சிலிகான் வேலி – சிக்னேச்சர் – கிரெடிட் சூயிஸ்
திவாலாகும் வங்கிகள் :
முட்டுச் சந்தில் முதலாளித்துவப் பொருளாதாரம்!
பாகம் 1

கடந்த மார்ச் மாதம் அமெரிக்கா, ஐரோப்பாவில் அடுத்தடுத்து வங்கிகள் திவாலாகத் தொடங்கின. அமெரிக்காவின் 16-வது பெரிய வங்கியான சிலிகான் வேலி வங்கி மார்ச் 8 ஆம் தேதி திவாலாகியது. அதைத் தொடர்ந்து இரு நாட்களில் நியூயார்க்கின் சிக்னேச்சர் வங்கி திவாலாகியது. இது அமெரிக்க வராலாற்றிலேயே இரண்டாவது, மூன்றாவது பெரிய வங்கிகள் திவாலாகும் நிகழ்வாகும். அமெரிக்காவில் உருவான இந்த வங்கித்துறை நெருக்கடி (Banking Crisis) விரைவில் ஐரோப்பாவுக்கும் பரவியது. உலகளவில் 30-ஆவது பெரிய வங்கியும், ஏகாதிபத்திய முதலாளித்துவக் கட்டமைப்பின் முக்கியமான நிதிநிறுவனங்களுள் (Systematically Important Financial Institution – SIFI) ஒன்றுமான சுவிட்சர்லாந்தின் கிரெடிட் சூயிஸ் வங்கி திவால் நிலைக்கு வந்தது.

இதைத் தொடர்ந்து மீண்டும் 2008-ஐப் போல ஒரு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளோமா என்று ஒப்பாரி வைத்து அழுகின்றன, முதலாளித்துவப் பத்திரிக்கைகள். முதலாளித்துவ உலகில் அச்சமும் பீதியும் பரவி வருகின்றது. புதைகுழியில் சிக்கிக்கொண்டவன் காலை உந்தி வெளியே வர எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் அவனை மேலும் ஆழமாகப் புதைகுழிக்குள் தள்ளுவதைப் போல, 2008 சப்பிரைம் நெருக்கடியிலிருந்து வெளியே வர அமெரிக்க ஏகாதிபத்தியம் எடுத்த முயற்சிகள் அதைவிடப் படுகுழியில் தள்ளியிருக்கின்றது.

 

 

வங்கிகள் திவாலாகியது எப்படி?

முதலில் சில்வர்கேட் வங்கி, சிலிகான் வேலி வங்கி, சிக்னேச்சர் வங்கி ஆகிய அமெரிக்க வங்கிகளும், ஐரோப்பாவின் கிரெடிட் சூயிஸ் வங்கியும் திவாலாகியது எப்படி என்பதைப் பார்ப்போம்.

இந்தியாவில் உள்ளதைப் போல இவ்வங்கிகள் எதுவும் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. மாறாக அனைத்தும் கார்ப்பரேட் வங்கிகளாகும். இவைகளில் வைப்புத்தொகையாக (Deposit) இருப்பவைகளில் பெரும்பாலான பணம் கார்ப்பரேட் நிறுவனங்களுடையதாகும். எனவேதான் இவ்வங்கிகள் திவாலாகும்போது இதில் முதலீடு செய்துள்ள, இருப்பு வைத்துள்ள நிறுவனங்களும் திவால் நிலைக்குத் தள்ளப்படுகின்றன.

1983-இல் தொடங்கப்பட்ட சிலிகான் வேலி வங்கியானது தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் மையம் (epicenter of tech startups) என்று கூறப்படுகிறது. அதாவது உலகம் முழுவதும் உள்ள தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் வைப்புத் தொகைகளைப் பெருமளவில் கொண்டுள்ளதிலும் அந்நிறுவனங்களுக்குக் கடனளிப்பதிலும் முன்னணியான வங்கியாகும். 2020-22 காலகட்டத்தில் உலகமே கொரோனா ஊரடங்கில் இருந்ததால் பல்வேறு தகவல் தொழில்நுட்ப மென்பொருட்களுக்கான தேவைகள் ஒப்பீட்டளவில் அதிகரித்தது. அக்காலகட்டமானது தகவல் தொழில்நுட்பத்துறையில் தற்காலிகமாக ஒரு கொழிப்பு (tech boom) ஏற்பட்ட காலமாகும். இந்நெருக்கடி காலத்தில் கொள்ளை இலாபமடித்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பெரும்பாலானவை சிலிகான் வேலி வங்கியில் இருப்பு வைத்தன. சிட்டி குரூப், இண்டஸ்ட்ரி பேங்க் போன்ற பிற வங்கிகள் வைப்புத் தொகைகளுக்கு சராசரியாக 1.2% மட்டுமே வட்டி கொடுத்த நிலையில், சிலிகான் வேலி வங்கி 2.33% வட்டி அளித்ததே இந்நிறுவனங்களின் முதலீடுகள் சிலிகான் வேலியை நோக்கிப் பாய்ந்ததற்குக் காரணம்.

இதனால் 2019-இன் இறுதியில் 6,200 கோடி டாலராக இருந்த சிலிகான் வேலி வங்கியின் வைப்புத்தொகை 2021-இன் இறுதியில் 18,900 கோடி டாலராக (இந்திய மதிப்பில் சுமார் 18 இலட்சம் கோடி ரூபாய்) உயர்ந்தது. அதாவது இரண்டே ஆண்டுகளில் அவ்வங்கியின் வைப்புத் தொகையானது மூன்று மடங்கு உயர்ந்தது. இவ்வளவு பெரிய வைப்புத் தொகையைக் கொண்டுள்ள வங்கியும் வெற்றிகரமாக இயங்கி வந்த வங்கியுமான சிலிகான் வேலி திடீரென எப்படி திவால் நிலைக்குச் சென்றது.

 

 

முதலில் வங்கிகள் தன்னிடமுள்ள வைப்புத் தொகைகளை அப்படியே வைத்துக் கொள்வதில்லை. மாறாக, அவைகளை இலாபகரமாக மாற்ற பல்வேறு வகைகளில் முதலீடு செய்கின்றன, பிற நிறுவனங்களுக்குக் கடன் கொடுக்கின்றன. அவ்வாறாக சிலிகான் வேலி வங்கியின் இருப்பான 18,900 கோடி டாலரை மூன்று வகையாக முதலீடு செய்துள்ளது.

  • இதர நிறுவனங்களுக்கு வழங்கியுள்ள கடன் 7,300 கோடி டாலர்.
  • முதிர்வு பெறும் வரை வைத்திருக்க வேண்டிய பத்திரங்களில் (Hold-To-Maturity Bonds – HTM Bonds) 9,100 கோடி டாலர். இப்பத்திரங்களின் முதிர்வுக்காலம் தோராயமாக பத்தாண்டுகளுக்கும் மேல்.
  • தேவைப்படும்போது விற்றுக்கொள்ளும் பத்திரங்களில் (Available For Sale Bonds – AFS Bonds) 2,600 கோடி டாலர்.

இவைகளில் HTM, AFS பத்திரங்கள்[1] என்பது பல்வேறு வகையான அரசாங்கப் பத்திரங்களாகும். இவை பாதுகாப்பான முதலீடுகளாகப் (safe investments) பார்க்கப்பட்டன. ஏனென்றால், பங்குச் சந்தை, கடன் போன்ற உத்திரவாதம் குறைவான (risky investments) துறைகளில் பெருந்தொகையை முதலீடு செய்தால் அது நட்டமடையும்போது, வங்கியே திவாலாகும் அபாயம் உள்ளது. அவ்வாறு உத்திரவாதமல்லாத முதலீடுகளைக் காட்டிலும் அரசாங்கப் பத்திரங்களில் முதலீடு செய்வது ஒப்பீட்டளவில் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. இப்பத்திரங்களில் முதலீடு செய்துள்ள தொகைக்கேற்ப குறிப்பிட்டளவிலான வட்டி ஆண்டுதோறும் சிலிகான் வேலி வங்கி பெற்று வந்தது.

சரி. எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருக்க இவ்வளவு பெரிய வங்கி எப்படி திவாலாகியது?

2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்காவில் பணவீக்கம்[2] (inflation) தலைவிரித்தாடத் தொடங்கியது. பணவீக்கம் உயரும்போது விலைவாசி உயர்ந்து, மக்கள் வாங்கும் சக்தி வெகுவாகக் குறைந்துபோகும். அதனால் அவர்களின் வாழ்க்கைத்தரம் கடுமையாக பாதிக்கப்படும். பஞ்சம், பசி, பட்டினி, தற்கொலைகள் மிக அதிகமாகும். எனவே பணவீக்கம் என்பது உழைக்கும் மக்களுக்குப் பேரிடியாகும். 2020 ஆம் ஆண்டில் 1%-ஆக இருந்த பணவீக்கம், 2021 மே மாதம் 5%-ஆக உயர்ந்தது, 2022 ஜூலையில் 9.1%-ஆக உயர்ந்தது. இது அமெரிக்காவில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவாகும். ஒவ்வொருமுறை பணவீக்கம் உயரும்போதும், மத்திய வங்கிகள் வட்டி வீதத்தை உயர்த்தி அதைக் கட்டுக்குள் கொண்டுவர முயலும். இதற்குக் காரணம் பணவீக்கம் காரணமாக விலைவாசி உயர்வு ஏற்பட்டு, அது உழைக்கும் மக்களுக்குப் பெரிய பாதிப்பாக அமையும் என்பதால் அல்ல. பணவீக்கம் அதிகரிக்கும் போது நாணய மதிப்பு குறைந்து அது முதலாளிகளின் இலாப வீதத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால்தான்.

உதாரணமாக, 1 டாலர் = 70 ரூபாய் என்று சந்தை மதிப்பு இருக்கும்போது, அந்நிய மூலதனம் பங்குச் சந்தையில் போடப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். 1 டாலரை இந்தியப் பங்குச் சந்தையில் போட்டால் 70 ரூபாய் மதிப்புள்ள பங்குகளை வாங்க முடியும். பங்குச் சந்தையில் போடப்பட்ட 70 ரூபாய் சில நாட்கள் கழித்து 80 ரூபாயாக அதிகரிக்கிறது (அதாவது பங்கின் விலை கூடுகிறது) என்று வைத்துக்கொள்வோம். தற்போது இந்தியாவில் பணவீக்கம் ஏற்பட்டு, 1 டாலர் = 80 ரூபாய் என்று மாறுகிறது என்று வைத்துக் கொள்வோம். இப்போது என்ன நடக்கும்? 70 ரூபாய் போட்டு 80 ரூபாய் இலாபம் பார்த்த அன்னிய மூலதனம் அதை டாலருக்கு மாற்றும்போது 1 டாலர்தான் கிடைக்கும். சுருக்கமாகக் கூறினால் முன்பு 1 டாலர் = 70 ரூபாய். பணவீக்கம் ஏற்பட்ட பின் 1 டாலர் = 80 ரூபாய்.

எனவே அந்நிய நிதிமூலதனத்தின் இலாபவீதம் குறைந்துபோகும். அல்லது இல்லாமல் போகும். எனவேதான் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி, நாணய மதிப்பு சரிவதைத் தடுப்பதில் எல்லா நாடுகளின் அரசுகளுக்கும் மிகத்தீவிரமான முனைப்புடன் செயல்படுகின்றன. இதற்குக் காரணம் நிதிமூலதனத்தின் நலன்தானே ஒழிய மக்களின் நலன் அல்ல.

இடைக்குறிப்பாக ஒன்றைக் கூறுவோம். இந்தியாவில் பணவீக்கம் உயரும்போது, இந்திய நாணயத்தின் மதிப்பு சரிந்து இந்தியாவில் செய்துள்ள அந்நிய முதலீடுகளின் இலாபவீதம் குறைகிறது. அமெரிக்கா வட்டி வீதத்தை உயர்த்தும்போதும் இங்குள்ள அந்நிய முதலீடுகள், அதிக வட்டி தரும் அமெரிக்காவுக்குப் பறக்கின்றன. அதனால் அந்த அந்நிய முதலீடுகளை மீண்டும் ஈர்ப்பதற்காகத்தான் இந்திய ரிசர்வ் வங்கியும் வட்டிவீதத்தை உயர்த்துகிறது. சுருங்கக் கூறினால் இந்தியாவில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மோடி அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்குக் காரணம் மக்கள் நலனல்ல. மாறாக, அந்நிய நிதிமூலதனத்தின் நலனே.

மீண்டும் அமெரிக்காவுக்கு வருவோம். அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரிப்பதால் டாலரின் மதிப்பு சரிவதைத் தடுத்து, கட்டுக்குள் கொண்டுவர 2022 மார்ச் மாதத்திலிருந்து அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வங்கியானது, தொடர்ந்து வட்டி வீதத்தை உயர்த்தி வருகிறது. ஒரு நாட்டின் மத்திய வங்கி, மற்ற வங்கிகளுக்குக் கொடுக்கும் வட்டிக்குப் பெயர் ரெப்போ ரேட் ஆகும். இந்த வட்டியின் அளவு எவ்வளவு இருக்கிறதோ அதைப் பொறுத்துதான் வங்கிகள் மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் கடன் கொடுக்கும். உதாரணமாக பெடரல் வங்கி 1% வட்டிக்கு வங்கிகளுக்கு கடன் கொடுத்தால், வங்கிகள் அதை வாங்கி 3% வட்டிக்கு மற்றவர்களுக்கு கடன் கொடுக்கும். 2% இலாபம் பார்க்கும்.

பணவீக்கம் உயரும்போது ரெப்போ வட்டி வீதத்தை உயர்த்தினால், வங்கிகள் மக்களுக்கும் / நிறுவனங்களுக்கும் கொடுக்கும் கடனுடைய அளவு கணிசமாகக் குறைந்து சந்தையில் புழங்கும் டாலரின் அளவும் குறையும். சந்தையில் புழங்கும் டாலரின் அளவு

குறைக்கப்பட்டால் டாலரின் மதிப்பு உயரும். படிப்படியாக பணவீக்கம் கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்பது முதலாளித்துவவாதிகள் சொல்லும் வாதமாகும். ஆனால் உண்மையில் இது மக்களின் கழுத்தை நெரிப்பதற்கு ஒப்பானதாகும். ஏனென்றால் மத்திய வங்கிகள் வட்டிவீதத்தை உயர்த்தினால், வங்கிகள் மக்களிடம் வசூலித்து வரும் ஈ.எம்.ஐ தொகையை அதிகரிக்க வேண்டும். ஏற்கனவே பணவீக்கம் காரணமாக அல்லற்பட்டு வரும் மக்கள் தலையில் வட்டிவீத உயர்வு மேலும் பேரிடியாகவே இறங்கும்.

(தொடரும்..)

ரவி

 


[1] பத்திரம் என்றால் அரசோ, தனியார் நிறுவனமோ குறிப்பிட்ட தொகை கொண்ட ஒரு பத்திரத்தை வெளியேவிடும். அதை தனிநபர்களோ, நிறுவனங்களோ, வங்கிகளோ வாங்கலாம். உதாரணமாக 5 ஆண்டுகள் முதிர்வுக் காலம் கொண்ட, 2% வட்டி தரும், ஒரு பத்திரத்தை ரூ.100-க்கு அரசாங்கம் வெளியிடுகிறது என்று வைத்துக் கொள்வோம். அதை வாங்குபவருக்கு அரசாங்கம் ஆண்டுதோறும் 2 ரூபாய் வட்டி தர வேண்டும். பிறகு, 5 ஆண்டுகள் கழித்து முதிர்வு பெற்ற பின் ரூ.100 ஐ வாங்கியவருக்குத் திருப்பித் தர வேண்டும். ஆனால் எதார்த்தத்தில் இத்தகைய பத்திரங்கள் பெரும்பாலும் வட்டி பெறும் நோக்கில் வாங்கப்படுவதில்லை. குறைந்த விலைக்கு பத்திரங்கள் கிடைக்கும்போது வாங்கி, அதிக விலைபோகும்போது அதை இன்னொருவர் தலையில் கட்டி கொள்ளை இலாபம் அடிப்பதற்காகவே வாங்கப்படுகின்றன. இது ஒருவகையான ஊகவணிகச் சூதாட்டமாகும். இப்படித்தான் பல நிறுவனங்கள் பத்திரங்களை வாங்குவதும் விற்பதுமான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.

[2] பணவீக்கம் என்றால் நாணயத்தின் மதிப்பு சரிவது என்று பொருளாகும். எளிமைப்படுத்திக் கூறினால் முன்பு 100 ரூபாய் கொடுத்து வாங்கிய பொருளை 105 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய நிலைமை இருந்தால் 5% பணவீக்கம் உள்ளது என்று பொருள். வேறுவகையில் கூறினால் நாணயத்தின் மதிப்பு 5% சரிந்துள்ளது என்று பொருள். 

One comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன