ஆருத்ரா கோல்டு நிறுவன பணமோசடி – அண்ணாமலையிலிருந்து ஆர். கே. சுரேஷ் வரை!

தொன்னூறுகளில் அனுபவ் தேக்குமரத் திட்டத்தில் தொடங்கி ஈமு கோழி வரை இதே கதைதான். இது தற்போது ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் பல்லாயிரம் கோடி மோசடியாக வளர்ந்து நிற்கிறது. நாங்கள் ஊழலற்றவர்கள், யோக்கியவான்கள் என வாய்ச்சவடால் அடிக்கும் பாஜக கும்பல்தான் (அண்ணாமலையிலிருந்து ஆர். கே. சுரேஷ் வரை) கொள்ளைக்காரக் கூட்டத்திற்கு பின்னால் இருக்கிறார்கள்.

அதானியின் பங்குச் சந்தை முறைகேடுகள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று கேட்டதற்கு “ஊழல் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து கொண்டு என் மீது தாக்குதல் தொடுக்கிறார்கள்” என்றார் மோடி. அமலாக்கப்பிரிவு, சி.பி.ஐ, வருமானவரித்துறை, ஆளுநர் மாளிகை போன்றவைகளெல்லாம் எதிர் கட்சிகளை முடக்குவதற்கு திட்டமிட்டு பயன்படுத்தப்படுகிறது என்ற விமர்சனத்திற்கு “பல பத்தாண்டுகளாக ஊழலின் மூலம் பயன் பெற்றவர்கள் தற்போது விசாரணை அமைப்புகளை தவறாக சித்தரிக்கின்ற சூழலை உருவாக்கியுள்ளனர்” என்று சி.பி.ஐ வைரவிழா நிகழ்ச்சியில் பேசினார் மோடி. தங்களைத் தவிர அனைவருமே ஊழல்வாதிகள் என்பதே மோடி-அமித் ஷா கும்பலின் பிரச்சாரம்.

ஆனால் ரபேல் விமான ஊழலை ஒட்டிய நீதிமன்ற விசாரணையின் போது மாட்டிக்கொள்வோம் என தெரிந்த உடன் கோப்புகள் தொலைந்து விட்டன என்று நாடகமாடியது மோடி அரசு. அதானியின் பங்குச் சந்தை ஊழல் அம்பலமான உடனே அதிலிருந்து தப்பிக்க நாடாளுமன்றத்தை முடக்கியதோடு கேள்வி எழுப்பிய ராகுல் காந்தியையும் பதவி நீக்கம் செய்டு விட்டது மோடி-அமித் ஷா கும்பல். கூடுதலாக கடந்த பத்து வருடங்களில் கார்ப்பரேட்களிடம் இருந்து அதிகமான நன்கொடை பெற்ற ஒரே கட்சி பாஜக தான். (பாஜக வின் ஊழல் குறித்து பிறகு விரிவாக பேசுவோம்) இதுவே பாஜக தங்களுக்கு தாங்களே வழங்கிக் கொள்ளும் புனிதர் பட்டத்தின் லட்சணம்.

 

 

காசு கொடுத்ததிற்கு மேலேயே தமிழ்நாட்டில் ஒரு ஆடு கத்திக்கொண்டிருக்கிறது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையோ மோடி-அமித் ஷாவை விட அதிகமாக கூவுகிறார். ஆனால் ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடியில் தமிழக பாஜக வின் பல முக்கியப் புள்ளிகள் சம்பந்தப்பட்டிருப்பதும் அதில் அண்ணாமலைக்கும் தொடர்பிருக்கலாம் என்றெல்லாம் செய்திகள் தொடர்ச்சியாக வெளிவந்தவண்ணம் உள்ளன.

சென்னையைத் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம், கடந்த செப்டம்பர் 2020 முதல் மே 2022 வரை பொதுமக்களிடமிருந்து டெபாசிட்டாக பெரும் தொகை திரட்டியிருக்கிறது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட முதலீடுகளுக்கு மாத வட்டியாக 25 முதல் 30 சதவீதம் வரை தருவதாக கூறி சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து 2438 கோடி முதலீட்டைப் பெற்று மோசடி செய்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதம்(24.05.2022) ஆருத்ரா நிறுவனத்தின் 36 இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். ஊடனே இந்நிறுவனத்தின் இயக்குநர்கள் அனைவரும் தலைமறைவாகி விட்டனர். 2400 கோடி மோசடி குற்றச்சாட்டப்பட்டிருந்த ஆரூத்ரா தங்க வர்த்தக நிறுவனத்தின் இயக்குநர்களில் ஹரிஷ் என்பவர் மட்டும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 210 கோடியை வசூலித்திருக்கிறார்.

ஹரிஷ் கடந்த 2022, ஜூன் 2 ஆம் அன்று பா.ஜ.க.வின் விளையாட்டுத் துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்திற்கு இரண்டு மாதத்திற்கு முன்பு தான் ஆருத்ரா நிறுவனத்தில்  போலீசின் சோதனைகள் நடந்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஹரிஷ் உள்ளிட்ட ஐந்து பேரின் மீது வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த சர்ச்சைகள் நடந்து கொண்டிருக்கும் போது தான ஹரீஸ்க்கு பாஜக வில் மாநில பொறுப்பு வழங்கப்பட்டது. பா.ஜ.க.வின் விளையாட்டு பிரிவு தலைவரான  அமர்பிரசாத் ரெட்டி மூலமாக ஹரிஷ்க்கு துணைச் செயலாளர் பதவி கிடைத்திருக்கிறது. அமர் பிரசாத் அண்ணாமலைக்கு மிகவும் நெருக்கமானர் என்பது குறிப்பிடதக்கது. சில மாதங்களுக்குப் பிறகு ஹரீஷ் தலைமறைவாகிவிட்டார். கூடவே ஹரீஷ் ஒன்மேன் குருப்ஸ் என்ற மற்றொரு நிறுவனத்தை நடத்தி அதன் மூலம் பணமோசடி செய்திருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன. இரு வாரங்களுக்கு முன்பு ஹரிஷ் கைது செய்யப்பட்டுள்ளார். 

 

 

ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் பண மோசடி வழக்கில் ரூசோ என்பவரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்திருந்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான ராஜசேகர் மற்றும் கைதான ரூசோ ஆகியோரிடமிருந்து 12 கோடி ரூபாயை நடிகர் ஆர்.கே.சுரேஷ் பெற்றிருக்கிறார்.

ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவன வழக்குகளில் இருந்து, ராஜசேகர் மற்றும் ரூசோ தப்பிக்க வைப்பதற்காக சுரேஷ்க்கு பணம் கொடுக்கப்பட்டதாக கூறுகின்றனர். சுரேஷ், பாஜக வினுடைய ஓபிசி பிரிவின் துணைத் தலைவராக உள்ளார். அப்பணத்தைக் கொண்டு உயர் அதிகாரிகளை வளைக்கவும் ஒன்றிய அரசின் மூலம் இவ்வழக்கை ஒன்றும் இல்லாமல் செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் ரூசோ போலீசிடம் கூறியுள்ளார்.  சுரேஷ் வெளிநாடு தப்பிச் சென்றதாக பத்திரிக்கைகள் கூறுகின்றன. ஆனால் பாஜக வோ இவர்களுக்கெல்லாம் முட்டு கொடுக்கவே செய்கிறது.

உழைக்கும்-நடுத்தர வர்க்கத்தினருடைய சேமிப்புகள் இது போன்ற மோசடி கும்பல்களால் பகற்கொள்ளையடிக்கப்படுகிறது. சில வருட தலைமறைவு வாழ்க்கைக்கு பிறகு இக்கொள்ளையர்கள் அரசியல் கட்சிகள் மற்றும் அதிகாரிகளின் துணையோடு வழக்குகளிலிருந்து வெளியே வந்துவிடுகின்றனர். தொன்னூறுகளில் அனுபவ் தேக்குமரத் திட்டத்தில் தொடங்கி ஈமு கோழி வரை இதே கதைதான். இது தற்போது ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் பல்லாயிரம் கோடி மோசடியாக வளர்ந்து நிற்கிறது. நாங்கள் ஊழலற்றவர்கள், யோக்கியவான்கள் என வாய்ச்சவடால் அடிக்கும் பாஜக கும்பல்தான் (அண்ணாமலையிலிருந்து ஆர். கே. சுரேஷ் வரை) கொள்ளைக்காரக் கூட்டத்திற்கு பின்னால் இருக்கிறார்கள்.

  • அழகு 

One comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன