நீதித்துறையை மாற்றியமைக்கும் இஸ்ரேல் அரசு!
தொடரும் மக்கள் போராட்டங்கள்!

இதுவரை பாலஸ்தீன எதிர்ப்பு நிகழ்ச்சி நிரலில் வளர்ந்து வந்த வலதுசாரிகள், இன்று இஸ்ரேல் மக்களுக்கு வழங்கப்பட்ட குறைந்தபட்ச ஜனநாயக உரிமைகளுக்கும் கூட எதிராக நிற்கிறார்கள். தற்போது இஸ்ரேலின் ஜனநாயகத்திற்கு ஆபத்து என வீதியில் இறங்கும் மக்கள், பல ஆண்டுகளாக, பாலஸ்தீனர்களை ஒடுக்கும் அரசின் எந்த ஒடுக்குமுறை நடவடிக்கைகளையும் எதிர்த்து வீதியில் இறங்கவில்லை.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொண்டு வந்த நீதித்துறையினை மாற்றி அமைக்கும் மசோதாவிற்கு எதிராக இஸ்ரேல் மக்கள், கடந்த ஒரு மாதமாக வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். நீதித்துறையின் அதிகாரத்தைக் குறைத்து பாராளுமன்றத்திற்கு அதிக அதிகாரம் வழங்குவதற்கு எதிராக, முதலில் வார இறுதிநாட்களில் மட்டுமே போராடிய இஸ்ரேல் மக்கள், நெதன்யாகு மசோதாவை  திரும்ப பெற மறுக்கவே, எல்லா நாட்களிலும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்த்தை தொடர்ந்து வருகின்றனர்.

இஸ்ரேலின் மிகப்பெரிய தொழிற்சங்கமான ஹூஸ்டாரூட், நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது. இப்போராட்டங்களின்போது விமான நிலையங்கள், வங்கிகள், கடைகள் முழுவதுமாக மூடப்பட்டன. மருத்துவமனைகள் கூட தங்களது சேவைகளை நிறுத்தியிருந்தன.  அரசு ஊழியர்கள், இரானுவ அதிகாரிகள் உள்ளிட்டு இலட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல நாடுகளிலுள்ள இஸ்ரேல் தூதரகங்கள் மூடப்பட்டன.

 

 

ஆரம்பத்தில் இஸ்ரேல் மக்கள், எதிர்க்கட்சிகள், நீதித்துறை அதிகாரிகள், எதிர்ப்புக்கு நெதன்யாகு அடிபணிய மறுத்தததோடு, இப்போராட்டத்தில் ஈடுபடுவர்களை வெளிநாட்டிலிருந்து நிதிஉதவி பெறுபவர்கள், துரோகிகள் என போராட்டக்காரர்களை கொச்சைப்படுத்தினார்.

இருந்தும் இம்மசோதாவிற்கெதிரான போராட்டம் தீவிரமடைய ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் இஸ்ரேல் இரானுவ மந்திரி யோவ் கேலண்ட்டும் இச்சட்டத்திருத்ததிற்கு எதிராக திரும்ப, அவரை பதவியில் இருந்து நீக்கினார் நெதன்யாகு. இதையடுத்து இஸ்ரேலின் உள்நாட்டு நிலைமை கட்டுக்கு மீறி போகவே, தற்காலிகமாக இச்சட்டத்திருத்தத்தை யூதர்களின் பண்டிகையான பாஸ்டா வரை  நிறுத்தி வைத்துள்ளார் நெதன்யாகு.

தற்காலிகமாக இச்சட்டத்திருத்தத்தை ஒத்தி வைக்கும் பொருட்டு கூட்டணி கட்சித்தலைவர்களை திருப்தி செய்வதற்காக, கூட்டணிக் கட்சித்தலைவர்களின் ஒருவரான தீவிர பழமைவாத மதவாதக்  கட்சியைச் சார்ந்த நாட்டின் பாதுகாப்பு மந்திரி இடாமர் பென்-க்விருக்கு, புதிய தேசிய காவலர் படை என்ற புதிய துணை இரானுவ படையை உருவாக்குவதற்கான  அதிகாரத்தை வழங்கியுள்ளார் நெதன்யாகு.

கடந்த  நவம்பர் மாதத்தில் நெதன்யாகு கூட்டணி அரசு அந்நாட்டின் தேர்தலில் வெற்றி பெற்றதில் இருந்தே தற்போது இஸ்ரேலில் நிலவும் நெருக்கடி தீவிரமாகி வந்துள்ளது. இஸ்ரேலில் நெதன்யாகுவின் லிகுட் கட்சி,  மதவாத சியோனிஸ்ட் கட்சியான ஷாஸ், ஐக்கிய தோரா யூத மதம்,, ஓட்ஸ்மா யெஹுடிட் மற்றும் நோம் போன்ற தீவிர வலதுசாரி கட்சிகளோடு கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. ஆட்சியை பிடித்ததிலிருந்து இக்கூட்டணி அரசு,  தங்களின்  பாலஸ்தீன எதிர்ப்பு கொள்கைகளுக்கு இஸ்ரேல் நீதிமன்றத்தை ஒரு தடையாகவே பார்த்து வந்தனர்

அதிகாரப் பகிர்வை சமநிலைப்படுத்துவது என்ற சாக்கில், நீதித்துறையின் அதிகாரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று தீவிர வலதுசாரிகள், இஸ்ரேலில்  நீண்ட காலமாகவே கோரிக்கை விடுத்து வருகின்றனர். 2009 ஆம் ஆண்டிலிருந்து இதற்காக அவர்கள் பல்வேறு நீதித்துறை திருத்த மசோதாக்களுக்கு முயன்று வந்தனர். 2015 முதல் 2019 வரை நீதித்துறை அமைச்சராக இருந்த அயிலேட் சாகேட் நீதித்துறையின் அதிகாரத்தை மட்டுப்படுத்த வேண்டும் என்பதை புதிய கட்டத்திற்கு எடுத்து சென்றார்.

நெதன்யாகு கூட்டணி அரசு கொண்டு வரும் நீதித்துறை மசோதா, பாராளுமன்றத்தில் 50 விழுக்காடுக்கு மேல் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தால் உச்சநீதிமன்ற தீர்ப்பை, நீக்கவோ, மறுபரிசீலினை செய்யவோ முடியும் என்கிறது. அரசுக்கு வேண்டியவர்களை நீதிபதிகளாக நியமித்துக்கொள்ள நீதிபதிகளின் நியமன குழுவில் அதிகளவில் அரசுப் பிரதிநிதிகளை சேர்த்து கொள்ளலாம் என்கின்றது.

மக்களால் பாராளுமன்றத்திற்கு பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் அதிகாரத்தை இம்மசோதா குறைப்பதாகவும், இதுவரை சுதந்திரமாக செயல்பட்ட இஸ்ரேல் நீதித்துறையை தன் கொள்கைகளுக்கு சார்பாக மாற்ற ஆளும் கட்சிகள் திட்டமிடுகிறார்கள் என்கிறார்கள் போராடும் மக்கள்.

இந்த மசோதா நீதித்துறையின் சுதந்திரம், ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்றும் நெதன்யாகு போன்ற ஊழல்வாதிகளுக்கு ஆதரவாக நீதித்துறையை கட்டுப்படுத்துகிறது என்றும் நாட்டின் எதிர்க்கட்சிகள் கொந்தளிந்து போராட்டத்தை தொடர்ந்தனர்.

கூடுதலாக நெதன்யாகு தனது ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பிப்பதற்காக  பதவியில் இருக்கும் பிரதமரை பதவிநீக்கம் செய்ய இயலாது என்ற சட்டத்திருத்தத்தையும் சேர்த்துக் கொண்டார்.

இஸ்ரேலிய சட்டத்தின் கீழ் அட்டார்னி ஜெனரல் , ஆளும் பிரதமர் மீது குற்றம் சாட்ட அதிகாரம் உள்ளது.  2019 ஆம் ஆண்டிலிருந்தே, அட்டார்னி ஜெனரல் நெதன்யாகு மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார். மக்களால்  தேர்ந்தெடுக்கப்படாத  பிரதிநிதி, பிரதமர் மீது குற்றம் சாட்டுவதை  ஆளும்  பழமை வாத, மதவாத  கூட்டணி, விரும்பவில்லை.

மேலும்  ஆளும் பழமைவாத, மதவாத சியோனிச  கூட்டணி, ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனிப் பேருந்து, யூதர்களின் மத நூலான டோராவை (ஹூப்ரு மொழியில் இருக்கும் யூதமத நூல்) படிப்பவர்களுக்கு இரானுவத்தின் அத்தியாவசிய பிரிவிலிருந்து விலக்கு அளிப்பது என்பதற்காக ஒரு பிரிவையும் இந்த மசோதாவில் தாக்கல் செய்வதற்கு இருந்தனர்.

 

 

இஸ்ரேல் நீதிமன்றம், தனிமனிதர்களின் கண்ணியம், குடிமக்களின் உரிமைகள், அடிப்படை சட்டங்கள் மீறப்படுவதற்கான மசோதாக்கள், திருத்தங்களை  ஓரளவுக்கு நிராகரித்து வந்துள்ளது. இதனாலேயே பாலஸ்தீன எதிர்ப்பு நிகழ்ச்சி நிரலில் வளர்ந்து வந்த வலதுசாரிகள், நீதித்துறை நடவடிக்கைகளை  தங்களுக்கு ஒரு குறுக்கீடாகவும், நீதித்துறையை  தங்களது கட்டுப்பாட்டில் வைப்பதற்கும் முயன்று வந்தனர்.  

கடந்த நான்கு ஆண்டுகளில் இஸ்ரேலில் ஐந்து தேர்தல்கள் நடந்துள்ளன. ஒன்றன் பின் ஒன்றாக கூட்டணி அரசு உருவக்கப்பட்டு கலைக்கப்பட்டன. இஸ்ரேலில் அரசியல் ஸ்திரத்தன்மை எப்போதும் ஒரு பிரச்சினையாகவே உள்ளது. ஒவ்வொரு தேர்தலின் போதும், அனைத்து அரசியல் கட்சிகளும், பாலஸ்தீனியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்து வந்திருக்கின்றனர். எந்த கூட்டணி ஆட்சி அமைத்தாலும் பாலஸ்தீனியர்கள் மீதான ஒடுக்குமுறை அதிகரித்தே வந்துள்ளன.

கடந்த 2001-2005 காலக்கட்டத்தில் இஸ்ரேல் பிரதமராக இருந்த ஏரியல் ஷரோன், செப்டம்பர் 2000 ஆம் ஆண்டு ஆயிரம் போலிசாருடன் அல்-அக்ஸா மசூதிக்கு சென்று, மசூதி வளாகம் இஸ்ரேல் கட்டுப்பாட்டில் வரும் என்றார். அடுத்த தேர்தலில் அவர் ஆட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நெதன்யாகு, கடந்த ஏப்ரல் 2019 ஆம் ஆண்டு பாலஸ்தீனப் பகுதிகளில், யூதர்களின் குடியிருப்புகளை இணைப்பதாக பிரச்சாரம் செய்தார். அடுத்த தேர்தலில் நெதன்யாகு ஆட்சிக்கு தேர்தெடுக்கப்பட்டார்.

இதேபோல தற்போதைய பழமைவாத மதவாத கூட்டணியோடு  நவம்பர் 2022 ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முன்பு நெதன்யாகு, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் உள்ள இஸ்ரேலிய குடியேற்றங்களை சட்டபூர்வமாக மாற்றுவதாகக் கூறிய பிறகே, தற்போதைய கூட்டணி அரசு ஆட்சியைபிடித்தது.

இவ்வாறு ஒவ்வொரு தேர்தலின் போதும் பாசிச சக்திகள் அதி தீவிரமாக வளர்ந்து வந்திருக்கிறது.  ஆட்சியை பிடித்த தற்போதைய அரசு, தங்களது கொள்கைகளுக்கு எதிராக இருக்கும் இஸ்ரேலிய நீதித்துறையின் குறைந்தப்பட்ச ஜனநாயக தன்மையையும் குலைக்க முற்படுவதன் விளைவே இந்த நீதித்துறை மசோதா.

இதுவரை பாலஸ்தீனிய எதிர்ப்பு நிகழ்ச்சி நிரலில் வளர்ந்து வந்த வலதுசாரிகள், இன்று இஸ்ரேல் மக்களுக்கு வழங்கப்பட்ட குறைந்தபட்ச ஜனநாயக உரிமைகளுக்கும் கூட  எதிராக நிற்கிறார்கள்.

தற்போது இஸ்ரேலின் ஜனநாயகத்திற்கு ஆபத்து என வீதியில் இறங்கும் மக்கள், பல ஆண்டுகளாக, பாலஸ்தீனியர்களை ஒடுக்கும் அரசின் எந்த ஒடுக்குமுறை  நடவடிக்கைகளையும் எதிர்த்து வீதியில் இறங்கவில்லை.

கடந்த 2018 ஆம் ஆண்டு, நெதன்யாகு, இஸ்ரேலை யூத தேசம் என அதிகார பூர்வமாக வரையறுத்து, பாலஸ்தீனர்களுக்கான உரிமைகள், நிலங்களை பறித்த போது, இதே இஸ்ரேல் மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

இஸ்ரேல் அரசின்  பாலஸ்தீனர்களின் மீதான  ஒடுக்கு முறைகளுக்கு இஸ்ரேல்  மக்கள் எதிர்ப்பு தெரிவிக்காததன் விளைவு, இன்று இஸ்ரேலில் உள்ள அனைத்து மக்களும் அரசின் ஒடுக்குமுறைக்கு உள்ளாகின்றனர். பாலஸ்தீனத்தின் ஜனநாயக உரிமைகளை நசுக்கும் வலதுசாரிகள் தங்களது ஜனநாயக உரிமைகளை மறுப்பதற்கு வெகுகாலம் பிடிக்காது என்பதனை இஸ்ரேல் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

  • தாமிரபரணி

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன