ஐ.எம்.எப் – உலக வங்கியின் மறுகாலனியாக்க திட்டத்திற்கு எதிராக இலங்கை தொழிலாளர்கள் போராட்டம்

"நாம் கடனை திருப்பி செலுத்த வேண்டும். அரசு நிறுவனங்களை வைத்துக் கொண்டு கடனைத் திருப்பிச் செலுத்த முடியாது", “அரசு ஏன் வணிகத்தில் ஈடுபடவேண்டும்? இது எங்கள் பொறுப்பு அல்ல,” என்று ஐ.எம்.எப் ன் முகவராக பேசுகிறார் இலங்கையின் ஜனாதிபதி விக்கிரமசிங்க.

இலங்கையில்  ஆளும் வர்க்கங்கள் ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடியின் சுமை அனைத்தும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தப்பட்டதால் அதை எதிர்த்து, மக்கள் நடத்திய போராட்டங்களினால் சென்ற ஆண்டு இலங்கையே குலுங்கியது. இதை தொடர்ந்து, கோத்தபய இராஜபக்சே பதவியில் இருந்து தூக்கியெறிப்பட்டு, விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்.

ஆட்சி மாறினாலும் இலங்கை மக்களின் துயரங்கள் தீர்ந்தபாடில்லை. இன்னும் அதிகரிக்கவே செய்கின்றன.

இலங்கையை பொருளாதார நெருக்கடிக்கான பிரதானக் காரணம், ஐ.எம்.எப்.,  உலக வங்கியினால் திணிக்கப்பட்டு அங்குள்ள ஆட்சியாளர்களால் அமல்படுத்தப்பட்டு  வந்த மறுகாலனியாக்க பொருளாதாரக் கொள்கைகளேயாகும். இந்நெருக்கடியிலிருந்து இருந்து இலங்க்கையை  மீட்பதாகக் கூறி  ஆட்சிக்கு வந்த விக்கிரமசிங்கவோ  சர்வதேச நிதி நாணயம்/உலக வங்கியின் நிபந்தனைகளை ஒப்புக் கொண்டு ஐ.எப்.எம் மிடம் இருந்து  3 பில்லியன் டாலரும் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கியிடமிருந்து கூடுதலாக 7 பில்லியன் டாலர் கடன்வாங்கப்போவதாக கூறியுள்ளார்.

 

 

 

மூன்று பில்லியன் டாலரை நான்கு தவணைகளாக இலங்கைக்கு கடனாக கொடுப்பதற்கு, பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது ஐ.எம்.எப். இந்த நிபந்தனைகளுக்குள்  மக்கள் மீது அதிக வருமான வரி விதிப்பு, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பு, அதிக வாட் வரி, இலங்கை மத்திய வங்கி ஐ.எம்.எப் கட்டளைக்கு இணங்க வட்டி விகிதத்தை உயர்த்துவது, உரங்களின் மானியம் குறைப்பு, அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம், அரசு துறை ஊழியர்களுக்கு சம்பளம் குறைப்பு, ஓய்வுதியம் வெட்டு , கல்வி மற்றும் சுகாதாரத்தில் இலவசத்தை அறவே ஒழித்தல் முதலியவை அடங்கும்.

இந்த நிபந்தனைகளை நிறைவேற்றும் பொருட்டு, விக்கிரமசிங்க, வருமான வரி உயர்வு, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் திட்டங்களை அறிவித்துள்ளார். அரசுக்கு சொந்தமான ஸ்ரீலங்கா டெலிகொம், இலங்கை காப்புறுதிக் கழகம், கிராண்ட் ஹயாட் மற்றும் ஹில்டன் ஹோட்டல்கள், லிட்ரோ கேஸ் லங்கா மற்றும் லங்கா மருத்துவமனை கூட்டுஸ்தாபனம் ஆகியவை விரைவில் விற்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் ஐ.எம்.எப் ன் நிபந்தனைகளை ஒட்டுமொத்த உழைக்கும் மக்கள் தோள்களில் சுமத்தப்போகிறது விக்கிரமசிங்க அரசு.

அரசு நிறுவனங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஈட்டக்கூடியவை அல்ல. நாம் கடனை திருப்பி செலுத்த வேண்டும். இவற்றை வைத்துக் கொண்டு கடனைத் திருப்பிச் செலுத்த முடியாது “அரசு ஏன் வணிகத்தில் ஈடுபடவேண்டும்? இது எங்கள் பொறுப்பு அல்ல,” என்று ஐ.எம்.எப் ன் முகவர் போல பேசியிருக்கிறார் இலங்கை ஜனாதிபதி.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியினால், அத்தியாவசிய பொருட்களான உணவு, எரிபொருள்,  வாங்குவதற்கே மக்கள் தள்ளாடுகிறார்கள்.  அவர்களின் துயரத்தை சொல்லி மாளாது. இந்த இச்சிக்கன நடவடிக்கைகள் இலங்கை மக்களை மீளமுடியாத நெருக்கடிக்குள்ளே தள்ளும். ஆகையால் இச்சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்து மக்கள் தங்களது போராட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளனர்.

விக்கிரமசிங்க அறிவித்திருக்கும் சிக்கன நடவடிக்கையை எதிர்த்து ஒரு மாதமாக  இலங்கையில், பல்வேறு  தொழிலாளர்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இலங்கையின் அரசுத் துறை மற்றும் தனியார் துறை தொழிலாளர்கள், மார்ச் 15 ம் தேதி ஒரு நாள் தேசிய வேலை நிறுத்தப்போராட்டத்தின் மூலம்  இலங்கையை ஸ்தம்பிக்க வைத்துள்ளனர்.

இந்த வேலை நிறுத்தத்தில் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். 2,00,000 ஆசிரியர்கள், 10,000 சுகாதாரத்துறை ஊழியர்கள், 22,000 மின்சாரத் துறை ஊழியர்கள், 10,000 க்கு மேற்பட்ட கொழும்பு துறைமுகத் தொழிலாளர்கள், 13,000 பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள், 6,000 பல்கலைக்கழக ஆசிரியர்கள், 24,000 தபால் ஊழியர்கள், 8,000 தொலைத்தொடர்பு ஊழியர்கள், மற்றும் 20,000 க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் பொது வங்கி ஊழியர்களும் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கெடுத்திருந்தனர். பல தொழிலாளர்கள் தங்களது மதிய உணவு இடைவேளை நேரத்தின் போது இப்போராட்டத்தில் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்து இருக்கின்றனர்.

பள்ளிகள், மருத்துவமனைகள், சுகாதாரத்துறைகள், போக்குவரத்து, வங்கிகள் என அனைத்தும் இந்த ஒரு நாளில் முடங்கின. இப்போராட்டம் ஒரு நாளில் மட்டும் முடியப்போவதில்லை. இது ஒரு தொடக்கம் தான் என்கிறார்கள் போராடும் தொழிலாளர்கள்.

பரவி வரும் தொழிலாளர்கள் போராட்டங்களை  போலீசு, இராணுவத்தைக் கொண்டு ஒடுக்க இலங்கை அரசு தயாராகி வருகிறது. இலங்கையின் 25 முக்கிய இடங்களில் தொழிலாளர்களை ஒடுக்க போலிசை நிறுத்த விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார். ஆனாலும் தொழிலாளர்கள் இந்த அடக்குமுறைக்கு அஞ்சாமல் போராட்டங்களைத் தொடர்ந்து வருகின்றனர்.

நிதிமூலதனக் கும்பலகளான ஐ.எப்.எம், உலக வங்கியின் தனியார்மயம் – தாராளமயம்- உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கையினால், இலங்கையின் பொருளாதரக் கட்டமைப்பு ஏகாதிபத்திய நாடுகளை சார்ந்திருக்க வேண்டிய கடன் சுழலில் இருத்தி வைத்துள்ளது. இலங்கையிலுள்ள ஆளும் வர்க்கத்தினர் இதனை அமல்படுத்துபவர்களாக உள்ளனர். ஐ.எம்.எப்., உலகவங்கியிடம் இலங்கை அரசு வாங்கியுள்ள கடனிற்கு  2029 ஆண்டு வரை ஒவ்வொரு வருடமும் சராசரியாக 7 பில்லியன் டாலர்  செலுத்த வேண்டியிருப்பதாக விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஆளும் விக்கிரமசிங்கவோ பொருளாதார நெருக்கடியை தீர்க்க வேறு ஏதாவது வழி இருந்தால் கூறுங்கள் என எதிர்க்கட்சியை அடிபணிய வைக்கிறார். நாட்டின் பொருளாதார நெருக்கடியை தீர்க்க,  சர்வேதச நிதி நாணயத்தை அனுகுவதை தவிர வேறு வழியில்லை என கூறி இலங்கையில் உள்ள  எதிர்க்கட்சிகள் அனைத்தும் விக்கிரமசிங்க சிக்கன நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.

தற்போது நடைப்பெற்று வரும் இலங்கை தொழிலாளர்கள் போராட்டம், வருமான வரி உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம், அரசுத் துறை தனியாருக்கு தாரை வார்ப்பு போன்ற நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்பதை நோக்கி மட்டும் இருக்கிறது.

இலங்கை தேர்தல் கட்சிகள் அனைத்துமே ஏகாதிபத்திய பொருளாதார கட்டமைப்புக்கு சேவகம் செய்யும் அடிவருடிகள் தான் என்பதை அம்பலப்படுத்தியும், ஏகாதிபத்திய பொருளாதார கட்டமைப்பு,  ஐ.எம்.எப், போன்ற நிறுவனங்களின் முகவர்களாக உள்ள ஆளும் வர்க்கப்பிரதிநிதிகளை  தூக்கி எறிய வேண்டும் என்பதை நோக்கி இலங்கை தொழிலாளர்கள் முன்னேறும் போது தான் இலங்கை உழைக்கும் மக்களின் துயரங்களுக்கு விடிவு பிறக்கும்.

  • தாமிரபரணி

https://www.imf.org/en/News/Articles/2023/03/20/pr2379-imf-executive-board-approves-under-the-new-eff-arrangement-for-sri-lanka

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன