காரணமாக வேலையின்மை அதிகரித்து, உற்பத்திக்கான இலாபமான துறைகள் அருகியுள்ளதால், ஊகவாணிபச் சூதாட்டத்தில் நிதிமூலதனக் கும்பல்கள் ஈடுபடுவதையே துலக்கமாக வெளிப்படுத்துகிறது. முதலாளித்துவம் உற்பத்தியில் ஈடுபட்டு இலபகராமக இயங்கக்கூடிய நிலைமைகள் அருகியுள்ள, சீட்டுக்கத்தரித்து வாழ்வதையே தொழிலாகக் கொண்ட இந்த நிலைமையைத்தான் முதலாளித்துவத்தின் அழுகல் நிலை என்கிறோம்.

தற்போது ஏற்பட்டுள்ள பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டிவீதத்தை உயர்த்துவதைத் தவிர பெடரல் வங்கிக்கு வேறுவழியில்லை. வட்டிவீதத்தை உயர்த்தினால் ஏற்கனவே வங்கிகள் வாங்கியிருக்கும் பத்திரங்களின் மதிப்பு கிடுகிடுவென சரிவதைத் தடுக்க முடியாது. அப்பத்திரங்களின் 6,200 கோடி டாலர் உணரப்படாத நட்டத்தை, சந்தையில் விற்று உணர்ந்தாக வேண்டும். இது மேலும் நெருக்கடியைத் தீவிரப்படுத்தவே செய்யும். வங்கிகள் நட்டமடையும் என்று ரெப்போ வட்டிவீதத்தை உயர்த்தாமல் இருந்தால் பணவீக்கம் மேலும் கட்டுக்கடங்காமல் செல்லும். எனவே அமெரிக்கப் பொருளாதாரம் மட்டுமல்ல, உலக ஏகாதிபத்திய முதலாளித்துவக் கட்டமைப்பே ஒரு முட்டுச் சந்தில் முழிபிதுங்கி நிற்கிறது என்பதே உண்மை.

இன்று முதலாளித்துவ சமுக்கக் கட்டமைப்பு அதன் உச்சநிலையை எட்டி மேலும் வளர முடியாமல் நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கிறது. அழுகி நாறுகிறது. ஒரு சமூகக் கட்டமைப்பு என்கிற ரீதியில் ஆள அருகதையற்றுப் போன, தோற்று திவாலாகிப் போன, தூக்கியெறியவேண்டிய ஒன்றாக மாறிவிட்டது. இப்படி நாம் சொல்லும்போது அது இன்றோ நாளையோ உடைந்து விழும் என்ற பொருளில் கூறவில்லை. மாறாக வரலாற்று ரீதியில் அவசியமான ஒன்றாகவும் புத்தாக்க சக்தியாகவும் தோன்றிய முதலாளித்துவம் இன்று அதன் உச்சநிலையை எட்டி அழுகி நாறுகிறது, நாசகர சக்தியாக மாறியுள்ளது என்று கூறுகிறோம்.

எனவே அழுகிநாறும் இந்த ஏகாதிபத்திய முதலாளித்துவக் கட்டமைப்பைத் தூக்கியெறிந்து சோசலிசத்தைப் படைக்க வேண்டும் என்பதையே வரலாறு நம்மிடம் கோருகிறது. இம்மாபெரும் கடமையை நிறைவேற்றுவோம். நமது நாட்டில் சோசலிசத்தை நோக்கிய புதிய ஜனநாயகப் புரட்சியைச் சாதிப்போம்!

(முற்றும்.)

  • ரவி

***************************************

  1. வட்டி வீதம் உயர்வதற்கேற்ப ஏற்கனவே வாங்கப்பட்ட பத்திரங்களின் (existing bonds) விலை ஏன் ஏறி, இறங்குகின்றன என்பதை மேலும் விரிவாகப் புரிந்துகொள்ள, கீழ்க்காணும் கட்டுரையைப் படிக்கலாம். Why Do Bond Prices Go Down When Interest Rates Rise? https://www.thebalancemoney.com/why-do-bond-prices-go-down-when-interest-rates-rise-2388565

 


[1] கொரோனா பெருந்தொற்று என்பது ஏகாதிபத்திய முதலாளித்துவக் கட்டமைப்பின் விளைவு என்பதை “ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் கோரத்தாண்டவமே கொரோனா” என்ற கட்டுரையில் நாங்கள் ஏற்கனவே விளக்கியுள்ளோம்.

[2] வேலை தேடிக் கொண்டிருப்பவர்களில் வேலை கிடைக்காதவர்களை மட்டுமே வைத்து வேலையின்மை வீதம் (unemployment ratio) குறைவாக இருப்பதாக அமெரிக்க அரசு மக்களை ஏமாற்றுகிறது. இதேபாணியில்தான் மோடி அரசும் வேலையின்மை வீதம் குறைவாக இருப்பதாகக் கணக்குக் காட்டி மக்களை ஏய்க்கிறது. ஆனால் வேலை கிடைக்கவில்லை என்று விரக்தியடைந்து வேலை தேடுவதையே கைவிட்டவர்கள் இந்தக் கணக்கில் வருவதில்லை. உண்மையில் உழைக்கும் வயதிலுள்ளவர்கள் உழைப்பில் ஈடுபடுவதைக் கணக்கிட்டால் (Labour Participation Ratio) வேலையிண்மை அதிகாரப்பூர்வப் புள்ளிவிவரங்களைவிட பண்மடங்கு அதிகமாகும்.

[3] உதாரணமாக ஒரு நிறுவனம் ஒரு 5 ஆண்டு முதிர்வு காலம் கொண்ட பத்திரத்தை வெளியிட்டு 1000 டாலர் கடன் திரட்டுகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்பத்திரத்தை வாங்கியவருக்கு ஆண்டுதோறும் 5% வட்டியை அந்நிறுவனம் தருகிறது என்று வைத்துக்கொள்வோம். 5 ஆண்டுக்குப் பிறகு பின்பு 1000 டாலரை திருப்பித் தரும். ஆனால் இதர பத்திரங்களைவிட AT1 அவற்றுக்கு வட்டி அதிகம். ஆனால் AT1 பத்திரங்களைப் பொறுத்தளவில், பத்திரத்தை வெளியிடும் நிறுவனம் முதிர்வு காலத்தை முதலில் அறிவிக்காது. அதை வாங்கியவருக்கும் எந்தவித உத்திரவாதமும் இல்லை. வங்கி நெருக்கடியைச் சந்தித்தால் அதையே காரணம் காட்டி தொகையைத் திருப்பித் தர முடியாது என்று கூறவும் முடியும். எனவே, வாங்கியவர் சந்தையில் அதைவிற்று மட்டுமே இலாபமீட்ட முடியும். எனவே, ஏ.டி.1 பத்திரங்கள் என்பது முழுக்க முழுக்க ஊகவாணிபச் சூதாட்டத்தைக் கட்டுக்கடங்காமல் பெருக்கியுள்ளன. உதாரணமாக, கிரெடிட் சூயிஸ் வங்கி திவாலைத் தொடர்ந்து அதன் 1600 கோடி டாலர் மதிப்புள்ள அதன் AT1 பத்திரங்களை வாங்கியவர்கள் அப்படியே கைவிடப்பட்டுள்ளார்கள்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன