சிலிகான் வேலி – சிக்னேச்சர் – கிரெடிட் சூயிஸ்
திவாலாகும் வங்கிகள் :
முட்டுச் சந்தில் முதலாளித்துவப் பொருளாதாரம்!
பாகம் 2

 

 

ஏன் வட்டிவீதம் உயரும்போது ஏற்கனவே வாங்கப்பட்ட பத்திரங்களின் விலை உயரத்தானே வேண்டும்? ஏன் குறைகிறது? ஏற்கனவே 1000 டாலருக்கு வாங்கப்பட்ட பத்திரமானது ஆண்டுக்கு  15 டாலர் வட்டி (1.5% yield) தருகிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த வட்டி என்பது நிரந்தரமானது (fixed). அதாவது சந்தையில் என்ன ஏற்ற இறக்கம் ஏற்பட்டாலும் முதிர்வு காலம் வரை அதே வட்டிதான் கிடைக்கும்.  தற்போது பெடரல் வங்கியானது வட்டிவீதத்தை உயர்த்தியுள்ளதால் புதிதாக சந்தைக்கு வரும் பத்திரத்தை 1000 டாலர் கொடுத்து வாங்கினால் அது 40 டாலர் (4% yield) வட்டி தரும். எனவே, 15 டாலர் வட்டி தருகிற ஏற்கனவே வாங்கப்பட்ட 1,000 டாலர் மதிப்புள்ள பத்திரத்தை சந்தையில் விற்கும்போது (secondry market) அதை யாரும் வாங்கத் தயாராக இருக்க மாட்டார்கள். எனவே, பத்திரத்தின் விலையைக் குறைத்தாக வேண்டும். எனவே ஏற்கனவே வாங்கப்பட்டுள்ள பத்திரங்களின் மதிப்பானது அரசாங்கம் வட்டிவீதத்தை உயர்த்துவது, குறைப்பதைச் சார்ந்தே இருக்கிறது.

2023 மார்ச் நிலவரப்படி ரெப்போ வட்டிவீதம் எவ்வளவு சதவீதம் உயர்ந்தால், ஏற்கனவே 1,000 டாலருக்கு வாங்கப்பட்ட பத்திரங்களின் மதிப்பு எவ்வளவு குறையும் என்பதை அட்டவனையில் பார்க்கவும். (விலை டாலரில்)

வட்டி வீதம் அதிகரிக்கும் போது

இன்றைய வட்டிவீதம் அதிகரித்தால்1000 டாலருக்கு ஏற்கனவே வாங்கப்பட்ட
பத்திரத்தின் தற்போதைய சந்தை விலை குறையும்
4% ஆக அதிகரித்தால்$925.04 ஆக குறையும்
5% ஆக அதிகரித்தால்$856.47 ஆக குறையும்
6% ஆக அதிகரித்தால்$793.70 ஆக குறையும்

இது எதிர்மறையிலும் நிகழும் ஒருவேளை பெடரல் ரிசர்வ் வங்கி நாளைக்கே வட்டி வீதத்தை 2% ஆகக் குறைத்தால் ஏற்கனவே 1000 டாலருக்கு வாங்கப்பட்ட பத்திரத்தின் மதிப்பானது 1081 டாலராக உயரும். வட்டி வீதம் குறைக்கப்படுவதற்கேற்ப மேலும் மேலும் உயரும்.

வட்டி வீதம் குறையும்போது

இன்றைய வட்டிவீதம் குறைந்தால்1000 டாலருக்கு ஏற்கனவே
வாங்கப்பட்ட பத்திரத்தின் தற்போதைய சந்தை விலை அதிகரிக்கும்
2% ஆகக் குறைந்தால்$1081.99 ஆக அதிகரிக்கும்
1% ஆகக் குறைந்தால்$1171.73 ஆக அதிகரிக்கும்
%0 ஆகக் குறைந்தால்$1270.00 ஆக அதிகரிக்கும்

எனவே, பாதுகாப்பான முதலீடு என்று கருதப்படும் அரசாங்க பத்திரங்களில் செய்யப்படும் முதலீடு கூட பாதுகாப்பானதல்ல என்பதையே இது நிரூபிக்கின்றது. அதாவது பத்திரங்களில் செய்துள்ள முதலீடுகள் வட்டிவீத உயர்வுக்கேற்ப ஏற்ற இறக்கம் காணும் என்பதே உண்மை.

இந்த ஓராண்டில் மட்டும் பெடரல் ரிசர் வங்கியானது வட்டிவீதத்தை 4.75% ஆக உயர்த்தியுள்ளது. அதனால், 1000 டாலர் மதிப்புள்ள சிலிகான் வேலி வங்கியின் பத்திரத்தின் மதிப்பானது 925 டாலராகச் சரிந்தது. அதாவது, 9,100 கோடி டாலருக்கு அது வாங்கியுள்ள HTM பத்திரங்களின் மதிப்பு 1,500 கோடி டாலர் சரிந்தது. இது எல்லா வங்கிகள் ஏற்கனவே வாங்கியுள்ள பத்திரங்களுக்கும் பொருந்தும். ஆனால் வட்டி வீதம் உயர்வு, குறைப்புக்கேற்ப இந்தப் பத்திரங்களின் விலை ஏறும், இறங்கும் என்றாலும் சிலிகான் வேலி வங்கியிடம் உள்ள பத்திரங்களை அது சந்தையில் விற்கும்வரை அது உணரப்படாத நட்டமாகவே (unrealised loss) கருதப்படும். பத்திரங்களை சந்தையில் விற்க நேரிடும்போதுதான் நட்டத்த உணர (realise) வேண்டிவரும். ஒருவேளை அவ்வங்கி பத்திரங்களை விற்காமல், அதாவது நட்டத்தை உணராமல், பெடரல் வங்கி வட்டிவீதம் குறைக்கப்படும் வரை காத்திருக்கலாம்.[1]

இப்படித்தான் பெடரல் வங்கி வட்டிவீதத்தைக் குறைத்தால் 1000 டாலர் மதிப்புள்ள சிலிகான் வேலியின் பத்திரத்தின் விலை உயரும் என்று அவ்வங்கியும் காத்திருந்தது. ஆனால் பெடரல் வங்கியானது வட்டிவீதத்தைக் குறைப்பதற்கான எந்தவித அறிகுறியும் இல்லை. அதேசமயம் வட்டிவீதத்தை அதிகரிப்பதற்கே ஆலோசனைகள் நடைபெற்று வந்தன.

அப்போதுதான் இன்னொரு பிரச்சனையும் சேர்ந்துகொண்டது. தகவல் தொழில்நுட்பத் துறையானது, 2020-2022-வரை தற்காலிகமாக கொழிப்புக்காலத்தில் மிதந்தது. அப்போது பெடரல் வங்கியின் வட்டிவீதமும் 0.5% ஆக இருந்ததால், மலிவாகக் கடன் கிடைத்தது. 2022-க்குப் பிறகு அத்துறை சரிவைச் சந்திக்கத் தொடங்கியது. கூகுள், மெட்டா போன்ற மிகப்பெரிய அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களே ஆயிரக்கணக்கில் ஆட்குறைப்பு செய்யத் தொடங்கின. 2022 மார்ச் மாதத்திலிருந்து பெடரல் வங்கியும் வட்டிவீதத்தை உயர்த்தத் தொடங்கியது. எனவே, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மட்டுமல்ல, எல்லா பெரும்பாலான கார்ப்பரேட்டுகள் தாம் வங்கிகளில் வைத்துள்ள இருப்புத் தொகையைத் திரும்ப எடுக்கத் தொடங்கின.

கடந்தாண்டு ஏப்-டிச வரையிலான 9 மாதங்களில் மட்டும், சிலிகான்வேலி வங்கியில் வைக்கப்பட்டிருந்த வைப்புத் தொகையில் 2,000 கோடி டாலர் தொகையை அந்நிறுவனங்கள் திரும்பப் பெறத் தொடங்கின. இவ்வாறு தொடர்ந்து நிறுவனங்கள் தமது வைப்புத் தொகையை திருப்பிக் கேட்கும்போது, அவையனைத்தும் பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்டிருப்பதால் அதைக் கொடுக்கமுடியாமல் (liquidity crisis) அவ்வங்கி திணறியது. இவ்வங்கியில் வைக்கப்பட்டிருக்கும் பணம் உழைக்கும் மக்களின் அற்ப சொற்பத் தொகையல்ல. பெரும் நிறுவனங்களின் கோடிக்கணக்கான டாலர்கள் என்பதை நினைவில் கொள்ளவும். அதன் மொத்த இருப்பான 18,900 கோடி டாலரில், 15,700 கோடி டாலர் (83%) வெறும் 37,000 கணக்குகளில் (accounts) இருந்து மட்டுமே இருப்பு வைக்கப்பட்டிருப்பவை.

எனவே, தன்னிடமுள்ள பத்திரங்களை சந்தையில் விற்று பணத்தைத் திரட்டியாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதாவது 1000 டாலர் மதிப்புள்ள பத்திரத்தை வேறு வழியின்றி 925 டாலருக்கு விற்று, நட்டத்தை உணர வேண்டிய (realise) நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதனால் தன்னிடமுள்ள AFS பத்திரங்களை சந்தையில் விற்று பணத்தைத் திரட்டடியதில் 1,800 கோடி டாலர் நட்டம் ஏற்பட்டது. இதன்பிறகு சிலிகான் வேலி வங்கியின் பத்திரங்கள் நட்டத்தைச் சந்திக்கின்றன என்ற செய்தி பரவியது. அவ்வங்கியின் பங்கு மதிப்புகள் ஒரே நாளில் 60% சரிந்தன. அவ்வங்கி திவாலாகும் என்ற அபாயம் காட்டுத்தீயாப் பரவத் தொடங்கியதும், ஒரே நாளில் 4,200 கோடி டாலர் வைப்புத் தொகை திரும்ப எடுக்கப்பட்டது. இச்செய்தியை அறிந்த முதலீட்டாளர்கள் அனைவரும் பீதியுற்று தமது வைப்புத் தொகையைத் திரும்பக் கேட்டதும், அவ்வங்கியை இழுத்துமூட வேண்டிய நிலை ஏற்பட்டது.

இவ்வாறுதான் சிலிகான் வேலி வங்கி திவாலானது. சிலிகான் வேலி வங்கி திவாலான இரு நாட்களில் சிக்னேச்சர் வங்கியும் திவாலானது. சிலிகான் வங்கியைப் போலல்லாமல் சிக்னேச்சர் வங்கியானது கிரிப்டோ துறையின் முக்கிய வங்கியாகும். 2018 ஆம் ஆண்டிலிருந்து கிரிப்டோ கரண்சியை வைப்புத் தொகையாக ஏற்றுக்கொள்ளும் சில வங்கிகளுள் சிக்னேச்சர் வங்கியும் ஒன்று. கிரிப்டோ கரண்சி என்பது என்பது சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கேற்ப தடாலடியாக ஏறி இறங்கும் மிகவும் உத்திரவாதம் குறைவான (high risky) ஒன்றாகும். பெடரல் வங்கி வட்டிவீதத்தை உயர்த்தத் தொடங்கியதைத் தொடர்ந்து கிரிப்டோ சந்தையும் மளமளவென சரியத் தொடங்கியது. அதையடுத்து அவ்வங்கியின் வைப்புத்தொகையும் திரும்ப எடுக்கப்பட்டன. சிலிகான் வேலி வங்கி திவாலைத் தொடர்ந்து உருவான பீதியால் வைப்புத் தொகையை திரும்ப எடுக்கும் வேகம் அதிகரித்ததும், கொடுப்பதற்குப் பணமின்றி (liquidity crisis) அவ்வங்கியும் திவாலானது. இவை அமெரிக்க வராலாற்றிலேயே இரண்டாவது, மூன்றாவது பெரிய வங்கிகள் திவாலாகும் நிகழ்வாகும்.

இவ்வாறு வங்கிகள் அடுத்தடுத்து திவாலாவதைத் தடுக்க, அமெரிக்க அரசு 4,000 கோடி டாலரும், பெரிய அமெரிக்க வங்கிகள் 3,000 கோடி டாலரும் என மொத்தமாக 7,000 கோடி டாலர் பண உதவி (liquidity infusion) அளித்தும் அவைகளைக் காப்பாற்ற முடியவில்லை.

அமெரிக்காவில் உருவான வங்கித்துறை நெருக்கடி (Banking Crisis) என்ற இந்தச் சூறாவளி ஐரோப்பாவிலும் சுழன்றடிக்கத் தொடங்கியது. உலகளவில் 30-ஆவது பெரிய வங்கியும், ஏகாதிபத்திய முதலாளித்துவக் கட்டமைப்பின் முக்கியமான நிதிநிறுவனங்களுள் (Systematically Important Financial Institution – SIFI) ஒன்றும், 166 ஆண்டுகள் பழமையான வங்கியுமான சுவிட்சர்லாந்தின் கிரெடிட் சூயிஸ் வங்கி திவால் நிலைக்கு வந்தது. இவ்வங்கி இந்நிலையை அடைவது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்.

அமெரிக்காவில் வங்கிகள் திவாலாகத் தொடங்கியதும், அச்சமும் பீதியும் முதலாளித்துவ உலகைப் பிடித்தாட்டின. வங்கிகள் மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கை சரசரவென சரியத் தொடங்கியது. கிரெடிட் சூயிஸ் வங்கியில் இருப்பு வைத்துள்ள நிறுவனங்கள் தங்கள் வைப்புத் தொகையை மளமளவென எடுக்கத் தொடங்கினர். இது  உலகின் வங்கியாளர் (Banker of the world) என்று அழைக்கப்படும் சுவிட்சர்லாந்தின் 2-ஆவது பெரிய வங்கியாகும். அதாவது கிரெடிட் சூயிஸ் வங்கி திவாலாகும் பட்சத்தில் சுவிட்சர்லாந்தின் பொருளாதாரமே ஆட்டம் காணத் தொடங்கும். எனவே சுவிட்சர்லாந்தின் மத்திய வங்கியான சுவிட்சர்லாந்து தேசிய வங்கி (SNB) 5,000 கோடி சுவிஸ் பிராங்குகளைக் (1 சுவிஸ் பிராங் = 1.06 டாலர்) கொட்டிக் கொடுத்து அவ்வங்கியைக் காப்பாற்ற முயன்றது. ஆனால் அது பலனளிக்கவில்லை. கிரெடிட் சூயிஸ் வங்கியின் பங்கு மதிப்புகள் மளமளவெனச் சரியத் தொடங்கின. மார்ச் 2022 இல் 7.26 சுவிஸ் பிராங்காக இருந்த ஒரு பங்கின் விலை 2023 மார்ச்சில் 0.76 டாலாராகச் சரிந்தது. இது மிகப்பெரிய சரிவாகும்.

எனவே தொடர்ந்து இவ்வங்கி திவால் நிலையை எட்டுவதைத் தடுக்க, சுவிட்சர்லாந்து அரசாங்கமும், சுவிஸ் தேசிய வங்கியும் நிர்ப்பந்தித்து இதைவிடப் பெரிய வங்கியும், சுவிட்சர்லாந்தின் முதல் பெரிய வங்கியுமான யு.பி.எஸ். (UBS) வங்கியுடன் கிரெடிட் சூயிஸை இணைத்தனர். 8,000 கோடி டாலர் சந்தை மதிப்பு கொண்ட கிரெடிட் சூயிஸ் வங்கியை, பாதிக்கும் குறைவாக 3,300 கோடி டாலர் கொடுத்து யு.பி.எஸ். வங்கி கைப்பற்றியுள்ளது.

(தொடரும்..)

  • ரவி

 

 


[1] உணரப்படும் நட்டம், உணரப்படாத நட்டம் என்பதை ஒரு எளிமைப்படுத்தப்பட்ட உதாரணம் மூலம் கூறுவோம். உதாரணமாக நீங்கள் ஒரு துணி வியாபாரி என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் ரூ.10,000 கடன் வாங்கி மொத்த விலைக்கு துணி வாங்குகிறீர்கள். ஒரு துணியின் விலை ரூ.1000 என்று வைத்துக்கொள்வோம். நாளைக்கே சந்தையில் புதிய துணிகளின் வரத்து அதிகரித்து உங்கள் துணியின் விலை ரூ.900 ஆகக் குறைந்துவிடுகிறது. நீங்கள் உங்கள் கையிலிருக்கும் ரூ.1000 மதிப்புள்ள துணியை ரூ.900-க்கு விற்காத வரை அது உணரப்படாத நட்டம். அதுவே விற்றால் உங்கள் நட்டத்தை உணர்வீர்கள். ஒருவேளை உங்களிடம் தாராளமாகப் பணமிருக்கும்பட்சத்தில் மீண்டும் ஒரு துணியின் விலை ரூ.1000-க்கு வரும் வரையிலோ, அல்லது அதற்கு மேலும் செல்லும் வரையிலோ பொறுத்திருந்து துணியை விற்கலாம். 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன