இளம் பிஞ்சுகளின் நெஞ்சில் நஞ்சை விதைக்கும் காவி பாசிஸ்டுகள்.

 

காவி பாசிசம் மக்கள் மனதில் மதரீதியிலான பிரிவினையைத் தூண்டி விட்டு, அதன் மூலம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள தொடர்ந்து வேலை செய்து வருகிறது. சிறுவர்கள் பார்க்கும் கார்டூன் தொடர்களில் கூட அவர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரான பிரச்சாரத்தைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். சமூக ஊடகங்களில் காவி பாசிஸ்டுகளின் இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரம் மிகத் தீவிரமாக நடக்கிறது. இந்த பிரச்சாரங்களின் தாக்கம் சமூகத்தில் அடிக்கடி வெளிப்படுகின்றது.

சமீபத்தில் அப்படிப்பட்டதொரு சம்பவம், மத்தியப்பிரதேச மாநிலத்தின் இந்தூரில் நடந்துள்ளது. அங்கே ஒரு 11 வயதுச் சிறுவன், அவன் வயதையொத்த மூன்று சிறுவர்களால் “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கூறும் படி அடித்துச் சித்திரவதை செய்யப்பட்டுள்ளான்.

இந்தூர் நகரின் நிபானியா பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுவன் ஒருவனை அங்கே வந்த மூன்று சிறுவர்கள், பொம்மை வாங்கித்தருவதாக கூறி அருகிலிருந்த குளத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கே சென்றவுடன் சிறுவனின் உடைகளை கழற்றிவிட்டு அவனை, “ஜெய் ஸ்ரீ ராம்”, “இந்துஸ்தான் வாழ்க”, “பாகிஸ்தான் ஒழிக” எனக் கூறும்படி வற்புறுத்தியதுடன், அவனை அடித்துச் சித்திரவதை செய்துள்ளனர். அத்துடன் இந்த நிகழ்வு முழுவதையும் செல்போனில் பதிவு செய்து சமூக ஊடகங்களில் பரப்பியுள்ளனர். அவர்களிடமிருந்து தப்பித்த சிறுவன் விசயத்தை பெற்றோரிடம் கூறவே அவர்கள் போலீசில் புகாரளித்துள்ளனர்.

இந்த தாக்குதலில் ஈடுபட்ட சிறுவர்களும், பாதிக்கப்பட்ட சிறுவனும் ஒரே பகுதியில் வாழ்பவர்கள், அவர்களது பெற்றோர்கள் அனைவரும் கூலித் தொழிலாளர்கள். தங்களது மகன் இவ்வாறு செய்வான் என அவர்கள் கனவில் கூட நினைத்துப்பார்த்ததில்லை. காவி பாசிஸ்டுகளின் விஷ பிரச்சாரம் அந்தச் சிறுவர்கள் மனதில் தீவிரமானதொரு வெறுப்பை வித்தைத்துள்ளது. அதுமட்டுமன்றி காவிக்கும்பல் மதத்தின் பெயரால் செய்யும் இது போன்ற அக்கிரமங்களை  வீடியோ எடுத்து அதனை சாகசங்களாக சமூக ஊடகங்களில் பரப்பியது அதனைப் பார்க்கும் சிறுவர்கள் மத்தியில் தாங்களும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சில ஆண்டுகளுக்கு முன்னர், காவி கும்பலின் சமூக ஊடக செயல்பாடுகள் குறித்து ஒரு கூட்டத்தில் பேசிய பாஜக தலைவர் அமித்ஷா, தாங்கள் நாடு முழுவதும் 32 லட்சம் வாட்ஸாப் குழுமங்களை வைத்திருப்பதாகவும், அவற்றைப் பயன்படுத்தி தாங்கள் என்ன நினைத்தாலும், அது உண்மையோ பொய்யோ அதனை உடனடியாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க முடியும் என்று கூறியிருந்தார். அவர்களின் செயல்பாடுகள் தான் இன்றைக்கு இந்த பிஞ்சுக் குழந்தைகளின் மனதில் மத துவேச நஞ்சை விதைத்துள்ளது. 

  • அறிவு

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன