பசு மாட்டைக் கொன்று கலவரம் செய்ய சதி செய்த இந்துமகாசபா காலிகள்

 

 

இந்து முஸ்லீம் கலவரத்தைத் தூண்டி விடுவதற்கு காலம் காலமாக காவி பயங்கரவாதிகள் பின்பற்றி வரும் யுக்திகளில் ஒன்று பசுமாட்டை அவர்களே கொன்றுவிட்டு இஸ்லாமியர்கள்தான் கொன்றார்கள் எனப் பொய்ச் செய்தியைப் பரப்புவது. சமூக ஊடகங்களின் பயன்பாடு பெருகிவிட்ட இன்றைய சூழலில் இது போன்றதொரு பொய்ச்செய்தியை உடனடியாக பல ஆயிரம் பேருக்கு பரப்பி மிகப்பெரிய கலவரத்தை அவர்களால் உருவாக்கிவிட முடியும்.

அப்படிப்பட்டதொரு சம்பவம் சமீபத்தில் உத்திரபிரதேசத்தில் நடந்துள்ளது. அம்மாநிலத்தின் ஆக்ரா நகரில் கடந்த ராமநவமி கொண்டாட்டங்களின் போது நான்கு இஸ்லாமியர்கள் பசு மாட்டைப் பொது இடத்தில் வெட்டிக் கொன்றதாக இந்து மகா சபாவைச் சேர்ந்த, சஞ்சய் ஜாட், ஜித்தேந்திர குஷ்வாஹா, பிரஜேஷ் படொரியா மற்றும் சௌரப் சர்மா ஆகிய நால்வர் ஆக்ரா போலீசில் புகார் அளித்தனர்.

உத்திரபிரதேச பசு வதைத் தடைச் சட்டத்தின் கீழ் நான்கு இஸ்லாமியர் மீதும் வழக்கு பதிந்த போலீசார் அது குறித்து விசாரித்தனர். போலீசின் விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு இஸ்லாமியர்களுக்கும் பசு மாடு கொல்லப்பட்டதற்கும் சம்பந்தம் இல்லை என்பது தெரியவந்தது. சம்பவம் நடந்ததாக கூறப்படும் சமயத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அந்த இடத்தில் இல்லாமல் வேறு இடத்தில் இருந்தது நிரூபிக்கப்பட்டது. ஆனால் அதே சமயத்தில் வழக்கு தொடுத்த இந்து மகா சபாவைச் சேர்ந்த நால்வரும் சம்பவம் நடந்த இடத்தில் பலமணி நேரங்களாக இருந்ததை அவர்களது செல்போன் சிக்னலை வைத்து போலீசார் கண்டுபிடித்தனர்.

அதாவது இந்து மகா சபாவைச் சேர்ந்த காலிகள் நால்வரும் அவர்களே பசுமாட்டைக் கொன்றுவிட்டு, பழியை அப்பாவி இஸ்லாமியர்கள் மீது போட்டு அதன் மூலம் கலவரம் செய்ய சதித் திட்டம் தீட்டியுள்ளனர். இதனை அடுத்து தற்போது இந்த நால்வர் மீதும் பசுவதை தடைச் சட்டம் மற்றும் கிரிமினல் சதிக் குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ராம நவமி, அனுமன் ஜெயந்தி போன்ற நிகழ்வுகளை ஒட்டி நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஊர்வலம் செல்லும் காவிக் கும்பல், இஸ்லாமியர்களின் குடியிருப்புகள், வழிபாட்டுத்தலங்கள் வழியாக ஊர்வலம் செல்வதும், இஸ்லாமியர் விரோத முழக்கங்களை எழுப்பி வம்பிழுப்பது. இஸ்லாமியர்கள் எதிர்க்கும் போது அதனையே சாக்காக வைத்து கலவரம் செய்வது என தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் செய்து வருகின்றனர்.

இந்த ஆண்டு ராமநவமியை ஒட்டி மேற்கு வங்கம், குஜராத், பீகார், மற்றும் கர்நாடக மாநிலங்களில் நடந்த கலவரங்களில் இருவர் கொல்லப்பட்டதுடன் நூற்றுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர், பலகோடி ருபாய் மதிப்புள்ள சொத்துக்கள் நாசமாக்கப்பட்டன.

ஆக்ராவில் அப்படிப்பட்டதொரு கலவரத்தை நடத்திட வேண்டும் எனத் திட்டமிட்டே பசுமாட்டை இந்த காவிக் கும்பல் வெட்டிக் கொன்றுவிட்டு பழியை இஸ்லாமியர்கள் மீது போட்டுள்ளது.

பசுக்களை பாதுகாக்கின்றோம், இந்துக்களைப் பாதுகாக்கின்றோம் என்று வாய்கிழியப் பேசும் இந்த காவிக் கும்பல் கலவரம் செய்ய எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதை இது தெள்ளத்தெளிவாகக் காட்டுகிறது.

  • அறிவு

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன