சிலிகான் வேலி – சிக்னேச்சர் – கிரெடிட் சூயிஸ்
திவாலாகும் வங்கிகள் :
முட்டுச் சந்தில் முதலாளித்துவப் பொருளாதாரம்!
பாகம் 3

 

 

வங்கித்துறை நெருக்கடியின் விளைவுகள்  

வங்கிகள் என்பது ஏகாதிபத்திய பொருளாதாரத்தின் மிகமுக்கியமான ஒன்றாகும். பிற நிறுவனங்களுக்கு வங்கிகள் தந்துள்ள கடன்களைக் கட்ட முடியாமல் வங்கிகள் திவாலாவதும், வங்கிகள் திவாலாகும்பட்சத்தில் அவற்றில் முதலிட்டுள்ள கார்ப்பரேட்டுகள் திவாலாவதுமான இவை ஒன்றையொன்று பாதிக்கும் (domino effect) நிகழ்வுகளாகும்.

இது ஏதோ ஓரிரு வங்கியோடு நின்றுவிடும் விவகாரமல்ல. இந்த நெருக்கடி எல்லா வங்கிகளுக்கும் பரவி வருகிறது. ஏற்கனவே பல அமெரிக்க, ஐரோப்ப வங்கிகளில் உள்ள வைப்புத் தொகைகள் திரும்ப எடுக்கப்பட்டு வருகின்றன. அவைகளின் பங்கு மதிப்புகளும் சரசரவென சரியத் தொடங்கியுள்ளது. அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கியான ஜேபி மார்கன் வங்கியின் பங்குமதிப்பானது 5.7% சரிந்துள்ளது. ஜெர்மனயின் மிகப்பெரிய வங்கியான டாயிட்ச் வங்கியின் (deutsche bank) பங்கு மதிப்பு 14% சரிந்துள்ளது. ஃபர்ஸ்ட் ரிபளிக் என்ற இன்னொரு அமெரிக்க வங்கி திவாலாகும் நிலையில் உள்ளது. சிலிகான் வேலி வங்கி திவாலான இரு நாட்களில் உலகளவில் உள்ள பல்வேறு நிதி நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் 4,650 கோடி டாலர் சரிந்துள்ளன.

186 அமெரிக்க வங்கிகள் சிலிகான் வங்கியைப் போல பத்திரங்களை மிக அதிகமாக வாங்கிக் குவித்துள்ளனர். வட்டி வீத உயர்வால் இப்பத்திரங்களின் விலைகள் குறைந்துள்ளதால், அவைகளின் உணரப்படாத நட்டத்தின் மதிப்பு 6,200 கோடி டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி) 2.7% ஆகும். இவற்றில் பாதியை சந்தையில் விற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டு நட்டம் உணரப்பட்டால் கூட மிகப்பெரிய விளைவுகளை உண்டாக்கும் என எச்சரிக்கின்றனர் முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள். இந்த 186 நிறுவனங்களில் 10% நிறுவனங்கள் சிலிகான் வேலி வங்கியை விட அதிக உணரப்படாத நட்டம் ஏற்பட வாய்ப்புள்ளவையாகும்.

சமீபத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வானது, 31% அமெரிக்கர்கள் அமெரிக்க வங்கிகளின் மீது நம்பிக்கையை இழந்துள்ளதாகவும், 57% அமெரிக்கர்கள் குறைவான நம்பிக்கையைக் கொண்டிருப்பதாகவும் கூறுகிறது. அமெரிக்க வங்கிகளின் சந்தை மதிப்பான அது காட்டும் கணக்கை (book value) விட 2 இலட்சம் கோடி டாலர் குறைவு என மதிப்பிடுகிறது சமீபத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு.

சிலிகான் வேலி வங்கியில் இந்தியா உட்பட உலகின் பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. அவர்களின் முதலீடுகள் பாதுகாக்கப்படும் என்று ஜோ பைடன் உத்திரவாதம் அளித்தாலும், அந்நிறுவனங்களின் இலாபவீதம் சரிவதைத் தடுக்க முடியாது. ஒருவேளை சிலிகான் வேலி வங்கியில் முதலிட்டுள்ள பணம் திரும்பக் கிடைக்கவில்லையென்றால், அது தகவல் தொழில்நுட்பத் துறையையே அழிவின் வாசலில் நிறுத்தும். ஏற்கனவே பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் ஆட்குறைப்பு செய்து வரும் நிலையில் தற்போது செலவீனங்களைக் குறைக்க ஆட்குறைப்பும், ஊதிய வெட்டும் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே பணவீக்கம், வட்டிவீத உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களைத்தான் இது மீண்டும் தாக்கும்.

கிரெடிட் சூயிஸ் வங்கியை யு.பி.எஸ். வங்கி வாங்கியுள்ளதால் அதன் பங்கு மதிப்பும் சரிந்து வருகிறது. கிரெடிட் சூயிஸ் வங்கி சென்ற ஆண்டே 5,000 பேரை ஆட்குறைப்பு செய்துள்ளது. தற்போது யு.பி.எஸ். வங்கி அதைக் கைப்பற்றியுள்ள சூழலில் மேலும் 9,000 பேர் ஆட்குறைப்பு செய்யப்பட வாய்ப்புள்ளது.

மேலும், அமெரிக்காவின் பெரிய, சிறிய வங்கிகள் அனைத்தும் பல்வேறு ரியல் எஸ்டேட் முதலாளிகளிடமிருந்து CRE (Commercial Real Estate Bond) பத்திரங்களைப் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு கோடிக்கணக்கான டாலர்கள் கடனளித்துள்ளன. இப்பத்திரங்களும் வங்கிகளின் இருப்பாக கணக்கில் வைக்கப்பட்டுள்ளது. சிறிய வங்கிகளின் இருப்பில் 95%மும் பெரிய வங்கிகளின் இருப்பில் 35%மும் இந்த CRE பத்திரங்கள் உள்ளன.

சுருங்கக் கூறினால் வங்கிகளிடமிருந்து ரியஸ் எஸ்டேட் முதலாளிகள் வாங்கியுள்ள மொத்தக் கடன் மதிப்பு 2.3 இலட்சம் கோடி டாலராகும். அதில் 80% சிறிய வங்கிகளிடமிருந்து வாங்கியுள்ளனர். கொரோனா நோய்த்தொற்றுக்குப் பிறகு ரியல் எஸ்டேட் விலைகள் சரிந்து வருவதால், அம்முதலாளிகளும் திவாலாகி  வருகின்றனர். இந்த ரியஸ் எஸ்டேட் முதலாளிகள் திவாலானதால் மட்டும் கடந்த இரு வாரங்களில் 3,000 கோடி டாலர் இழப்பு வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இக்கடன்கள் திரும்ப வராத பட்சத்தில் அது மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தும்.

இது மீண்டும் வங்கிகள் திவாலாவதற்கும், அதனால் இதர நிறுவனங்கள் திவாலாவதற்கும் என ஒன்றையொன்று பாதிக்கும் நிகழ்வுக்கு இட்டுச் செல்லும். மேலும் மேலும் ஆட்குறைப்புக்கு இட்டுச் செல்லும். இது ஒரு நச்சு சுழலாகும்.

“அரசு தொழிலில் தலையிடக் கூடாது. சந்தைக்கு எல்லாம் தெரியும்” (No Bussiness For Government in Bussiness) என்பதுதான் உலகமய, தனியார்மய, தாராளமயக் கொள்கையின் சாராம்சமாகும். ஆனால் இந்த வங்கிகள் திவாலானதைத் தொடர்ந்து “ஒழுங்குமுறை ஆணையங்கள் கடுமையான விதிகளை வகுக்க வேண்டும், வங்கிகளைக் கட்டுப்படுத்த வேண்டும், நெறிப்படுத்த வேண்டும்” என்று உலகமய ஆதரவாளர்களே ஒப்பாரி வைக்கத் தொடங்கிவிட்டனர். இதிலிருந்தே உ.த.தா கொள்கைகள் எந்தளவு தோற்றுப்போயுள்ளது என்பதை உள்ளங்கை நெல்லிக்கணியாகக் தெரிகிறது. நகைச்சுவை என்னவென்றால், 2008-இல் லேமன் பிரதர்ஸ் வங்கி திவாலைத் தொடர்ந்து வங்கிகளை ஸ்திரமாக (stabilize) வைத்திருப்பது எவ்வாறு என்று உலக அரசுகள் பாசிலில் கூடி விவாதித்து, பாசில் ஒப்பந்தங்களை வகுத்தனர். அதன்படி, எல்லா பெரிய வங்கிகளும் தம்மிடமுள்ள வைப்புத் தொகையில் குறிப்பிட்ட அளவை ரொக்கமாக (liquid cash) – அதாவது சொத்தாகவோ, முதலீடாகவோ, கடனாகவோ அல்லாமல் ரொக்கமாக – கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என்ற விதியைப் போட்டன. இதை எந்த பெரிய வங்கிகளும் முறையாகக் கடைபிடிப்பதில்லை. பின்னர், 2020-இல் கொரோனாவைக் காரணம் காட்டி பெடரல் ரிசர்வ் வங்கி இந்த விதிமுறைகளையே நீக்கியது.

2008 இல் லேமன் வங்கி திவாலாகியபோதும் சரி, இப்போதும் சரி அரசுகள்தான் பல்லாயிரம் கோடி டாலரை கொடுத்து இந்நிறுவனங்களைக் காப்பாற்றுகின்றன. அமெரிக்கா, சுவிட்சர்லாந்து அரசுகள் கொடுத்த இந்த பல்லாயிரம் கோடி ரூபாய் பெயில் அவுட்களை ஈடுகட்ட, ஏற்கனவே பணவீக்கத்தால் விலைவாசி உயர்ந்து, வாழ்க்கைத்தரம் குறைந்து வாடும் அமெரிக்க, ஐரோப்பிய மக்கள் தலையில்தான் வரிச்சுமையாக, விலைவாசி உயர்வாக, மானிய வெட்டாக திணிக்கவுள்ளனர். எனவே இது உழைக்கும் மக்களுக்குப் பேரிடியாகவே இருக்கும்.

(தொடரும்..)

  • ரவி

One comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன