நொச்சிகுப்பம் மீனவர் கடைகள் அகற்றம்
உழைக்கும் வர்க்கத்தை இழிவாக பார்க்கும் ஆளும்வர்க்க திமிர்

மீனவர் கடைகளை அகற்ற இத்தனை அவசரம் காட்டும் இந்த நீதிமன்றமும் அரசும், பொதுமக்கள் பாதிக்கப்பட்ட எத்தனையோ வழக்குகள் பல ஆண்டுகளாக விசாரிக்கப்படாமல் இருப்பதைப் பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை. உழைக்கும் மக்களின் மீதுதான் இவர்கள் தங்களது அதிகாரத் திமிரைக் காட்டுகின்றனர்.

 

 

சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையை மீன் கடைகள் ஆக்கிரமித்து உள்ளதாகவும், ஐஸ் பெட்டிகள், மீன் வாங்குவோரின் வாகனங்கள் சாலை ஓரம் நிறுத்தப்படுவதாகவும் கூறி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு)  டி.ராஜா, சீரான போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்து அந்த சாலையில் பயணம் செய்வதற்கு இடையூறு இல்லாமல் செய்ய வேண்டும்  என்று  கூறியதை அடுத்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து பொதுநல வழக்கை  வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு எடுத்தது.

உடனேயே இதன் மீதான வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ். எஸ் .சுந்தர் மற்றும் ஆர்.பாலாஜி முன் அமர்வுக்கு வந்தது. அமர்வை விசாரித்த நீதிபதிகள், மீனவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்றும், இந்த ஆக்கிரமிப்பால் சிங்காரச் சென்னையின் அழகு கெட்டுவிட்டதாகவும்  கூறி மீன் கடைகளை எந்த கால அவகாசமும் இன்றி உடனடியாக அப்புறப்படுத்துமாறு ஏப்ரல் 11, 2023 அன்று உத்தரவிட்டதோடு, உத்தரவை நிறைவேற்றிய விபரத்தை 18 ஏப்ரல்  2023 அன்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று  மனிதாபிமானமற்ற ஒரு உத்தரவை அளித்துள்ளனர். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசும் மேல்முறையீடு கூட செய்யவில்லை. உடனேயே இந்த உத்தரவை அமுல்படுத்த அசுர வேகத்தில் களத்தில்  இறங்கிவிட்டது.

மீனவர் கடைகளை அகற்ற இத்தனை அவசரம் காட்டும் இந்த நீதிமன்றமும் அரசும், பொதுமக்கள் பாதிக்கப்பட்ட எத்தனையோ வழக்குகள் பல ஆண்டுகளாக விசாரிக்கப்படாமல் இருப்பதைப் பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை. உழைக்கும் மக்களின் மீதுதான் இவர்கள் தங்களது அதிகாரத் திமிரைக் காட்டுகின்றனர். வாச்சாத்தி வன்கொடுமைக்கு முப்பது ஆண்டுகளாக நீதிகிடைக்கவில்லை, ஸ்டெர்லைட் படுகொலை குற்றவாளிகள் யாரும் தண்டிக்கப்படவில்லை, இதன் மீதெல்லாம் இந்த நீதிபதிகளுக்கு அக்கறை இல்லை. இவற்றையெல்லாம் உடனடியாக விசாரித்து நீதி வழங்க வேண்டும் என இவர்கள் நினைப்பதில்லை.  

உயர்நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றுவதாக கூறிக்கொண்டு மீனவர் கடைகளை அகற்றிவரும் சென்னை மாநகராட்சி மற்றும் மாநகர போலீசை பொருத்தவரை நகரை சீரமைப்பது என்றாலே, சிறுவியாபாரிகளையும், நடைபாதை கடைவாசிகளையும், குடிசைவாழ் மக்களையும் தாக்குவது தான். அவர்களுடைய தொழிலையும், வாழ்விடங்களையும் பறிப்பது, எதிர்த்து போராடினால் தாக்குவது, நகர்ப்புற ஏழைமக்களால் தான் இந்த நகரத்தின் அழகே கெடுகிறது என்ற கொள்கை கொண்ட இந்த அதிகார வர்க்க கும்பல் நீதிமன்ற உத்திரவை அடுத்து லூப் சாலையில் உள்ள மீனவர்களின் கடைகளை அப்புறப்படுத்தும் படுபாதக செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

இங்கு வசிக்கும் மீனவர்கள் வேறு எங்கும் இருந்தும் இப்பகுதிக்கு குடியேறவில்லை. சென்னை நகரத்தை உருவாக்கிய உழைக்கும் மக்களில் ஒரு பகுதியினர்  இப்பகுதியில் வாழும் மீனவர்கள். காலங்காலமாக கடலில் போய் மீன்பிடித்து, தாங்கள் பிடித்த மீன்களை இக்குடியிருப்பில் விற்பனை செய்து வருகின்றனர். இவர்கள் இப்பகுதியின் பூர்வகுடிமக்கள்.

அதிகார வர்க்கம் கூறும் சிங்கார சென்னை,  இப்பகுதியில் சீரழிந்த சென்னையாக மாறியதற்கு பல காரணங்கள் உண்டு. சாந்தோம் சாலை போன்ற இடங்கள் பல தனியார் பள்ளிகள்,  வியாபாரங்கள், வசதி படைத்தோர் வாழ்விடங்களாக போய்விட்டன. நகரங்கள்  பணக்காரர்களுக்காக எல்லாத்திசைகளிலும் விரிவடைந்து கொண்டே செல்கின்றன.  அரசு தனியார் அலுவலங்கள், தனியார் பள்ளிகள், வியாபார வர்த்தக நிறுவனங்கள் நகரத்தின் மையத்தில் குவிந்து இருப்பதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சொல்லி மாளாது. இவைதான்  நகர்ப்புறத்தை சீர்குலைய வைத்து இருக்கின்றன.

 

 

சாந்தோம் சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதை தொடர்ந்தே மீனவர் குடியிருப்பில் சாலை போடப்பட்டது. ஆரம்பத்தில் இதற்கு மீனவர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். மீனவர்களின் வீட்டு வாசலில் சாலை போட்டு விட்டு,  தற்போது மீனவர்கள் தங்களது வீட்டின் அருகில் கடைகள் போட்டு விற்பனை செய்தால் அதை ஆக்கிரமிப்பு என்கின்றது, மீனவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று அவர்களது வாழ்வாதரங்களை அழிக்க முற்படுகிறது அதிகார வர்க்கம்.

இப்பகுதி மீனவர்கள் இந்த நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக போராடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு மீனவர் அவர்களுக்கு போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருக்க வேண்டுமானால், சாந்தோம் சாலையில் உள்ள பத்து கட்டிடங்களை இடிக்க சொல்லுங்கள் என்கிறார். ஒரு சில வருடங்களுக்கு முன்பு இந்த கட்டிடங்கள் எல்லாம் இங்கு இல்லை. இதனாலேயே இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது என்கிறார்.

எங்களது வாழ்வாரத்தை பறிக்கும் இவர்கள் குளிர்சாதன காரில் போகிறார்கள் குளிர்சாதனம் உள்ள  அலுவலகத்திலும், வீட்டிலும் இருக்கிறார்கள். வெயிலில் ஒரு மணி நேரம் எங்களை போல நின்று உழைக்கச் சொல்லுங்கள் எங்களது வாழ்நிலை போராட்டத்தை பற்றி அரசுக்கு என்ன தெரியும் என்கிறார் ஒரு மீனவ பெண்மணி.

 

மீன்களை தரையில் கொட்டி தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் மீனவர்கள்.
மீன்களை தரையில் கொட்டி தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் மீனவர்கள்.

 

தங்களது கடைகளை அப்புறப்படுத்துவதற்கு எதிராக சென்னையில் இருக்கும் அனைத்து மீனவர்களை கொண்டு போராட்டம் நடத்தப் போவதாக போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் தெரிவித்தனர்.

மீனவர்களின் வாழ்வாதாரத்தை  அரசுபறிப்பது இது முதல் முறையல்ல. தங்களது வாழ்வாதாரத்தை காக்க  அவர்கள் போராடுவதும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.  எம்.ஜி.ஆர் ஆட்சியில், மெரினா கடற்கரையை அழகுபடுத்துவதாக கூறி, உலக வங்கி உத்தரவின் கீழ் முடிவு செய்து பெரும் போலீசு படை இரவோடு இரவாக மீனவர் கட்டுமரங்களை அகற்றியது. மீனவர்களை குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றுவதாக ஆத்திரத்தைத் தூண்டி துப்பாக்கி சூடு நடத்தி பலரை கொன்றது. மீனவர் வீடுகளுக்குள் புகுந்து சூறையாடியது. ஆனால் இந்த அடக்குமுறையை மீனவர்கள்  உறுதியாக எதிர்த்து முறியடித்தனர். மீனவ நண்பனாக வேடமிட்டு திரிந்த எம்.ஜி.ஆரின் முகத்திரையை இப்போராட்டத்தின் மூலம் அம்பலப்படுத்தினர் மீனவர்கள்.

தற்போது  அதிகார வர்க்கம் மீண்டும் மீனவர்கள் குடியிருப்புகளை அடக்கி ஆள எத்தனிக்கிறது மீனவர்களின் உழைப்பில் உருவான நகரம் அவர்களின் கைகளுக்கு கிடைக்கும் வரை மீனவர்களின் போராட்டம் முடியப்போவதில்லை! தங்களின் வாழ்வாதாரங்களுக்காக போராடும் மீன்வர்களின் போராட்டத்திற்கு நாம் துணை நிற்போம்.

  • தாமிரபரணி

One comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  1. பெரும்பான்மை பூர்வக்குடிகளை அகற்றி மற்றவர்களுக்கான சுய தேவைக்கும் அரசு தரப்பும் உயர்நீதிமன்றம் உத்தரவு என்பதும் இது கொடுமையானது …இதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன் மீனவர்களின் நிலத்தை அபகரிப்பது மிகவும் பெறப்பற்ற செயலாக உள்ளது