தொழிலாளர் விரோதச் சட்டங்களை இடியாய் இறக்கும்
காவி-கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிக்க மே தினத்தில் சூளுரைப்போம்!

மே 1  உலகத் தொழிலாளர் தினம்
பேரணி – ஆர்ப்பாட்டம் – ஓசூர்

 

 

 அன்பார்ந்த தொழிலாளர்களே!

உலக முதலாளித்துவ-ஏகாதிபத்தியக் கட்டமைப்பில் 1970களில் ஏற்பட்ட தேக்க-வீக்க நெருக்கடியிலிருந்து மீளுவதற்காக தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்னும் மறுகாலனியாக்கக் கொள்கைகள் கொண்டு வரப்பட்டன. அந்த மறுகாலனியாக்கக் கொள்கைகளும் இன்று மீள முடியாத பொருளாதார நெருக்கடிக்குள், கட்டமைப்பு நெருக்கடிக்குள் உலக முதலாளித்துவ-ஏகாதிபத்தியக் கட்டமைப்பை கொண்டு வந்து நிறுத்தி உள்ளது.

இக்கட்டமைப்பு நெருக்கடியில் இருந்து மீளும் முயற்சியாக உலக முதலாளித்துவ வர்க்கம் மொத்த உலகத்தையும் போர்ச்சூழலுக்கு கொண்டு செல்கிறது. மேலும், எல்லா நாடுகளிலும் பாசிசத்தைக் கொண்டு வரவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பாசிசம் என்பது இன, மத, சாதி ரீதியாக மக்களைப் பிளவுபடுத்தி, வர்க்க ஒற்றுமையைச் சிதைத்து, எல்லாவிதமான ஜனநாயக உரிமைகளையும் தூக்கியெறிந்துவிட்டு, அப்பட்டமான முதலாளித்துவ சர்வாதிகார ஆட்சியையும் சுரண்டலையும் உழைக்கும் மக்கள் மீது திணிப்பதாகும்.

நமது நாட்டிலும் பாசிச ஆட்சியைக் கொண்டு வருவதற்காகத்தான் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான காவி-கார்ப்பரேட் பாசிசக் கும்பல் செயல்பட்டு வருகிறது. இதனொரு அங்கமாகத்தான் விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களையும், தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களையும் கொண்டு வர துடித்துக் கொண்டிருக்கிறது; மேலும், பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, மானியங்களை வெட்டுதல், என உழைக்கும் மக்களின் வாழ்க்கையையே நிர்மூலமாக்கி வருகிறது.

மேற்கண்ட பின்னணியில்தான், 44 தொழிலாளர் நலச் சட்டங்கள் நமக்கு வழங்கும் கொஞ்ச நஞ்ச உரிமைகளையும் பறித்துவிட்டு நான்கு வழிகாட்டுதல் தொகுப்பை (Labour Codes) அமுல்படுத்த பாசிச மோடி அரசு தீவிரம் காட்டிவருகிறது. இதன்மூலம், பெருவாரியான தொழிலாளர்களின் உரிமைகளும் அதிகாரங்களும் பறிக்கப்பட்டு கார்ப்பரேட்டுகளின் நவீன கொத்தடிமைகளாக தொழிலாளர்கள் மாற்றப்பட்டு வருகின்றனர்.

நான்கு வழிகாட்டுதல் தொகுப்பும் அவற்றை முறியடியக்க வேண்டிய தேவையும்

1886-இல் மே தின தியாகிகள் இரத்தம் சிந்தி பெற்றெடுத்த 8 மணி நேர வேலை என்பது இன்று பறிக்கப்பட்டு வருகிறது. 12-14 மணி நேர வேலை என்பதும் நிரந்திரமாக்கப்பட்டு வருகிறது. இது அனைத்து நிறுவனங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளது. இதில் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்களும், ஐ.டி நிறுவனங்களும் இலக்கண சுத்தமாக திகழ்கின்றன.

தொழிலாளி வர்க்கம் அடி-உதைப்பட்டு, சிறையில் சித்தரவதைப்பட்டு, துப்பாக்கிச் சூட்டிற்கு பலியாகி குறைந்தப்பட்ச ஊதிய சட்டம் 1948, ஊதியம் வழங்கும் சட்டம் 1936, சம ஊதிய சட்டம், 1976, போனஸ் பட்டுவாடா சட்டம் 1965, தொழிலாளர் தகராறு சட்டம் 1947, தொழிற்சங்க சட்டம் 1926, தொழிற்சாலை வேலைவாய்ப்பு சட்டம் 1946 போன்ற பல்வேறு சட்டங்கள் அடங்கிய 44 தொழிலாளர் நலச் சட்டங்களைப் பெற்றெடுத்தன. இவற்றின் மூலம் சங்கம் அமைக்கும் உரிமை, 8 மணி நேர வேலை உரிமை, பேரம்பேசும் உரிமை, கூடுதல் நேர உழைப்பிற்கு இருமடங்கு ஊதியம், 480 வேலைநாட்களுக்கு பிறகு நிரந்தரம், குறைந்தபட்ச ஊதியத்துக்கான உத்திரவாதம், கண்ணியமாக உயிர்வாழும் உரிமை, சமூக பாதுகாப்பு, வேலை பாதுகாப்பு என பல்வேறு உரிமைகளைப் பெற்றெடுத்தோம். இவை நிறைவேறாத போது அதற்கான போராட்டங்களை முன்னெடுக்கும் உரிமைகளையும் பெற்றோம்.

போராடிப் பெற்ற இவற்றையெல்லாம் பறித்தெடுத்து பணி நிரத்தரம் இல்லாத அன்றாடம்காய்ச்சிகளாக தொழிலாளி வர்க்கத்தை அலையவிடுவதும், கார்ப்பரேட்டுகளுக்கு நவீன கொத்தடிமைகளாக அள்ளி தருவதுமே இந்த நான்கு வழிகாட்டுதல் தொகுப்பின் உள்ளடக்கமாகும். இவை தொழிலாளர் உறவுகள் சட்டம், சமூக பாதுகாப்பு சட்டம், பணியிட பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் மற்றும் பணிநெறிமுறைகள் சட்டம், ஊதியம் குறித்த தொழிலாளர் சட்டம் என தேன்தடவிய வார்த்தைகளில் பெயர்வைத்து நஞ்சாக திணிக்கப்பட்டு வருகிறது.

இதனால் தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற அடிப்படை உரிமைகளான சங்கம் அமைக்கும் உரிமை, வேலை நிறுத்தம் செய்யும் உரிமை, பேரம் பேசும் உரிமை போன்ற உரிமைகள் அனைத்தும் பறிபோகும்.

இவை மட்டுமல்லாமல், குறைந்தபட்ச ஊதியத்திற்கு அளவுகோளாக திறனையும் வேலையின் தன்மையையும் முன்வைக்கிறது. இதனடிப்படையில் ஒருவரை திறமையற்றவர், உற்பத்தியை குறைப்பவர் என நிர்வாகம் முத்திரைக் குத்தி ஊதியத்தைக் குறைக்கலாம், வேலையிலிருந்தும் நீக்கலாம். இதன்மூலம், உயிர்வாழ்வதற்கான குறைந்தபட்ச ஊதியத்தையும் பறித்துவிட முடியும். இவற்றை எதிர்த்து நீதிமன்றமும் போக முடியாது. தற்போதைய சட்டப்படி குறைந்தபட்ச ஊதியம் வழங்குவதில் முறைகேடுகள் நடந்தால் நிறுவனத்தின் அதிகாரிகளை கொத்தடிமை தடுப்பு சட்டத்தின் கிழ் கைது செய்து சிறையில் அடைக்கலாம். இது நான்கு வழிகாட்டுதல் தொகுப்பில் சாத்தியமில்லை. மேற்கண்ட பாதிப்புகளெல்லாம் நான்கு வழிகாடுதல் தொகுப்பின் ஒரு சில துளி மட்டுமே! மீதம் உள்ள பாதிப்புகளை சொல்லிமாளாது!!

மேலும், குறிப்பிட்ட கால வேலை (FTE) தேசிய வேலைவாய்ப்பு திட்டம் (NEEM) போன்ற திட்டங்கள் மூலம், தற்போது 10 சதவீதமே மட்டுமே உள்ள நிரந்திர வேலைக்கும் ஆப்பு வைக்கப்பட்டு வருகிறது. 12 மணி நேர வேலை நீட்டிப்பால் 4 மணி நேர உழைப்பை கூடுதலாக சுரண்டுவதற்கு அனுமதிப்பதன் மூலம் கார்ப்பரேட்டுகளின் கல்லாவும் கணிசமாக நிரப்பட்டு வருகிறது. ஒட்டுமொத்த தொழிலாளி வர்க்கமும் குறைந்த கூலிக்கு எந்தவித உரிமையும் இல்லாத நவீன கொத்தடிமைகளாக்கப்பட்டு வருகின்றனர்.

தொழிலாளர் மற்றும் இதர உழைக்கும் மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் நான்கு வழிகாட்டுதல் தொகுப்பை முறியடிப்பதோடு, அவற்றை தீவிரப்படுத்தி வரும் காவி-கார்ப்பரேட் பாசிசத்தை அடித்து வீழ்த்த வேண்டிய கடமையும் நம்முன் உள்ளது. இத்துடன் ஒட்டுமொத்த உழைக்கும் மக்களின் விடுதலைக்காக பாட்டாளி வர்க்க தலைமையில் புதிய ஜனநாயக அரசை அமைக்க வேண்டிய அதிகபட்ச தேவையையும் மே தினம் வலியுறுத்துவதோடு, அதிக நேர உழைப்பையும் நிலையற்ற குறைந்தபட்ச ஊதியத்தையும் நிரந்தரமற்ற வேலைநிலைமையையும் மாற்றியமைக்க போராட வேண்டிய தேவையையும் மே தினம் உணர்த்துகிறது என்பதை நினைவில் நிறுத்தி மே தினத்தை முன்னெடுப்போம்.

  • தொழிலாளர்களை கொத்தடிமைகளாக்கும் 4 வழிகாட்டுதல் தொகுப்பை இரத்து செய்யப் போராடுவோம்!
  • கார்ப்பரேட்டுகளின் அபரிமிதமான சுரண்டலுக்கு பட்டுகம்பளம் விரிக்கும் FTE, NEEM திட்டங்களைத் திரும்பப் பெற வைப்போம்!
  • காண்டிராக்ட், அப்ரண்டீஸ், டிரைனியை உற்பத்தியில் ஈடுபடுத்தி நிரந்திரமாக்கலை ஒழிக்கும் சதியை உடைத்தெறிவோம்!
  • குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.25,000 ஆக மாற்றியமைக்கப் போராடுவோம்!
  • தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகளைப் பறிபோகாமல் தடுத்து நிறுத்துவோம்!!
  • தொழிலாளிகளை சாதி, மத, இன ரீதியாகப் பிளவுபடுத்தும் சதிகளுக்கு பலியாகாமல் வர்க்கமாய் ஒன்றிணைவோம்!
  • தொழிலாளர் விரோதச் சட்டங்களை இடியாய் இறக்கும் காவி-கார்ப்பரேட் பாசிசத்தை தொழிலாளர் வர்க்க முன்னணியைக் கட்டி முறியடிப்போம்!
  • பாட்டாளி வர்க்க தலைமையில் உழைக்கும் மக்களின் விடுதலையைச் சாதிக்க புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுப்போம்!

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு


பிரசுரத்தை தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்

 

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன